Sunday, November 15, 2009

தேடல்


ஏதோ ஒன்றைத் தேடித்தான்
எந்தன் மனசு அலைகிறது;
தேடும் பொருளே தெரியாமல்
திசைகள் எல்லாம் அளக்கிறது!

காற்றில் ஏறிப் பறக்கிறது;
கனவில் ஏறி மிதக்கிறது;
மலையில் ஏறி மலைக்கிறது;
கடலில் மூழ்கித் தவிக்கிறது!

எல்லாம் இருப்பது போலிருக்கும்;
ஏதோ ஒன்று இருக்காது!
எதுவும் இல்லை போலிருக்கும்;
இருப்பவை கண்ணுக்குத் தெரியாது!

அதனால் என்ன பூமனமே!
அலைக்கழியாதே என்மனமே!
நீ வெளியே தேடும் பொருளெல்லாம்
உன்னுள்ளே இருக்குது உணர்வாயே!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/fernandosanchez/2384851617/sizes/m/


25 comments:

  1. //நீ வெளியே தேடும் பொருளெல்லாம்
    உன்னுள்ளே இருக்குது உணர்வாயே!//

    --இந்த வரிகள் தாம், இக்கவிதையின் அடிநாதம் போலும்; அப்படியாயின், மிகுந்த அர்த்தம் பொதிந்திருப்பது தெரிகிறது.
    இன்னொன்று.
    'மலையில் ஏறி மலைக்கிறது' என்கிற வார்த்தையைப் படித்தவுடனே தான், இதனால் மலைக்கே பெயர்க்காரணமாய் அந்தப் பெயர் வந்ததோ என்று மயங்க வைத்தது.

    ReplyDelete
  2. கவிதையையும் ரசித்தேன். ஜீவி அவர்களின் கருத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
  3. நல்ல கவிதை. "தேடும் பொருளே தெரியாமல்
    திசைகள் எல்லாம்அளக்கிறது"! ஆமாம்.

    "அலை பாயுதே கண்ணா என் மனம்......" ஞாபகத்திற்கு வந்தது.

    ReplyDelete
  4. \\நீ வெளியே தேடும் பொருளெல்லாம்
    உன்னுள்ளே இருக்குது உணர்வாயே!
    \\

    ம்ம்...உண்மை ;)

    ReplyDelete
  5. //எதுவும் இல்லை போலிருக்கும்;
    இருப்பவை கண்ணுக்குத் தெரியாது!//

    நல்லாயிருக்கு இந்த வரிகள்...

    ReplyDelete
  6. வெளியே உள்ளே என்பதெல்லாம்
    பார்க்கும் விதத்தில் உள்ளதுதான்!
    பார்வை, படுவது, பார்ப்பவன் ஒன்றானால்
    பரமே வெளியாய்ப் பரந்து வரும்!

    ReplyDelete
  7. வாங்க ஜீவி ஐயா.

    //இந்த வரிகள் தாம், இக்கவிதையின் அடிநாதம் போலும்;//

    ஆம்!

    //'மலையில் ஏறி மலைக்கிறது' என்கிற வார்த்தையைப் படித்தவுடனே தான், இதனால் மலைக்கே பெயர்க்காரணமாய் அந்தப் பெயர் வந்ததோ என்று மயங்க வைத்தது.//

    தானாய் வந்து விழுந்த வரிகளில் ஒன்று. எனக்கும் அப்படி மயக்கம் ஏற்பட்டது உண்மைதான் :)

    வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  8. //கவிதையையும் ரசித்தேன். ஜீவி அவர்களின் கருத்தையும் ரசித்தேன்.//

    நன்றி ராமலக்ஷ்மி. நானும்தான்! :)

    ReplyDelete
  9. //"அலை பாயுதே கண்ணா என் மனம்......" ஞாபகத்திற்கு வந்தது.//

    நல்ல ஞாபகம் தான் :)

    //நல்ல கவிதை.//

    மிக்க நன்றி மாதேவி.

    ReplyDelete
  10. //ம்ம்...உண்மை ;)//

    நன்றி கோபி :)

    ReplyDelete
  11. //நல்லாயிருக்கு இந்த வரிகள்...//

    ரசனைக்கு நன்றி ஸ்வர்ணரேக்கா :)

    ReplyDelete
  12. //வெளியே உள்ளே என்பதெல்லாம்
    பார்க்கும் விதத்தில் உள்ளதுதான்!
    பார்வை, படுவது, பார்ப்பவன் ஒன்றானால்
    பரமே வெளியாய்ப் பரந்து வரும்!//

    நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் கிருஷ்ணமூர்த்தி சார் :) எனக்கு இன்னும் எதுவும் பிடிபடலை.

