Thursday, December 18, 2008

சுண்டக் காயும் சுண்டைக்காய்

பஸ் ஸ்டாப்புக்குள் நுழையும் போதே அவன் குரல் கேட்கிறது. எதற்காகவோ அட்டகாசமாகச் சிரித்துக் கொண்டிருக்கிறான்.

“என்னடா, தெனம் அந்தக் குருட்டுப் பொண்ணோட அவ்வளவு வழிஞ்சுக்கிட்டிருக்கே? லவ்வு, கிவ்வு ஏதாச்சுமா?” கேட்பவன் அவன் நண்பன் போலும்.

கேள்வி அவளைப் பற்றியதாய் இருப்பதிலிருந்தே அவர்கள் இவள் வருவதைக் கவனிக்கவில்லை என்பது நிதர்சனம். இவளும் பதிலைத் தெரிந்து கொள்ளும் ஆவலில், மனம் படபடக்க, ஒரு ஓரமாக நின்று கொள்கிறாள்.

“போடா. நீ வேற. நான் என்ன அவ்வளவு லூசா? என்னமோ பஸ் ஸ்டாப்ல பொழுது போகல; அவளும் நல்லாப் பேசறான்னு பேசினேன். குருட்டுப் பொண்ணை வச்சிக்கிட்டு வாழ்நாள் பூரா கஷ்டப்பட நான் ஒண்ணும் முட்டாளில்லடா. அட் லீஸ்ட் பார்க்க நல்லாருந்தாலும் பரவால்ல. இங்க அதுவும் இல்ல. அவளுக்குதான் நம்மைப் பார்க்க முடியாது, ஆனா நாம அவளைப் பார்த்துதானே ஆகணும்?”

பெரிய ஜோக் சொல்லி விட்டது போல் மறுபடியும் “ஹா ஹா ஹா” என்று சிரிக்கிறான்.

அப்படியே இழுத்து வைத்து நாலு அறை விடலாம் போல இருக்கிறது அவளுக்கு. எண்சாண் உடம்பும் ஒரு சாணாகக் குறுகி விட்டது போல் இருக்கிறது. அவமானம் பிடுங்கித் தின்கிறது. பூமி பிளந்து அப்படியே அந்த நிமிடமே தன்னை விழுங்கி விடாதா என்றிருக்கிறது.

அவனா இப்படிப் பேசுகிறான்? நம்பவே முடியவில்லை அவளால். நடந்தவைகளைப் புரட்டிப் பார்க்கையில் அவன் ஒரு முறை கூட அவளை விரும்புவதாகச் சொன்னதில்லை என்பது உண்மைதான். ஆனால்??

அவன் இனிக்க இனிக்கப் பேசியது? அவளுக்கு ரோஜாப்பூ கொடுத்தது? அவள் பிறந்த நாளுக்கு அழகான பேசும் கைக்கடிகாரம் வாங்கிக் கொடுத்தது? அவளுக்குச் சிவப்பு நிறம் மிக அழகாக இருப்பதாகச் சொன்னது? ஒருவருக்கு ஒருவரைப் பிடித்திருப்பதை நேரடியாகச் சொன்னால்தானா? இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? இதெல்லாம் ஏமாற்றியதாகாதா? உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதாகாதா?

ஆனால் அவள்மேல் தான் தவறு. வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பியது அவள் தவறு. முன்பின் யோசியாமல் கனவுகளை வளர்த்துக் கொண்டது அவள் தவறு. பேசப்படும் வார்த்தைகள் எல்லாமே இதயத்திலிருந்து வருவதாக நினைத்ததும் அவள் தவறுதான். அவளைப் போல் பெண்கள் இருப்பதால்தான் அவனைப் போலக் கயவர்களும் இருக்கிறார்கள். பெண்ணின் மனசைச் சுண்டைக் காயாய் நினைத்து சுண்டிக் காயெறிந்து விளையாடுகிறார்கள்.

