Tuesday, January 6, 2009

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 13



13.


பைங்குவளைக் கார் மலரால், செங்கமலப் பைம்போதால்,
அங்கம் குருகினத்தால், பின்னும் அரவத்தால்,
தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்,
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த,
பொங்கு[ம்] மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து, நம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்,
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்,
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடு, ஏலோர் எம்பாவாய்.


பைங்குவளைக் கார் மலரால் - அப்போதுதான் அலர்ந்த கருநிற குவளை மலர்கள் இருப்பதாலும்

செங்கமலப் பைம்போது ஆல் - சிவந்த தாமரை மலர்கள் இருப்பதாலும்

அங்கு அம் குருகு இனத்தால் - அங்கு அழகிய நீர்ப்பறவைகள் இருப்பதாலும்

பின்னும் அரவத்தால் - மேலும் அங்கு திரியும் பாம்புகளாலும்

தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால் - உயிர்கள் தங்கள் அழுக்கு/ஆணவத்தைப் போக்கிக் கொள்ள அங்கு வருவதாலும்

எங்கள் பிராட்டியும் - எங்கள் தலைவியாகிய உமாதேவியும்

எம் கோனும் போன்று இசைந்த - எங்கள் அரசனான சிவபெருமானும் போல் விளங்கும்

பொங்கு[ம்] மடுவில் - நீர் நிறைந்த குளத்தில்

புகப்பாய்ந்து பாய்ந்து - புகுந்து இங்கும் அங்கும் தாவித் தாவி

நம்சங்கம் சிலம்ப - நம் கையில் அணிந்திருக்கும் சங்கு வளைகள் ஒலிக்கவும்

சிலம்பு கலந்தார்ப்ப - காலில் அணிந்துள்ள சிலம்புகள் ஆரவாரிக்கவும்

கொங்கைகள் பொங்க - மிக்க மகிழ்ச்சியால் மார்பகங்கள் பூரிக்கவும்

குடையும் புனல் பொங்க - நாம் திளைத்து ஆடும் குளத்தின் நீர் மேலே வரவும்

பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடு - தாமரை மலர்கள் நிறைந்த அழகிய நீரில் ஆழ்ந்து நீராடுவோம்


[குருகு - சிறு பறவைகள், குருக்கத்தி மலர்; அரவம் - பாம்பு; மலம் - அழுக்கு, ஆணவம்]

அப்போதுதான் அலர்ந்த கருங்குவளை மலர்களும், சிவந்த தாமரை மலர்களும், பலவேறு நீர்ப் பறவைகளும், பாம்புகளும் இருப்பதாலும், பல உயிர்கள் வந்து தங்கள் ஆணவம் முதலான அழுக்குகளைக் களைந்து கொள்ள வருவதாலும், எங்கள் உமாதேவியும், எங்கள் தலைவனான சிவபெருமானும் போல் விளங்கும் இந்த நீர் நிறைந்த குளத்தில், புகுந்து, இங்கும் அங்கும் தாவி, நம் கைகளில் உள்ள சங்கு வளைகள் ஒலிக்கும் படியும், கால்களில் அணிந்த சிலம்புகள் ஆரவாரம் செய்யும் படியும், மிக்க மகிழ்ச்சியால் மார்பகங்கள் பூரிக்கும் படியும், நாம் திளைத்தாடுவதனால் நீர் பொங்கி மேலே வரும்படியும், தாமரை மலர்கள் நிறைந்த இந்த அழகிய நீரில் ஆழ்ந்து நீராடுவோமாக!



பொருளுக்கு நன்றி : Thiruppaavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி : கூகுளார்



11 comments:

  1. அருமையான படம், திருடிக்கிட்டேன்! நன்றி! :))))))

    ReplyDelete
  2. நான் சொல்ல வந்ததை கீதா மேடம் சொல்லிட்டாங்க. அருமையான படம். நான் திருடலை:))! மனதில் இருத்திக்கிட்டேன்:)))!

    //பல உயிர்கள் வந்து தங்கள் ஆணவம் முதலான அழுக்குகளைக் களைந்து கொள்ள வருவதாலும்,//

    இந்த விளக்கத்துக்கு நன்றி கவிநயா. உடல் தூய்மையை விட உள்ளத் தூய்மை முக்கியம் என்பதை உணர்த்தும் விளக்கம்.

    ReplyDelete
  3. http://uk.youtube.com/watch?v=s-crYt75vZg

    an attempt to sing this virutham in Raag kanada

    subbu rathinam

    ReplyDelete
  4. //அருமையான படம், திருடிக்கிட்டேன்! நன்றி! :))))))//

    வாங்க கீதாம்மா. மிக்க மகிழ்ச்சி :)

    ReplyDelete
  5. வாங்க ராமலக்ஷ்மி. மாசில்லா மனம் சுலபமில்லை. அதனையும் அவனே அருள வேண்டும். வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  6. //an attempt to sing this virutham in Raag kanada//

    உருக்கமாக இருந்தது தாத்தா. மிக்க நன்றி.

    ReplyDelete
  7. இரட்டுற மொழிதல் என்று சொல்வார்கள். அப்படியின்றி நேரடியாகவே நீர்க்குளம் அம்மையப்பனைப் போல் இருக்கின்றன; அதனால் அவர்களில் மூழ்கித் திளைப்பதைப் போல் இதில் மூழ்கித் திளைக்கிறோம் என்கிறார்கள். அருமை.

    அங்கே சியாமளகிருஷ்ணக் குளத்தில் நீராட்டம்; இங்கே சியாமளா பிங்கலக் குளத்தில் நீராட்டம். நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  8. //அப்படியின்றி நேரடியாகவே நீர்க்குளம் அம்மையப்பனைப் போல் இருக்கின்றன; அதனால் அவர்களில் மூழ்கித் திளைப்பதைப் போல் இதில் மூழ்கித் திளைக்கிறோம் என்கிறார்கள். அருமை.//

    ஆம் குமரா. பொருள் புரிந்து படிக்கும்போதுதான் இப்படிப்பட்ட அருமையெல்லாம் கொஞ்சமாவது தெரியுது :)

    //அங்கே சியாமளகிருஷ்ணக் குளத்தில் நீராட்டம்; இங்கே சியாமளா பிங்கலக் குளத்தில் நீராட்டம். நன்றாக இருக்கிறது.//

    அப்புறம், இது புரியலை. கொஞ்சம் விளக்குமாறு கேட்டுக்கறேன்.

    ReplyDelete
  9. சியாமளக்கிருஷ்ண குளம் - கண்ணன் என்னும் குளம். திருப்பாவையில். அது தான் அங்கே என்று சொன்னேன்.
    சியாமளா பிங்கலக் குளம் - பார்வதி பரமேஸ்வரன் என்னும் குளம். திருவெம்பாவையில். அது தான் இங்கே என்று சொன்னேன்.
    :)

    ReplyDelete
  10. நன்றி குமரா :) 'பிங்கலம்'ங்கிற சொல்தான் புரியாம இருந்தது.

    ReplyDelete
  11. பிங்கலம்ன்னா பொன்னிறம் அக்கா.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)