Sunday, January 25, 2009

99. நாளைத் தரணியில் இந்தியர் நாம்...

அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள். வந்தேமாதரம்!

கும்மியடி பெண்ணே கும்மியடி
தமிழ்நாடு முழுவதும்
குலுங்கிடக் கைகொட்டி கும்மியடி!
நாளைத் தரணியில்
நானிலம் போற்றிட
நாங்கள் வாழ்வோமென்று கும்மியடி!

உண்ண உணவின்றி
உடுத்த உடையின்றி
வருந்துவோர்
எவரும் இருக்க மாட்டார்
நோயற்ற வாழ்க்கையை
குறைவற்ற செல்வமாய்
அடைந்து மகிழ்வோமென கும்மியடி!

அன்பு பெருகிடும்
பண்பு உயர்ந்திடும்
தீதொன்று பிறர்க்கு
நினைக்க மாட்டோம்
மக்கள்தம் சேவையே
மகேசன் சேவையாய்
எண்ணி மகிழ்வோமென கும்மியடி!

சந்திரனைக் காட்டி
சோறூட்டும் பிள்ளைக்கு
சந்திரனில் சென்று
சோறூட்டுவோம்
சூரியன் போலவே
ஒளிர்ந்திடுவோம் அறிவில்
சுற்றுப்புறத்தையும் காத்திடுவோம்!

இயற்கை அன்னையை
மதித்திடுவோம் நாங்கள்
காடுகள் மரங்கள்
அழிக்க மாட்டோம்
வனவிலங்கினத்தை
வேட்டையாடாமலே
விவேகமாகவே பராமரிப்போம்!

கும்மியடி பெண்ணே கும்மியடி
தமிழ்நாடு முழுவதும்
குலுங்கிடக் கைகொட்டி கும்மியடி
நாளைத் தரணியில்
நானிலம் போற்றிட
நாங்கள் வாழ்வோமென கும்மியடி!

--கவிநயா

24 comments:

 1. //உண்ண உணவின்றி
  உடுத்த உடையின்றி
  வருந்துவோர்
  எவரும் இருக்க மாட்டார்
  நோயற்ற வாழ்க்கையை
  குறைவற்ற செல்வமாய்//

  அத்தியாவசியம்

  //அன்பு பெருகிடும்
  பண்பு உயர்ந்திடும்
  தீதொன்று பிறர்க்கு
  நினைக்க மாட்டோம்
  மக்கள்தம் சேவையே
  மகேசன் சேவையாய்//

  அவசியம்

  //சுற்றுப்புறத்தையும் காத்திடுவோம்!

  இயற்கை அன்னையை
  மதித்திடுவோம் //

  கட்டாயம்

  //நாளைத் தரணியில்
  நானிலம் போற்றிட
  நாங்கள் வாழ்வோமென//

  அற்புதம்.

  கும்மிப் பாட்டு வெகு அருமை.

  குடியரசு தின வாழ்த்துக்கள் கவிநயா!

  ReplyDelete
 2. கவி, உங்க ஆசைகள் நிறைவேறட்டும்!
  அடுத்து 100 ஆவது பதிவா? சிறப்பா ஏதும் இருக்கும்ன்னு எதிர்பாக்கிறேன்! :-)

  ReplyDelete
 3. \\உண்ண உணவின்றி
  உடுத்த உடையின்றி
  வருந்துவோர்
  எவரும் இருக்க மாட்டார்
  நோயற்ற வாழ்க்கையை
  குறைவற்ற செல்வமாய்
  அடைந்து மகிழ்வோமென கும்மியடி!\\

  கும்மியடி ...

  ReplyDelete
 4. 100 ஆவது பதிவு நலவாய் அமைய வாழ்த்துக்கள் ...

  ReplyDelete
 5. முதல் வரியைப் பார்த்து விட்டு பாரதியார் பாடலோ என்று நினைத்தேன், காலத்திற்க்கு ஏற்ற அருமையான கவிதை.

  100வது பதிவுக்கு நல்வாழ்த்துக்கள் கவிநயா.

  ReplyDelete
 6. நூறாவது பதிவுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள். நானும் கவனித்துக் கொண்டுதான் வந்தேன். திவா முந்திக் கொண்டார்:)!

  ReplyDelete
 7. அருமையா கும்மியடிக்கிறீங்க அக்கா. உங்களுக்கு இனி மேல் ஒரு புதிய பெயர் வழங்கப்படும் - கும்மிப்பதிவர் கவிநயா அக்கா. :-)

  பாரதியார் பாட்டைப் படிச்ச மாதிரி இருக்கு. குடியரசு நாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. கவிநயா வணக்கம், குடியரசு தின நல்வாழ்த்துக்கள். கும்மிப் பாட்டு நன்று.

  வேலைகள் பல இருப்பதால் பதிவுகள் இடுவதும், பின்னூட்டம் இடுவதும், முன் போல முடியவில்லை.

  //என் போன்ற விஷ்ணு பக்தர்களுக்கு கொஞ்சம் நெருடலான பாடல். :( //
  என்று பின்னூட்டம் இட்டுவிட்டு அதற்கு அடுத்த திருவெம்பாவை முதல் பின்னூட்டம் இட முடியாமல் போனது மனதுக்கு கொஞ்சம் உறுத்தலாக இருந்தது. அதனால் ஒரு சிறு தன்னிலை விளக்கம்.

