Monday, January 26, 2009

100. என் தமிழ்!!

எல்லாரும் 100-க்கு வாழ்த்து சொல்ல ஆரம்பிச்சதும், ஏண்டா 100-ஐ நினைவு படுத்தினோம்னு ஆயிடுச்சு. "எமக்குத் தொழில் கவிதை"ன்னு பாரதி சொன்ன மாதிரி, எனக்குத் தெரிஞ்சதெல்லாம் கவிதை தான். அதனால இந்த பதிவுக்கும் ஒரு (குட்டிக்) கவிதைதான் :)

தமிழ் பெண்ணா என்னைப் பிறக்க வச்சது மட்டுமில்லாம, தமிழை வாசிக்கவும், நேசிக்கவும், சில சமயம் எழுதவும் வெச்ச இறைவனுக்கு என் முதல் நன்றிகள். எழுத்துப் பயணத்தில் (பெரீசா ஒண்ணும் சாதிக்கலைன்னாலும் அதுல கிடைக்கிற திருப்தியை மறுக்க முடியாது) கூடவே வந்து ஊக்குவிக்கும் எல்லாரையும் பற்றி சொல்லி அவங்களுக்கும் தனித் தனியா நன்றி நவிலணும்னு ஆசைதான். ஆனா அது ரொம்ப நீண்டுடுமோ, பெரீய்ய்ய சுய புராணமாயிடுமோங்கிற பயமும் இருக்கறதால, இப்போதைக்கு தள்ளி போட்டு வைக்கிறேன். ஆனா இதை வாசிக்கிறவங்களுக்கும், ஆரம்ப காலம் முதல் இன்று வரை என் எழுத்துக்கு பலவிதமா உரமிடறவங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவிச்சுக்கறேன்.

எல்லாருக்கும் சொல்லிட்டு, முக்கியமான ஆளை மறந்துட்டா எப்படி? இதோ, அந்த முக்கியமானவருக்கு, என் இனிய தமிழன்னைக்கு, இந்தக் கவிதையைச் சமர்ப்பிக்கிறேன்....





என்தமிழ் என்கின்ற போதில்
என்உயரம்ஓர் அடியேனும் கூடும்
தீந்தமிழ்பேர் சொன்னால் நாவில்
தீஞ்சுவை தேனாறாய் ஓடும்

என்றும் பதினாறவள் இளமை
அவள் அழகைப்பாடுவதே இனிமை
அள்ளக் குறையாத ஊற்று
அவள்பெருமைக் கேதிங்கே மாற்று

காற்றாகி என்னுள்ளே படர்ந்தாள்
பெருங்கடலாகி இதயத்தில் விரிந்தாள்
உள்ளங்கவர் கள்வன்போலே - என்
உதிரத்தி லேகலந்து நிறைந்தாள்

உச்சிமுகர்கின்ற தாய்போல் - உடைந்த
உயிருக்குத் தாலாட்டும் அவளே
என்னை மறந்தாலும் மறப்பேன் - ஆயின்
என்தமிழை மறப்பேனோநானே!




--கவிநயா




Sunday, January 25, 2009

99. நாளைத் தரணியில் இந்தியர் நாம்...

அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள். வந்தேமாதரம்!





கும்மியடி பெண்ணே கும்மியடி
தமிழ்நாடு முழுவதும்
குலுங்கிடக் கைகொட்டி கும்மியடி!
நாளைத் தரணியில்
நானிலம் போற்றிட
நாங்கள் வாழ்வோமென்று கும்மியடி!

உண்ண உணவின்றி
உடுத்த உடையின்றி
வருந்துவோர்
எவரும் இருக்க மாட்டார்
நோயற்ற வாழ்க்கையை
குறைவற்ற செல்வமாய்
அடைந்து மகிழ்வோமென கும்மியடி!

அன்பு பெருகிடும்
பண்பு உயர்ந்திடும்
தீதொன்று பிறர்க்கு
நினைக்க மாட்டோம்
மக்கள்தம் சேவையே
மகேசன் சேவையாய்
எண்ணி மகிழ்வோமென கும்மியடி!

சந்திரனைக் காட்டி
சோறூட்டும் பிள்ளைக்கு
சந்திரனில் சென்று
சோறூட்டுவோம்
சூரியன் போலவே
ஒளிர்ந்திடுவோம் அறிவில்
சுற்றுப்புறத்தையும் காத்திடுவோம்!

இயற்கை அன்னையை
மதித்திடுவோம் நாங்கள்
காடுகள் மரங்கள்
அழிக்க மாட்டோம்
வனவிலங்கினத்தை
வேட்டையாடாமலே
விவேகமாகவே பராமரிப்போம்!

கும்மியடி பெண்ணே கும்மியடி
தமிழ்நாடு முழுவதும்
குலுங்கிடக் கைகொட்டி கும்மியடி
நாளைத் தரணியில்
நானிலம் போற்றிட
நாங்கள் வாழ்வோமென கும்மியடி!

--கவிநயா

Tuesday, January 20, 2009

98. அவன் - அவள் - அது




அவன்:

அலுவலகத்தில் மீட்டிங் காரசாரமாகப் போய்க் கொண்டிருந்த போது இண்டர்காம் ஒலித்தது. அருண் தான் எடுத்தான். "மிஸ்டர் அருண், உங்களுக்கு •போன், உங்க மனைவியிடமிருந்து" என்று ரிசப்ஷனிஸ்டின் குரல் கூவியது. "ஓ.கே. என் ரூமில் போய் எடுத்துக்கிறேன்" என்று எழுந்தான். "எக்ஸ்க்யூஸ் மி, சார்" என்று எம்.டி யிடம் சொல்லி விட்டு சிறிது தர்ம சங்கடத்துடன் வெளியேறினான். அறைக்குச் சென்று போனை எடுத்ததும், "என்ன அபி இது? இப்படி, அதுவும் மீட்டிங் நடுவில ஆ•பீஸ்ல கூப்பிடாதேன்னு எத்தனை தரம் சொல்றது?" என்று கடுகு போல் பொரிந்தான்.

அவள்:

அலுவலகத்தில் கூப்பிட்டால் அவனுக்குப் பிடிக்காது என்று தெரிந்தேதான் அபி கூப்பிட்டாள். என்னதான் பொறுப்பான, அன்பான கணவனாக இருந்தாலும், சில விஷயங்களில் ரொம்பவே பிடிவாதம்; முன் கோபமும் கொஞ்சம் ஜாஸ்தி. "ஸாரி, அருண்; ஒரு எமர்ஜென்சி, அதான்" என்று கெஞ்சும் குரலில் சொன்னாள். "சரி, சரி, என்ன, சீக்கிரம் சொல்லு" என்று விரட்டினான்.

அது:

அவள் சொன்ன விஷயத்தைக் கேட்டதும், "அபி, பதட்டப் படாதே, நீ கிளம்பி ரெடியா இரு, நான் உடனே பர்மிஷன் சொல்லிட்டு வர்ரேன்" என்று இவன் பதட்டமாகக் கிளம்பினான். ஸ்கூட்டரை வேகமாக வீட்டுக்கு விரட்டும் போது, அபி சொன்னது மனசில் ஓடியது. எல்லா வேலைகளையும் முடித்து விட்டுக் குளிக்கும் போது அதைக் கவனித்திருக்கிறாள் - இடது மார்பகத்தின் கீழ்ப் பக்கத்தில் பைசா சைசில் ஒரு சிறிய கட்டி. அதனால் தான் பதறிக் கொண்டு •போன் பண்ணியிருக்கிறாள்.

