உணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...
Sunday, December 28, 2008
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 4
4.
ஒள்நித்தில நகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ!
வண்ணக்கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ!
எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத்துயின்றுஅவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கினியானைப் பாடிக்கசிந்துள்ளம்
உள்ணெக்கு நின்றுருகயாமாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயில் ஏலேரெம்பாவாய்.
ஒள்நித்தில நகையாய் - ஒளி பொருந்திய முத்துப் போன்ற பற்களையுடைய பெண்ணே!
இன்னம் புலர்ந்தின்றோ - இன்னும் பொழுது விடியவில்லையா?
வண்ணக்கிளி மொழியார் - அழகு பொருந்திய, கிளிபோல் இனிமையாகப் பேசும் பெண்கள்
எல்லாரும் வந்தாரோ - எல்லாரும் வந்து விட்டார்களா?
எண்ணிக்கொடு - அவர்களை எண்ணிக் கொண்டு,
உள்ளவா சொல்லுகோம் - உள்ளபடி சொல்லுகிறோம்,
அவ்வளவும் - அது வரையிலும்,
கண்ணைத் துயின்று - தூங்கிக் கிடந்து,
அவமே - வீணே
காலத்தைப் போக்காது - காலத்தைக் கழிக்காமல்,
விண்ணுக்கு ஒரு மருந்தை - தேவர்களுக்குக் கூட ஒப்பற்ற அமிழ்தத்தைப் போன்றவனை,
வேத விழுப் பொருளை - வேதங்கள் சொல்லும் அந்த மேலான இறைவனை,
கண்ணுக்கு இனியானை - காண்பவர்களுக்கு இனிமையானவனை,
பாடிக் கசிந்து - வாயாரப் பாடி மனம் கசிந்து,
உள்ளம் உள்நெக்கு நின்று உருக - உள்ளம் மெழுகு போல் உருகும்படி
யாம் மாட்டோம் - எங்களுடன் வந்திருக்கும் பெண்களை நாங்கள் கணக்கிட மாட்டோம்!
நீயே வந்து எண்ணி - நீயே எழுந்து வந்து கணக்கிட்டு,
குறையில் - குறையுமானால்,
துயில் - மீண்டும் சென்று உறங்குவாயாக!
"ஒளி பொருந்திய பற்களை உடைய பெண்ணே! இன்னும் உனக்கு பொழுது விடியவில்லையா?" என்று எழுப்ப வந்த பெண்கள் கேட்க,
"அழகு மிகுந்த கிளி போல இனிமையாகப் பேசும் பெண்களே! எல்லோரும் வந்து விட்டார்களா?" என்று உறங்கியிருப்பவள் வினவுகிறாள். (என்னை மாதிரி ஆள் போல!)
அதற்கு மற்ற பெண்கள், "எங்களோடு வந்திருப்பவர்களை எண்ணிக் கொண்டு பிறகு சொல்கிறோம். அது வரையிலும், தூங்கிக் கிடந்து காலத்தை வீணாக்காமல், தேவர்களுக்குக் கூட ஒப்பில்லாத அமிழ்தம் போன்றவனை, வேதங்கள் சொல்லும் அந்த மேலான இறைவனை, உள்ளம் மெழுகு போல் உருகும்படி பாடுவாயாக!" என்று கூறியும், அந்தப் பெண் இன்னும் எழுந்திராமல் இருக்கிறாள்.
எனவே காத்திருக்கும் பெண்கள், "எங்களுடன் வந்திருக்கும் பெண்களை நாங்கள் கணக்கிட்டு சொல்ல மாட்டோம். நீயே எழுந்து வந்து எண்ணிக் கொள். யாரேனும் குறைவதாகத் தெரிந்தால், நீ திரும்பவும் போய் உறங்கலாம்!" என்கிறார்கள்.
(எனக்கு பிடித்த பாடல் :)
பொருளுக்கு நன்றி : Thiruppaavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி : கைலாஷி - http://thiruvempavai.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
//எனவே காத்திருக்கும் பெண்கள், "எங்களுடன் வந்திருக்கும் பெண்களை நாங்கள் கணக்கிட்டு சொல்ல மாட்டோம். நீயே எழுந்து வந்து எண்ணிக் கொள். யாரேனும் குறைவதாகத் தெரிந்தால், நீ திரும்பவும் போய் உறங்கலாம்!" என்கிறார்கள்.
