Sunday, October 27, 2013

How to let go?


ஒரு துயரமோ, பிரச்சனையோ வரும்போது அதை இறைவனிடம் விட்டுடு, அவன் பார்த்துப்பான் அப்படின்னு பலரும் ஆறுதல் சொல்றதைக் கேட்டிருப்பீங்க. ஆனா அப்படின்னா என்ன? அதை எப்படிச் செய்யறது? அது தெரிஞ்சாதானே செய்ய முடியும்? பல பெரியவங்க சொல்றதையும்படிக்கிறதில், அது எப்படின்னு இப்பதான் ஓரளவு புரிய ஆரம்பிச்சிருக்கு.


நமக்கு ஒரு கணக்கு சரியா வரலை; எங்கேயோ உதைக்குது. அல்லது அலுவலக வேலையில் ஒரு விஷயம் எப்படி செய்யறதுன்னு தெரியலை. கேட்கவும் ஆளில்லை; நாமளேதான் கண்டு பிடிச்சாகணும். இந்த மாதிரி சமயத்தில் பொதுவா நாம செய்யறது என்ன? அந்த பிரச்சனையைப் பற்றியே விடாம நினைச்சுக்கிட்டே இருக்கிறது. இப்படிப் பண்ணினா சரி வருமா, அப்படிப் பண்ணினா சரி வருமான்னு மாத்தி மாத்தி யோசிச்சிக்கிட்டே இருக்கறது. அப்படிச் செய்யும்போது நமக்கு ஏற்கனவே வந்த யோசனைகள்தான் வந்துக்கிட்டே இருக்குமே தவிர, புதுசா ஒண்ணும் தோணாது. ஒரு கணக்கை ஒரே முறைல எத்தனை தரம் போட்டாலும், அதே விடைதானே வரும்! ஆனா அதுவே அந்த பிரச்சனைக்கு புத்தியில் இருந்து கொஞ்சம் ஓய்வு கொடுத்துப் பாருங்க. மறு நாள் திடீர்னு வேற ஒரு வழியும், வேற ஒரு விடையும் வந்து நிக்கும்! எப்படி இந்தக் கோணத்திலிருந்து யோசிக்காம விட்டோம்னு தோணும். “யுரேகா” ஞாபகம் இருக்கா!

நமக்கு வாழ்க்கையில் பிரச்சனைகள், துன்பங்கள் வரும்போதும் அதே தவறைத்தான் செய்யறோம். அதை மனசுக்குள் போட்டு, புரட்டி எடுத்து, அந்த பிரச்சனைக்கே அலுப்பு தட்டற  அளவு ஏதேதோ கோணங்களில் அதைப்பற்றி நினைக்கிறோம், கவலைப் படறோம். அந்த உணர்வுகள் ஏற்படுத்தற தாக்கத்தோடேயே, கோபத்தோடேயே, வருத்தத்தோடேயே, சம்பந்தப்பட்டவர்களிடம் நடந்துக்கறோம். ஆனா அது பிரச்சனையை சரி பண்ணாம, மேலும் எதிர் விளைவுகளைத்தான் தருது. புதை குழி மாதிரி நம்மை இன்னும் இன்னும் உள்ளே இழுத்துக்குது.

கார்லயோ, பைக்லயோ பிரச்சனை வந்தா என்ன செய்யறோம்? நல்ல மெகானிக் அப்படின்னு தெரிஞ்சவர்கிட்ட கொண்டு போய் குடுக்கறோம். அவர் நாளைக்கு வாங்க, அல்லது இரண்டு நாள் கழிச்சு வாங்க, பாத்து வைக்கிறேன், அப்படிம்பார். அதைக் கொடுத்துட்டு வந்திடுவோமா, அல்லது பக்கத்தில் நின்னுக்கிட்டு அதை அப்படிச் செய்யாதே, இதை இப்படிச் செய் அப்படின்னு  நமக்கே தெரியாத விஷயத்தை அவருக்குச் சொல்லிக் கொடுப்போமா? அப்படில்லாம் செய்தா, நீயே பாத்துக்கய்யான்னு சொல்லிட்டு அவரு கோச்சுக்கிட்டுப் போயிடுவாரு!

அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவருக்கும் இந்த உதாரணம் பொருந்தும். நம்ம உடலைக் கவனிக்கிற பொறுப்பை, மருத்துவரை நம்பிதானே கொடுக்கிறோம். நீ சரியா செய்ய மாட்டே, நகருன்னு சொல்லிட்டு நாமளே கத்தியைத் தூக்க முடியுமா?

அதாவது, இந்த உதாரணங்கள் மூலம் சொல்ல வர்றது என்னன்னா, வேலை தெரிஞ்ச ஒருத்தர்கிட்ட ஒரு பொறுப்பை ஒப்படைச்ச பிறகு, நாம அதைப் பற்றி நினைக்கிறதில்ல, தலையிடறதில்லை, கவலைப்படறதும் இல்லை. அவர் சரி பண்ணிடுவார்னு அவர் மேல நம்பிக்கை வெச்சு காத்திருக்கோம்.

அதே போலத்தான் இறைவனிடமும் நம்பிக்கை வைக்கணும். அவன்கிட்ட ஒரு பிரச்சனையை ஒப்படைச்சாச்சுன்னா, அதைப் பற்றி நினைக்கிறதையும், கவலைப் படறதையும் விட்டுடணும். அப்படிச் செய்யும் போது என்ன ஆகும்? மனசு அமைதி ஆகும். அமைதியான மனசில்தான் இறைவன் குடியிருப்பான். அவனே நமக்கு நல்ல வழியைக் காட்டுவான். அவன் காட்டற வழிப்படி, உணர்ச்சி வசப்படாம, அமைதியோட, நடு நிலைமையோட செய்யற காரியங்கள்தான் நன்மை தரும்.

இதே கருத்தை ரொம்ப எளிமையா சொல்ற ஒரு ஆங்கிலக் கவிதையை முன்ன ஒரு முறை Hallmark card –ஒண்ணுல படிச்சிருக்கேன். ஆனா அப்ப அது சரியா புரியல;  கருத்து மட்டும் நினைவிருந்தது. எப்படி எப்படியோ கூகுளார்கிட்ட கேட்டு ஒரு வழியா முழுக் கவிதையையும் கண்டுபிடிச்சிட்டேன்!

Poem: Let Go and Let God!

As children bring their broken toys with tears for us to mend,
I brought my broken dreams to God because He was my friend.
But then, instead of leaving Him in peace to work alone,
I hung around and tried to help with ways that were my own.
At last, I snatched them back and cried, ”How can you be so slow?”
“My child,” He said, ”What could I do?
You never did let go.” ~Lauretta P. Burns

ரொம்ப அழகா, எளிமையா இந்த ஆங்கிலக் கவிதையில் சொல்லப்பட்டிருக்கிற விஷயம் என்ன தெரியுமா? சரணாகதி! அல்லது Total Surrender! ஆமாம்... அதேதான்! உங்களை, உங்க பிரச்சனைகளை இறைவனிடம் ஒப்படைச்சிடுங்க. ஆச்சா? அவ்வளவுதான். கவலையை விடுங்க.

எல்லோரும் நல்லாருக்கணும்.

அன்புடன்
கவிநயா

படத்துக்கு நன்றி: http://imagineagirldaydreaming.blogspot.com/2013/09/let-go.html

பி.கு.: இன்னும் கொஞ்ச நாட்களுக்கு வலையுலகப் பக்கம் வர முடியாத சூழ்நிலை…‘அம்மன் பாட்டு’ வலைப்பூவில் மட்டும் தொடர்ந்து செவ்வாய்க் கிழமை பாடல்கள் இட விருப்பம் இருக்கு. பார்க்கலாம்… அவள் விருப்பம் எப்படியோ? அனைவருக்கும் மனம் நிறைந்த இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!

20 comments:


 1. மிக அருமையாக அதே நேரத்தில் மிக தெளிவாக சொல்லிச் சென்ற பதிவு பாராட்டுக்கள்

  ReplyDelete
 2. சரணாகதி....

  மிக அருமையான விஷயத்தினைச் சிறப்பாக சொல்லி இருக்கீங்க.....

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி வெங்கட்.

   Delete
 3. சிந்திக்க வைத்த உதாரணங்கள்...

  இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தனபாலன். தீபாவளி வாழ்த்துகளுக்கும்.

