Tuesday, December 30, 2008

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 6



6.


மானே, நீ நென்னலை "நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன்" என்றலும், நாணாமே
போன திசை பகராய்! இன்னம் புலர்ந்தின்றோ?
வானே நிலனே பிறவே அறிவரியான்,
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்,
வான் வார் கழல் பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்,
ஊனே உருகாய், உனக்கே உறும், எமக்கும்
ஏனோர்க்கும் தங்கோனைப் பாடு, ஏலோர் எம்பாவாய்.



மானே - மான் போன்ற மருண்ட பார்வையையுடைய பெண்ணே!

நீ நென்னல் - நீ நேற்று,

நாளை வந்து உங்களை நானே எழுப்புவன் - நாளை நானே வந்து உங்களை எழுப்புவேன்

என்றலும் - கூறியிருந்தும்,

நாணாமே - வெட்கப்படாமல் சொல்,

போன திசை பகராய் - அந்தச் சொல் இப்போது எந்த திசைக்குப் போயிற்று?

இன்னம் புலர்ந்தின்றோ? - இன்னும் விடியவில்லையா?

வானே - விண்ணில் உள்ள தேவர்களும்,

நிலனே - நிலத்தில் வசிக்கும் மாந்தர்களும்,

பிறரும் - மற்றவர்களும்,

அறிவரியான் - அறிந்து கொள்வதற்கு அரியவனான சிவபெருமான்,

தானே வந்து - தானாகவே இவ்வுலகில் எழுந்தருளி,

எம்மை தலையளித்து - நம்மை கருணை கூர்ந்து,

ஆட்கொண்டருளும் - ஏற்றுக் கொண்டு அருள் புரியும் (சிவபெருமானின்)

வான்வார் கழல்பாடி - மிகப் பெருமை வாய்ந்த திருவடிகளைப் பாடி,

வந்தோர்க்கு - வந்த எங்களுக்கு,

உன்வாய் திறவாய் - ஒன்றும் பேசாமல் உறங்குகிறாயே!

ஊனே உருகாய் - உன் உடல்தான் உருகாதா?

உனக்கே உறும் - இப்படிக் கிடத்தல் உனக்குத்தான் பொருந்தும்

எமக்கும் - எங்களுக்காகவும்,

ஏனோர்க்கும் - பிறருக்காகவும்,

தம் கோனைப் பாடு - நம் தலைவனாகிய சிவபெருமானைப் பாடுவாயாக!


[நென்னல் - நேற்று; வான் - பெருமை]

மான் போன்ற மருண்ட பார்வையையுடைய பெண்ணே! "நாளை நானே வந்து உங்களை எழுப்புவேன்", என்று நீதானே நேற்று சொன்னாய்? நீ சொன்ன அந்தச் சொல் எந்தத் திசைக்குப் போயிற்று என்று வெட்கப்படாமல் சொல்லேன்! இன்னும் உனக்கு விடியவில்லையா? விண்ணில் வசிக்கும் தேவர்களும், மண்ணில் வசிக்கும் மாந்தர்களும், இன்னும் மற்றவரும் அறிந்து கொள்வதற்கு அரியவனான சிவபெருமான், தானாகவே இவ்வுலகில் எழுந்தருளி, நம்மைக் கருணையுடன் ஏற்றுக் கொண்டு அருள் புரிந்தாரே! அப்பேர்ப்பட்ட இறைவனின் பெருமை பொருந்திய திருவடிகளைப் பாடிக் கொண்டு வந்த எங்களுடன் எதுவும் பேசாமல் உறங்குகிறாயே! எங்கள் பாடல் கேட்டு உன் உடல் உருகவில்லையா? அதைக் கேட்டும், இப்படிக் கிடப்பது உன்னால்தான் முடியும். எங்களுக்காகவும், பிறருக்காகவும், நம் தலைவனாகிய சிவபெருமானைப் பாடுவாயாக!


பொருளுக்கு நன்றி: Thiruppaavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி: http://shaivam.org

9 comments:

  1. ஈசன் திருவடி நிழலைப் பற்றிய பாடல்....எளிய விளக்கத்திற்கு நன்றி.

    கோன் என்ற வார்த்தைக்கு அர்த்தமும் இப்போது தெளிவாகத் தெரிந்தது... "கோன் அமரும் சோலை, அணிதிருவரங்கம்" அப்படின்னு முன்பு பாடலில் கேட்ட பொழுது அது நம்பெருமாளுக்கான நாமம் என்று நினைத்திருந்தேன்...இப்போ "தலைவன்" என்ற பொருள் என்று தெரிந்தது.

    ReplyDelete
  2. வாங்க மௌலி... நன்றி :)

    ReplyDelete
  3. கோன் என்றால் அரசன் அப்படின்னும் பொருள்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  4. //அறிவரியான் - அறிந்து கொள்வதற்கு அரியவனான சிவபெருமான்,//
    அவ்வளவு பெரிய வார்த்தையை எவ்வளவு சின்னதா சுருக்கிட்டாரு!

    கோன் - அரசன் மற்றும் தலைவன்.

    ReplyDelete
  5. //கோன் என்றால் அரசன் அப்படின்னும் பொருள்னு நினைக்கிறேன்//


    கோன் என்றால் அரசன் என்று ஒரு பொருளும் உள்ளது.

    ReplyDelete
  6. //அவ்வளவு பெரிய வார்த்தையை எவ்வளவு சின்னதா சுருக்கிட்டாரு!//

    ஆமால்ல? :)

    //கோன் - அரசன் மற்றும் தலைவன்.//

    நன்றி ஜீவா.

    ReplyDelete
  7. //கோன் என்றால் அரசன் என்று ஒரு பொருளும் உள்ளது.//

    வாங்க கைலாஷி. நன்றி.

    ReplyDelete
  8. மிக எளிமையான சொற்கள்; அருமையான விளக்கம் அக்கா.

    ReplyDelete
  9. //மிக எளிமையான சொற்கள்; அருமையான விளக்கம் அக்கா.//

    போற்றுதலை புத்தகம் எழுதினவருக்கு அனுப்பிட்டேன் :) நன்றி குமரா.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)