  ஸ்ரீமந் நாராயணீயத்தில் நாராயண பட்டத்ரி, விஷ்ணுவை உயர்த்தியும் சிவனாரை தாழ்த்தியும் சொல்வார்.
  அதை படிக்கும் பொழுதும்- "இந்த பாடல்கள் எல்லாம் சிவ பக்தர்களுக்கு கொஞ்சம் நெருடலாக இருக்கும்" என்று நினைத்தேன். அந்த பின்னூட்டமும் இதே அர்த்தத்தில் தான் சொன்னேன்.

  ஒரு காலத்தில் எப்பொழுதுமே இசைஞானி இளையராஜாவின் திருவாசகத்தை பாடி பாடி சிவபக்தியில் திளைத்துக் கொண்டிருந்தேன். சிவனார் எனக்கு பல முறை கனவில் காட்சி தந்தருளினார். பிறகு ஆஞ்சநேயர் தொடர்ந்து என் கனவில் தோன்றி என்னை ராம பக்தனாய் மாற்றிவிட்டார்.

  ஆட்டுவித்தால் யாரொவர் ஆடாதாரே கண்ணா!? :)

  ReplyDelete
 9. நீங்க பின்னூட்டியிருக்கும் விதத்தை ரொம்ப ரசிச்சேன் ராமலக்ஷ்மி :) மிக்க நன்றி. வாழ்த்துக்கும் சேர்த்து. (திவாவை மன்னிச்சிரலாம் :)

  ReplyDelete
 10. வாங்க திவா.

  //கவி, உங்க ஆசைகள் நிறைவேறட்டும்!//

  மிக்க நன்றி :)

  //அடுத்து 100 ஆவது பதிவா? சிறப்பா ஏதும் இருக்கும்ன்னு எதிர்பாக்கிறேன்! :-)//

  எதிர்பார்ப்புகள் அதிகமா இல்லாம இருந்தா ஏமாற்றங்களும் இல்லாம இருக்கும் :)

  ReplyDelete
 11. வாங்க ஜமால். வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி :)

  ReplyDelete
 12. வாங்க கைலாஷி. பாரதியின் பாடலை 'மாடலா' வச்சு எழுதினதுதான் :) வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  ReplyDelete
 13. அடடா, இந்தப் பாடலை இடும்போது கும்மிக்கு இப்படி ஒரு பொருள் இருக்கதை மறந்துட்டேனே! புதுப் பெயருக்கு நன்றி குமரா :)

  ReplyDelete
 14. வாங்க ரமேஷ். உறுத்தல் தேவையில்லை :) வேலையா இருப்பீங்கன்னுதான் நினைச்சேன்.

  //சிவனார் எனக்கு பல முறை கனவில் காட்சி தந்தருளினார். பிறகு ஆஞ்சநேயர் தொடர்ந்து என் கனவில் தோன்றி என்னை ராம பக்தனாய் மாற்றிவிட்டார்.//

  அடுத்த முறை இப்படி யாராச்சும் வந்தா, இந்தப் பக்கம் கொஞ்சம் அனுப்பி வைங்க! :)

  ReplyDelete
 15. http://www.youtube.com/watch?v=RRzlXfuS5Ks

  listen here. owing to a audio noise bug, i am not able to upload more than 45 to 50 seconds.

  subbu thatha

  stamford, CT 06902

  ReplyDelete
 16. காடுகள் மரங்கள்
  அழிக்க மாட்டோம்
  வனவிலங்கினத்தை
  வேட்டையாடாமலே
  விவேகமாகவே பராமரிப்போம்!


  100வது பதிவுக்கு நல்வாழ்த்துக்கள் கவிநயா.

  தேவா...

  ReplyDelete
 17. வாங்க சுப்பு தாத்தா. இன்றைக்குதான் கேட்க முடிஞ்சது. மிக்க நன்றி. முழு பாடலும் கேட்க முடியலைன்னு சின்ன வருத்தம். திரும்ப முயற்சித்து பார்த்தீங்களா?

  ReplyDelete
 18. //100வது பதிவுக்கு நல்வாழ்த்துக்கள் கவிநயா.

  தேவா...//

  வாங்க தேவா. முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி :)

  ReplyDelete
 19. லேட்டா வந்தாலும், கும்மியை ரசித்தேன்.. :-)

  100க்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. வாங்க மௌலி. ரொம்ப நாள் கழிச்சு பாக்கிறேன். வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி :)

  ReplyDelete
 21. //எதிர்பார்ப்புகள் அதிகமா இல்லாம இருந்தா ஏமாற்றங்களும் இல்லாம இருக்கும் :)//
  இன்னிக்குத்தான் பாக்கிறேன்.
  நல்ல மாணவிதான்!
  :-))

  ReplyDelete
 22. //நல்ல மாணவிதான்!//

  ரொம்ப தாங்க்ஸ் வாத்யாரே! :)

  ReplyDelete
 23. //அடுத்த முறை இப்படி யாராச்சும் வந்தா, இந்தப் பக்கம் கொஞ்சம் அனுப்பி வைங்க! //

  அவங்கள பார்க்கணும்னு நிஜமாவே ஆசை இருந்தா ஜபம், தியானம், விரதம், பிரார்த்தனை இது நாளையும் சிரத்தையா முயற்சி செய்து பாருங்க.

  ReplyDelete
 24. //அவங்கள பார்க்கணும்னு நிஜமாவே ஆசை இருந்தா ஜபம், தியானம், விரதம், பிரார்த்தனை இது நாளையும் சிரத்தையா முயற்சி செய்து பாருங்க.//

  நன்றி ரமேஷ் :)

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)