அவன்:

"கடவுளே, ஒன்றும் சீரியஸாக இருக்கக் கூடாது" என்று மனம் ஒரு பக்கம் தன்னிச்சையாக வேண்டத் தொடங்க, மறு பக்கம், அபியைப் பற்றி எண்ணமிட்டது. "பாவம், ரொம்ப பயந்து விட்டிருப்பாள். குழந்தை வேண்டுமென்று தவமிருக்கும் நேரத்தில் இது வேறு என்ன பிரச்னை? அவளுக்கு இரண்டு தரம் மிஸ் காரியேஜ் ஆனதிலிருந்தே ஹாஸ்பிடல் என்றாலே அலர்ஜி. நானும் வர வர அபியை ஒழுங்காக கவனித்து அவள் முகம் பார்த்துப் பேசுவதே இல்லை. பாவம் அபி" என்று பலவாறு எண்ணமிட்ட வண்ணம் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

அவள்:

அபி ரெடியாக வாசலில் காத்துக் கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும், வீட்டைப் பூட்டிக் கொண்டு, ஸ்கூட்டரில் ஏறிக் கொண்டாள். அவள் முகமே சரியில்லை. வெளிறிப் போயிருந்தது. "டாக்டரைக் கூப்பிட்டாயா, அபி?" கேட்டபடி ஸ்கூட்டரைக் கிளப்பினான். "ம். இப்பதான் நம்ம டாக்டர் பார்வதி ஆபீஸைக் கூப்பிட்டு, எமர்ஜென்சின்னு சொல்லி அப்பாயின்ட்மென்ட் வாங்கினேன்" என்று சுரத்தே இல்லாத குரலில் கூறினாள்.

அது:

எல்லா டெஸ்டும் முடித்து விட்டு கையைத் துடைத்த படி அமர்ந்த டாக்டரை இருவரும் கலவரத்துடன் பார்த்தார்கள். "மாமோகிராமும், பயாப்ஸியும் பார்த்த பின் தான் நிச்சயமாகச் சொல்ல முடியும்" என்று சொல்லிவிட்டார், டாக்டர். அவற்றுக்கான விபரங்களும், அப்பாயிண்ட்மெண்டும் வாங்கிக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினார்கள்.

அவன்:

வீட்டுக்கு வரும் வழி முழுவதும் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. வீட்டுக்கு வந்ததும், "அருண், மறுபடி ஆ•பீஸ் போறீங்களா? காபி போடவா, இல்லை ஏதாவது சாப்பிடறீங்களா?" எதுவும் நடவாதது போல் இயல்பாகக் கேட்டவாறு அடுக்களைக்குச் செல்ல யத்தனித்த அபியின் கையைப் பிடித்து நிறுத்தினான், அருண். "அதற்குள் மனதைத் தேற்றிக் கொண்டு விட்டாள் பாரேன்" என்று தனக்குள் வியந்து கொண்டான். அவளுடைய மன உறுதி அவனைக் கவர்ந்த விஷயங்களில் ஒன்று என்பது சில வருஷங்களுக்குப் பிறகு இப்போதுதான் நினைவுக்கு வந்தது.

அவள்:

தன்னை விட கணவன் மிகவும் கலங்கி விட்டான் என்று புரிந்தது, அபிக்கு. "அருண், எல்லா டெஸ்டும் எடுத்த பிறகு தானே எதுவும் சொல்ல முடியும்? இப்ப இருந்தே கவலைப்பட்டு என்ன செய்யறது? மனதைக் குழப்பிக்காமல் ஆபீஸ் போய்ட்டு வாங்க" என்று அவனை உற்சாகப் படுத்த முயன்றாள்.

அது:

டாக்டர் சொன்னபடி மாமோகிராமும், அடுத்தாற் போல் பயாப்ஸியும் எடுத்தாகி விட்டது. ரிசல்டுக்காகக் காத்திருந்தார்கள்.

அவன்:

இந்த சில நாட்களில் அருண் தான் தலை கீழாக மாறி விட்டான். அபியின் ஒவ்வொரு அசைவையும் கவனித்தான். அவளைப் பொக்கிஷம் போல் பார்த்துக் கொண்டான். அவளை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், "என் அபிதான் என்ன அழகு, என்ன நளினம், என்ன உறுதி" என்று மெச்சிக் கொண்டான். அவள் சமையலை மறக்காமல் பாராட்டினான். அவள் வேலைகள் செய்யும் நேர்த்தியைப் புகழ்ந்தான். அவனே ஆ•பீஸிலிருந்து பத்து முறை போன் பண்ணினான். சின்னச் சின்ன சர்ப்ரைஸ் பரிசுகளினால் அவளை மகிழ்விக்க முயற்சி செய்தான். மொத்தத்தில், "இத்தனை அரியவளுக்கு ஒன்றென்றால் நான் என்ன செய்வேன்" என்று நாளும் தவித்தது அவன் உள்ளம். அரியவைகளை இழக்கும் நிலை வரும் போதுதானே அவற்றின் அருமை தெரியும்? "கடவுளே, அபிக்கு ஒன்றும் ஆகி விடக்கூடாது, அவளை முழுதாக எனக்குக் கொடுத்து விடு, அவளைப் பொன் போலத் தாங்குவேன்; இத்தனை நாளும் செய்தது போல், இனிமேல் அவளை அலட்சியப் படுத்தவே மாட்டேன்" என்று நிதமும் மனமுருக வேண்டிக்கொண்டான்.

அவள்:

கணவனின் உபசரிப்பிலும், வெளிப்படையான அன்பிலும் உள்ளம் குளிந்திருந்தாள், அபி. திருமணம் ஆன புதிதில்தான் இவ்வளவு அன்பையும் பார்த்திருக்கிறாள்; பிறகு இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக எங்கேயோ மறைந்து விட்டது. "இந்த பிரச்னை வந்ததும் ஒரு நல்லதிற்குத் தானோ" என்று மனசுக்குள் ஒரு எண்ணம் ஓடவும், தன்னைத் தானே கடிந்து கொண்டாள், அபி.

அது:

டாக்டர் குட் நியூஸ் சொல்லி விட்டார். அது சாதாரணக் கட்டி தானாம். ஒரு சிறிய ஆபரேஷனில் அகற்றி விடலாமாம்; பயப்படுவதற்கு ஒன்றும் இல்லையாம். அவரை அங்கேயே கட்டிப் பிடித்து முத்தமிடாத குறையாக, அவர் கைகளைப் பற்றி, "தாங்க் யூ, டாக்டர்" என்று மனப்பூர்வமாகச் சொன்னான், அருண்.

அவன், அவள்:

வீட்டிற்குள் நுழைந்ததும் அவளைத் தூக்கி ஒரு தட்டாமாலை சுற்றி இறக்கினான். "அபி, இன்னைக்கே கோயிலுக்குப் போய் கடவுளுக்கு நன்றி சொல்லிட்டு, அப்படியே செலிப்ரேட் பண்ணிட்டு வரணும்". கணவனின் உற்சாகம் அவளுக்கும் தொற்றிக் கொள்ள, அவனுக்குப் பிடித்த புடவை கட்டி, அலங்கரித்துக் கிளம்பினாள், அபி.

அது:

ஒரு வழியாக அந்தப் பொல்லாத கட்டியை அகற்றி இரண்டு மாதங்களாகி விட்டன. அருண் அவளை உள்ளங்கையில் வைத்துத்தான் தாங்கினான். இப்போது அபியின் உடலும், மனமும் நன்கு தேறி விட்டன.

அவன்:

அருண் மும்முரமாக ஒரு ரிப்போர்ட் டைப் பண்ணிக்கொண்டிருந்தான். இண்டர்காம் ஒலித்தது. "மிஸ்டர் அருண், உங்க மனைவி லைன்ல இருக்காங்க" ரிசப்ஷனிஸ்டின் குரல் கொஞ்சியது. "தாங்க்ஸ்" என்றபடி போனை எடுத்த அருண், " என்ன அபி இது? பிஸியா இருக்கப்ப போன் பண்ணாதேன்னு எத்தனை முறை சொல்றது?" என்று சிடுசிடுத்தான்.

-- கவிநயா

[இது 2004-ல் எழுதிய என்னுடைய முதல் சிறுகதை. குற்றம் குறைகளைப் பொறுத்துக்கோங்க :)]

படத்துக்கு நன்றி: http://flickr.com/photos/brianauer/3102014201

Tuesday, January 13, 2009

பொங்கலோ பொங்கல்!

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!



பாலுடன் பொங்கல் எங்கும் பொங்குக!
பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!
பொங்கலோ பொங்கல்!!

பச் சரிசிப் பொங்கல் எங்கும் பொங்குக!
அச்சு வெல்லச் சுவை எங்கும் தங்குக!
பொங்கலோ பொங்கல்!!

