எல்லாருக்கும் ஏதாவது ஒரு ‘மயக்கம்’ இருக்கும்தானே? அதாங்க…passion, அப்படின்னு சொல்றது…
என்னோட மயக்கங்கள் … எழுத்தும், நடனமும்தான்…
நடனத்தை விட எழுத்து ஒரு படி மேல்; ஏன்னா எப்ப வேணுமானாலும் எழுதலாமே!
எழுத்து எனக்கு ஒரு அந்தரங்கத் தோழி மாதிரி. அந்தக் காலத்தில் கடிதம் எழுதற பழக்கம் இருந்தப்போ, நீ…ள நீ…ள…மா கடிதங்கள் எழுதுவேன். பெற்றோருக்கு, தங்கைகளுக்கு, தோழிகளுக்கெல்லாம்… அதுக்கப்புறம் கடவுளுக்கும் நிறைய எழுதி இருக்கேன். திட்டி… திட்டிதான்!
யார் மேலயாவது ரொம்ப கோவமோ வருத்தமோ இருந்தா, அதைப் பற்றி மனசில் உள்ளதெல்லாம் கொட்டி எழுதிட்டு, பிறகு கிழிச்சுப் போட்டுருவேன்; மனசு அமைதியாயிடும். ஆனா அதெல்லாம் ச்சின்ன வயசில்… இப்ப அப்படில்லாம் அபரிமிதமா யார் மேலயும் வருத்தமோ கோவமோ வரதில்லை. அப்படியே தப்பித் தவறி வந்தாலும் நிலைக்காது. கொஞ்ச நேரத்தில் காணாம போயிடும். *touchwood*
சமயத்தில் தோணும், சே, யாரும் அவ்வளவா படிக்கிற மாதிரி கூட இல்லை (ராமலக்ஷ்மியைத் தவிர! – ஹி..ஹி.. தவறா நினைக்காதீங்க, சில சமயம் பின்னூட்டங்களைப் பார்த்து அப்படித் தோணும் :) - எதுக்கு எழுதிக்கிட்டிருக்கோம், அப்படின்னு மனசு தளர்ந்த நேரங்கள் உண்டு… ஆனா எது எப்படி இருந்தாலும் என்னால் எழுதாம இருக்க முடியாதுன்னு தெரிஞ்சிக்கிட்டேன்; எழுதறது மற்றவங்களுக்காக மட்டும் இல்லை, எனக்காகவும்தான்னு புரியுது. அதனால வருத்தப்படறதில்லை, இப்போ.
இந்தச் சமயத்தில், இங்கே வருகை தந்து, பின்னூட்டம் இட்டோ, இடாமலேயோ வாசிப்பவர்கள் அனைவருக்கும் என்னுடைய மனப்பூர்வமான நன்றிகளைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கேன்.எழுதறவங்க எல்லார்கிட்டயுமே யாராச்சும் ஒருத்தராச்சும் இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பாங்க: “எப்படி உங்களால இப்படி எழுத முடியது?” அப்படின்னு. ஆனா என்கிட்ட அப்படிக் கேட்டவங்களை விட “எப்படி உங்களுக்கு நேரம் கிடைக்குது?” அப்படின்னு கேட்டவங்க அதிகம்! அப்படின்னா நான் எழுதறது அந்த அழகில் இருக்குன்னு அர்த்தமா… தெரியல… :)
என்கிட்ட இருக்கறது ஒரே பதில்தான். “மனம் இருந்தால் மார்க்கம் உண்டு”. எல்லாரும் ஏதோ ஒரு விஷயத்தில் இதை அனுபவிச்சிருப்போம். ஒரு விஷயம் ரொம்பப் பிடிச்சிருக்குன்னா, அதைச் செய்யறதுக்கு எப்படியாச்சும் நேரம் கண்டு பிடிச்சிருவோம். அப்படித்தான் நானும்.
முக்கால்வாசி நான் ‘எழுதறதெ’ல்லாம் கார் ஓட்டும்போது... சமையல் பண்ணும்போது... ஏதாவது தனிமை கிடைக்கும்போது... மனசில் ஓடிக்கிட்டிருக்கதுக்கெல்லாம் அப்பதான் ஏதாச்சும் உருவம் கிடைக்கும். அந்த மாதிரி வார்த்தைகள் வந்து விழற போதெல்லாம், எழுதறது ரொம்ப சுலபமா இருக்கே… யார் வேணுமானாலும் எழுதலாமே, ஏன் எழுத மாட்டேங்கிறாங்கன்னு தோணும்.
