அவன்:
அலுவலகத்தில் மீட்டிங் காரசாரமாகப் போய்க் கொண்டிருந்த போது இண்டர்காம் ஒலித்தது. அருண் தான் எடுத்தான். "மிஸ்டர் அருண், உங்களுக்கு •போன், உங்க மனைவியிடமிருந்து" என்று ரிசப்ஷனிஸ்டின் குரல் கூவியது. "ஓ.கே. என் ரூமில் போய் எடுத்துக்கிறேன்" என்று எழுந்தான். "எக்ஸ்க்யூஸ் மி, சார்" என்று எம்.டி யிடம் சொல்லி விட்டு சிறிது தர்ம சங்கடத்துடன் வெளியேறினான். அறைக்குச் சென்று போனை எடுத்ததும், "என்ன அபி இது? இப்படி, அதுவும் மீட்டிங் நடுவில ஆ•பீஸ்ல கூப்பிடாதேன்னு எத்தனை தரம் சொல்றது?" என்று கடுகு போல் பொரிந்தான்.
அவள்:
அலுவலகத்தில் கூப்பிட்டால் அவனுக்குப் பிடிக்காது என்று தெரிந்தேதான் அபி கூப்பிட்டாள். என்னதான் பொறுப்பான, அன்பான கணவனாக இருந்தாலும், சில விஷயங்களில் ரொம்பவே பிடிவாதம்; முன் கோபமும் கொஞ்சம் ஜாஸ்தி. "ஸாரி, அருண்; ஒரு எமர்ஜென்சி, அதான்" என்று கெஞ்சும் குரலில் சொன்னாள். "சரி, சரி, என்ன, சீக்கிரம் சொல்லு" என்று விரட்டினான்.
அது:
அவள் சொன்ன விஷயத்தைக் கேட்டதும், "அபி, பதட்டப் படாதே, நீ கிளம்பி ரெடியா இரு, நான் உடனே பர்மிஷன் சொல்லிட்டு வர்ரேன்" என்று இவன் பதட்டமாகக் கிளம்பினான். ஸ்கூட்டரை வேகமாக வீட்டுக்கு விரட்டும் போது, அபி சொன்னது மனசில் ஓடியது. எல்லா வேலைகளையும் முடித்து விட்டுக் குளிக்கும் போது அதைக் கவனித்திருக்கிறாள் - இடது மார்பகத்தின் கீழ்ப் பக்கத்தில் பைசா சைசில் ஒரு சிறிய கட்டி. அதனால் தான் பதறிக் கொண்டு •போன் பண்ணியிருக்கிறாள்.
அவன்:
"கடவுளே, ஒன்றும் சீரியஸாக இருக்கக் கூடாது" என்று மனம் ஒரு பக்கம் தன்னிச்சையாக வேண்டத் தொடங்க, மறு பக்கம், அபியைப் பற்றி எண்ணமிட்டது. "பாவம், ரொம்ப பயந்து விட்டிருப்பாள். குழந்தை வேண்டுமென்று தவமிருக்கும் நேரத்தில் இது வேறு என்ன பிரச்னை? அவளுக்கு இரண்டு தரம் மிஸ் காரியேஜ் ஆனதிலிருந்தே ஹாஸ்பிடல் என்றாலே அலர்ஜி. நானும் வர வர அபியை ஒழுங்காக கவனித்து அவள் முகம் பார்த்துப் பேசுவதே இல்லை. பாவம் அபி" என்று பலவாறு எண்ணமிட்ட வண்ணம் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
அவள்:
அபி ரெடியாக வாசலில் காத்துக் கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும், வீட்டைப் பூட்டிக் கொண்டு, ஸ்கூட்டரில் ஏறிக் கொண்டாள். அவள் முகமே சரியில்லை. வெளிறிப் போயிருந்தது. "டாக்டரைக் கூப்பிட்டாயா, அபி?" கேட்டபடி ஸ்கூட்டரைக் கிளப்பினான். "ம். இப்பதான் நம்ம டாக்டர் பார்வதி ஆபீஸைக் கூப்பிட்டு, எமர்ஜென்சின்னு சொல்லி அப்பாயின்ட்மென்ட் வாங்கினேன்" என்று சுரத்தே இல்லாத குரலில் கூறினாள்.
அது:
எல்லா டெஸ்டும் முடித்து விட்டு கையைத் துடைத்த படி அமர்ந்த டாக்டரை இருவரும் கலவரத்துடன் பார்த்தார்கள். "மாமோகிராமும், பயாப்ஸியும் பார்த்த பின் தான் நிச்சயமாகச் சொல்ல முடியும்" என்று சொல்லிவிட்டார், டாக்டர். அவற்றுக்கான விபரங்களும், அப்பாயிண்ட்மெண்டும் வாங்கிக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினார்கள்.
