Thursday, October 2, 2008

தாமரைப் பூவினில் வீற்றிருப்பாய் !

நவராத்ரி சிறப்புப் பதிவு. ஸ்ரீலக்ஷ்மி தேவி அவள் பதங்கள் சரணம் !
தாமரைப் பூவினில் வீற்றிருப்பாய் அம்மா
தங்கத்தைப் போலே ஜொலித்திருப்பாய்
வாமனனாம் அந்த மாதவன் மார்பினில்
வாசனை மலராய் முகிழ்த்திருப்பாய்

மலரும்உன் வதனமும் ஒன்றெனவேமது
வண்டுகளும் மயங்கும் விந்தையென்ன?
வளரும் நிலவும்உன் முகமதி கண்டபின்
தயங்கித் தானும் தேய்வதென்ன?

கதி ரொளியோஉன் கண்ணொளி எனவே
கமலங்கள் இரவிலும் மலர்வதென்ன?
குழ லொலியோஉன் குரலொலி எனவே
கோகிலங் களும்தலை குனிவதென்ன?

தங்களினம் என்றெண்ணி அன்னங்களும் உன்னுடைய
மெல் லடி களைப்பின் தொடர்வதென்ன?
உந்த னிடை கண்டபின் கானகத்து கொடிகளும்
நாணம் கொண்டு இன்னுமே மெலிவதென்ன?

உன் னெழில் முகம் என் சிந்தையிலே வேண்டும்
உன் புகழ் தினம் நான் பாடிடவே வேண்டும்
உந்தன் அருட் பார்வை எந்தன் திசையினிலே வேண்டும்
உன்னிடத்தில் அகலாத அன்பெனக்கு வேண்டும்!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://sss.vn.ua/india/murtis/lakshmi.jpg

17 comments:

 1. சூப்பர்...இன்று மஹாலக்ஷ்மி ஆவாஹனமோ?

  ReplyDelete
 2. வாங்க மௌலி. ஆமாம், எப்படி சரிய்யா சொன்னீங்க? :) வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.

  ReplyDelete
 3. முதல் மூன்று நாட்கள் மஹா துர்க்கைக்கும் நடு மூன்று நாட்கள் மஹா லக்ஷ்மிக்கும் நிறை மூன்று நாட்கள் ம்ஹா சரஸ்வதிகும் உரியது என்று கவிதையுடன் வந்திருக்கும் கவிநயா நவராத்திரி நல்வாழ்த்துக்கள்.

  கருட சேவை பதிவு புரட்டாசி சனிக்கிழமை நாளை பதிவிட வேங்கடேசர் திருவுள்ளம் வந்து சேவியுங்கள்

  ReplyDelete
 4. http://uk.youtube.com/watch?v=-kGQLpASKAQ

  ReplyDelete
 5. தாமரைப்பூவில் வீற்றிருப்பாய் என்ற உடன்
  வெள்ளைத்தாமரைப்பூவில் வீற்றிருப்பாள் என்ற‌
  பாடல் நினைவு வந்ததால், சரஸ்வதியின் அருள்
  பெற்ற கவினயாவின் பாடலை சாரங்க ராகத்தில்
  மெட்டமைத்துப் பிறகு பார்த்தால், மேடம்
  கவினயா அவர்கள் மேடம் லக்ஷ்மி அருள் வேண்டும்
  என்றல்லவா பாடியிருக்கிறார்கள் எனத்தெரிந்தது.

  அதனால் என்ன ? கவினயாவுக்கு லக்ஷ்மி சரஸ்வதி
  இரண்டு தேவதைகளின் அருளுமே 100 per cent உண்டு.

  Welcome to
  http://ceebrospark.blogspot.com

  தாத்தா.
  தஞ்சை

  ReplyDelete
 6. //உன் னெழில் முகம் என் சிந்தையிலே வேண்டும்
  உன் புகழ் தினம் நான் பாடிடவே வேண்டும்
  உந்தன் அருட் பார்வை எந்தன் திசையினிலே வேண்டும்
  உன்னிடத்தில் அகலாத அன்பெனக்கு வேண்டும்!//

  இத்தனையும் கிடைத்திட்டால் இதை விட வேறென்ன வேண்டும்?

  ReplyDelete
 7. அழகான கவிதை கவிநயா. படமும் ரொம்ப அழகு. நவராத்திரி நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. //கதி ரொளியோஉன் கண்ணொளி எனவே
  கமலங்கள் இரவிலும் மலர்வதென்ன?
  குழ லொலியோஉன் குரலொலி எனவே
  கோகிலங் களும்தலை குனிவதென்ன?//

  அருமை!.. அந்த கோகிலங்கள் தலை குனிந்த பாங்கு தான் என்னே!..
  கற்பனைத் தேர் ஆடி அசங்கி, ஊர் கூடி சேவிக்க அழகாக
  நிலை சேர்ந்திருக்கிறது!
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 9. மலரும் உன் வதனமும் ஒன்றெனவே மது வண்டுகளும் மயங்கும்ன்னு படிச்சவுடனே ஆதிசங்கரர் பாடுன கனகதாரா ஸ்தோத்ரம் நினைவுக்கு வந்துருச்சு அக்கா.

