உணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...
Sunday, January 11, 2009
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 18
18.
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும்,
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல்,
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்,
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாம் அகலப்,
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப், பிறங்கு ஒளிசேர்
விண்ணாகி மண்ணாகி, இத்தனையும் வேறாகிக்,
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல் பாடிப்,
பெண்ணே, இப்பூம்புனல் பாய்ந்து ஆடு, ஏலோர் எம்பாவாய்.
பெண்ணே - பெண்ணே!
அண்ணாமலையான் - அண்ணாமலையில் உறையும் பெருமானின்
அடிக் கமலம் - திருவடித் தாமரைகளை
சென்று இறைஞ்சும் - சென்று வணங்கும்
விண்ணோர் முடியின் மணித் தொகை - தேவர்களது மகுடங்களில் விளங்கும் பல வகையான ரத்தினங்களும்
பொலிவு இழந்து - தம் பிரகாசத்தை இழந்து
வீறு அற்றாற்போல் - மழுங்கிக் காண்பது போலவும்
கண் ஆர் இரவி - எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கின்ற சூரியனின்
கதிர் வந்து - கிரணங்கள் பரவி
கார் சுரப்ப - இருளை நீக்குவது போலவும்
தண் ஆர் ஒளி மழுங்கி - குளிர்ச்சி பொருந்திய ஒளி நீங்கி
தாரகைகள் தாம் அகல் - நட்சத்திரங்கள் மறைந்து நிற்கின்ற தன்மை போலவும்
பெண்ணாகி ஆணாய் அலியாய் - பெண் உருவமாய், ஆண் உருவமாய், இரண்டும் இல்லா உருவமாய்
பிறங்கு ஒளி சேர் - மிகுந்த ஒளியையுடைய நம் இறைவனின்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி - ஆகாயகமாகவும், நிலமாகவும், இன்னும் வெவ்வேறு விதமாகவும்
கண் ஆர் அமுதமாய் நின்றான் - கண்களால் பார்த்துப் பருகும் அமுதமாய் நின்றான்
கழல் பாடி - வீரக்கழல் அணிந்த அவன் திருவடிகளைப் பாடி
இப்பூம்புனல் பாய்ந்து ஆடு - இந்த அழகிய தடாகத்தில் தாவி நீராடுவோமாக!
[வீறு - ஒளி; கண் ஆர் - எங்கும் நிறைந்த; இரவி - சூரியன்; கார் - இருள்]
பெண்ணே! திருவண்ணாமலையில் உறையும் பெருமானின் திருவடித் தாமரைகளைச் சென்று வணங்கும்போது, தேவர்களின் மகுடங்களில் விளங்கும் பலவகையான இரத்தினங்களும் தங்கள் பிரகாசத்தை இழந்து மழுங்கிக் காண்பது போலவும், எங்கும் நிறைந்திருக்கின்ற கதிரவனின் கிரணங்கள் பரவி இருளை நீக்குவது போலவும், குளிர்ச்சி பொருந்திய ஒளி நீங்கி தாரகைகள் மறைந்து நிற்கின்ற தன்மை போலவும், பெண்ணாகவும் ஆணாகவும் இரண்டும் அல்லாத ஓர் உருவமாகவும், நம் இறைவன் மிகுந்த ஒளி உடையவனாய் இருக்கிறான். ஆகாயமாகவும், நிலமாகவும், இன்னும் வெவ்வேறு விதமாகவும் கண்களால் பார்த்துப் பருகும் அமுதமாய் திகழ்கின்றான். அப்படிப்பட்ட அவனுடைய வீரக்கழல் அணிந்த திருவடிகளைப் பாடிக் கொண்டு, இந்த அழகிய தடாகத்தில் குதித்து, திளைத்து, நீராடுவோமாக!
பொருளுக்கு நன்றி : Thiruppaavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி : http://ulagan.tripod.com/sivafire.gif
Subscribe to:
Post Comments (Atom)
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றடைந்து
ReplyDeleteஆரபி ராகத்தில் யாரோ பாடுவதை
ஆர் கேட்டாலும் கேளாவிடினும்
கவி நயா செல்வார்
களிப்பார் உளம் குளிர்வார்.
மீனாட்சி பாட்டி.
http://vazhvuneri.blogspot.com
The Thiruvembavai song stanza 18 sung in Raag Aaarabi is posted at:
ReplyDeletehttp://ceebrospark.blogspot.com
subbu thatha.
//கண் ஆர் இரவி//
ReplyDeleteவந்துட்டேன்-க்கா! வந்துட்டேன்! :))
//அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றடைந்து
ReplyDeleteஆரபி ராகத்தில் யாரோ பாடுவதை
ஆர் கேட்டாலும் கேளாவிடினும்
கவி நயா செல்வார்
களிப்பார் உளம் குளிர்வார்//
உண்மைதான் பாட்டி. ஆரபி ராகத்தில் தாத்தாவின் குரலில் பாடலைக் கேட்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி உங்கள் இருவருக்கும்.
////கண் ஆர் இரவி//
ReplyDeleteவந்துட்டேன்-க்கா! வந்துட்டேன்! :))////
வாங்க கண் ஆர் கண்ணா. வந்துட்டு எங்கிட்டு போனீங்க? :)
படத்தைப் பார்த்தவுடன் புல்லரித்துவிட்டது அக்கா. அழகான படம். அழகான பாடல்.
ReplyDelete//படத்தைப் பார்த்தவுடன் புல்லரித்துவிட்டது அக்கா. அழகான படம். அழகான பாடல்.//
ReplyDeleteஎதிர்பாராமல் கிடைத்த படம். ரசனைக்கு நன்றி குமரா.