நெய்மணக்கும் பொங்கல் எங்கும் பொங்குக!
மெய்மணக்கச் செய்யும் அன்பே தங்குக!
பொங்கலோ பொங்கல்!!

மனங்கள் தோறும் என்றும் மகிழ்வே பொங்குக!
கணங்கள் தோறும் அங்கு கனிவே தங்குக!
பொங்கலோ பொங்கல்!!

நாளும் பொழுதும் எங்கும் நலமே பொங்குக!
இல்லந் தோறும் என்றும் இன்பம் தங்குக!
பொங்கலோ பொங்கல்!!


--கவிநயா

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 20





20.

போற்றி அருளுக நின் ஆதியாம் பாத மலர்,
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்,
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்,
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்,
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணை அடிகள்,
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்,
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டு அருளும் பொன்மலர்கள்,
போற்றி யாம் மார்கழி நீர் ஆடு, ஏலோர் எம்பாவாய்.


போற்றி - யாவராலும் போற்றப்படுபவனே!

அருளுக நின் ஆதியாம் பாதமாலர் - எல்லாவற்றிற்கும் மூலமான நின் திருவடிகளை எமக்கு அருள்வாயாக!

அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள் - எப்பொருளுக்கும் முடிவிடம் ஆகும் உன் தளிர் போன்ற திருவடிகளை எமக்கு அருள்வாயாக!

எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் - எல்லாவற்றிற்கும், எல்லா ஜீவராசிகளுக்கும் முதற்காரணமான உன் அழகிய பாதங்களை போற்றுகிறோம்!

எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் - எல்லா உயிர்களையும் பாதுகாக்கும் உன் மென்மையான மலர்ப் பாதங்களை போற்றுகிறோம்!

எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள் - எல்லா உயிர்களும் லயம் அடையும் உன் இரு திருவடிகளை போற்றுகிறோம்!

மால் நான்முகனும் காணாத புண்டரிகம் - திருமாலும் நான்முகனும் காண இயலாத தாமரை போன்ற பாதங்களை போற்றுகிறோம்!

யாம் உய்ய ஆட்கொண்டு அருளும் பொன்மலர்கள் - எங்களை உய்விக்க வேண்டி எங்களை ஆட் கொண்டு அருளும் பொன்னடிகளை போற்றுகிறோம்!

யாம் மார்கழி நீர் ஆடு - நாங்கள் உன்னைப் பாடிப் புகழ்ந்து மார்கழி நீராடுகிறோம்!


யாவராலும் போற்றப்படும் சிவபெருமானே! எல்லாவற்றிற்கும் மூலமான உன் திருவடிகளை எமக்கு அருள்வாயாக! எப்பொருளுக்கும் முடிவிடம் ஆகும் உன் திருவடிகளை எமக்கு அருள்வாயாக! எல்லாவற்றிற்கும், எல்லா ஜீவராசிகளுக்கும் முதற்காரணமான உன் அழகிய திருவடிகளைப் போற்றுகிறோம்! எல்லா உயிர்களையும் பாதுகாக்கும் உன் மலர் போன்ற மென்மையான பாதங்களைப் போற்றுகிறோம்! எல்லா உயிர்களும் லயம் அடையும் உன் இரு திருவடிகளைப் போற்றுகிறோம்! திருமாலும் நான்முகனும் கண்டறியாத உன் தாமரை போன்ற பாதங்களைப் போற்றுகிறோம்! எங்களை உய்விக்க வேண்டி எங்களை ஆட் கொண்டு அருளும் உன் பொன்னடிகளைப் போற்றுகிறோம்! இவ்வாறு உன்னைப் பலவாறு போற்றி நாங்கள் மார்கழி நீராடுகிறோம்! உன் திருவடிகளைக் கொண்டு எங்களைக் காத்தருளல் வேண்டும்!


பொருளுக்கு நன்றி : Thiruppaavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி : http://somnathmandirblm.com/dwnload/wallpapers/shiva/



[இத்துடன் திருவெம்பாவை நிறைவு பெறுகிறது. கணபதிக்கும், ஈசனுக்கும், என் அன்னைக்கும், படித்த, படிக்கவிருக்கும், பின்னூட்டமிட்ட, இடவிருக்கும், அன்பர்களுக்கும், நன்றி!]



--திருச்சிற்றம்பலம்--


Monday, January 12, 2009

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 19



19.


உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று,
அங்கு அப்பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்,
எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள்,
எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க,
எம் கை உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க,
கங்குல் பகல் எம் கண் மற்றொன்றும் காணற்க,
இங்கு இப்பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்,
எங்கு எழில் என் ஞாயிறு எமக்கு, ஏலோர் எம்பாவாய்.



எங்கள் பெருமான் - எங்கள் தலைவனே!

உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் - உன் கையில் சேர்க்கப் பெறும் பிள்ளை உனக்கே அடைக்கலம்

என்று அங்கு அப்பழம் சொல் - என்ற அந்தப் பழமொழியை

புதுக்கும் எம் அச்சத்தால் - மீண்டும் மொழிவது பொருத்தமன்று என்று உணர்ந்தும், அதனையே சொல்லும் எம் பயத்தினால்

உனக்கு ஒன்று உரைப்போம் கேள் - இறைவனாகிய உமக்கு நாங்கள் சொல்லுவதும் ஒன்று உண்டு

எம் கொங்கை - எங்கள் உடல்

நின் அன்பர் அல்லாதார் தோள் சேரற்க - உன் அன்பர் அல்லாதவர்களுக்கு உரிமையாக வேண்டாம்

எம் கை - எங்கள் கைகள்

உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க - உனக்கன்றி வேறிருவருக்கும் எந்த தொண்டும் செய்யாதிருக்கட்டும்

கங்குல் பகல் எம் கண் - எமது கண்கள் இரவிலும் பகலிலும்

மற்று ஒன்றும் காணற்க - உன்னையன்றி வேறு ஒரு பொருளையும் காணாதிருக்கட்டும்

இங்கு இப்பரிசு எம் கோன் நல்குதியேல் - இவ்வுலகத்தில் எங்கள் தலைவனாகிய நீ இவ்வாறே அருள்வாயானால்

ஞாயிறு எங்கு எழில் என் - சூரியன் கீழ்த்திசையிலன்றி எந்தத் திசை உதித்தால் என்ன, நாங்கள் கவலைப்பட மாட்டோம்!


[பழம் சொல் - பழமொழி; கங்குல் - இரவு]

எங்கள் தலைவனே! உன் கையில் சேர்க்கப் பெறும் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்ற அந்தப் பழமொழியை மீண்டும் சொல்வது பொருத்தமன்று என்று தெரிந்தும், எங்கள் அச்சத்தால் அதனையே சொல்கிறோம். எங்கள் இறைவனாகிய உனக்கு நாங்கள் சொல்வது ஒன்று உண்டு. எங்கள் உடல் உன் அன்பர்கள் அல்லாதார்க்கு உரிமையாக வேண்டாம். எங்கள் கைகள் உன்னையன்றி வேறு ஒருவருக்கும் தொண்டு செய்ய வேண்டாம். எங்கள் கண்கள் இரவிலும் பகலிலும் உன்னையன்றி வேறு ஒரு பொருளையும் காணாதிருக்க வேண்டும். இவ்வுலகத்தில், எங்கள் அரசனாகிய நீ, இவ்வாறே எங்களுக்கு அருள் செய்வாயானால், கதிரவன் கீழ்த்திசையிலன்றி வேறு எந்தத் திசையில் உதித்தால் கூட நாங்கள் கவலைப்பட மாட்டோம்!


பொருளுக்கு நன்றி: Thiruppaavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி: http://somnathmandirblm.com/dwnload/wallpapers/shiva/

Sunday, January 11, 2009

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 18



18.

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும்,
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல்,
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்,
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாம் அகலப்,
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப், பிறங்கு ஒளிசேர்
விண்ணாகி மண்ணாகி, இத்தனையும் வேறாகிக்,
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல் பாடிப்,
பெண்ணே, இப்பூம்புனல் பாய்ந்து ஆடு, ஏலோர் எம்பாவாய்.


பெண்ணே - பெண்ணே!