அவன்:
வீட்டுக்கு வரும் வழி முழுவதும் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. வீட்டுக்கு வந்ததும், "அருண், மறுபடி ஆ•பீஸ் போறீங்களா? காபி போடவா, இல்லை ஏதாவது சாப்பிடறீங்களா?" எதுவும் நடவாதது போல் இயல்பாகக் கேட்டவாறு அடுக்களைக்குச் செல்ல யத்தனித்த அபியின் கையைப் பிடித்து நிறுத்தினான், அருண். "அதற்குள் மனதைத் தேற்றிக் கொண்டு விட்டாள் பாரேன்" என்று தனக்குள் வியந்து கொண்டான். அவளுடைய மன உறுதி அவனைக் கவர்ந்த விஷயங்களில் ஒன்று என்பது சில வருஷங்களுக்குப் பிறகு இப்போதுதான் நினைவுக்கு வந்தது.
அவள்:
தன்னை விட கணவன் மிகவும் கலங்கி விட்டான் என்று புரிந்தது, அபிக்கு. "அருண், எல்லா டெஸ்டும் எடுத்த பிறகு தானே எதுவும் சொல்ல முடியும்? இப்ப இருந்தே கவலைப்பட்டு என்ன செய்யறது? மனதைக் குழப்பிக்காமல் ஆபீஸ் போய்ட்டு வாங்க" என்று அவனை உற்சாகப் படுத்த முயன்றாள்.
அது:
டாக்டர் சொன்னபடி மாமோகிராமும், அடுத்தாற் போல் பயாப்ஸியும் எடுத்தாகி விட்டது. ரிசல்டுக்காகக் காத்திருந்தார்கள்.
அவன்:
இந்த சில நாட்களில் அருண் தான் தலை கீழாக மாறி விட்டான். அபியின் ஒவ்வொரு அசைவையும் கவனித்தான். அவளைப் பொக்கிஷம் போல் பார்த்துக் கொண்டான். அவளை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், "என் அபிதான் என்ன அழகு, என்ன நளினம், என்ன உறுதி" என்று மெச்சிக் கொண்டான். அவள் சமையலை மறக்காமல் பாராட்டினான். அவள் வேலைகள் செய்யும் நேர்த்தியைப் புகழ்ந்தான். அவனே ஆ•பீஸிலிருந்து பத்து முறை போன் பண்ணினான். சின்னச் சின்ன சர்ப்ரைஸ் பரிசுகளினால் அவளை மகிழ்விக்க முயற்சி செய்தான். மொத்தத்தில், "இத்தனை அரியவளுக்கு ஒன்றென்றால் நான் என்ன செய்வேன்" என்று நாளும் தவித்தது அவன் உள்ளம். அரியவைகளை இழக்கும் நிலை வரும் போதுதானே அவற்றின் அருமை தெரியும்? "கடவுளே, அபிக்கு ஒன்றும் ஆகி விடக்கூடாது, அவளை முழுதாக எனக்குக் கொடுத்து விடு, அவளைப் பொன் போலத் தாங்குவேன்; இத்தனை நாளும் செய்தது போல், இனிமேல் அவளை அலட்சியப் படுத்தவே மாட்டேன்" என்று நிதமும் மனமுருக வேண்டிக்கொண்டான்.
அவள்:
கணவனின் உபசரிப்பிலும், வெளிப்படையான அன்பிலும் உள்ளம் குளிந்திருந்தாள், அபி. திருமணம் ஆன புதிதில்தான் இவ்வளவு அன்பையும் பார்த்திருக்கிறாள்; பிறகு இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக எங்கேயோ மறைந்து விட்டது. "இந்த பிரச்னை வந்ததும் ஒரு நல்லதிற்குத் தானோ" என்று மனசுக்குள் ஒரு எண்ணம் ஓடவும், தன்னைத் தானே கடிந்து கொண்டாள், அபி.
அது:
டாக்டர் குட் நியூஸ் சொல்லி விட்டார். அது சாதாரணக் கட்டி தானாம். ஒரு சிறிய ஆபரேஷனில் அகற்றி விடலாமாம்; பயப்படுவதற்கு ஒன்றும் இல்லையாம். அவரை அங்கேயே கட்டிப் பிடித்து முத்தமிடாத குறையாக, அவர் கைகளைப் பற்றி, "தாங்க் யூ, டாக்டர்" என்று மனப்பூர்வமாகச் சொன்னான், அருண்.
