Monday, December 29, 2008

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 55.

மாலறியா, நான்முகனும் காணா மலையினை, நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ! கடைதிறவாய்
ஞாலமே, விண்ணே, பிறவே அறிவரியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலமிடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய்.ஏலக்குழலி - மயிர்ச்சாந்தினைப் பூசிய, வாசனை உள்ள கூந்தலை உடையவளே!

மால் அறியா - திருமால் (பன்றி உருக்கொண்டு நிலத்தை அகழ்ந்து தேடியும்)

நான்முகனும் காணா - பிரமனும் (அன்னப்பறவை உருக்கொண்டு உயரப் பறந்து தேடியும்) காண முடியாத

மலையினை - பெரிய வடிவு கொண்ட மலை போன்றவனை,

நாம் அறிவோம் - நம்மைப் போன்றவர்கள் அறியும் ஆற்றல் கொண்டோம்,

என்று உள்ள பொக்கங்களே பேசும் - என்று பொய்யான சொற்களையே பேசும்,

பால் ஊறு தேன்வாய் படிறீ - பாலும் தேனும் கலந்தாற்போல் இனிக்கப் பேசும் வஞ்சனை உடையவளே,

கடை திறவாய் - கதவைத் திறப்பாயாக!

ஞாலமே - இவ்வுலகத்தாரும்,

விண்ணே - தேவர்களும்,

பிறவே - பிறரும்,

அறிவரியான் - அறிந்து கொள்வதற்கு அரியவனான சிவபெருமானின்,

கோலமும் - திருவுருவத்தையும்,

நம்மை ஆட்கொண்டு அருளி - நம் குற்றங்களைப் பொறுத்து நம்மை ஏற்றுக் கொண்டு,

கோதாட்டும் சீலமும் - நம்மைப் புனிதமாக்கிய அருள் குணத்தையும்,

பாடி - புகழ்ந்து பாடி,

சிவனே சிவனே என்று ஓலம் இடினும் - சிவனே சிவனே என்று உரக்கப் பாடினாலும்,

உணராய் உணராய் காண் - அறிந்து கொள்ளாமல்,

பரிசு - (விழித்துக் கொள்ளாதவளே) இதுதானோ உன் தன்மை?


[பொக்கம் - பொய் வார்த்தைகள், படிறீ - வஞ்சனை உடையவள்; கோது - குற்றம்; பரிசு - தன்மை]

'கமகம'வென்று மணக்கும் வாசனையான கூந்தலை உடையவளே! திருமாலும் நான்முகனும் கூடத் தேடி அடைய முடியாத அந்த அண்ணாமலையானை அறியும் தன்மை நமக்கு உள்ளது என்று, பாலும் தேனும் கலந்தாற் போல இனிக்க இனிக்கப் பொய் பேசுபவளே! கதவைத் திறப்பாயாக! இவ்வுலகத்தாரும், தேவர்களும், பிறரும் அறிந்து கொள்வதற்கு அரியவனான சிவபெருமானின் திருவுருவத்தையும், நம் குற்றங்களைப் பொறுத்து நம்மை ஏற்றுக் கொண்டு நம்மைப் புனிதமாக்கிய அவனுடைய அருள் குணத்தையும், பலவாறு புகழ்ந்து, 'சிவனே சிவனே' என்று உரக்கப் பாடினாலும், அதனை உணர்ந்து கொள்ளாமல் உறங்குபவளே! இதுதானோ உன் தன்மை?


பொருளுக்கு நன்றி : Thiruppavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி : http://www.shaivam.org

12 comments:

 1. ஏலக்குழலி = ஏலம்-ன்னா என்னக்கா?
  மயிர்ச் சாந்து-ன்னு சொல்லி இருக்கீங்க! இன்னும் கொஞ்சம் குறிப்பு குடுங்க! வாங்கித் தர வசதியா இருக்கும்-ல? :))

  //பொக்கம் - பொய் வார்த்தைகள்//

  நல்ல அழகான சொல்!
  அப்பர் கூடப் பாடுவாரு! பொக்கம் மிக்கவர் கோயிலுக்கு பூ, அர்ச்சனை, ஹோமம்-ன்னு எடுத்துட்டு வருவதைப் பார்த்து, சிவனார் கருவறைக்குள் தனக்குத் தானே சிரிச்சிக்குறாராம்! :)))

  //சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
  ஓலமிடினும் உணராய் உணராய்காண்//

  ரொம்பவும் பிடித்த வரிகள்!
  சிவனே சிவனேயென்று அடியேனும் ஓலம் ஓலம்! உணர்விக்க வேணும்! உணர்விக்க வேணும்!