அண்ணாமலையான் - அண்ணாமலையில் உறையும் பெருமானின்

அடிக் கமலம் - திருவடித் தாமரைகளை

சென்று இறைஞ்சும் - சென்று வணங்கும்

விண்ணோர் முடியின் மணித் தொகை - தேவர்களது மகுடங்களில் விளங்கும் பல வகையான ரத்தினங்களும்

பொலிவு இழந்து - தம் பிரகாசத்தை இழந்து

வீறு அற்றாற்போல் - மழுங்கிக் காண்பது போலவும்

கண் ஆர் இரவி - எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கின்ற சூரியனின்

கதிர் வந்து - கிரணங்கள் பரவி

கார் சுரப்ப - இருளை நீக்குவது போலவும்

தண் ஆர் ஒளி மழுங்கி - குளிர்ச்சி பொருந்திய ஒளி நீங்கி

தாரகைகள் தாம் அகல் - நட்சத்திரங்கள் மறைந்து நிற்கின்ற தன்மை போலவும்

பெண்ணாகி ஆணாய் அலியாய் - பெண் உருவமாய், ஆண் உருவமாய், இரண்டும் இல்லா உருவமாய்

பிறங்கு ஒளி சேர் - மிகுந்த ஒளியையுடைய நம் இறைவனின்

விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி - ஆகாயகமாகவும், நிலமாகவும், இன்னும் வெவ்வேறு விதமாகவும்

கண் ஆர் அமுதமாய் நின்றான் - கண்களால் பார்த்துப் பருகும் அமுதமாய் நின்றான்

கழல் பாடி - வீரக்கழல் அணிந்த அவன் திருவடிகளைப் பாடி

இப்பூம்புனல் பாய்ந்து ஆடு - இந்த அழகிய தடாகத்தில் தாவி நீராடுவோமாக!


[வீறு - ஒளி; கண் ஆர் - எங்கும் நிறைந்த; இரவி - சூரியன்; கார் - இருள்]

பெண்ணே! திருவண்ணாமலையில் உறையும் பெருமானின் திருவடித் தாமரைகளைச் சென்று வணங்கும்போது, தேவர்களின் மகுடங்களில் விளங்கும் பலவகையான இரத்தினங்களும் தங்கள் பிரகாசத்தை இழந்து மழுங்கிக் காண்பது போலவும், எங்கும் நிறைந்திருக்கின்ற கதிரவனின் கிரணங்கள் பரவி இருளை நீக்குவது போலவும், குளிர்ச்சி பொருந்திய ஒளி நீங்கி தாரகைகள் மறைந்து நிற்கின்ற தன்மை போலவும், பெண்ணாகவும் ஆணாகவும் இரண்டும் அல்லாத ஓர் உருவமாகவும், நம் இறைவன் மிகுந்த ஒளி உடையவனாய் இருக்கிறான். ஆகாயமாகவும், நிலமாகவும், இன்னும் வெவ்வேறு விதமாகவும் கண்களால் பார்த்துப் பருகும் அமுதமாய் திகழ்கின்றான். அப்படிப்பட்ட அவனுடைய வீரக்கழல் அணிந்த திருவடிகளைப் பாடிக் கொண்டு, இந்த அழகிய தடாகத்தில் குதித்து, திளைத்து, நீராடுவோமாக!


பொருளுக்கு நன்றி : Thiruppaavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி : http://ulagan.tripod.com/sivafire.gif

Saturday, January 10, 2009

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 17



17.

செங்கணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்,
எங்கும் இலாததோர் இன்பம் நம் பாலதாக,
கொங்குண் கருங்குழலி, நந்தம்மைக் கோதாட்டி,
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்,
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை,
அங்கண் அரசை, அடியோங்கட்கு ஆரமுதை,
நங்கள் பெருமானைப் பாடி, நலம் திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடு, ஏலோர் எம்பாவாய்.


கொங்கு உண் கரும் குழலி - வாசனை பொருந்திய கருமையான கூந்தலையுடைய பெண்ணே!

செங்கணவன் பால் - சிவந்த கண்களையுடைய திருமாலினிடத்தும்

திசைமுகன் பால் - நான்கு திருமுகங்களை உடைய பிரம்மனிடத்தும்

தேவர்கள் பால் - இந்திரன் முதலிய பிற தேவர்களிடத்தும்

எங்கும் இலாததோர் இன்பம் - யாவருக்கும் கிடைக்காத பேரின்பத்தை

நம் பாலதாக - நாம் அடையும்படியாக

நம் தம்மை கோது ஆட்டி - நம்மை குற்றங்களில் இருந்தும் நீக்கி ஆதரித்து

இங்கு - இவ்வுலகில்

நம் இல்லங்கள் தோறும் எழுந்து அருளி - நம் இல்லங்கள் ஒவ்வொன்றிலும் எழுந்து அருளி

செங்கமலம் பொன் பாதம் - தம்முடைய, தாமரை மலர் போல் சிவந்த மிருதுவான திருவடிகளை

தந்து அருளும் சேவகனை - தரிசிக்க செய்த வீரச் செயல்கள் புரிந்த சிவபெருமானை

அங்கண் அரசை - அழகிய கண்களையுடைய நம் அரசை

அடியோங்கட்கு ஆர் அமுதை - அடியவர்களான எங்களுக்கு நிறைந்த அமுதைப் போன்றவனை

நங்கள் பெருமானை - நம் இறைவனை

நலம் திகழ - நமக்கு எல்லா நலன்களும் பெருகும் படியாக

பாடி - புகழ்ந்து பாடி

பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடு - தாமரை நிறைந்த தடாகத்தில் பாய்ந்து நீராடுவோமாக!


[கொங்கு - மணம், வாசனை; உண் - நிறைந்த; கோது - குற்றம்; சேவகன் - வீரச் செயல்களைப் புரிந்தவன்]

வாசனை பொருந்திய கருமையான கூந்தலையுடைய பெண்ணே! சிவந்த கண்களையுடைய திருமாலிடத்தும், நான்கு திருமுகங்களையுடைய பிரமனிடத்தும், இந்திரன் முதலிய தேவர்களிடத்தும், யாருக்கும் கிடைக்காத பேரின்பத்தை நாம் அடையும்படியாக, நம்மை நம் குற்றங்களிலிருந்து நீக்கி ஆதரித்து, இவ்வுலகில் நம் இல்லங்கள் ஒவ்வொன்றிலும் எழுந்தருளி, தம்முடைய தாமரை மலர் போல சிவந்த மிருதுவான திருவடிகளை தரிசிக்கச் செய்த, வீரச் செயல்கள் பல புரிந்த சிவபெருமானை, அழகிய கண்களையுடைய நம் அரசை, அடியவர்களாகிய நமக்கு நிறைந்த அமுதம் போன்றவனை, நம் பெருமானை, எல்லா நலன்களும் பெருகும்படியாகப் புகழ்ந்து பாடிக் கொண்டு, தாமரை மலர்கள் நிறைந்த தடாகத்தில் திளைத்து நீராடுவோமாக!


பொருளுக்கு நன்றி : Thiruppaavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி : shaivam.org

Friday, January 9, 2009

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 16




16.

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து, உடையாள்
என்னத் திகழ்ந்து, எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து, எம் பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பிற் சிலம்பித், திருப்புருவம்
என்னச் சிலை குலவி, நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி, அவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழை, ஏலோர் எம்பாவாய்.


மழை - மழைக் கடவுளே!