அவன், அவள்:
வீட்டிற்குள் நுழைந்ததும் அவளைத் தூக்கி ஒரு தட்டாமாலை சுற்றி இறக்கினான். "அபி, இன்னைக்கே கோயிலுக்குப் போய் கடவுளுக்கு நன்றி சொல்லிட்டு, அப்படியே செலிப்ரேட் பண்ணிட்டு வரணும்". கணவனின் உற்சாகம் அவளுக்கும் தொற்றிக் கொள்ள, அவனுக்குப் பிடித்த புடவை கட்டி, அலங்கரித்துக் கிளம்பினாள், அபி.
அது:
ஒரு வழியாக அந்தப் பொல்லாத கட்டியை அகற்றி இரண்டு மாதங்களாகி விட்டன. அருண் அவளை உள்ளங்கையில் வைத்துத்தான் தாங்கினான். இப்போது அபியின் உடலும், மனமும் நன்கு தேறி விட்டன.
அவன்:
அருண் மும்முரமாக ஒரு ரிப்போர்ட் டைப் பண்ணிக்கொண்டிருந்தான். இண்டர்காம் ஒலித்தது. "மிஸ்டர் அருண், உங்க மனைவி லைன்ல இருக்காங்க" ரிசப்ஷனிஸ்டின் குரல் கொஞ்சியது. "தாங்க்ஸ்" என்றபடி போனை எடுத்த அருண், " என்ன அபி இது? பிஸியா இருக்கப்ப போன் பண்ணாதேன்னு எத்தனை முறை சொல்றது?" என்று சிடுசிடுத்தான்.
-- கவிநயா
[இது 2004-ல் எழுதிய என்னுடைய முதல் சிறுகதை. குற்றம் குறைகளைப் பொறுத்துக்கோங்க :)]
படத்துக்கு நன்றி: http://flickr.com/photos/brianauer/3102014201
மிக அழகா இருக்கு.
ReplyDeleteநல்ல முயற்சி. வாழ்த்துக்கள்
அவன் - அவள் - அதுவெனக் கதையினை வடித்த விதம் அருமை புதுமை. முடிவு புன்னகைக்க வைக்கும் அதே சமயம் ‘இதுதாண்டா வாழ்க்கை’ என்று யதார்த்தத்தைப் புரியவும் வைக்கிறது:)!
ReplyDeleteஅழகான, நல்லதொரு சிறுகதை கவிநயா. முதல் சிறுகதையெனச் சொல்லமுடியவில்லை. தேர்ந்த கதாசிரியரின் நடையில் கதையை நகர்த்தியிருக்கிறீர்கள்.
ReplyDeleteபாராட்டுக்கள் சகோதரி.
தொடர்ந்து எழுதுங்கள் :)
:-)
ReplyDeleteமுதல் கதையா?!
ReplyDeleteநல்லா இருக்கு. சொல்லி இருக்கும் விதம் அருமை.
வாழ்க்கை பெண்டுலம் மாதிரி. இங்கிருந்து அங்கே அங்கிருந்து இங்கே, இல்லையா?
//மிக அழகா இருக்கு.
ReplyDeleteநல்ல முயற்சி. வாழ்த்துக்கள்//
வாங்க ஜமால். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
//அவன் - அவள் - அதுவெனக் கதையினை வடித்த விதம் அருமை புதுமை. முடிவு புன்னகைக்க வைக்கும் அதே சமயம் ‘இதுதாண்டா வாழ்க்கை’ என்று யதார்த்தத்தைப் புரியவும் வைக்கிறது:)!//
ReplyDelete:))) சரியாச் சொன்னீங்க. மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
//அழகான, நல்லதொரு சிறுகதை கவிநயா. முதல் சிறுகதையெனச் சொல்லமுடியவில்லை. தேர்ந்த கதாசிரியரின் நடையில் கதையை நகர்த்தியிருக்கிறீர்கள்.//
ReplyDeleteவருக ரிஷு. நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் :) மிக்க நன்றி.
//:-)//
ReplyDelete:))) நன்றி குமரா.
//முதல் கதையா?!//
ReplyDeleteம்... ஆமாம் திவா.
//நல்லா இருக்கு. சொல்லி இருக்கும் விதம் அருமை.//
ரசனைக்கு மிக்க நன்றி.
//வாழ்க்கை பெண்டுலம் மாதிரி. இங்கிருந்து அங்கே அங்கிருந்து இங்கே, இல்லையா?//
அழகாச் சொன்னீங்க :) மீண்டும் நன்றி.