ஆனா சில சமயம் கரு கிடைச்சாலும், அதைப்பற்றி எழுதியே ஆகணும்கிற ஆசை ஏகத்துக்கு இருந்தாலும், அதுக்கு உருவே கிடைக்காது! அப்பல்லாம் ரொம்ப frustrating-ஆ இருக்கும். அப்பதான், அட, ஆமா… எழுதறது அப்படி ஒண்ணும் சுலபமில்லை, அப்படின்னும் நினைச்சுக்குவேன்!
கரு கிடைச்ச ஒருசில விஷயங்களுக்கு உரு கிடைக்க, சில சமயம் மாதக் கணக்கில் கூட ஆகியிருக்கு! அதனாலதான் எழுதறதை பிரசவத்துக்கு ஒப்பிடறாங்க போல!
மனசில் இருக்கறதை கணினியில் ஏற்ற முக்கால்வாசி இராத்திரியில்தான் நேரம் கிடைக்கும்.
ஒரு விஷயத்தைப் பற்றி எழுதணும்னா அதைப் பற்றி நிறைய சிந்திக்கணும். தியானம்கிறது அதுதான்… ஒரே விஷயத்தைச் சுற்றி எண்ணங்களை அமைச்சுக்கறது. ஆனா அதுவும் ‘கிட்டத்தட்ட’தான் நடக்கும். அப்பவும் திடீர்னு சம்பந்தமே இல்லாத கிளைக்குத் தாவிரும், மனசு.
கவிதை எழுதறதை விட கதை எழுதறது கஷ்டம், என்னைப் பொறுத்த வரை. ஏன்னா, கதைக்கு பல விஷயங்களையும், உண்மைகளையும், தகவல்களையும் சேகரிக்கணும். ரொம்ப யோசிக்கணும். சும்மா இஷ்டத்துக்கு ‘கதை’ விட முடியாது :) அப்படி விட்டா தர்க்க ரீதியா (logical-ஆ) அது எப்படி நடக்கும், இது எப்படி நடக்கும், அப்படின்னு கேள்விகள் வந்துரும். ஆரம்பமும், முடிவும், கச்சிதமா அமையணும்… அப்புறம்… திரும்பப் படிச்சுப் பார்த்து, செப்பனிடணும். அதற்கெல்லாம் நிறைய்ய்ய்ய நேரம் வேணும். அதனாலேயே, பல முறை நல்ல கருக்கள் தோணியும் எழுதாமலேயே விட்டிருக்கேன்…
என் எழுத்துப் பயணம் பற்றி ஏற்கனவே
இங்கே நிறைய சொல்லிட்டேன். கவிதைதான் முதலில் எழுத ஆரம்பிச்சேன்… பிறகு கவிதை, கதை, கட்டுரை, இப்படி ஒவ்வொரு வடிவமா எழுதிப் பார்த்தாச்சு. வயசு ஏற ஏற, மன நிலையும் மனப்போக்கும் மாற மாற, எழுதும் பொருளும், எழுதும் விதமும், வடிவமும் கூட மாறிக்கிட்டே இருக்கு… இதை என் அனுபவத்திலேயே நிதர்சனமா உணர்ந்துகிட்டு வரேன்.
சமீபமா இந்த வலைப்பூவை வாசிக்க ஆரம்பிச்சவங்க, நேரம் கிடைக்கையில் சில பழைய கவிதை, கதைகளையும் வாசிச்சுப் பாருங்க… உதாரணத்துக்கு சில:
கவிதைகள்:
காணவில்லை,
கைப்பைக் கனவுகள்கதைகள்:
இடுக்கண் வருங்கால்…,
சிறகு முளைத்த சின்னப்பூ,
காணாமல் போனவர்கள்,
சுண்டக்காயும் சுண்டைக்காய், …
குறுந்தொடர்:
கண்ணனுக்குத் தந்த உள்ளம்யார் கண்டா, உங்களுக்குப் பிடிச்சாலும் பிடிக்கலாம் :)
அது சரி என்னமோ எல்லாம் நீயே பண்ற மாதிரி ஒரேயடியா பீத்திக்கிறியே, அப்படின்னு உள்ள இருந்து ஒரு குரல் என்னைக் குட்டுது… சரிதானே…
“Thou workest thine own work; men only call it their own.” என்பது எனக்குப் பிடிச்ச வாசகம். “நாமெல்லாம் இயந்திரங்கள், நம்மை இயக்கும் ரிமோட் கண்ட்ரோல் இறைவனிடம் இருக்கிறது” என்பார், ஸ்ரீராமகிருஷ்ணர். “ஆட்டி வைத்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா” என்றார் கண்ணதாசன். அதனால் உங்களையும் என்னையும் ஆட்டி வைக்கிற, எழுத வைக்கிற, வாசிக்க வைக்கிற, என் அன்னை பராசக்திக்கு அனந்தகோடி வணக்கங்கள்.