கடலை முன்னி - கடல் நீரை நெருங்கி

சுருக்கி - வற்றச் செய்து

எழுந்து - மேகமாய் வானில் எழுந்து

உடையாள் என்ன திகழ்ந்து - நம்மை ஆட்கொண்ட உமாதேவியின் திருமேனியைப் போல் கருநிறமாக விளங்கி

எம்மை ஆள் உடையாள் - நம்பிராட்டியின்

இட்டு இடையின் மின்னி - மிகச் சிறிய இடையைப் போல் மின்னி

பொலிந்து - மிகப் பொலிவுடன் தோன்றி

எம்பிராட்டி - நம் தலைவியின்

திருவடி மேல் - திருவடிகளில் அணியப் பெற்ற

பொன்னம் சிலம்பில் சிலம்பி - பொன் நிறமான அழகிய சிலம்பின் ஒலி போல் இடித்து முழங்கி

திருபுருவாம் என்ன - அவளுடைய அழகிய புருவம் போல

சிலை குலவி - வானவில்லைச் செய்து வளைத்து

நம் தம்மை ஆளுடையாள் தன்னில் - நம்பிராட்டியாகிய உமாதேவியுடன் உறையும்

பிரிவில்லா எம்கோமான் - நீக்கமின்றி நிற்கின்ற எம் அரசனாகிய சிவபெருமானுடைய

அன்பர்க்கு - அன்பர்களுக்கு

முன்னி - முற்பட்டு

அவள் நமக்கு முன் சுரக்கும் - சிவபெருமானும் உமாதேவியும்

பொழியும் இன் அருளே என்ன - நன்மை பயக்கும் கருணைப் பெருக்கே போல

பொழியாய் - நீ மழையைப் பொழிவாயாக!


மழைக் கடவுளே! கடல் நீரை வற்றச் செய்து, மேகமாய் வானில் எழுந்து, நம்மை ஆட்கொண்ட உமாதேவியின் திருமேனியைப் போல் கருநிறமாக விளங்கி, நம்பிராட்டியின் சிறு இடையைப் போல் மின்னி பொலிவுடன் தோன்றி, நம் தலைவியின் திருவடிகளில் அணியப் பெற்ற பொன் நிறமான அழகிய சிலம்பின் ஒலி போல் இடியிடித்து விளங்கி, அவளுடைய அழகிய புருவம் போல வானவில்லைச் செய்து வளைத்து, நம்பிராட்டியாகிய உமாதேவியுடன் உறைந்து, நீக்கமின்றி நிற்கின்ற எம் அரசனாகிய சிவபெருமானின் அன்பருக்கு, சிவபெருமானும் உமாதேவியும் மனமுவந்து அருளும் கருணைப் பெருக்கைப் போல, நீ மழையைப் பொழிவாயாக!


பொருளுக்கு நன்றி : Thiruppaavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி : www.geocities.com

Thursday, January 8, 2009

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 15




15.

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே, நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள்; சித்தம் களிகூர,
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண் பனிப்பப்,
பாரொருகால் வந்தனையாள்; விண்ணோரைத் தான் பணியாள்;
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவ ராமாறும்,
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்,
வாருருவப் பூண்முலையீர், வாயார நாம் பாடி,
ஏருருவப் பூம்புனல் பாய்ந்து ஆடு, ஏலோர் எம்பாவாய்.


வார் உருவப் பூண்முலையீர் - கச்சணிந்து, அழகிய அணிகலன்களை அணிந்த மார்பகங்களை உடைய பெண்களே!

எம்பெருமான் என்று என்று - எம்பெரும்பானே! எம்பெருமானே! என்று

ஓர் ஒருகால் - ஒவ்வோர் சமயம் பலமுறை கூறியவளாக

நம்பெருமான் சீர் - நம் ஈசனின் சிறந்த குணங்களை

வாய் ஓவாள் - இடைவிடாமல் பேசுவாள்

சித்தம் களி கூர - மனதில் பேரின்பம் மிகுதலினால்

நீர் ஒருகால் ஓவா - கண்களில் நீர் ஓயாமல்

நெடும் தாரை கண் பனிப்ப - நீண்ட தாரையாய்ப் பெருகவும்

பார் ஒருகால் வந்தனையாள் - ஒரு சமயம் நிலத்தின் மீது வணங்குதலை உடையவள்

விண்ணோரை தான் பணியாள் - மற்ற தேவர்களை சிறிதும் வணங்க மாட்டாள்

பேர் அரையற்கு - நம் தலைவனிடத்தில்

இவ்வாறே - இவ்விதத்தில்

பித்து ஒருவர் ஆமாறும் - பித்துக் கொண்ட தன்மையையும்

இவ்வண்ணம் யார் ஒருவர் - இப்படி வேறு எவர்

ஆட்கொள்ளும் வித்தகர் - நம்மை அடிமைப் படுத்திக் கொள்ளும் திறமைகள் உடையவர்

தாள் - திருவடிகளை

வாயார நாம் பாடி - வாய் நிறைய நாம் பாடிக் கொண்டு

ஏர் உருவ பூம்புனல் பாய்ந்து ஆடு - அழகு மிக்க தாமரை நிறைந்த தடாகத்தில் பாய்ந்து பாய்ந்து நீராடுவோமாக!


[ஓவாள் - இடைவிடாது கூறுவாள்; அரையன் - அரசன்]

கச்சணிந்து, அழகிய அணிகலன்களை அணிந்த மார்பகங்களை உடைய பெண்களே! இந்த பெண்ணைப் பாருங்கள்! எம்பெருமானே எம்பெருமானே என்று ஒவ்வோர் சமயம் பலமுறை கூறுகிறாள்; நம் ஈசனின் சிறந்த குணங்களை இடைவிடாமல் பேசிக் கொண்டிருக்கிறாள்; மனதில் பொங்கும் பேரின்பத்தால் கண்களில் நீர் ஓயாமல் நீண்ட தாரையாகப் பெருகுகிறது; ஒரு சமயம் நிலத்தின் மேல் வீழ்ந்து வணங்குகிறாள்; மற்ற தேவர்களையோ சிறிதும் வணங்க மறுக்கிறாள். இவ்விதத்தில் தம்மிடம் பித்துக் கொள்ள வைக்கும் தன்மையை உடையவரை, நம்மை அடிமைப் படுத்திக் கொள்ளும் திறமையை உடையவரை, நம் தலைவனின் திருவடிகளை, நாம் வாய் நிறைய பாடிக் கொண்டு, அழகு மிக்க தாமரை நிறைந்த மடுவில் பாய்ந்து பாய்ந்து நீராடுவோமாக!


பொருளுக்கு நன்றி : Thiruppavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி : கூகுளார்

Wednesday, January 7, 2009

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 14



14.


காதார் குழை ஆடப், பைம்பூண் கலனாடக்,
கோதை குழல் ஆட, வண்டின் குழாம் ஆடச்,
சீதப் புனல் ஆடிச், சிற்றம்பலம் பாடி,
வேதப் பொருள் பாடி, அப்பொருள் ஆமா பாடிச்,
சோதி திறம் பாடிச், சூழ்கொன்றைத் தார் பாடி,
ஆதி திறம் பாடி, அந்தம் ஆமா பாடி,
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம் பாடி ஆடு, ஏலோர் எம்பாவாய்.


காது ஆர் குழை ஆட - காதில் பொருந்திய தோடுகள் அசையவும்

பைம்பூண் கலன் ஆட - பசும்பொன்னால் செய்த அணிகலன்கள் ஆடவும்

கோதை குழல் ஆட - மலர் மாலைகள் சுற்றிய கூந்தல் ஆடவும்

வண்டின் குழாம் ஆட - அம்மாலைகளின் மேல் பறந்து சப்திக்கும் வண்டுகள் கூட்டம் ஆடவும்

சீதப் புனல் ஆடி - குளிர்ந்த நீரில் மூழ்கி

சிற்றம்பலம் பாடி - சிவனார் ஆடும் அம்பலத்தைப் பாடி

வேதப் பொருள் பாடி - இறைவன் வேதமாக இருப்பதை பாடி

அப்பொருள் ஆம் ஆ பாடி - அதன் உட்பொருளாக இருக்கும் மேன்மையைப் பாடி

சோதி திறம் பாடி - அவன் ஒளிவடிவாய் நின்ற தன்மையைப் பாடி

சூழ் கொன்றை தார் பாடி - அவன் அணிந்துள்ள கொன்றை மாலையைப் பாடி

ஆதி திறம் பாடி அந்தம் ஆ பாடி - அவன் எல்லாப் படைப்புகளுக்கும் முதலாயும் முடிவாயும் நிற்கும் தன்மையைப் பாடி

பேதித்து - அஞ்ஞானத்திலிருந்து நம்மை வேறுபடுத்தி

நம்மை வளர்த்து எடுத்த - நம்மைத் தொண்டர்களாக ஏற்றுக் கொண்ட

பெய்வளைதன் பாத திறம் பாடி - வளைகள் அணிந்த உமையம்மையின் திருவடி மாண்பையும் பாடி

ஆடு - நீராடுவோமாக!