ReplyDelete(எனக்கு பிடித்த பாடல் :)//
ஏன் ¨நல்லா¨ கணக்கு போட தெரியுமா?
:-))
//எனக்கு பிடித்த பாடல் //
ReplyDeleteசிவபெருமானின் பெயரையோ அடையாளங்களையோ குறிப்பிடாமல், திருக்குறளில் உள்ளது போல இறைவன் என்று பொதுவாக குறிப்பிட்டதாலா?
எல்லாப் பாடல்களுமே //ஏலோர் எம்பாவாய்// என்று முடிகிறது. 'எழுவாய் என் பெண்ணே' என்று அர்த்தமா?
Nice one...
ReplyDelete:)
ஈசன் திருவடிகளே சரணம்.
ReplyDelete//ஏன் ¨நல்லா¨ கணக்கு போட தெரியுமா?//
ReplyDeleteஆமா, எப்படி கரெக்டா தப்பா சொன்னீங்க? :) கணக்குக்கு என்னைய பிடிக்கவே பிடிக்காது :)
//திருக்குறளில் உள்ளது போல இறைவன் என்று பொதுவாக குறிப்பிட்டதாலா?//
ReplyDeleteஅப்படில்லாம் இல்ல ரமேஷ். அதென்னவோ
//கண்ணைத்துயின்றுஅவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கினியானைப் பாடிக்கசிந்துள்ளம்
உள்ணெக்கு நின்றுருக//
இந்த வரிகள் ரொம்பப் பிடிக்கும் :)
//எல்லாப் பாடல்களுமே //ஏலோர் எம்பாவாய்// என்று முடிகிறது. 'எழுவாய் என் பெண்ணே' என்று அர்த்தமா?//
ம்... கிட்டத்தட்ட.
ஏலோர் எம்பாவாய் - ஏல்; ஓர்; எம் பாவாய்! - (நாங்கள் சொல்வதை) ஏற்பாய்; சிந்திப்பாய்; பெண்ணே!
நாங்கள் சொல்றதைக் கேட்டு எங்ககூட நோன்பிருக்க வாடீ! ன்னு பொருள். கேஆரெஸ் இதுக்கு அழகா விளக்கம் சொல்லி இருந்தார். அதைக் கண்டு பிடிக்க முடியல இப்போ. பிறகு அனுப்பறேன்...
//Nice one...
ReplyDelete:)//
வாங்க மது கிருஷ்ணா. முதல் வருகைக்கு நன்றி :)
//ஈசன் திருவடிகளே சரணம்.//
ReplyDeleteசரணம் சரணம். நன்றி மௌலி.
திருப்பாவையின் 'எல்லே இளங்கிளியே' பாசுரம் மாதிரியே இருக்குக்கா இந்தப் பாடலும். நல்லா சண்டை போடறாங்க இந்தத் தோழிங்க. எண்ணிச் சொல்றோம்ன்னு சொல்லிட்டு அப்புறம் என்ன நாங்க சொல்லமாட்டோம் நீயே வந்து எண்ணிப் பார்த்துக்கோங்கறாங்க?
ReplyDelete//திருப்பாவையின் 'எல்லே இளங்கிளியே' பாசுரம் மாதிரியே இருக்குக்கா இந்தப் பாடலும்.//
ReplyDeleteசரியா சொன்னீங்க. அதேதான் எனக்கும் தோணுச்சு :) நன்றி குமரா.
உங்களுக்குப் பிடித்த பாடல் எங்களுக்கும் பிடித்தது. கருமை நிறத்தில் காட்சிதரும் லிங்கம் மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப் பட்டு வெண்லிங்கமாக தரும் தரிசனம் கன்னத்தில் போட்டுக் கொள்ள வைத்தது.
ReplyDelete//கருமை நிறத்தில் காட்சிதரும் லிங்கம் மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப் பட்டு //
ReplyDeleteவாங்க ராமலக்ஷ்மி. எனக்கும் ரொம்பப் பிடிச்ச படம். ஆனா இது மல்லிகைப்பூ இல்ல, அன்னாபிஷேகம் :) அழகா இருக்குல்ல? கைலாஷி அவர்கள் அன்னாபிஷேகம் பத்தி அழகா பதிவே போட்டிருக்கார். அப்புறமா லிங்க் தேடி தரேன்.