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  13. /எனக்கு இன்னும் எதுவும் பிடிபடலை./

    எனக்கும் கூடத்தான்! ஆனால் பிடிபட்டுவிடும் என்ற நம்பிக்கை ஒன்றே பிடிபட்டுவிட்ட மாதிரிப் பீற்றிக் கொள்ள வைக்கிறது போல:-))

    ReplyDelete
  14. தேட‌லின் முடிவை
    இறுதியில் வைத்தது
    கவிதையை முடித்தது அருமை

    .........................

    எதை எதையோ தேடுகிறோம்
    உள்ளில் இருக்கும்
    உன்னை மறந்து
    என்னுள் வாழும்
    உன்னை மறந்து

    என்பதைப் போன்று உள்ளது தங்களின் வரிகள்
    ................................

    இந்த‌ வ‌ரிக‌ளைப் ப‌டிக்கையில் இந்த‌ வெண்பா நினைவிற்கு வ‌ருகிற‌து.

    நிம்மதி தேடி நிதமும் அலைகின்றோம்
    அம்மதி உள்ளே இருப்பதைப் பாராமல்
    எம்மதியும் இங்கே கிடைக்கும் அதற்குநீ
    சம்மதித்தால் மட்டும்போ தும்.

    ReplyDelete
  15. அப்துல் கையூம் அவ‌ர்க‌ளின் க‌விதை

    தேடல்கள் .. ..

    தேடல்கள் புதிதல்ல..

    வாழ்க்கையே நமக்கு
    வரிசையாய் தேடல்கள்தானே?

    இரையைத்தேடியும்
    இறையைத் தேடியும்
    இலக்கைத் தேடியும்
    இலக்கங்களைத் தேடியும்
    கலைந்து போகும் காலங்கள்

    பிறந்த பொழுதிலிருந்து
    தேடத் தொடங்குகிறோம்


    தேடலுக்கு எல்லை உண்டா?
    என்றால் இல்லை ..
    தேடலுக்கு வானமே எல்லை

    தேடலுக்கு வயது உண்டா?
    என்றால் இல்லை
    தேடலுக்கு மரணமே எல்லை

    வீடு போ.. போ.. என
    விடை பகர
    காடு வா.. வா .. என்
    கரம் கொடுக்க
    மண்ணறைக்குள்
    மறையும் வரை
    தொடரும் தேடல்


    திக்குத் தெரியாத காட்டில் -உன்னை
    தேடித் தேடி அலைந்தேனே என்று
    கண்ணபிரானைத் தேடி
    கவிதையிலே பொருள் வடித்த
    கவிராஜன் பாரதியின்
    தேடலும் ஒரு தேடல்

    பூஜ்ஜியத்திலிருந்துக் கொண்டு
    ராஜ்ஜியத்தை ஆள்பவனை

    இருக்குமிடத்தை விட்டு
    இல்லாத இடம்தேடி
    எங்கேயோ அலைகின்றாய்
    ஞானத் தங்கமே என்று

    பரம்பொருளின் தேடலை
    பாட்டாக வடித்தானே
    ஒரு ஞானக் கிறுக்கன்
    அவன் தேடலும் ஒரு தேடல்

    தேடும் நேயர் நெஞ்சங்களில்
    குடியிருப்பவன்
    தேடாத மனிதருக்கும்
    உணவளிப்பவன் என

    பாறைக்குள் ஒளிந்திருக்கும்
    தேரைக்கும்
    பக்குவமாய் இரையை
    பகிர்ந்தளித்தானே அந்த
    முக்காலமும்அறிந்த
    முழுமுதற் அரசன்

    அவனைத் தேடுதல்
    அது ஆன்மீகத் தேடல்

    முகவரிகள் தொலைந்தனவோ
    முகிலினங்கள் அலைகிறதோ
    முகவரிகள் தொலைந்ததினால்
    அது மழையோ? – இது ஒரு
    தீந்தமிழ்க் கவிஞனின்
    தேடல் கற்பனையின்
    ஊடகப் படிமம்

    தேடலும் ஒரு சுகம்

    காதலாகட்டும்
    கைகளின் சில்மிஷமாகட்டும்
    கவிதையில் மறைந்திருக்கும்
    கருத்தாழம் ஆகட்டும்

    தேடலும் ஒரு சுகம்

    ஆய கலைகள்
    அறுபத்தி நான்கிலும்
    தேடாத சுகங்கள்
    ஆயிரம் உண்டு

    எல்லா தேடலும் சுகமா?
    என்றால் இல்லை …

    சில தேடல்கள்
    சில்லென்று ரத்தத்தை
    உறைய வைக்கும் …
    உள்ளத்தை உருக வைக்கும்
    நெஞ்சை பிழிய வைக்கும்..
    இதயத்தை நெகிழ வைக்கும்