  ReplyDelete
 2. //ஏலம்-ன்னா என்னக்கா?//

  நல்லாக் கேட்டீங்க. நானே புத்தகத்துல இருந்துதானே எழுதறேன் :) உங்களை, குமரனை, மாதிரி தமிழ் அறிஞர்கள்தான் எனக்கும் சொல்லணும் :) எனக்குத் தெரிஞ்ச ஏலமெல்லாம் நம்ம ஏலக்காய் தான்!

  //சிவனே சிவனேயென்று அடியேனும் ஓலம் ஓலம்! உணர்விக்க வேணும்! உணர்விக்க வேணும்!//

  நானும் ரிப்பீட்டிக்கிறேன்...

  வருகைக்கு நன்றி கண்ணா.

  ReplyDelete
 3. எளிமையா புரிஞ்சுது....நன்னி.

  ReplyDelete
 4. //எளிமையா புரிஞ்சுது....நன்னி.//

  உங்களுக்கும் நன்னி மௌலி :)

  ReplyDelete
 5. //சிவனே சிவனேயென்று அடியேனும் ஓலம் ஓலம்! உணர்விக்க வேணும்! உணர்விக்க வேணும்!//

  அடியேனும் ரிப்பீட்டேய்!!!

  ReplyDelete
 6. //அடியேனும் ரிப்பீட்டேய்!!!//

  வாங்க கைலாஷி. முதல் பகுதியும் பார்த்தீங்களா? உங்க பூவில இருந்து சில படங்கள் எடுத்தேன். மிக்க நன்றி! அன்னாபிஷேகப் படம்தான் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்சது :)

  ReplyDelete
 7. என் போன்ற விஷ்ணு பக்தர்களுக்கு கொஞ்சம் நெருடலான பாடல். :(

  எனினும் ரசித்தேன். பக்தி இலக்கியத்தில் இது போன்ற வாசகங்கள் இயல்பானவை தான். :)

  ReplyDelete
 8. ஏலக்குழலி; ஏலவார்க்குழலி - மணம் வீசும் கூந்தலை உடையவள்.
  மயிர்ச்சாந்து - முடியில் இடும் தைலம் என்பதை மயிர்ச்சாந்து என்று சொல்லியிருக்கிறார்கள். இரவிசங்கர் எங்கேயாவது போய் வாங்கிவரவேண்டுமென்றால் எடிசனில் இருக்கும் ஏதேனும் இந்தியக் கடைக்குப் போகச் சொல்லுங்கள். :-)

  ReplyDelete
 9. //என் போன்ற விஷ்ணு பக்தர்களுக்கு கொஞ்சம் நெருடலான பாடல். :(//

  இறைவன் ஒருவனே. நமக்கு விருப்பப்பட்ட வடிவத்துல அவனைப் பார்த்துக்கிறோம். அவ்ளோதானே :) இறைவனின் இந்த தன்மையைப் பத்தி ஸ்ரீராமகிருஷ்ணர் அழகாக விளக்குவார். அதைப் பத்தி அப்புறம் எழுதறேன் :) ரசித்தமைக்கு நன்றி ரமேஷ்.

  ReplyDelete
 10. //ஏலக்குழலி; ஏலவார்க்குழலி - மணம் வீசும் கூந்தலை உடையவள்.
  மயிர்ச்சாந்து - முடியில் இடும் தைலம் என்பதை மயிர்ச்சாந்து என்று சொல்லியிருக்கிறார்கள்.//

  நன்றி தமிழ்க் கடவுளே :)

  //இரவிசங்கர் எங்கேயாவது போய் வாங்கிவரவேண்டுமென்றால் எடிசனில் இருக்கும் ஏதேனும் இந்தியக் கடைக்குப் போகச் சொல்லுங்கள். :-)//

  அவருக்கு கேட்டிருக்கும்னு நினைக்கிறேன் :)

  ReplyDelete
 11. //நம் குற்றங்களைப் பொறுத்து நம்மை ஏற்றுக் கொண்டு நம்மைப் புனிதமாக்கிய அவனுடைய அருள் குணத்தையும், பலவாறு புகழ்ந்து, 'சிவனே சிவனே' என்று உரக்கப் பாடினாலும், அதனை உணர்ந்து கொள்ளாமல் உறங்குபவளே!//

  சிவனை உணராமல் உறங்கும் மனங்களும் விழித்துக் கொள்ள வேண்டிய வேளையன்றோ?

  ReplyDelete
 12. //சிவனை உணராமல் உறங்கும் மனங்களும் விழித்துக் கொள்ள வேண்டிய வேளையன்றோ?//

  நல்லா சொன்னீங்க. நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)