Saturday, January 3, 2009

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 10




10.


பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்,
போதார் புனை முடியும் எல்லாப் பொருள் முடிவே,
பேதை ஒரு பால், திருமேனி ஒன்று அல்லன்,
வேத முதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒரு தோழன், தொண்டர் உளன்,
கோதில் குலத்து அரன்தன் கோயிற் பிணாப் பிள்ளைகாள்,
ஏது அவன் ஊர், ஏது அவன் பேர், ஆர் உற்றார் ஆர் அயலார்,
ஏது அவனைப் பாடும் பரிசு, ஏலோர் எம்பாவாய்.



அரன்தன் கோயில் - சிவபெருமானின் திருக்கோயிலில் விளங்கும்

கோது இல் குலத்து - குற்றமில்லா குலத்தைச் சேர்ந்த

பிணாப் பிள்ளைகாள் - பணி புரியும் பெண்களே!

பாதமலர் - நம்பெருமானின் திருவடித் தாமரை

பாதாளம் ஏழினும் கீழ் - கீழ் உலகம் ஏழு என்று சொல்லும் ஏழ் உலகங்களுக்கும் கீழே

சொற்கழிவு - சொல்லைக் கடந்தது

போது ஆர் புனை முடியும் - மலர் அணிந்த திருமுடியும்

எல்லாப் பொருள் முடிவே - எல்லாப் பொருள்களுக்கும் முடிவாய் உள்ளது

பேதை ஒரு பால் - உடலில் உமையம்மை ஒரு பாதியாய் விளங்குகிறாள்

திருமேனி ஒன்று அல்லன் - அவன் திருவுருவங்கள் பலப்பல

வேத முதல் - வேதங்களின் முதலாக விளங்கும் "ஓம்" எனும் பிரணவ மந்திரமும்

விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் - தேவர்களும், மனிதர்களும், புகழ்ந்தாலும்

ஓத உலவா - புகழ அளவு கடந்த

ஒரு தோழன் - ஒப்பற்ற உயிர்த் துணைவன்

தொண்டர் உளன் - அடியவர்களின் உள்ளத்தில் இருப்பவன்

ஏது அவன் ஊர் - அவர் உறையும் ஊர் எது?

ஏது அவன் பேர் - அவர் பெயர் என்ன?

ஆர் உற்றார் ஆர் அயலார் - உறவினர் யார்? அன்னியர் யார்?

ஏது அவனைப் பாடும் பரிசு - அப்பெருமானைப் புகழ்ந்து பாடும் தன்மைதான் எது?


[சொற்கழிவு - சொல்லைக் கடந்தது; ஓதுதல் - பேசுதல்; உலவா=வற்றாத, முடியாத; பிணா=பெண்]


(பாடிக் கொண்டு போகும் பெண்கள் வழியில் திருக் கோயிலில் பணி செய்யும் பெண்களைக் கண்டு இறைவனது உண்மை இயல்பினை ஆராய்வாராய், அவர்களை கேட்கிறார்கள்)

சிவபெருமானின் திருக்கோயிலில் விளங்கும் குற்றமில்லா பணிப் பெண்களே! நம்பெருமானின் திருவடித் தாமரையானது ஏழு உலகங்களுக்கும் கீழே இருக்கிறது. சொல்லையும் அறிவையும் கடந்தது. அதே போல் மலர் அணிந்த திருமுடியும் எல்லாப் பொருள்களுக்கும் முடிவாக உள்ளது. உமையம்மை அவன் உடலில் ஒரு பாதியாய் விளங்குகிறாள். அவனுடைய திருவுருவங்களோ பலப்பல. வேதங்களுக்கு முதன்மையாக விளங்கும் "ஓம்" என்ற பிரணவ மந்திரமும், தேவர்களும், மனிதர்களும், யாவரும் துதித்தாலும், புகழ இயலாத ஒப்பற்ற உயிர்த் துணைவன்; அடியவர்களின் உள்ளத்தில் இருப்பவன். அவனது ஊர் எது? பெயர் எது? உறவினர் யார்? அன்னியர் யார்? நம்பெருமானை நாம் புகழ்ந்து பாடும் முறைதான் யாது?

"பாதாளம் ஏழினும் கீழ்" பொருள் எனக்கு சரியா புரியலை. தெரிஞ்சவங்க சொல்லும்படி கேட்டுக்கறேன்!


பொருளுக்கு நன்றி : Thiruppavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி :
http://www.bordercrossings.org.uk/shivaparvathi.jpg


8 comments:

  1. இதுவரை சேர்த்துப் படித்ததில், மனதுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.

    தேர்ந்தெடுத்தப் படங்களை அங்கங்கே போட்டு சிறப்பு சேர்த்திருக்கிறீர்கள்.