அதெல்லாம் இருக்கட்டும்… இப்போ இந்த பதிவை வாசிச்சீங்களா இல்லையான்னு பார்க்க உங்களுக்கு ஒரு பரீட்சை!உங்களையும் நிச்சயம் யாராச்சும் கேட்டிருப்பாங்க. “எப்படி இப்படில்லாம் எழுத முடியுது உங்களால?” அப்படின்னு. இல்லைன்னா, நான் கேட்கிறேன்னே வச்சுக்கோங்களேன்.
எனக்கு நிறையப் பேரை அப்படிக் கேட்கணும்னு ஆசை. நகைச்சுவையா எழுதறவங்க, புதுக் கவிதைகள் எழுதறவங்க, சமூக அக்கறையோட எழுதறவங்க, உருக உருக கதை எழுதறவங்க, ஆன்மீகத்தைக் கரைச்சுக் குடிச்சு, அதைப் பற்றி அற்புதமா எழுதறவங்க, மனோதத்துவக் கட்டுரைகள் எழுதறவங்க, ஒரு ரசிகனாக இருந்து எழுதறவங்க, தமிழ் இலக்கியங்களை ரசனையுடன், பொருளுடன் எழுதறவங்க, இப்படி எவ்வளவு பேர்! இதில் நீங்க யாருன்னு உங்களுக்கே தெரியும். சில பேர் பின்னூட்டங்கள் கூட பிரமாதமா எழுதுவாங்க. நானு அதுல ரொம்ப வீக்!
நீங்க என்ன பண்றீங்க… அந்தக் கேள்விக்குப் பதிலை, உங்களுடைய எழுத்து அனுபவத்தை, ஒரு தொடர் பதிவா, வாசகர்களோட பகிர்ந்துக்கறீங்க! எழுத்துன்னு இல்லை, உங்களுடைய எந்த ‘மயக்க’த்தைப் பற்றியும் எழுதலாம். உதாரணமா புகைப்படக் கலையில் வெளுத்து வாங்கறவங்க நிறையப்பேர் இருக்கீங்க; படம் வரையறது, சமையல், இப்படி எதுவா இருந்தாலும், அதில் உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது, உங்க அனுபவங்கள் என்ன, அப்படின்னு எழுதலாம்.
யாரையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்த விரும்பலை. அதனால இந்தத்
தொடரின் விதிகள் ரொம்ப சுலபம். நீங்க யாரையும் குறிப்பிட்டு அழைக்க வேண்டாம். உங்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டும்:
உங்க அனுபவத்தை பதிவாக எழுதணும்.
தொடர் பதிவுன்னு குறிப்பிடணும்.
இந்தப் பதிவுடைய சுட்டி, அல்லது நீங்க யாருடைய பதிவின் காரணமாகத் தொடர ஆரம்பிக்கிறீங்களோ, அவங்களோட பதிவின் சுட்டிக்கு இணைப்பு குடுக்கணும்.
நீங்க தொடரக் காரணமாக இருந்தவரின் பின்னூட்டத்தில் உங்க பதிவைப் பற்றித் தெரியப்படுத்தணும்.
அம்புட்டுதான்.
இப்படி உங்க அனுபவங்களைப் பகிர்ந்துக்கிட்டா ரொம்ப சந்தோஷப் படுவேன்.
என் படைப்புகளை வாசிப்பவர்களுக்கு மீண்டும் ஒரு முறை மனமார்ந்த நன்றிகளுடன்…
இப்ப என்ன திடீர்னு, அப்படிங்கிறீங்களா? வேறொண்ணுமில்லை… இது 199-வது பதிவுங்க.
'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல்வேறொன்றும் அறியேன் பராபரமே' -தாயுமானவர்அன்புடன்
கவிநயா