உணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...
Friday, January 9, 2009
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 16
16.
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து, உடையாள்
என்னத் திகழ்ந்து, எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து, எம் பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பிற் சிலம்பித், திருப்புருவம்
என்னச் சிலை குலவி, நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி, அவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழை, ஏலோர் எம்பாவாய்.
மழை - மழைக் கடவுளே!
கடலை முன்னி - கடல் நீரை நெருங்கி
சுருக்கி - வற்றச் செய்து
எழுந்து - மேகமாய் வானில் எழுந்து
உடையாள் என்ன திகழ்ந்து - நம்மை ஆட்கொண்ட உமாதேவியின் திருமேனியைப் போல் கருநிறமாக விளங்கி
எம்மை ஆள் உடையாள் - நம்பிராட்டியின்
இட்டு இடையின் மின்னி - மிகச் சிறிய இடையைப் போல் மின்னி
பொலிந்து - மிகப் பொலிவுடன் தோன்றி
எம்பிராட்டி - நம் தலைவியின்
திருவடி மேல் - திருவடிகளில் அணியப் பெற்ற
பொன்னம் சிலம்பில் சிலம்பி - பொன் நிறமான அழகிய சிலம்பின் ஒலி போல் இடித்து முழங்கி
திருபுருவாம் என்ன - அவளுடைய அழகிய புருவம் போல
சிலை குலவி - வானவில்லைச் செய்து வளைத்து
நம் தம்மை ஆளுடையாள் தன்னில் - நம்பிராட்டியாகிய உமாதேவியுடன் உறையும்
பிரிவில்லா எம்கோமான் - நீக்கமின்றி நிற்கின்ற எம் அரசனாகிய சிவபெருமானுடைய
அன்பர்க்கு - அன்பர்களுக்கு
முன்னி - முற்பட்டு
அவள் நமக்கு முன் சுரக்கும் - சிவபெருமானும் உமாதேவியும்
பொழியும் இன் அருளே என்ன - நன்மை பயக்கும் கருணைப் பெருக்கே போல
பொழியாய் - நீ மழையைப் பொழிவாயாக!
மழைக் கடவுளே! கடல் நீரை வற்றச் செய்து, மேகமாய் வானில் எழுந்து, நம்மை ஆட்கொண்ட உமாதேவியின் திருமேனியைப் போல் கருநிறமாக விளங்கி, நம்பிராட்டியின் சிறு இடையைப் போல் மின்னி பொலிவுடன் தோன்றி, நம் தலைவியின் திருவடிகளில் அணியப் பெற்ற பொன் நிறமான அழகிய சிலம்பின் ஒலி போல் இடியிடித்து விளங்கி, அவளுடைய அழகிய புருவம் போல வானவில்லைச் செய்து வளைத்து, நம்பிராட்டியாகிய உமாதேவியுடன் உறைந்து, நீக்கமின்றி நிற்கின்ற எம் அரசனாகிய சிவபெருமானின் அன்பருக்கு, சிவபெருமானும் உமாதேவியும் மனமுவந்து அருளும் கருணைப் பெருக்கைப் போல, நீ மழையைப் பொழிவாயாக!
பொருளுக்கு நன்றி : Thiruppaavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி : www.geocities.com
Subscribe to:
Post Comments (Atom)
நம்மை வாழ வைக்கும் மழையின் ஒவ்வொரு பருவமும் உமாதேவியின் அருளிலும் சிவபெருமானின் கருணையிலும் கலந்து கடந்து வந்தே பொழிவதைக் கூறும் அருமையான பாடல். நன்றி கவிநயா!
ReplyDeleteஆமாம் ராமலக்ஷ்மி. னக்கும் பிடித்த, அழகான பாடல். வருகைக்கு நன்றி.
ReplyDeleteஅடடா. அங்கே 'ஆழி மழைக்கு அண்ணா' என்று தொடங்குகிறார் கோதை நாச்சியார். இங்கேயும் மழையை அன்னையுடன் ஒப்பிடும் பாடல். அருமை.
ReplyDeleteஇது என்னவோ சிவபெருமானைப் பாடுவதை விட அம்மையைப் பாடுவதற்கு என்றே எழுதப்பட்டது போல் இருக்கிறது. ஒரு முறைக்கு இருமுறை பார்த்துக் கொள்ள வேண்டும் - இது அபிராமி அந்தாதியில் வருவது இல்லை தான் என்று. :-)
கடலிலிருந்து நீரை முகந்து மழையாகப் பொழிகிறது முகில் என்ற அறிவு சங்க காலத்திலேயே தமிழர்களுக்கு இருந்திருக்கிறது. பரிபாடலில் சில வரிகள் அதனைச் சொல்கின்றன. ஆண்டாளும் சொல்கிறாள்; வாசகரும் சொல்கிறார்.
//இது என்னவோ சிவபெருமானைப் பாடுவதை விட அம்மையைப் பாடுவதற்கு என்றே எழுதப்பட்டது போல் இருக்கிறது.//
ReplyDeleteஆம் குமரா. எவ்வளவு அழகா இருக்கில்ல? :) அதான் எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போயிட்டது...
//கடலிலிருந்து நீரை முகந்து மழையாகப் பொழிகிறது முகில் என்ற அறிவு சங்க காலத்திலேயே தமிழர்களுக்கு இருந்திருக்கிறது.//
:)))