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. //இதுவரை சேர்த்துப் படித்ததில், மனதுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.

    தேர்ந்தெடுத்தப் படங்களை அங்கங்கே போட்டு சிறப்பு சேர்த்திருக்கிறீர்கள்.//

    மிக்க மகிழ்ச்சி ஜீவி ஐயா. படங்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  3. தினம் ஒரு பாடல் பதிவு. பொருளோடு எடுத்து எழுதுவதும் ஒரு தவம் தான். சேவைதான் !

    // ..இன்ன வகையே எமக்கு எங்கோன் நல்குதியேல்,
    என்ன குறையும் இலோம், ஏலோர் எம்பாவாய் //

    அவன் அருள் பூரணமாக இருக்கும்.

    ReplyDelete
  4. "பாதாளம் ஏழினும் கீழ்" பொருள் எனக்கு சரியா புரியலை. தெரிஞ்சவங்க சொல்லும்படி கேட்டுக்கறேன்!//

    பூமியைச் சேர்த்துக் கீழே பாதாள உலகங்கள் ஏழு. விண்ணைச் சேர்த்து மேலுலகங்கள் ஏழு. ஈசனின் திருவடி இந்தப் பாதாள உலகு ஏழையும் கடந்து நோக்கினாலும் காணமுடியவில்லை. அதே போல் ஈசனின் திருமுடியும் விண்ணுலகு ஏழும் கடந்தாலும் காண முடியவில்லை.

    "போதார் புனைமுடியும்"= பல்வகைப் பட்ட மலர்களை அணியும் ஈசனின் திருமுடி. கொன்றை, ஊமத்தை, எருக்கு, தும்பை, ஆத்தி போன்ற எளிமையான யாருமே அணியாத மலர்களாலேயே ஈசன் திருப்தி அடைகின்றான். அப்படிப் பட்ட முடியும் காண முடியவில்லை.

    //எல்லாப் பொருள்முடியே// எல்லாப் பொருள்கட்கும் அவனே ஆதியும், அந்தமும் ஆக இருக்கின்றான். அவனின் முடியோ, அடியோ எதுவானாலும் நம்மால் இது தான் எல்லை என வரையறுத்துச் சொல்லமுடியாமல் சகல உலகிலும் வியாபித்து இருப்பதைச் சுட்டுகின்றார் மாணிக்கவாசகர். அதுவும் திருவண்ணாமல் ஈசன், ஜோதி உருவாய் நின்றவனாச்சே.

    இது என்னுடைய கருத்து மட்டுமே. வேறு கருத்தும் இருக்கலாம், தெரியலை, அது பத்தி!

    ReplyDelete
  5. //தினம் ஒரு பாடல் பதிவு. பொருளோடு எடுத்து எழுதுவதும் ஒரு தவம் தான். சேவைதான் !//

    நன்றி கபீரன்பன் ஐயா. உண்மைதான். சுலபமில்லை. இப்போ மத்த வலைப்பூக்களுக்கெல்லாமும் போக முடியாத நிலைமை. ஆரம்பிச்சதை முடிச்சிடணும்னு சிரமப்பட்டுதான் எழுதறேன்...

    //அவன் அருள் பூரணமாக இருக்கும்.//

    வேணுமென்கிற தருணத்தில் நீங்க சொல்லியதை அவன் வாக்காகவே எடுத்துக்கறேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  6. அழகா, தெளிவா, விளக்கினமைக்கு மிக்க நன்றி கீதாம்மா.

    ReplyDelete
  7. கவிக்கா,

    அடிமுடி காணும் காட்சியைத் தான் இந்தப் பாடலில் பாடியிருக்கிறார். இப்பாடல்கள் பாடப்பட்டது திருவண்ணாமலையில் தானே.

    சிவபெருமானின் திருவடிகள் அதல சுதல பாதாளங்களைத் தாண்டியும் கீழே இருந்ததால் பன்றி உருவில் குடைந்து சென்று தேடியவருக்கும் கிட்டவில்லை. அவன் திருமுடி எல்லா உலகங்களையும் தாண்டி மேலே இருந்ததால் அன்னப்பறவையாய்ப் பறந்து சென்று தேடியவருக்கும் கிடைக்கவில்லை. இதனையே முதல் இரு அடிகளில் அடிகளார் சொல்கிறார்.

    மிக அருமையான பாடல். திருவெம்பாவையிலேயே ஆழ்ந்த அருத்தச் செறிவு கொண்ட பாடல் இது என்று தோன்றுகிறது. சென்ற பாடலும் அப்படியே.

    ReplyDelete
  8. //மிக அருமையான பாடல்.//

    ஆமாம் குமரா. படிக்கப் படிக்க நல்லாருக்கு. விளக்கத்திற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)