“ஆனால் நீ சுண்டைக்காய் இல்லையடி. நீ ஒரு பெண். அதிலும் அற்புதமான பெண். தாயை இழந்து, பார்வையை இழந்து, தகப்பனின் அன்பில் வளர்ந்து, எத்தனையோ சோதனைகளைக் கடந்து, படித்து, வேலைக்குப் போய், சொந்தக் காலில் நிற்கும் பெருமைக்குரிய பெண். அப்படிப்பட்டவள் இந்த அற்ப மனிதனால் துவண்டு போவதா? அப்படியெனில் அவன் நோக்கம் நிறைவேறியதாக ஆகிவிடாதா?” நன்றாகவே இடித்துக் காட்டுகிறது மனசு.

மறைவிடத்திலிருந்து வெளியே வருகிறாள். பேசும் வாட்சைத் தொடுகிறாள். அது உடனே சமர்த்தாக நேரத்தை அறிவிக்கிறது. தொடர்ந்து அருகில் காலடிச் சத்தம்.

“அடேடே, வந்துட்டீங்களா… எங்கே காணுமேன்னு பார்த்தேன்”, அவன் குரல்தான்.

“அட, எனக்காகவா காத்திருக்கீங்க?” எதுவும் நடவாதது போல் புன்னகைக்கிறாள்.

“ஆமாங்க. உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்றதுக்குதான்… நான் முந்தியே உங்ககிட்ட சொல்லிக்கிடிருந்தேன்ல? நாளைக்கு பைக் டெலிவரி எடுக்கப் போறேன்… அதனால இனிமே நானே வந்து உங்களை….”

அவன் முடிப்பதற்குள் குறுக்கிடுகிறாள்.

“அப்படியா. சந்தோஷங்க. அப்ப இனிமே உங்கள பார்க்க முடியாது. என்ன… நீங்க இருந்ததால எனக்கும் பஸ்ஸுக்குக் காத்திருக்க நேரத்துல நல்லா பொழுது போச்சு. இனிமே வேற யாராச்சும் பேச்சுத் தொணைக்குக் கிடைப்பாங்களான்னு பார்க்கணும், அவ்வளவுதானே?” புன்முறுவலுடன் சொல்லிக் கொண்டே அவன் தந்த அந்த வாட்சை நழுவ விடுகிறாள்.

“ஒரு நிமிஷங்க… வாட்ச் கீழ விழுந்திருச்சு”, அவன் குனிந்து எடுக்க முயலும் முன், “அப்படியா, எங்கேங்க?”, கேட்டுக் கொண்டே திரும்பி ‘தெரியாமல்’ வாட்சை மிதித்து விடுகிறாள். காலடியில் அது நொறுங்குவதை அவளால் உணர முடிகிறது.

இத்தனை காலமாக இல்லாத ஆசை ஒன்று இன்றைக்கு முளைக்கிறது – இந்த நிமிடம் அவன் முகம் போகும் போக்கைப் பார்க்கவேனும் பார்வை வேண்டுமென்று...


--கவிநயா

28 comments:

 1. சுண்டிய அவன் முகத்தைப் பார்க்க அவளுக்குக் கொடுத்து வைக்கா விட்டாலும் மனம் சுருங்காமல் அவனுக்கு கொடுத்த பதிலடி ரசிக்கும்படி இருந்தது:)!

  நல்ல கதை. வாழ்த்துக்கள் கவிநயா.

  ReplyDelete
 2. முடிவு நன்றாக இருக்கிறது..

  ReplyDelete
 3. நயமான கவிதை போன்ற கதை.

  வாழ்த்துக்கள் கவி-நயா.

  ReplyDelete
 4. //பெண்ணின் மனசைச் சுண்டைக் காயாய் நினைத்து சுண்டிக் காயெறிந்து விளையாடுகிறார்கள்.//

  சாட்டை அடி என்பது இதுதானோ?