   Delete
 4. //அந்த பிரச்சனைக்கே அலுப்பு தட்டற// ரசித்தேன். ஆமாம், இடும்பைக்கே இடும்பை படுப்பர். :))) ஒரு பொருளை காணோம்னா விடாம தேடின இடத்துலேயே திரும்ப, திரும்ப தேடுவாங்க. கொஞ்சம் நிதானிச்சு எங்க,எப்போ தவற விட்டோம்ன்னு யோசிச்சு பார்த்தா சரியாகிடும். பதட்டம் எல்லா விஷயங்களையும் தப்பு,தப்பா யோசிக்க வச்சு, தப்பு,தப்பா செய்யவச்சிடும். நல்ல பதிவிற்கும், நல்ல கவிதையை பகிர்ந்தமைக்கும் நன்றி.

  உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் என் தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்.

  //இன்னும் கொஞ்ச நாட்களுக்கு வலையுலகப் பக்கம் வர முடியாத சூழ்நிலை…// ??????? :((

  ReplyDelete
  Replies
  1. //ரு பொருளை காணோம்னா விடாம தேடின இடத்துலேயே திரும்ப, திரும்ப தேடுவாங்க. கொஞ்சம் நிதானிச்சு எங்க,எப்போ தவற விட்டோம்ன்னு யோசிச்சு பார்த்தா சரியாகிடும்.//

   ஆமாம், நல்ல உதாரணம் தானைத் தலைவி. மிக்க நன்றி.

   Delete
 5. எத்தனை துன்பம் வந்தாலும்
  நின்னடி சரணம்
  நிமலனே...
  அருமையாக சொன்னீர்கள் சகோதரி..
  ---
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் முன்னதான
  தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி மகேந்திரன்.

   Delete
 6. மனதைத் தொட்ட பதிவு!!. உண்மையில் சில விஷயங்கள் நமக்குத் தெரியுமென நினைத்திருப்போம். ஆனால் இக்கட்டான சூழலில் எதுவும் நினைவுக்கு வராது, நம்மை அறிந்தவர் வந்து சொல்லும் வரையில்......
  நம்மை நன்றாக அறிந்த இறைவனே சிலர் மூலம் செய்தி சொல்லி அனுப்புகிறான். 'நானிருக்கிறேன் என்பதை மறந்து போனாயா..' என நம்பிக்கை தருகிறான். அப்படிப்பட்ட பகிர்வு இது.. சரணாகதியை இதை விடவும் எளிமையாகச் சொல்லுவது கடினமெனத் தோன்றுகிறது..மிக்க நன்றி!!

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் உளமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. //நம்மை நன்றாக அறிந்த இறைவனே சிலர் மூலம் செய்தி சொல்லி அனுப்புகிறான்.//

   மிகவும் உண்மை. மிக்க நன்றி பார்வதி.

   Delete
 7. நல்ல பதிவு. பகிர்ந்த கவிதையும் அருமை.

  தீபாவளி வாழ்த்துகள்:)!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 8. //சரணாகதி! அல்லது Total Surrender! ஆமாம்... அதேதான்! உங்களை, உங்க பிரச்சனைகளை இறைவனிடம் ஒப்படைச்சிடுங்க. ஆச்சா? அவ்வளவுதான். கவலையை விடுங்க.//

  OK ;)

  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. மிக அருமையான பகிர்வு...
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சகோதரி....

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சே.குமார்.

   Delete
 10. ஆன்மாவின் அமைதியில் உறைபவன் ஆண்டவன். அமைதியற்ற ஆன்மாவில் அவன் 'துயில்' கொண்டிருக்கிறான். மனத்தை அமைதியடையச் செய்துவிட, அதில் துயில் கொள்ளும் எம்பிரான் 'உறக்கம் தெளிந்து உற்சாகமாய் அருள்கிறான்'. அருள்வதும் அடைந்ததும் அக்கணம், அங்கே பேரானந்தம் அடைகிறது.

  அழகான உதாரணங்களுடன் நல்லதொரு சிந்தனையை பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் தோழீ!

  ReplyDelete
  Replies
  1. //மனத்தை அமைதியடையச் செய்துவிட, அதில் துயில் கொள்ளும் எம்பிரான் 'உறக்கம் தெளிந்து உற்சாகமாய் அருள்கிறான்'. அருள்வதும் அடைந்ததும் அக்கணம், அங்கே பேரானந்தம் அடைகிறது. //

   ஆஹா, அருமையாகச் சொன்னீர்கள் சுந்தர்! மிக்க நன்றி.

   Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)