[குழை - தோடு; கலன் - நகைகள்; கோதை - மலர்; பேதித்து - வேறுபடுத்தி]

காதுகளில் அணிந்திருக்கும் தோடுகள் அசையவும், பசும்பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்கள் ஆடவும், மலர்மாலைகள் சுற்றிய கூந்தல் ஆடவும், அம்மாலைகளின் மேல் பறந்து சப்திக்கும் வண்டுகள் கூட்டம் ஆடவும், குளிர்ந்த நீரில் மூழ்கி, சிவனார் நடனமாடும் அம்பலத்தைப் பாடி, அவன் வேதமாகவும், அதன் உட்பொருளாகவும் இருக்கும் மேன்மையைப் பாடி, அவன் ஒளிவடிவாக நின்ற தன்மையைப் பாடி, அவனே எல்லாப் படைப்புகளுக்கும் முதலாயும் முடிவாயும் நிற்கும் தன்மையைப் பாடி, அஞ்ஞானத்திலிருந்து நம்மை வேறுபடுத்தி நம்மைத் தொண்டர்களாக ஏற்றுக் கொண்ட, வளைகள் அணிந்த உமையம்மையின் திருவடிகளின் மாண்பையும் பாடி, நீராடுவோமாக!


பொருளுக்கு நன்றி : Thiruppavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி : http://images.tribe.net/tribe/upload/photo/feb/e37/febe37d6-8dfb-484a-aafc-660ea2b891ba.large-profile.jpg

Tuesday, January 6, 2009

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 13



13.


பைங்குவளைக் கார் மலரால், செங்கமலப் பைம்போதால்,
அங்கம் குருகினத்தால், பின்னும் அரவத்தால்,
தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்,
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த,
பொங்கு[ம்] மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து, நம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்,
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்,
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடு, ஏலோர் எம்பாவாய்.


பைங்குவளைக் கார் மலரால் - அப்போதுதான் அலர்ந்த கருநிற குவளை மலர்கள் இருப்பதாலும்

செங்கமலப் பைம்போது ஆல் - சிவந்த தாமரை மலர்கள் இருப்பதாலும்

அங்கு அம் குருகு இனத்தால் - அங்கு அழகிய நீர்ப்பறவைகள் இருப்பதாலும்

பின்னும் அரவத்தால் - மேலும் அங்கு திரியும் பாம்புகளாலும்

தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால் - உயிர்கள் தங்கள் அழுக்கு/ஆணவத்தைப் போக்கிக் கொள்ள அங்கு வருவதாலும்

எங்கள் பிராட்டியும் - எங்கள் தலைவியாகிய உமாதேவியும்

எம் கோனும் போன்று இசைந்த - எங்கள் அரசனான சிவபெருமானும் போல் விளங்கும்

பொங்கு[ம்] மடுவில் - நீர் நிறைந்த குளத்தில்

புகப்பாய்ந்து பாய்ந்து - புகுந்து இங்கும் அங்கும் தாவித் தாவி

நம்சங்கம் சிலம்ப - நம் கையில் அணிந்திருக்கும் சங்கு வளைகள் ஒலிக்கவும்

சிலம்பு கலந்தார்ப்ப - காலில் அணிந்துள்ள சிலம்புகள் ஆரவாரிக்கவும்

கொங்கைகள் பொங்க - மிக்க மகிழ்ச்சியால் மார்பகங்கள் பூரிக்கவும்

குடையும் புனல் பொங்க - நாம் திளைத்து ஆடும் குளத்தின் நீர் மேலே வரவும்

பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடு - தாமரை மலர்கள் நிறைந்த அழகிய நீரில் ஆழ்ந்து நீராடுவோம்


[குருகு - சிறு பறவைகள், குருக்கத்தி மலர்; அரவம் - பாம்பு; மலம் - அழுக்கு, ஆணவம்]

அப்போதுதான் அலர்ந்த கருங்குவளை மலர்களும், சிவந்த தாமரை மலர்களும், பலவேறு நீர்ப் பறவைகளும், பாம்புகளும் இருப்பதாலும், பல உயிர்கள் வந்து தங்கள் ஆணவம் முதலான அழுக்குகளைக் களைந்து கொள்ள வருவதாலும், எங்கள் உமாதேவியும், எங்கள் தலைவனான சிவபெருமானும் போல் விளங்கும் இந்த நீர் நிறைந்த குளத்தில், புகுந்து, இங்கும் அங்கும் தாவி, நம் கைகளில் உள்ள சங்கு வளைகள் ஒலிக்கும் படியும், கால்களில் அணிந்த சிலம்புகள் ஆரவாரம் செய்யும் படியும், மிக்க மகிழ்ச்சியால் மார்பகங்கள் பூரிக்கும் படியும், நாம் திளைத்தாடுவதனால் நீர் பொங்கி மேலே வரும்படியும், தாமரை மலர்கள் நிறைந்த இந்த அழகிய நீரில் ஆழ்ந்து நீராடுவோமாக!



பொருளுக்கு நன்றி : Thiruppaavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி : கூகுளார்



Monday, January 5, 2009

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 12




12.


ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன், நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன், இவ்வானும் குவலயமும் எல்லோமும்,
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி,
வார்த்தையும் பேசி வளை சிலம்ப வார் கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய, அணி குழல் மேல் வண்டு ஆர்ப்பப்,
பூத் திகழும் பொய்கை குடைந்து, உடையான் பொற்பாதம்
ஏத்தி, இருஞ்சுனை நீர் ஆடு, ஏலோர் எம்பாவாய்.


ஆர்த்த - நம்மைப் பிணித்துக் கட்டிய

பிறவித் துயர் கெட - பிறவியாகிய துன்பம் நீங்கும்படி

நாம் ஆர்த்தாடும் - நாம் எல்லாரும் மகிழ்ச்சியுடன் ஆராவரம் செய்து கொண்டாடும்

தீர்த்தன் - தூய்மையானவன்

நற்றில்லைச் சிற்றம்பலத்தே - புனிதமான தில்லை வெளியினில்

தீயாடும் கூத்தன் - இடக்கையில் அனல் ஏந்தி களிப்புடன் ஆடும் கூத்தன்

இவ்வானும் குவலயமும் எல்லோமும் - ஆகாயத்தையும், புவியையும், இன்னும் எல்லாப் பொருள்களையும்

காத்தும் படைத்தும் கரந்தும் - படைத்தும், காத்தும், ஒடுக்கியும்(மறைத்தும்)

விளையாடி - விளையாடும் சிவபெருமானே!

வார்த்தையும் பேசி - உன் புகழையும், நமசிவாய எனும் திருமந்திரத்தையும் ஓதிக் கொண்டே

வளை சிலம்ப - கைவளைகள் ஒலிக்கவும்

வார் கலைகள் -நீண்ட மேகலைகள்

ஆர்ப்பு அரவம் செய்ய - மிகவும் சலசலக்கவும்

அணி குழல் மேல் - மலரால் அலங்கரிக்கப்பட்ட நீண்ட கூந்தலின் மேல்

வண்டு ஆர்ப்ப - வண்டுகள் ரீங்காரம் செய்யவும்

பூத் திகழும் பொய்கை - தாமரை மலர்கள் விளங்குகின்ற தடாகத்தில்

குடைந்து - நீரைத் துளைத்து

உடையான் - நம்மை அடியவர்களாக உடைய சிவனது

பொற்பாதம் ஏத்தி - அழகிய திருவடிகளைப் போற்றி

இருஞ்சுனை நீர் ஆடு - பெரும் சுனை நீரில் நீராடுவோம்


நம்மைப் பிணித்துக் கட்டிய பிறவியாகிய துன்பம் நீங்கும்படி, நாம் எல்லோரும் மகிழ்ச்சியுடன் ஆராவரம் செய்து கொண்டாடும், தூய்மையானவனும், புனிதமான தில்லைவெளியினில் இடக்கையில் நெருப்பை ஏந்தி களிப்புடன் நடனமிடும் கூத்தனும், ஆகாயத்தையும், பூமியையும், இன்னும் எல்லாவற்றையும், படைத்தும் காத்தும் ஒடுக்கியும் விளையாடுபவனும், ஆகிய சிவபெருமானே! உன் புகழையும், நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தையும் ஓதிக் கொண்டே, கைவளைகள் ஒலிக்கவும், நீண்ட மேகலைகள் சலசலக்கவும், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கூந்தலின் மேல் வண்டுகள் ரீங்காரம் செய்யவும், தாமரை மலர்கள் விளங்குகின்ற தடாகத்தில், நீரைத் துளைத்து விளையாடி, நம்மை அடியவர்களாக உடைய சிவபெருமானின் அழகிய திருவடிகளைப் போற்றி, பெரிய சுனை நீரில் நீராடுவோம்.