  ReplyDelete
 5. //இத்தனை காலமாக இல்லாத ஆசை ஒன்று இன்றைக்கு முளைக்கிறது – இந்த நிமிடம் அவன் முகம் போகும் போக்கைப் பார்க்கவேனும் பார்வை வேண்டுமென்று...
  //

  ஆசை நிறைவேறா விடினும், அவன் முகம் போன போக்கை அவள் மனக்கண்ணில் நிட்சியம் பார்த்திருக்க முடியும்னு நினைக்கிறேன் .

  ReplyDelete
 6. நல்ல கதை....அருமையாக வந்திருக்கிறது. வாழ்த்துக்கள் கவிக்கா :)

  ReplyDelete
 7. இறுதி முடிவு எதிர்பார்க்கவில்லை. மிகுந்த தன்னம்பிக்கையோடு வெளிப்பட்டுள்ளது !

  ReplyDelete
 8. //பேசப்படும் வார்த்தைகள் எல்லாமே இதயத்திலிருந்து வருவதாக நினைத்ததும் அவள் தவறுதான்.//

  ஆழமான வரிகள். பார்வை திறன் உள்ள பலரும் இப்படிப்பட்ட மனிதர்களால் புண்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, பார்வையற்ற ஒரு கதாபாத்திரத்தை வைத்து கொடுக்கப் பட்ட சாட்டையடி பாராட்டுக்குரியது.
  ஒரு நல்ல எழுத்தாளர் வாசகரை முதலில் இருந்து கடைசி வரை தன் பிடியில் வைத்திருக்க வேண்டும். அது உங்களால் முடிகிறது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. தினம் ஒரு திருப்பாவையா? மார்கழி மாத சிறப்பு பகிர்தலுக்கு நன்றி.

  ReplyDelete
 10. ஆகா. என்ன சொல்றதுன்னு தெரியலையே.

  ReplyDelete
 11. //சுண்டிய அவன் முகத்தைப் பார்க்க அவளுக்குக் கொடுத்து வைக்கா விட்டாலும் மனம் சுருங்காமல் அவனுக்கு கொடுத்த பதிலடி ரசிக்கும்படி இருந்தது:)!//

  ஆமால்ல? ரசனைக்கும், தவறாத வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள் பல ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 12. //முடிவு நன்றாக இருக்கிறது..//

  நல்வரவு Cable Shankar. முதல் வருகைக்கும் வாசிப்பிற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 13. //நயமான கவிதை போன்ற கதை.

  வாழ்த்துக்கள் கவி-நயா.//

  நயமான பின்னூட்டத்திற்கு நன்றி ஜமால் :)

  ReplyDelete
 14. //சாட்டை அடி என்பது இதுதானோ?//

  அப்படித்தான் இருக்கும் போல ஜீவி ஐயா :) வருகைக்கும் வாசிப்பிற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 15. //ஆசை நிறைவேறா விடினும், அவன் முகம் போன போக்கை அவள் மனக்கண்ணில் நிட்சியம் பார்த்திருக்க முடியும்னு நினைக்கிறேன் .//

  அப்படித்தான் நானும் நம்பறேன் பூர்ணிமா. வருகைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 16. //நல்ல கதை....அருமையாக வந்திருக்கிறது. வாழ்த்துக்கள் கவிக்கா :)//

  வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி மௌலி.

  ReplyDelete
 17. //இறுதி முடிவு எதிர்பார்க்கவில்லை. மிகுந்த தன்னம்பிக்கையோடு வெளிப்பட்டுள்ளது !//

  வருக ரிஷு. நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் :) வருகைக்கு மிக்க நன்றிப்பா.

  ReplyDelete
 18. //ஆழமான வரிகள். பார்வை திறன் உள்ள பலரும் இப்படிப்பட்ட மனிதர்களால் புண்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, பார்வையற்ற ஒரு கதாபாத்திரத்தை வைத்து கொடுக்கப் பட்ட சாட்டையடி பாராட்டுக்குரியது.//

  உங்கள் சரியான புரிதலும் அதனை நீங்கள் எடுத்துச் சொல்லும் விதமும் எனக்கு எப்போதும் வியப்பூட்டும் விஷயம் ரமேஷ்.

