உணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...
Monday, January 12, 2009
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 19
19.
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று,
அங்கு அப்பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்,
எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள்,
எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க,
எம் கை உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க,
கங்குல் பகல் எம் கண் மற்றொன்றும் காணற்க,
இங்கு இப்பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்,
எங்கு எழில் என் ஞாயிறு எமக்கு, ஏலோர் எம்பாவாய்.
எங்கள் பெருமான் - எங்கள் தலைவனே!
உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் - உன் கையில் சேர்க்கப் பெறும் பிள்ளை உனக்கே அடைக்கலம்
என்று அங்கு அப்பழம் சொல் - என்ற அந்தப் பழமொழியை
புதுக்கும் எம் அச்சத்தால் - மீண்டும் மொழிவது பொருத்தமன்று என்று உணர்ந்தும், அதனையே சொல்லும் எம் பயத்தினால்
உனக்கு ஒன்று உரைப்போம் கேள் - இறைவனாகிய உமக்கு நாங்கள் சொல்லுவதும் ஒன்று உண்டு
எம் கொங்கை - எங்கள் உடல்
நின் அன்பர் அல்லாதார் தோள் சேரற்க - உன் அன்பர் அல்லாதவர்களுக்கு உரிமையாக வேண்டாம்
எம் கை - எங்கள் கைகள்
உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க - உனக்கன்றி வேறிருவருக்கும் எந்த தொண்டும் செய்யாதிருக்கட்டும்
கங்குல் பகல் எம் கண் - எமது கண்கள் இரவிலும் பகலிலும்
மற்று ஒன்றும் காணற்க - உன்னையன்றி வேறு ஒரு பொருளையும் காணாதிருக்கட்டும்
இங்கு இப்பரிசு எம் கோன் நல்குதியேல் - இவ்வுலகத்தில் எங்கள் தலைவனாகிய நீ இவ்வாறே அருள்வாயானால்
ஞாயிறு எங்கு எழில் என் - சூரியன் கீழ்த்திசையிலன்றி எந்தத் திசை உதித்தால் என்ன, நாங்கள் கவலைப்பட மாட்டோம்!
[பழம் சொல் - பழமொழி; கங்குல் - இரவு]
எங்கள் தலைவனே! உன் கையில் சேர்க்கப் பெறும் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்ற அந்தப் பழமொழியை மீண்டும் சொல்வது பொருத்தமன்று என்று தெரிந்தும், எங்கள் அச்சத்தால் அதனையே சொல்கிறோம். எங்கள் இறைவனாகிய உனக்கு நாங்கள் சொல்வது ஒன்று உண்டு. எங்கள் உடல் உன் அன்பர்கள் அல்லாதார்க்கு உரிமையாக வேண்டாம். எங்கள் கைகள் உன்னையன்றி வேறு ஒருவருக்கும் தொண்டு செய்ய வேண்டாம். எங்கள் கண்கள் இரவிலும் பகலிலும் உன்னையன்றி வேறு ஒரு பொருளையும் காணாதிருக்க வேண்டும். இவ்வுலகத்தில், எங்கள் அரசனாகிய நீ, இவ்வாறே எங்களுக்கு அருள் செய்வாயானால், கதிரவன் கீழ்த்திசையிலன்றி வேறு எந்தத் திசையில் உதித்தால் கூட நாங்கள் கவலைப்பட மாட்டோம்!
பொருளுக்கு நன்றி: Thiruppaavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி: http://somnathmandirblm.com/dwnload/wallpapers/shiva/
Subscribe to:
Post Comments (Atom)
//எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க,
ReplyDeleteஎம் கை உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க//
பாடலும் விளக்கமும் அருமை. பலமுறை நான் தரிசித்த பெங்களூர் கெம்ப்ஃபோர்ட் சிவபெருமான் படமும் தந்தது பரவசம். நன்றி கவிநயா.
http://uk.youtube.com/watch?v=Nu24zzoluCs
ReplyDeleteதிருவெம்பாவை பாடல் 19 உங்கையிற் பிள்ளை எனத்துவங்குவது
ஆபோஹி ராகத்தில் பாடப்பட்டு,
யூ ட்யூபீல் இணைக்கப்பட்டுள்ளது.
சுப்பு தாத்தா.
//பலமுறை நான் தரிசித்த பெங்களூர் கெம்ப்ஃபோர்ட் சிவபெருமான் படமும் தந்தது பரவசம்.//
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி ராமலக்ஷ்மி. நன்றி.
//திருவெம்பாவை பாடல் 19 உங்கையிற் பிள்ளை எனத்துவங்குவது
ReplyDeleteஆபோஹி ராகத்தில் பாடப்பட்டு,
யூ ட்யூபீல் இணைக்கப்பட்டுள்ளது.//
பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது. மிக்க நன்றி தாத்தா.
இந்தப் பாடலுக்கு அடியேன் உரை செய்யட்டுமா? :)
ReplyDelete//எங்கு எழில் என் ஞாயிறு எமக்கு//
கவிஞனுக்கே உரிய கம்பீரம்!
//எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க//
ஆழ்ந்த ஆழ்வானுக்கே, அன்பனுக்கே உள்ள கம்பீரம்!
//இந்தப் பாடலுக்கு அடியேன் உரை செய்யட்டுமா? :)//
ReplyDeleteகண்ணன் உரை கேட்க கசக்குமா என்ன? கேள்வியெல்லாம் கேட்காம எழுதுங்க! :)
உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் - அருமை அருமை.
ReplyDelete//உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் - அருமை அருமை.//
ReplyDeleteஆமாம். சொல்லும்போதே பாரம் நீங்கினாற்போல இருக்கில்ல? :) நன்றி குமரா.