Sunday, January 4, 2009

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 11




11.

மொய்யார் தடம் பொய்கை புக்கு, முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி,
ஐயா வழி அடியோம் வாழ்ந்தோம் காண், ஆரழல்போல்
செய்யா, வெண்ணீறாடீ, செல்வா, சிறு மருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா,
ஐயா நீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்,
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்,
எய்யாமற் காப்பாய் எமை, ஏலோர் எம்பாவாய்.


ஐயா - ஐயனே

ஆர் அழல் போல் செய்யா - இடக்கையில் பொருந்திய தீயைப் போல் சிவந்த மேனியனே!

வெண்நீறு ஆடி - வெண்மையான சாம்பலைப் பூசியவனே!

செல்வா - எல்லாச் செல்வமும் பெற்றவனே!

சிறுமருங்குல் - சிறிய இடையினையும்

மை ஆர் தடம் காண் மடந்தை மணவாளா - மை தீட்டிய விசாலமான கண்களையும் உடைய உமாதேவியின் கணவனே!

மொய் ஆர் - வண்டுகள் ரீங்காரம் செய்கின்ற

தடம் பொய்கை புக்கு - அகன்ற தடாகத்தில் மூழ்கி

முகேர் என்ன - கையால் முகேர் முகேர் என்று தட்டி

குடைந்து குடைந்து - நன்றாக திளைத்து

உன் கழல் பாடி - உன் வீரக்கழல் அணிந்த திருவடிகளைப் பாடி

வழி அடியோம் - வழிவழியாய் அடியவர்களாய் வாழ்ந்து வந்தோம்

ஐயா நீ - தலைவனாகிய நீ

ஆட்கொண்டு அருளும் - பக்தர்களை உன்னருகில் ஈர்த்து அடிமைப்படுத்தி அருளும்

விளையாட்டின் - தீராத விளையாட்டை

உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் - பின்பற்றீ, உன்னை வந்து அடையும் தொண்டர்கள் வழிபட்டு உய்யும் எல்லா வழிகளையும் அனுசரித்து

உய்ந்து ஒழிந்தோம் - உன்னை நாடி வந்தோம்

எமை எய்யாமல் காப்பாய் - எங்களைக் கைவிடாமல் காப்பாயாக!


[செய்யா - சிவந்த மேனியனே; மருங்குல் - இடை; எய்யாமல் - கைவிடாமல்]

ஐயனே! இடக்கையில் ஏந்திய நெருப்பைப் போல் சிவந்த மேனியை உடையவனே! வெண்சாம்பலைப் பூசியவனே! எல்லாச் செல்வங்களுக்கும் அதிபதியே! சிறிய இடையினையும், மை தீட்டிய அகன்ற கண்களையும் உடைய உமாதேவியின் கணவனே! வண்டுகள் ரீங்காரம் செய்கின்ற பொய்கையில் மூழ்கி, கையால் நீரை 'முகேர்' எனத் தட்டி, நன்றாகத் திளைத்து நீராடி, உன் வீரக் கழல் அணிந்த திருவடிகளைப் பாடி, பரம்பரை பரம்பரையாக உன்னுடைய அடியவர்களாக வாழ்ந்து வந்தோம். எங்கள் தலைவனாகிய நீ, பக்தர்களைத் தம்மிடம் ஈர்த்து அடிமைப் படுத்திக் கொள்ளும் விளையாட்டை பின்பற்றி, உன்னை வந்தடையும் தொண்டர்கள் வழிபட்டு உய்யும் எல்லா வகைகளையும் கண்டறிந்து, உன்னை நாடி வந்தோம். எங்களை கைவிட்டு விடாமல் ஏற்றுக் கொள்வாயாக!


பொருளுக்கு நன்றி: Thiruppaavai and Thiruvempaaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி: shaivam.org

2 comments:

  1. // உன்னை வந்தடையும் தொண்டர்கள் வழிபட்டு உய்யும் எல்லா வகைகளையும் கண்டறிந்து, உன்னை நாடி வந்தோம். எங்களை கைவிட்டு விடாமல் ஏற்றுக் கொள்வாயாக!//

    ஏற்றுக் கொள்ள வேண்டிடுவோம்!
    அத்தனை பதிவுகளுக்கும் பிரயத்தனத்துடன் பொருத்தமான அழகிய படங்களையும் தந்திருப்பதற்கும் நன்றி கவிநயா! தொடரட்டும் உங்கள் பணி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. //ஏற்றுக் கொள்ள வேண்டிடுவோம்!//

    ஆம் ராமலக்ஷ்மி. ஈசனின் திருவடிகள் சரணம்.

    //அத்தனை பதிவுகளுக்கும் பிரயத்தனத்துடன் பொருத்தமான அழகிய படங்களையும் தந்திருப்பதற்கும் நன்றி கவிநயா! //

    தொடர்ந்த வருகைக்கும் ரசனைக்கும் நன்றிகள் பல.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)