\\
ReplyDeleteமிக அழகா இருக்கு.
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்\\
Rippppeeeetttungov..
2004ல் எழுதிய கதையா ?
ReplyDelete1004லும் இதுதான் நடந்தது.
3004லும் இதுதான் நடக்கும்.
இரவும் பகலும் போல
இனிப்பும் கசப்பும் போல,
இன்பமும் துன்பமும் போல,
கனியும் காயும் போலே
காய்தலும் உவத்தலும்
பாய்தலும் பதுங்குதலும்
சீறுவதும் சிரிப்பதும்
இல்லறத்தின் இனிய படிகளன்றோ !
கோவிந்தா ! கோவிந்தா !
கோவிச்சுக்காம ஒரு வரம் தா !
2004 ல் எழுதிய கவிதை
2054 லும் தொடரட்டும்.
சுப்பு ரத்தினம்.
//கோவிந்தா ! கோவிந்தா !
ReplyDeleteகோவிச்சுக்காம ஒரு வரம் தா !//
ஆஹா, ரொம்பவே அழகு!
//Rippppeeeetttungov..//
ReplyDeleteநல்வரவு லோகு. முதல் வருகைக்கும் ரிப்பீட்டுக்கும் நன்றிகள் :)
//இரவும் பகலும் போல
ReplyDeleteஇனிப்பும் கசப்பும் போல,
இன்பமும் துன்பமும் போல,
கனியும் காயும் போலே
காய்தலும் உவத்தலும்
பாய்தலும் பதுங்குதலும்
சீறுவதும் சிரிப்பதும்
இல்லறத்தின் இனிய படிகளன்றோ !//
நல்லாச் சொன்னீங்க சுப்பு தாத்தா!
//கோவிந்தா ! கோவிந்தா !
கோவிச்சுக்காம ஒரு வரம் தா !
2004 ல் எழுதிய கவிதை
2054 லும் தொடரட்டும்.//
ஆஹா, வேண்டுதலுக்கு நன்றி தாத்தா. இதுக்கு ஏன் கோச்சுக்கப் போறாரு அவரு, நாந்தான் நல்ல பொண்ணாச்சே! :)
//ஆஹா, ரொம்பவே அழகு!//
ReplyDelete:)))
நன்றாக கதையை நகர்த்தியுளீர்கள். நிழலின் அருமை வெயிலில் தெரியும்..! :)
ReplyDelete//நிழலின் அருமை வெயிலில் தெரியும்..! :)//
ReplyDeleteஉண்மைதான் RVC. முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)
அட.. பின்றீங்க கவிநயா..
ReplyDeleteசினிமா கட்-ஷாட்-கட் மாதிரி, சூப்பரா இருந்தது கதையின் வடிவம்..
கதையோ ரொம்ப அழகு.. ஆனா.. எங்கே சோகமா முடிச்சிடுவீங்களோ என்று ஒரு பயமும் இருந்தது..
ReplyDeleteஇன்னும் நிறைய எழுதுங்க..
ReplyDeleteவாங்க சரவணகுமார். உங்க ரசனையும் உற்சாகமும் கண்டு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் :)
ReplyDeleteஇப்போதுதான் படித்தேன்க்கா...வாழ்க்கையின் நிதர்சனத்தை அப்படியே வடித்து அளித்திருக்கிறீர்கள்...நன்றி
ReplyDelete//இப்போதுதான் படித்தேன்க்கா...வாழ்க்கையின் நிதர்சனத்தை அப்படியே வடித்து அளித்திருக்கிறீர்கள்...நன்றி//
ReplyDeleteவாசிச்சதுக்கு உங்களுக்குதான் நன்றி மௌலி :)
//இத்தனை நாளும் செய்தது போல், இனிமேல் அவளை (அவனை, அதை) அலட்சியப் படுத்தவே மாட்டேன்... இனிமேல் அவளை (அவனை, அதை) அலட்சியப் படுத்தவே மாட்டேன்//
ReplyDeleteஇப்படி பலசமயத்தில் நாம் நினைத்துக்கொள்வதுண்டு தான்.. ஆனாலும் மீண்டும் அதே கதை தான்...
நன்றாக உள்ளது உங்கள் கதை...
//இப்படி பலசமயத்தில் நாம் நினைத்துக்கொள்வதுண்டு தான்.. ஆனாலும் மீண்டும் அதே கதை தான்...//
ReplyDeleteஆம், ஸ்வர்ணரேக்கா!
//நன்றாக உள்ளது உங்கள் கதை...//
ரொம்ப நன்றி, சொன்ன மாதிரியே வந்து படிச்சதுக்கும் :)