Friday, December 26, 2008

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 2



2.

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
பேசும்போது எப்போது இப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய்? நேரிழையீர்
சீசி இவையும் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்,
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பு ஆர் யாம் ஆர் ஏலோர் எம்பாவாய்.

நேரிழையாய் - சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்ணே!

இராப்பகல் நாம் பேசும்போது - இரவும் பகலும் நாம் பேசும்போதெல்லாம்

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் - என் பாசமெல்லாம் அந்த மேலான ஒளிவடிவான இறைவனுக்கே என்பாய்,

எப்போது - அதை மறந்து எப்போது,

இப் போது ஆர் அமளிக்கே - இந்த பூப்படுக்கையின் மேல்,

நேசமும் வைத்தனை - இவ்வளவு நேசம் வைத்தாய்!

நேரிழையீர் - நல்ல ஆபரணங்களை அணிந்தவர்களே!

சீசீ இவையும் சிலவோ - இப்படி ஏன் இகழ்ந்து பேசுகிறீர்கள்!

விளையாடி ஏசும் இடம் ஈதோ - விளையாட்டாகப் பழித்துப் பேசும் இடம் இதுதானோ?

விண்ணோர்கள் - தேவர்கள் கூட,

ஏத்துதற்குக் கூசும் - (இறைவன் திருவடியை) பாடிப் புகழ்வதற்கு ஏற்ற நல்வினை வாய்ப்பு தமக்கு இன்மையால் வெட்கப்படும்

மலர்பாதம் - அவனுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளை,

தந்து அருள வந்து அருளும் - நமக்கு அருள் புரிவதற்காக தந்து அருளும்,

தேசன் - பொலிவுடைய,

சிவலோகன் - சிவலோகநாதன்

தில்லைச் சிற்றம்பலத்து ஈசனார்க்கு - தில்லையிலுள்ள திருச்சிற்றம்பலத்துள் நடம்புரியும் ஈசனுக்கு,

அன்பார்யாம் - நாம் எல்லோரும் அன்புடையார் அல்லவா?

"சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்ணே! இரவும் பகலும் நாம் பேசும் போதெல்லாம், என் பாசமெல்லாம் அந்த பரஞ்சோதிக்கே என்பாய். அதை மறந்து எப்போதிருந்து இந்த பூப்படுக்கையின்மேல் இத்தனை நேசம் வைத்தாய்! ", என்று எழுப்ப வந்த பெண்கள் கூற,

உறங்கியிருக்கும் பெண் சொல்கிறாள், "நல்ல ஆபரணங்களை அணிந்தவர்களே! ஏன் இவ்வளவு இகழ்ந்து பேசுகிறீர்கள்? விளையாட்டாகப் பழித்து பேசும் இடம் இதுவோ?" என்கிறாள்.

அதற்கு வெளியில் இருக்கும் கன்னியர், "இறைவன் திருவடியைப் போற்றிப் பாடுவதற்கேற்ற நல்வினை தமக்கில்லையே என தேவர்கள் கூட வெட்கியிருக்க, அவனுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளை, நமக்கு அருள் புரிவதற்காகத் தந்தருளும் பொலிவுடைய சிவலோகநாதனும், தில்லையில் நடம் புரியும் ஈசனுமான அவனுக்கு, நாம் எல்லோரும் அன்புடையவர்கள் அல்லவா?" என்று கூறி அவளை எழுப்புகிறார்கள்.



பொருளுக்கு நன்றி : "Thiruppaavai and Thiruvempaavai" by S. Srinivasan
படத்துக்கு நன்றி : http://thiruvempavai.blogspot.com

10 comments:

  1. அருமை, வழங்குவதற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  2. திரு எஸ்.சீனிவாசன் அவர்களின் பொருளுரை அருமை. :)
    பக்தி விருந்து தொடரட்டும்.

    ReplyDelete
  3. //அருமை, வழங்குவதற்கு மிக்க நன்றி!//

    வாங்க ஜீவா. நீங்கள் வாசிப்பதறிந்து மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

    ReplyDelete
  4. //பக்தி விருந்து தொடரட்டும்.//

    ஹி..ஹி.. :) ஆமா ரமேஷ். பரிமாறுவது மட்டுமே நான் :) தொடர்ந்த வாசிப்பிற்கு நன்றி.

    ReplyDelete
  5. உடனே வரமுடியலை, இன்னிக்குத் தான் எல்லாருடைய வீட்டுக்கும் போக முடியும்.

    நல்லதொரு விளக்கம். தினமும் பொதிகையில் மங்கையர்க்கரசி என்ற பெண்ணின் திருவெம்பாவை விளக்கம் கேட்கும்போதெல்லாம் உங்கள் நினைவும் காரணமே/சம்பந்தமே??/ (தெரியலை) இல்லாமல் வரும். உங்களைத் தான் நினைச்சுக்குவேன்.

    ReplyDelete
  6. //நல்லதொரு விளக்கம்.//

    போற்றுதல் பொருள் எழுதியவருக்கே சேரட்டும் :)

    //தினமும் பொதிகையில் மங்கையர்க்கரசி என்ற பெண்ணின் திருவெம்பாவை விளக்கம் கேட்கும்போதெல்லாம் உங்கள் நினைவும் காரணமே/சம்பந்தமே??/ (தெரியலை) இல்லாமல் வரும். உங்களைத் தான் நினைச்சுக்குவேன்.//

    ஆஹா, ரொம்ப மகிழ்ச்சி அம்மா! :) என்னை நினைச்சுக்கிறதுக்கும், வருகைக்கும் மிக்க நன்றி :)

    ReplyDelete
  7. //அருமை...நன்றிக்கா.//

    வருகைக்கு நன்றி மௌலி.

    ReplyDelete
  8. //"இறைவன் திருவடியைப் போற்றிப் பாடுவதற்கேற்ற நல்வினை தமக்கில்லையே என தேவர்கள் கூட வெட்கியிருக்க, //

    போற்றிப் பாடப் பட்ட பாடல்களுக்கு பொருள் எழுதும் முயற்சி எடுத்தது போற்றதலுக்குரியது கவிநயா!

    ReplyDelete
  9. //போற்றிப் பாடப் பட்ட பாடல்களுக்கு பொருள் எழுதும் முயற்சி எடுத்தது போற்றதலுக்குரியது கவிநயா!//

    நன்றி ராமலக்ஷ்மி. இறையருளே காரணம் :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)