Saturday, January 10, 2009

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 17



17.

செங்கணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்,
எங்கும் இலாததோர் இன்பம் நம் பாலதாக,
கொங்குண் கருங்குழலி, நந்தம்மைக் கோதாட்டி,
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்,
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை,
அங்கண் அரசை, அடியோங்கட்கு ஆரமுதை,
நங்கள் பெருமானைப் பாடி, நலம் திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடு, ஏலோர் எம்பாவாய்.


கொங்கு உண் கரும் குழலி - வாசனை பொருந்திய கருமையான கூந்தலையுடைய பெண்ணே!

செங்கணவன் பால் - சிவந்த கண்களையுடைய திருமாலினிடத்தும்

திசைமுகன் பால் - நான்கு திருமுகங்களை உடைய பிரம்மனிடத்தும்

தேவர்கள் பால் - இந்திரன் முதலிய பிற தேவர்களிடத்தும்

எங்கும் இலாததோர் இன்பம் - யாவருக்கும் கிடைக்காத பேரின்பத்தை

நம் பாலதாக - நாம் அடையும்படியாக

நம் தம்மை கோது ஆட்டி - நம்மை குற்றங்களில் இருந்தும் நீக்கி ஆதரித்து

இங்கு - இவ்வுலகில்

நம் இல்லங்கள் தோறும் எழுந்து அருளி - நம் இல்லங்கள் ஒவ்வொன்றிலும் எழுந்து அருளி

செங்கமலம் பொன் பாதம் - தம்முடைய, தாமரை மலர் போல் சிவந்த மிருதுவான திருவடிகளை

தந்து அருளும் சேவகனை - தரிசிக்க செய்த வீரச் செயல்கள் புரிந்த சிவபெருமானை

அங்கண் அரசை - அழகிய கண்களையுடைய நம் அரசை

அடியோங்கட்கு ஆர் அமுதை - அடியவர்களான எங்களுக்கு நிறைந்த அமுதைப் போன்றவனை

நங்கள் பெருமானை - நம் இறைவனை

நலம் திகழ - நமக்கு எல்லா நலன்களும் பெருகும் படியாக

பாடி - புகழ்ந்து பாடி

பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடு - தாமரை நிறைந்த தடாகத்தில் பாய்ந்து நீராடுவோமாக!


[கொங்கு - மணம், வாசனை; உண் - நிறைந்த; கோது - குற்றம்; சேவகன் - வீரச் செயல்களைப் புரிந்தவன்]

வாசனை பொருந்திய கருமையான கூந்தலையுடைய பெண்ணே! சிவந்த கண்களையுடைய திருமாலிடத்தும், நான்கு திருமுகங்களையுடைய பிரமனிடத்தும், இந்திரன் முதலிய தேவர்களிடத்தும், யாருக்கும் கிடைக்காத பேரின்பத்தை நாம் அடையும்படியாக, நம்மை நம் குற்றங்களிலிருந்து நீக்கி ஆதரித்து, இவ்வுலகில் நம் இல்லங்கள் ஒவ்வொன்றிலும் எழுந்தருளி, தம்முடைய தாமரை மலர் போல சிவந்த மிருதுவான திருவடிகளை தரிசிக்கச் செய்த, வீரச் செயல்கள் பல புரிந்த சிவபெருமானை, அழகிய கண்களையுடைய நம் அரசை, அடியவர்களாகிய நமக்கு நிறைந்த அமுதம் போன்றவனை, நம் பெருமானை, எல்லா நலன்களும் பெருகும்படியாகப் புகழ்ந்து பாடிக் கொண்டு, தாமரை மலர்கள் நிறைந்த தடாகத்தில் திளைத்து நீராடுவோமாக!


பொருளுக்கு நன்றி : Thiruppaavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி : shaivam.org

4 comments:

  1. செங்கணவன் பால் எனத்துவங்கும் திருவெம்பாவையின் பதினேழாம் பாடலை இன்று
    மோஹன ராகத்தில் பாட முயற்சி செய்வோம் என்று நினைத்தேன்.

    அடடா ! மோஹனத்தில் பாடி அந்தப்பாட்டை சிவபெருமானுக்கு அர்ப்பிக்கும் வேளையில்
    மலர்கள் எங்கேனும் கிடைக்குமா , அவற்றையும் சேர்த்துப் பெருமனை அர்ச்சிப்போம் என
    நினைத்தேன்.

    வரும் வழியில் மேடம் துளசி கோபால் அவர்களின் பூந்தோட்டம் ஒன்று வா வா , சிவ பக்தனே வா !
    உனக்காகவே நான் பூத்துக் குலுங்குகிறேன் எனச் சொல்லாமல் சொன்னது போல் தோன்றியது.

    என்ன அழகான பூக்கள் !! அவற்றிலே சில , இல்லை , பலவற்றையும் கொய்து சிவனின்
    சன்னதியில் சமர்ப்பித்திருக்கிறேன்.

    வாருங்கள். பாருங்கள். கேளுங்கள்.

    http://uk.youtube.com/watch?v=JnzDEqWcB6A

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  2. கொங்கு உண்-- யப்பாடா, இப்படி பொருள் இருக்கும்ன்னு நினைக்கவே இல்லை!

    ReplyDelete
  3. துளசி அம்மா வீட்டு மலர்கள் கொள்ளை அழகு தாத்தா. மோஹனமான உங்கள் பாடலும்தான். மிக்க நன்றி.

    ReplyDelete
  4. வாங்க திவா.

    //கொங்கு உண்-- யப்பாடா, இப்படி பொருள் இருக்கும்ன்னு நினைக்கவே இல்லை!//

    :)

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)