    புல்புல்கள் இசைக்கும்
    காஷ்மீர மண்ணில்

    மனதைக் கல்லாக்கி
    மடிந்த உடல்களை
    இடிந்த இடிபாடுகளiல்
    ஒடிந்த கை கால்களோடு
    விடிய விடிய ஒவ்வொன்றாய்
    உருவி எடுத்தோமே – அது

    உலகத்தை அழ வைத்த தேடல்

    இறுதிப் பயணமென அறியாமல்
    இரயில் பயணம் செய்தவரை

    ஆந்திர மண்ணில்
    ஆற்றில் தத்தளித்த
    அகோர பிணங்களை
    அலசித் தேடினோமே – அது

    அனைவரையும்
    அதிர வைத்த தேடல்

    டிசம்பர் 26

    கிளiஞ்சல்களைத் தேடிய
    கடற்கரை மணலில்
    கிழிந்துப் போன
    மனித உடல்களைத்
    தேடினோமே

    அது அகிலத்தையே
    அலற வைத்த தேடல்
    ஒரு சிலம்பின்
    தேடலில் பிறந்ததுதான்
    சிலப்பதிகாரம்

    ஒரு சீதையின்
    தேடலில் பிறந்ததுதான்
    இராமாயணம்

    ஒரு கணையாழியின் தேடலில்
    காப்பியமானதுதான் சாகுந்தலம்

    லைலாவைத் தேடிய
    மஜ்னுவின் தேடல்
    காதல் சாம்ராஜ்ஜியத்தின் – ஒரு
    காப்பியத் தேடல்

    ஞானத்தின் தேடலில்தான்
    ஒரு சித்தார்த்தன்
    புத்தனானான்

    கலிங்கத்துப் போரில்
    குருதி படிந்த மண்ணில்
    தேடிய தேடலில்
    சாம்ராட் அசோகன்
    புத்த துறவியானான்
    வார்த்தைகளின் தேடல் கவிதை
    வர்ணங்களின் தேடல் வானவில்
    வாலிபத்தின் தேடல் காதல்
    வயிற்றுப்பசியின் தேடலே
    வாழ்க்கையின் ஓட்டம்

    யமுனை நதி தீரத்தில்
    ஒரு சலவைக்கல் சங்கீதம்

    அது மும்தாஜின் நினைவால் எழுந்த
    ஒரு முகலாய அரசனின் தேடல்

    காதல் தோல்வியென்றும்
    கடன் தோல்வியென்றும்
    காரணங்கள் காட்டி

    மரணத்தின் தேடலில்
    மடிந்த கோழைகள்தான்
    எத்தனை எத்தனை?

    ஜீவியும், விஜியும், சில்க்கும்
    ஷோபாவும், மோனலும்

    தவறான தேடலின்
    சரியான உதாரணங்கள்

    எல்லோரும்
    எங்கேயோ
    எதையோ ஒன்றை
    எப்போதும் தேடுகிறோம்

    இழப்பினாலும் தேடல் வரும்
    தேவையினாலும் தேடல் வரும்

    வாழ்க்கையே தேடல்
    தேடலே வாழ்க்கை

    மண்ணைத் தேடியதில்
    கண்டது வைரம்

    கடலைத் தேடியதில்
    கிடைத்தது முத்து

    விடியல்களைத்தேடும்
    முதிர்க் கன்னிகள்

    முதியோர் இல்லத்தில்
    முடங்கிக் கொண்டு
    முழுமையான பாசத்தை தேடும்
    முதுமையுற்ற பெற்றோர்கள்

    புன்னகையை தனக்குள் தேடும்
    பொட்டிழந்த இளம் விதவைகள்

    ஒவ்வொரு கண்டுபிடிப்பும்
    ஒவ்வொருத்தனின் தேடல்தானே


    ...................................................
    தேட‌ல் இல்லை என்றால் புதையலைக் க‌ண்டு பிடிக்க‌ இயலாது,
    வாழ்க்கைக்கும் இனிக்காது என்ப‌தைச் சொல்லும்
    சி. கருணாகரசு அவர்களின் வரிகள்
    நாளைய வாழ்க்கையின் தேடலாக இருக்கிறது.


    தேடல்
    வாழ்வின் பிடிப்பு
    வசந்தத்தின் அழைப்பு
    இது ,
    என்றும் உன்னை
    இளமையாய் வைத்திருக்கும்
    சுவை மருந்து - இதை
    தினம் அருந்து.