பொருளுக்கு நன்றி : Thiruppaavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி: கூகுளார்

Sunday, January 4, 2009

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 11




11.

மொய்யார் தடம் பொய்கை புக்கு, முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி,
ஐயா வழி அடியோம் வாழ்ந்தோம் காண், ஆரழல்போல்
செய்யா, வெண்ணீறாடீ, செல்வா, சிறு மருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா,
ஐயா நீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்,
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்,
எய்யாமற் காப்பாய் எமை, ஏலோர் எம்பாவாய்.


ஐயா - ஐயனே

ஆர் அழல் போல் செய்யா - இடக்கையில் பொருந்திய தீயைப் போல் சிவந்த மேனியனே!

வெண்நீறு ஆடி - வெண்மையான சாம்பலைப் பூசியவனே!

செல்வா - எல்லாச் செல்வமும் பெற்றவனே!

சிறுமருங்குல் - சிறிய இடையினையும்

மை ஆர் தடம் காண் மடந்தை மணவாளா - மை தீட்டிய விசாலமான கண்களையும் உடைய உமாதேவியின் கணவனே!

மொய் ஆர் - வண்டுகள் ரீங்காரம் செய்கின்ற

தடம் பொய்கை புக்கு - அகன்ற தடாகத்தில் மூழ்கி

முகேர் என்ன - கையால் முகேர் முகேர் என்று தட்டி

குடைந்து குடைந்து - நன்றாக திளைத்து

உன் கழல் பாடி - உன் வீரக்கழல் அணிந்த திருவடிகளைப் பாடி

வழி அடியோம் - வழிவழியாய் அடியவர்களாய் வாழ்ந்து வந்தோம்

ஐயா நீ - தலைவனாகிய நீ

ஆட்கொண்டு அருளும் - பக்தர்களை உன்னருகில் ஈர்த்து அடிமைப்படுத்தி அருளும்

விளையாட்டின் - தீராத விளையாட்டை

உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் - பின்பற்றீ, உன்னை வந்து அடையும் தொண்டர்கள் வழிபட்டு உய்யும் எல்லா வழிகளையும் அனுசரித்து

உய்ந்து ஒழிந்தோம் - உன்னை நாடி வந்தோம்

எமை எய்யாமல் காப்பாய் - எங்களைக் கைவிடாமல் காப்பாயாக!


[செய்யா - சிவந்த மேனியனே; மருங்குல் - இடை; எய்யாமல் - கைவிடாமல்]

ஐயனே! இடக்கையில் ஏந்திய நெருப்பைப் போல் சிவந்த மேனியை உடையவனே! வெண்சாம்பலைப் பூசியவனே! எல்லாச் செல்வங்களுக்கும் அதிபதியே! சிறிய இடையினையும், மை தீட்டிய அகன்ற கண்களையும் உடைய உமாதேவியின் கணவனே! வண்டுகள் ரீங்காரம் செய்கின்ற பொய்கையில் மூழ்கி, கையால் நீரை 'முகேர்' எனத் தட்டி, நன்றாகத் திளைத்து நீராடி, உன் வீரக் கழல் அணிந்த திருவடிகளைப் பாடி, பரம்பரை பரம்பரையாக உன்னுடைய அடியவர்களாக வாழ்ந்து வந்தோம். எங்கள் தலைவனாகிய நீ, பக்தர்களைத் தம்மிடம் ஈர்த்து அடிமைப் படுத்திக் கொள்ளும் விளையாட்டை பின்பற்றி, உன்னை வந்தடையும் தொண்டர்கள் வழிபட்டு உய்யும் எல்லா வகைகளையும் கண்டறிந்து, உன்னை நாடி வந்தோம். எங்களை கைவிட்டு விடாமல் ஏற்றுக் கொள்வாயாக!


பொருளுக்கு நன்றி: Thiruppaavai and Thiruvempaaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி: shaivam.org

Saturday, January 3, 2009

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 10




10.


பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்,
போதார் புனை முடியும் எல்லாப் பொருள் முடிவே,
பேதை ஒரு பால், திருமேனி ஒன்று அல்லன்,
வேத முதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒரு தோழன், தொண்டர் உளன்,
கோதில் குலத்து அரன்தன் கோயிற் பிணாப் பிள்ளைகாள்,
ஏது அவன் ஊர், ஏது அவன் பேர், ஆர் உற்றார் ஆர் அயலார்,
ஏது அவனைப் பாடும் பரிசு, ஏலோர் எம்பாவாய்.



அரன்தன் கோயில் - சிவபெருமானின் திருக்கோயிலில் விளங்கும்

கோது இல் குலத்து - குற்றமில்லா குலத்தைச் சேர்ந்த

பிணாப் பிள்ளைகாள் - பணி புரியும் பெண்களே!

பாதமலர் - நம்பெருமானின் திருவடித் தாமரை

பாதாளம் ஏழினும் கீழ் - கீழ் உலகம் ஏழு என்று சொல்லும் ஏழ் உலகங்களுக்கும் கீழே

சொற்கழிவு - சொல்லைக் கடந்தது

போது ஆர் புனை முடியும் - மலர் அணிந்த திருமுடியும்

எல்லாப் பொருள் முடிவே - எல்லாப் பொருள்களுக்கும் முடிவாய் உள்ளது

பேதை ஒரு பால் - உடலில் உமையம்மை ஒரு பாதியாய் விளங்குகிறாள்

திருமேனி ஒன்று அல்லன் - அவன் திருவுருவங்கள் பலப்பல

வேத முதல் - வேதங்களின் முதலாக விளங்கும் "ஓம்" எனும் பிரணவ மந்திரமும்

விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் - தேவர்களும், மனிதர்களும், புகழ்ந்தாலும்

ஓத உலவா - புகழ அளவு கடந்த

ஒரு தோழன் - ஒப்பற்ற உயிர்த் துணைவன்

தொண்டர் உளன் - அடியவர்களின் உள்ளத்தில் இருப்பவன்

ஏது அவன் ஊர் - அவர் உறையும் ஊர் எது?

ஏது அவன் பேர் - அவர் பெயர் என்ன?

ஆர் உற்றார் ஆர் அயலார் - உறவினர் யார்? அன்னியர் யார்?

ஏது அவனைப் பாடும் பரிசு - அப்பெருமானைப் புகழ்ந்து பாடும் தன்மைதான் எது?


[சொற்கழிவு - சொல்லைக் கடந்தது; ஓதுதல் - பேசுதல்; உலவா=வற்றாத, முடியாத; பிணா=பெண்]


(பாடிக் கொண்டு போகும் பெண்கள் வழியில் திருக் கோயிலில் பணி செய்யும் பெண்களைக் கண்டு இறைவனது உண்மை இயல்பினை ஆராய்வாராய், அவர்களை கேட்கிறார்கள்)

சிவபெருமானின் திருக்கோயிலில் விளங்கும் குற்றமில்லா பணிப் பெண்களே! நம்பெருமானின் திருவடித் தாமரையானது ஏழு உலகங்களுக்கும் கீழே இருக்கிறது. சொல்லையும் அறிவையும் கடந்தது. அதே போல் மலர் அணிந்த திருமுடியும் எல்லாப் பொருள்களுக்கும் முடிவாக உள்ளது. உமையம்மை அவன் உடலில் ஒரு பாதியாய் விளங்குகிறாள். அவனுடைய திருவுருவங்களோ பலப்பல. வேதங்களுக்கு முதன்மையாக விளங்கும் "ஓம்" என்ற பிரணவ மந்திரமும், தேவர்களும், மனிதர்களும், யாவரும் துதித்தாலும், புகழ இயலாத ஒப்பற்ற உயிர்த் துணைவன்; அடியவர்களின் உள்ளத்தில் இருப்பவன். அவனது ஊர் எது? பெயர் எது? உறவினர் யார்? அன்னியர் யார்? நம்பெருமானை நாம் புகழ்ந்து பாடும் முறைதான் யாது?