  //ஒரு நல்ல எழுத்தாளர் வாசகரை முதலில் இருந்து கடைசி வரை தன் பிடியில் வைத்திருக்க வேண்டும். அது உங்களால் முடிகிறது. வாழ்த்துக்கள்.//

  ஊக்கந்தரும் சொற்களுக்கு மிக்க நன்றி உங்களுக்கு.

  ReplyDelete
 19. //தினம் ஒரு திருப்பாவையா? மார்கழி மாத சிறப்பு பகிர்தலுக்கு நன்றி.//

  அப்படி உத்தேசித்துதான் ஆரம்பிச்சேன்; நடுவில் ரெண்டு மூணு நாள் வெளியூர் போறப்ப மட்டும் கொஞ்சம் இடிக்கும்னு நினைக்கிறேன் :)

  கவனிச்சு பின்னூட்டினதுக்கு உங்களுக்குதான் நன்றி :)

  ReplyDelete
 20. //ஆகா. என்ன சொல்றதுன்னு தெரியலையே.//

  அப்பனே குமரா... இதென்ன வஞ்சகமா புகழ்ச்சியா? :)

  வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி குமரா :)

  ReplyDelete
 21. //“ஆனால் நீ சுண்டைக்காய் இல்லையடி. நீ ஒரு பெண். அதிலும் அற்புதமான பெண். தாயை இழந்து, பார்வையை இழந்து, தகப்பனின் அன்பில் வளர்ந்து, எத்தனையோ சோதனைகளைக் கடந்து, படித்து, வேலைக்குப் போய், சொந்தக் காலில் நிற்கும் பெருமைக்குரிய பெண். அப்படிப்பட்டவள் இந்த அற்ப மனிதனால் துவண்டு போவதா? அப்படியெனில் அவன் நோக்கம் நிறைவேறியதாக ஆகிவிடாதா?” நன்றாகவே இடித்துக் காட்டுகிறது மனசு.//

  அருமையான கதை கவிநயா, அம்மன் அருள் 100க்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. \\எம்.ரிஷான் ஷெரீப் said...
  இறுதி முடிவு எதிர்பார்க்கவில்லை. மிகுந்த தன்னம்பிக்கையோடு வெளிப்பட்டுள்ளது !
  \\

  ரீப்பிட்டே ;))

  ReplyDelete
 23. //அருமையான கதை கவிநயா, அம்மன் அருள் 100க்கும் வாழ்த்துக்கள்.//

  வருக கைலாஷி. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 24. //ரீப்பிட்டே ;))//

  வாங்க கோபி. வருகைக்கும் ரிப்பீட்டுக்கும் நன்றிகள் :)

  ReplyDelete
 25. நல்ல கதை!! கடைசியாக வந்த அவளின் ஆசையும் நியமானதே!!

  ReplyDelete
 26. //நல்ல கதை!! கடைசியாக வந்த அவளின் ஆசையும் நியமானதே!!//

  வாங்க இசக்கிமுத்து. வருகைக்கும் வாசிப்பிற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 27. கவிநயா,சாமர்த்தியமாக நடந்து கொண்ட அவளை இப்பவே
  கை கொடுத்துப் பாராட்ட ஆசை. உங்கள் கையை நீட்டுங்கள்.:0
  அருமை. அருமை.
  இந்தத் தைரியம் பெண்களுக்கு இருந்துவிட்டால் எத்தனையோ சாதிக்கலாம்.

  இனிய
  புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
 28. //உங்கள் கையை நீட்டுங்கள்.:0
  அருமை. அருமை.//

  வாங்க வல்லிம்மா. தோ... கையை நீட்டிட்டேன். கெடைச்சுதா? :) வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி அம்மா. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)