Wednesday, January 7, 2009

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 14



14.


காதார் குழை ஆடப், பைம்பூண் கலனாடக்,
கோதை குழல் ஆட, வண்டின் குழாம் ஆடச்,
சீதப் புனல் ஆடிச், சிற்றம்பலம் பாடி,
வேதப் பொருள் பாடி, அப்பொருள் ஆமா பாடிச்,
சோதி திறம் பாடிச், சூழ்கொன்றைத் தார் பாடி,
ஆதி திறம் பாடி, அந்தம் ஆமா பாடி,
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம் பாடி ஆடு, ஏலோர் எம்பாவாய்.


காது ஆர் குழை ஆட - காதில் பொருந்திய தோடுகள் அசையவும்

பைம்பூண் கலன் ஆட - பசும்பொன்னால் செய்த அணிகலன்கள் ஆடவும்

கோதை குழல் ஆட - மலர் மாலைகள் சுற்றிய கூந்தல் ஆடவும்

வண்டின் குழாம் ஆட - அம்மாலைகளின் மேல் பறந்து சப்திக்கும் வண்டுகள் கூட்டம் ஆடவும்

சீதப் புனல் ஆடி - குளிர்ந்த நீரில் மூழ்கி

சிற்றம்பலம் பாடி - சிவனார் ஆடும் அம்பலத்தைப் பாடி

வேதப் பொருள் பாடி - இறைவன் வேதமாக இருப்பதை பாடி

அப்பொருள் ஆம் ஆ பாடி - அதன் உட்பொருளாக இருக்கும் மேன்மையைப் பாடி

சோதி திறம் பாடி - அவன் ஒளிவடிவாய் நின்ற தன்மையைப் பாடி

சூழ் கொன்றை தார் பாடி - அவன் அணிந்துள்ள கொன்றை மாலையைப் பாடி

ஆதி திறம் பாடி அந்தம் ஆ பாடி - அவன் எல்லாப் படைப்புகளுக்கும் முதலாயும் முடிவாயும் நிற்கும் தன்மையைப் பாடி

பேதித்து - அஞ்ஞானத்திலிருந்து நம்மை வேறுபடுத்தி

நம்மை வளர்த்து எடுத்த - நம்மைத் தொண்டர்களாக ஏற்றுக் கொண்ட

பெய்வளைதன் பாத திறம் பாடி - வளைகள் அணிந்த உமையம்மையின் திருவடி மாண்பையும் பாடி

ஆடு - நீராடுவோமாக!

[குழை - தோடு; கலன் - நகைகள்; கோதை - மலர்; பேதித்து - வேறுபடுத்தி]

காதுகளில் அணிந்திருக்கும் தோடுகள் அசையவும், பசும்பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்கள் ஆடவும், மலர்மாலைகள் சுற்றிய கூந்தல் ஆடவும், அம்மாலைகளின் மேல் பறந்து சப்திக்கும் வண்டுகள் கூட்டம் ஆடவும், குளிர்ந்த நீரில் மூழ்கி, சிவனார் நடனமாடும் அம்பலத்தைப் பாடி, அவன் வேதமாகவும், அதன் உட்பொருளாகவும் இருக்கும் மேன்மையைப் பாடி, அவன் ஒளிவடிவாக நின்ற தன்மையைப் பாடி, அவனே எல்லாப் படைப்புகளுக்கும் முதலாயும் முடிவாயும் நிற்கும் தன்மையைப் பாடி, அஞ்ஞானத்திலிருந்து நம்மை வேறுபடுத்தி நம்மைத் தொண்டர்களாக ஏற்றுக் கொண்ட, வளைகள் அணிந்த உமையம்மையின் திருவடிகளின் மாண்பையும் பாடி, நீராடுவோமாக!


பொருளுக்கு நன்றி : Thiruppavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி : http://images.tribe.net/tribe/upload/photo/feb/e37/febe37d6-8dfb-484a-aafc-660ea2b891ba.large-profile.jpg

8 comments:

  1. //காதார் குழை ஆடப், பைம்பூண் கலனாடக்,
    கோதை குழல் ஆட, வண்டின் குழாம் ஆடச்,
    சீதப் புனல் ஆடிச், சிற்றம்பலம் பாடி,
    வேதப் பொருள் பாடி, அப்பொருள் ஆமா பாடிச்,
    சோதி திறம் பாடிச், சூழ்கொன்றைத் தார் பாடி,
    ஆதி திறம் பாடி, அந்தம் ஆமா பாடி,
    பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
    பாதத் திறம் பாடி ஆடு, ஏலோர் எம்பாவாய்.//

    பாடிடப் பாடிடப் பரவசம் தரும் வரிகள். அதனினும் தந்தது பரவசம் தாண்டவம் ஆடிடும் ஈசனிம் படம்.
    விளக்கத்துக்கும் நன்றி கவிநயா!

    ReplyDelete
  2. எல்லாம் கற்பனை பண்ணிப் பார்த்துட்டு எழுதும்போது அப்படியே கண் முன்னாலே வரும்! நல்ல பாடல், எனக்குப் பிடிச்சதும் இந்தப் பாடல் தான் திருவெம்பாவையில்

    ReplyDelete
  3. ஆம், அருமையான பாடல் ராமலக்ஷ்மி. ரசனைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. வாங்க கீதாம்மா. நல்லாச் சொன்னீங்க. எனக்கும் பிடித்த பாடல். மிக்க நன்றி.

    ReplyDelete
  5. பாடலைப் படிக்கும் போது 'அதல சேடனாராட' திருப்புகழ் நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  6. //பாடலைப் படிக்கும் போது 'அதல சேடனாராட' திருப்புகழ் நினைவுக்கு வருகிறது.//

    ஆம் குமரா, "மயிலுமாடி நீயாடி வரவேணும்". அழகான பாடல்.

    ReplyDelete
  7. மிக அருமையான பாடல்....

    இப்போதுதான் ஒவ்வொன்றாக விட்டுப் போனதை எல்லாம் படிக்கிறேன்.

    ReplyDelete
  8. வாங்க மௌலி. நிதானமா படிங்க :) நன்றி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)