    உங்களின் கவிதையைப் படிக்கையில் வாசித்த பல கவிதைகள்
    நினைவிற்கு வந்தது. என்ன செய்ய ........

    எல்லாம் உங்களைப் போன்ற கவிஞர்களின் வரிகள்
    என்னுள் சுவாசமாக இருக்கிறது.

    மீண்டும் மீண்டும் தங்களின்
    வார்த்தைகளை, வரிகளை
    வாசிக்கும் வாசகனாக‌

    அன்புடன்
    திகழ்

    ReplyDelete
  16. //கிருஷ்ணமூர்த்தி said...

    எனக்கும் கூடத்தான்! ஆனால் பிடிபட்டுவிடும் என்ற நம்பிக்கை ஒன்றே பிடிபட்டுவிட்ட மாதிரிப் பீற்றிக் கொள்ள வைக்கிறது போல:-))//

    ஆகா! நம்பிக்கை நல்ல விஷயம் தானே :))

    ReplyDelete
  17. வாங்க திகழ்.

    என்ன சொல்ல, உங்க பின்னூட்டங்களையும் எடுத்துக் காட்டிய கவிதைகளையும் பார்த்து அசந்து போயிட்டேன்!

    //எதை எதையோ தேடுகிறோம்
    உள்ளில் இருக்கும்
    உன்னை மறந்து
    என்னுள் வாழும்
    உன்னை மறந்து//

    நீங்க தந்த வெண்பாவையும், கவிதையாக நீங்க சொன்ன வரிகளையும் ரசித்தேன்.

    அப்துல் கையூம் அவர்களின் அருமையான வரிகளை அயராமல் தட்டச்சித் தந்தமைக்கு மிக்க நன்றி. ஆம், தேடல்தான் வாழ்க்கை, வாழ்க்கைதான் தேடல். அழ வைக்கும் தேடல்களும், அதிர வைக்கும் தேடல்களும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன :(

    சி.கருணாகரசு அவர்களின் கவிதை வரிகளும் அருமை.

    //உங்களின் கவிதையைப் படிக்கையில் வாசித்த பல கவிதைகள்
    நினைவிற்கு வந்தது. என்ன செய்ய ........

    எல்லாம் உங்களைப் போன்ற கவிஞர்களின் வரிகள்
    என்னுள் சுவாசமாக இருக்கிறது.//

    இவ்வளவும் உள்வாங்கிக் கொண்டு தகுந்த சமயத்தில் தருகின்ற உங்கள் நினைவாற்றலும் ஆர்வமும் கண்டு பிரமித்தேன்.

    //மீண்டும் மீண்டும் தங்களின்
    வார்த்தைகளை, வரிகளை
    வாசிக்கும் வாசகனாக‌//

    உங்களைப் போன்ற வாசகர் கிடைத்ததற்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  18. ம்ம்ம்ம் நல்லா இருக்கு!
    //அதனால் என்ன பூமனமே!
    அலைக்கழியாதே என்மனமே!//
    சரியா வந்த மாதிரி தோணலையே?
    "அதனால் எந்தன் பூமனமே!"
    சரியா இருக்குமோ?

    ReplyDelete
  19. வாங்க திவா.

    //"அதனால் எந்தன் பூமனமே!"
    சரியா இருக்குமோ?//

    இரண்டுமே சரியாதான் தோணுது. 'அதனால என்ன, பரவாயில்லை'ன்னு ஆறுதல் சொல்றோமில்லையா, அந்த மாதிரி பொருளில் வந்த வரி. அடுத்த வரியில் 'என்மனம்'னு வந்திருச்சே.

    ஆனா எழுதும் போது இப்படியெல்லாம் யோசிச்சு எழுதலை, இயல்பா வந்ததை எழுதிட்டேன் :)

    வருகைக்கு நன்றி திவா.

    ReplyDelete
  20. வருக. தங்கள் கவிதையைக் கேட்க,
    http://vazhvuneri.blogspot.com
    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  21. ///வருக. தங்கள் கவிதையைக் கேட்க,
    http://vazhvuneri.blogspot.com
    சுப்பு ரத்தினம்.//

    கேட்டு மகிழ்ந்தேன். அங்கே பின்னூட்டியும் இருக்கிறேன். மிக்க நன்றி தாத்தா!

    ReplyDelete
  22. தெடும் யாவும் கிடைத்து விட்டால் வாழ்கை சலித்து விடும் நண்பா.
    தெடுயோம் மூச்சு அருந்து போகும் வரை!

    ReplyDelete
  23. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெய்!

    ReplyDelete
  24. வாருங்கள் Sangkavi. நன்றி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)