"பாதாளம் ஏழினும் கீழ்" பொருள் எனக்கு சரியா புரியலை. தெரிஞ்சவங்க சொல்லும்படி கேட்டுக்கறேன்!


பொருளுக்கு நன்றி : Thiruppavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி :
http://www.bordercrossings.org.uk/shivaparvathi.jpg


Friday, January 2, 2009

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 9




9.

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே,
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே,
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்,
உன்னடியார் தாள் பணிவோம், ஆங்கவர்க்கே பாங்காவோம்,
அன்னவரே எம் கணவர் ஆவார், அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்,
இன்ன வகையே எமக்கு எங்கோன் நல்குதியேல்,
என்ன குறையும் இலோம், ஏலோர் எம்பாவாய்.



முன்னைப் பழம்பொருட்கும் - பழமையான பொருட்கள் எல்லாவற்றினும்

முன்னைப் பழம்பொருளே - மேலும் மிகப் பழமையான பொருள் ஆனவனே!

பின்னைப் புதுமைக்கும் - பின்னர் தோன்றிய எல்லா புதுமையான பொருள்களுள்ளும்

பேர்த்தும் அப் பெற்றியனே - மேலும் புதுமையானவனே!

உன்னைப் பிரானாகப் பெற்ற - உன்னை ஆண்டவனாகக் கிடைக்கப் பெற்ற

உன் சீரடியோம் - பெருமை வாய்ந்த அடியார்களான நாங்கள்

உன்னடியார் தாள் பணிவோம் - உன் தொண்டர்களுடைய திருவடிகளை வணங்குவோம்

ஆங்கு அவர்க்கே பாங்காவோம் - அப்படியே அவர்களுக்கு உரிமை உடையவர்களாவோம்

அன்னவரே - அந்தத் தகுதி வாய்ந்த அடியார்களே

எம் கணவர் ஆவார் - எங்களுக்கு நாயகர்கள் ஆவார்கள்

அவர் உகந்து சொன்ன பரிசே - அவர்கள் விரும்பிக் கட்டளைஇட்ட படியே

தொழும்பாய்ப் பணிசெய்வோம் - அடிமைகள் போல பணி செய்து வாழ்வோம்

இன்ன வகையே - இப்படி நாங்கள் விரும்பியபடியே

எங்கோன் - எங்களுக்குத் தலைவனான அரசனே!

எமக்கு நல்குதியேல் - எங்களுக்கு அருள்வாயானால்

என்ன குறையும் இலோம் - ஒரு குறையும் இல்லாதவர்களாவோம்

[பேர்த்து - மறுபடியும், again; பெற்றி - தன்மை; தொழும்பாய் - அடிமைகள் போல்]

உலகில் உள்ள பழமையான பொருட்கள் எல்லாவற்றினும் மேலும் பழமையானவனே! பின்னர் தோன்றிய எல்லா புதுமையான பொருள்களைக் காட்டிலும் மேலும் புதுமையானவனே! உன்னை ஆண்டவனாய்க் கிடைக்கப் பெற்ற, பெருமை வாய்ந்த உன் அடியார்களாகிய நாங்கள், உன்னுடைய தொண்டர்களை வணங்குவோம். அப்படியே அவர்களுக்கே உரிமையானவர்கள் ஆவோம். அப்படிப்பட்ட தகுதி வாய்ந்த அடியார்களே எங்களுக்கு நாயகர்கள் ஆவார்கள். அவர்கள் கட்டளை இட்டபடியே உனக்கு அடிமைகள் போலத் தொண்டு செய்து வாழ்வோம். எங்கள் தலைவனான அரசனே! இப்படி நாங்கள் விரும்பியபடியே எங்களுக்கு அருள் செய்வாயானால், நாங்கள் ஒரு குறையும் இல்லாதவர்கள் ஆவோம்.


பொருளுக்கு நன்றி: Thiruppaavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி: shaivam.org

Thursday, January 1, 2009

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 8



8.


கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்,
ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கு எங்கும்,
கேழில் பரஞ்சோதி, கேழில் பரங்கருணை,
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ,
வாழி ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்,
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ,
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை,
ஏழை பங்காளனையே பாடு, ஏலோர் எம்பாவாய்.



கோழி சிலம்ப - சேவல் கூவவும்,

சிலம்பும் குருகெங்கும் - நாற்புறங்களிலும் சிறு பறவைகள் ஒலிக்கின்றன

ஏழில் இயம்ப - ஏழுதுளைகள் உள்ள குழல் ஒலிக்கவும்

வெண் சங்கு எங்கும் இயம்பும் - வெண்மையான சங்குகள் எங்கும் முழங்குகின்றன

கேழ் இல் பரம்சோதி - ஒப்பற்ற மேலான ஒளி வடிவாய் நின்றவனும்

கேழில் பரம் கருணை - ஒப்பில்லாத கருணை உடையவனும்

கேழ் இல் விழுப்பொருள்கள் பாடினோம் - இணையற்ற மேலான புகழை நாம் பாடினோம்

கேட்டிலையோ? - கேட்கவில்லையா?

வாழி - வாழ்க!

ஈது என்ன உறக்கமோ? - அப்படி என்னதான் உறக்கமோ?

வாய் திறவாய் - ஒரு வார்த்தையேனும் பேச மாட்டாயா?

ஆழியான் - எத்திசையிலும் தன் ஆணையைச் செலுத்தக் கூடிய இறைவனிடத்து

அன்பு உடைமை - நீ காட்டும் அன்பின் திறம்

ஆமாறும் அவ்வாறோ - இருக்கும் விதமும் இப்படிப் பட்டதுதானோ?

ஊழிமுதல்வனாய் நின்ற ஒருவனை - ஊழிக் காலத்தின் இறுதியில் தான் ஒருவனாய் நிற்கும் ஒப்பற்றவனான சிவபெருமானை

ஏழை பங்காளனை - உமாதேவியை தன் இடப் பாகத்தில் உடையவனை

பாடு - எழுந்து வந்து பாடுவாயாக!


[சிலம்ப - ஒலிக்க; குருகு - சிறு பறவைகள்; கேழ் - ஈடு, இணை, ஒப்பு, சமானம்; ஏழை - உமாதேவி]

சேவல் கூவுகிறது. சிறு பறவைகள் நாற்திசைகளிலும் சத்தமிடுகின்றன. குழல் ஒலிக்கிறது. வெண்சங்குகள் எங்கும் முழங்குகின்றன. ஒப்பற்ற, ஒளி வடிவாய் நின்றவனும், இணையேதும் இல்லா கருணை உடையவனும், ஆன பெருமானுடைய ஈடில்லாத புகழை நாங்கள் பாடினோம். பெண்ணே, உனக்குக் கேட்கவில்லையா? வாழ்க! இதென்ன உறக்கமோ! எழுந்து வராவிடினும் ஒரு சொல்லாவது பேச மாட்டாயா? திசைகளெங்கும் தன் ஆணையைச் செலுத்தக் கூடிய இறைவனிடத்தில் நீ காட்டும் அன்பின் திறம் இவ்வளவுதானா? ஊழிக் காலத்தில் அனைத்தும் அழிந்த போதிலும், தான் அழியாமல் நிற்பவனாகிய சிவபெருமானை, உமாதேவியை இடப்பாகத்தில் கொண்டவனை, பாடுவதற்காக நீயும் எழுந்து வருவாயாக!


இந்தப் பாடலுக்கு கேஆரெஸ் எழுதிய விளக்கம் இங்கே.


பொருளுக்கு நன்றி: Thiruppaavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி: shaivam.org