Thursday, January 8, 2009

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 15




15.

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே, நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள்; சித்தம் களிகூர,
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண் பனிப்பப்,
பாரொருகால் வந்தனையாள்; விண்ணோரைத் தான் பணியாள்;
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவ ராமாறும்,
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்,
வாருருவப் பூண்முலையீர், வாயார நாம் பாடி,
ஏருருவப் பூம்புனல் பாய்ந்து ஆடு, ஏலோர் எம்பாவாய்.


வார் உருவப் பூண்முலையீர் - கச்சணிந்து, அழகிய அணிகலன்களை அணிந்த மார்பகங்களை உடைய பெண்களே!

எம்பெருமான் என்று என்று - எம்பெரும்பானே! எம்பெருமானே! என்று

ஓர் ஒருகால் - ஒவ்வோர் சமயம் பலமுறை கூறியவளாக

நம்பெருமான் சீர் - நம் ஈசனின் சிறந்த குணங்களை

வாய் ஓவாள் - இடைவிடாமல் பேசுவாள்

சித்தம் களி கூர - மனதில் பேரின்பம் மிகுதலினால்

நீர் ஒருகால் ஓவா - கண்களில் நீர் ஓயாமல்

நெடும் தாரை கண் பனிப்ப - நீண்ட தாரையாய்ப் பெருகவும்

பார் ஒருகால் வந்தனையாள் - ஒரு சமயம் நிலத்தின் மீது வணங்குதலை உடையவள்

விண்ணோரை தான் பணியாள் - மற்ற தேவர்களை சிறிதும் வணங்க மாட்டாள்

பேர் அரையற்கு - நம் தலைவனிடத்தில்

இவ்வாறே - இவ்விதத்தில்

பித்து ஒருவர் ஆமாறும் - பித்துக் கொண்ட தன்மையையும்

இவ்வண்ணம் யார் ஒருவர் - இப்படி வேறு எவர்

ஆட்கொள்ளும் வித்தகர் - நம்மை அடிமைப் படுத்திக் கொள்ளும் திறமைகள் உடையவர்

தாள் - திருவடிகளை

வாயார நாம் பாடி - வாய் நிறைய நாம் பாடிக் கொண்டு

ஏர் உருவ பூம்புனல் பாய்ந்து ஆடு - அழகு மிக்க தாமரை நிறைந்த தடாகத்தில் பாய்ந்து பாய்ந்து நீராடுவோமாக!


[ஓவாள் - இடைவிடாது கூறுவாள்; அரையன் - அரசன்]

கச்சணிந்து, அழகிய அணிகலன்களை அணிந்த மார்பகங்களை உடைய பெண்களே! இந்த பெண்ணைப் பாருங்கள்! எம்பெருமானே எம்பெருமானே என்று ஒவ்வோர் சமயம் பலமுறை கூறுகிறாள்; நம் ஈசனின் சிறந்த குணங்களை இடைவிடாமல் பேசிக் கொண்டிருக்கிறாள்; மனதில் பொங்கும் பேரின்பத்தால் கண்களில் நீர் ஓயாமல் நீண்ட தாரையாகப் பெருகுகிறது; ஒரு சமயம் நிலத்தின் மேல் வீழ்ந்து வணங்குகிறாள்; மற்ற தேவர்களையோ சிறிதும் வணங்க மறுக்கிறாள். இவ்விதத்தில் தம்மிடம் பித்துக் கொள்ள வைக்கும் தன்மையை உடையவரை, நம்மை அடிமைப் படுத்திக் கொள்ளும் திறமையை உடையவரை, நம் தலைவனின் திருவடிகளை, நாம் வாய் நிறைய பாடிக் கொண்டு, அழகு மிக்க தாமரை நிறைந்த மடுவில் பாய்ந்து பாய்ந்து நீராடுவோமாக!


பொருளுக்கு நன்றி : Thiruppavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி : கூகுளார்

9 comments:

  1. சிவநாமம் சொல்லுகையில் ஏற்படும் சிலிர்பினை விவரிக்கும் பாடலும் விளக்கமும் அருமை கவிநயா. படத் தேர்வுக்கு தனியாக ஒரு பாராட்டு.

    ReplyDelete
  2. ஏகாதசிக்கு கண் முழிச்சிருந்த டைம்-ல விட்டுப்போன அத்தனை திருவெம்பாவைப் பதிவும் படிச்சாச்சி-க்கா! ஏகாதசி விரத பலன்! :)

    ReplyDelete
  3. ஓரொருகால், சீரொருகால், நீரொருகால், பாரொருகால்-ன்னு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு! :)

    ReplyDelete
  4. http://uk.youtube.com/watch?v=CWnQ8-msbv0

    This stanza is set to Raag Yadukula kambhoji.

    subburathinam
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  5. வாங்க ராமலக்ஷ்மி. நன்றி.

    ReplyDelete
  6. நல்லது கண்ணா. நானும் உங்க திருப்பாவைப் பதிவுகளை அடுத்த மார்கழிக்குள்ளயாச்சும் படிச்சிருவேன்னு நினைக்கிறேன் :) வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  7. //http://uk.youtube.com/watch?v=CWnQ8-msbv0

    This stanza is set to Raag Yadukula kambhoji.//

    இனிமையாக இருக்கு தாத்தா. மிக்க நன்றி.

    ReplyDelete
  8. அருமையான பாடல் அக்கா.

    விண்ணோரைத் தான் பணிவாள். வைணவத்துலயும் இருக்கு. சைவத்துலயும் இருக்கு.

    ReplyDelete
  9. ஆம் குமரா. மிக்க நன்றி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)