  அங்கம் ஹரே புளகபூஷனம் ஆச்ரயந்தி
  ப்ருங்காங்கனேவ முகுளாபரணம் தமாலம்
  அங்கீ க்ருதாகில விபூதிர் அபாங்கலீலா
  மாங்கல்யதாஸ்து மம மங்கள தேவதாயா

  என்ன புரியலையா? சரி கவியரசர் அதை அப்படியே தமிழ்ல பாடியிருக்கார் 'பொன்மழைப்பாடல்கள்'னு. அதைப் படிச்சா புரிஞ்சிரும்.

  மாலவன் மார்பில் நிற்கும் மங்களக் கமலச் செல்வி!
  மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்!
  நீல மா மேகம் போல நிற்கின்ற திருமால் உந்தன்
  நேயத்தால் மெய் சிலிர்த்து நிகரிலாச் செல்வம் கொண்டான்!
  ....

  ரெண்டாவது வரியை மட்டும் பாருங்க. நீங்க அன்னையோட வதனத்தை மலர்ன்னு சொல்லி மாலவனை மதுசூதன வண்டுன்னு சொல்லியிருக்கீங்க. இங்கே ஆசாரியர் மாலவனை மரகத மலர்ன்னும் மார்பில் இருக்கும் அன்னையை மாணிக்க வண்டுன்னும் சொல்லியிருக்காரு. :-)

  சந்திரனுக்குத் தன் உடன்பிறந்தாள் மேல் பொறாமையா? பாவம் தான். சந்திர சகோதரியான இவள் மேலேயே அவன் பொறாமை கொண்டால் தேய்ந்து போக வேண்டியது தான்.

  ஐ. பழைய பாடல் ஒன்று குளத்துல இருந்த அல்லிமலரெல்லாம் பெண்கள் குளிக்க வந்தவுடனே நிலவு தான் வந்துவிட்டது என்று எண்ணி மலர்ந்ததுன்னு சொல்லும். அதே போல அன்னையின் கண்ணொளியைக் கண்டு தாமரை மலருதா? அருமை. ஒருவேளை தாமரைக்கண்ணன் மலர்கிறானோ?

  ஓ. இவள் குரலொலியை மறக்க முடியாமல் தான் கோவிந்தன் குழலூதி மனமெல்லாம் நிறைகின்றானோ?

  பாட்டு எளிமையா அருமையா தெளிவா இருக்கு அக்கா.

  ReplyDelete
 10. வருக கைலாஷி. ரொம்ப நாளா காணுமேன்னு நினைச்சேன் :) கண்டிப்பா கருட சேவைக்கு வந்துடறேன். உங்களுக்கும் நவராத்ரி நல்வாழ்த்துகள். மிக்க நன்றி.

  ReplyDelete
 11. தாமரைப் பூன்னு சொன்ன உடனே சரஸ்வதிதான் நினைவு வந்ததா இன்னொருத்தர் கூட சொன்னாங்க :) அதனால என்ன தாத்தா. பாடலைக் கேட்டு மகிழ்ந்தேன்.

  //கவினயாவுக்கு லக்ஷ்மி சரஸ்வதி
  இரண்டு தேவதைகளின் அருளுமே 100 per cent உண்டு.//

  அப்படின்னு சொல்கிற உங்க ஆசிகளுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 12. சரிதான் ராமலக்ஷ்மி. வேறு ஒன்றும் வேண்டாம் :) வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 13. மிக்க நன்றி ரமேஷ்.

  ReplyDelete
 14. //கற்பனைத் தேர் ஆடி அசங்கி, ஊர் கூடி சேவிக்க அழகாக நிலை சேர்ந்திருக்கிறது!//

  நீங்க ஒவ்வொண்ணும் சொல்ற விதமே அழகாக இருக்கு ஜீவி ஐயா :) மிக்க நன்றி.

  ReplyDelete
 15. சூப்பர், குமரா! பாடலை விட உங்களோட interpretation ரொம்ப அருமையா இருக்கே :)

  //அருமை. ஒருவேளை தாமரைக்கண்ணன் மலர்கிறானோ?

  ஓ. இவள் குரலொலியை மறக்க முடியாமல் தான் கோவிந்தன் குழலூதி மனமெல்லாம் நிறைகின்றானோ? //

  முக்கியமாக இவைகளை ரொம்பவே ரசித்தேன் :)

  கனகதாரா ஸ்தோத்திரம் கண்ணதாசனோடது படிச்சிருக்கேன், ஆனா இந்த அளவெல்லாம் நினைவில்ல. ஆனா உங்கள் ஒப்பிடுதலை படிக்க சந்தோஷமா இருந்தது :)

  மிக்க நன்றி உங்களுக்கு! எழுத வைத்த அவளுக்கும்.

  ReplyDelete
 16. //கதி ரொளியோஉன் கண்ணொளி எனவே//
  ஆகா, அருமையாக இருந்தது!

  ReplyDelete
 17. வாங்க ஜீவா. ரசனைக்கு மிக்க நன்றி :)

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)