Sunday, October 19, 2008

சிறகு முளைத்த சின்னப் பூமது அவசர அவசரமா துணிமணிய எடுத்து வச்சுக்கிட்டிருக்கா. பர்ஸ எடுத்து பாக்கிறா. அதுல பஸ் பாஸையும் ஒரு 50 ரூவாத் தாளையும் தவிர வேற ஒண்ணத்தயும் காணும். கன்னத்துல கைய வச்சுக்கிட்டு கட்டில்ல ‘தொப்’புன்னு ஒக்கார்றா.

“மது… மது… சாப்பிட வாடீ”, அம்மா கீழ இருந்து கொரல் குடுக்குறாங்க.

“இரும்மா.. தோ வரேன். இன்னொரு அர மணி நேரத்துல வரேன் இரு”, அம்மா கத்திக்கிட்டே இருப்பான்னு, ஒரு நேரம் சொல்லி வக்கிறா.

மண்டைக்குள்ள கசாமுசான்னு ஒரே எரைச்சல். என்னத்த பண்றதுன்னு அவளுக்கு ஒண்ணும் புரியல.

“ஸ்….ப்ஸ்…”

“ம்? …. “, சத்தங் குடுத்தது யாருன்னு சுத்தும் முத்தும் பாக்குறா.

யாரையும் காணல.

“ஏய் மது…”, இன்னும் கிசுகிசுப்பா ஆனா இப்ப அவ பேரச் சொல்லியில்ல யாரோ கூப்பிடறாங்க!

ஒண்ணும் புரியாம அவ ‘திருதிரு’ன்னு முழிக்கிறப்ப அவ காலுக்கு பக்கத்துல கெடந்த ஒரு பூ லேசா ஆடுறத பாக்குறா.

என்னடா இது அப்பிடின்னு குனிஞ்சு பாத்தா…,

“அப்பாடி… இப்பவாச்சும் ஒனக்கு என்னய பாக்கணும்னு தோணிச்சே. நாந்தான் கூப்புட்டேன்”, அப்பிடின்னு சொல்லுது அந்த பூ!

“இதென்னடா இது. எனக்கென்ன மூள கீள கொழம்பிருச்சா?” அப்பிடின்னு மதுவுக்கே சந்தேகம் வந்திருச்சு.

“ஒனக்கு மூளயெல்லாம் நல்லாதான் இருக்கு. நாந்தான் கூப்புட்டேன். கொஞ்ச நேரத்துல என் வாழ்க்க முடிஞ்சுரும். அதுக்குள்ள நான் சில விஷயம் யார்கிட்டயாச்சும் சொல்லணும். இங்க ஒன்ன விட்டா யாரும் இல்ல”, அந்த பூ ரொம்ப சோகமா சொல்லிச்சு.

அப்பதான் மது, அத ஒழுங்கா பாக்குறா. அது ஒரு அழகான செகப்பு ரோஜாப்பூ. ஆனா ரொம்ப வாடி வதங்கி போய் பாக்க பரிதாபமா இருக்கு.

“சரி சொல்லு…” சத்தமா சொல்லிட்டு அவளே சுத்து முத்தும் பாத்துக்கறா. அவளுக்கே வினோதமா இருக்கு போல. அப்புறம் கொரல தழச்சுக்கிட்டு, “சரி சொல்லு…” அப்படின்னு கிசுகிசுப்பா சொல்லுறா.

ரோஜாப்பூ ஒரு பெருமூச்சோட சொல்ல ஆரம்பிச்சது…

“நான் மொட்டு விட்டப்போ, என் அம்மா ரொம்ப சந்தோஷப் பட்டாங்க…” ன்னு ஆரம்பிக்கவும்.

“அம்மாவா?” அப்படின்னு குறுக்கிட்டா மது.

“ஆமா, நான் மொட்டு விட்ட செடிதான் எனக்கு அம்மா. இது கூட தெரியலயே ஒனக்கு?” ன்னு சொன்னது ரோஜாப்பூ. அதை ஒரு மொற மொறக்கிறா மது.

“சரி.. விடு. ஒங்கூட சண்ட போட எனக்கு தெம்பில்ல. என் அம்மா ரொம்ப சந்தோஷப் பட்டாங்களா… அப்புறம் நான் லேசா மலர ஆரம்பிச்சதும், அவ்ளோதான்… அவங்க சந்தோஷம் எல்லை மீறிடுச்சு. அதுலயும் நான் எல்லா மொட்டையும் விட குட்டியா இருந்ததால, என் அம்மா எப்பவும் என்னைய கவனமா பாத்துக்கிட்டாங்க. நான் அதிகமா வெளிய தெரியாம, என்னைய எலைக்குள்ளயும், மத்த கெள, பூக்களுக்குள்ளயும் இருக்க மாதிரி பாத்து பாத்து வச்சுக்குவாங்க…”

“அப்படி இருக்கும்போது.. நான் மலர ஆரம்பிச்ச ரெண்டாம்நாள் எனக்கு செறகு மொளச்சிருச்சு!”

எஃபெக்டுக்காக, அந்த ரோஜாப்பூ ஒரு நொடி நிறுத்திச்சு. இல்ல, மூச்சு விடத்தான் நிறுத்திச்சோ என்னமோ.

“ஏய்! என்ன கிண்டலா?” ங்கிறா மது.

அப்புறம் இந்த பூ கிட்ட நாம பேசிக்கிட்டிருக்கோமே – அது மட்டும் என்னவாம் அப்படின்னு ஒறைக்குது அவளுக்கு.

“கிண்டலா? கிண்டல் பண்ணவெல்லாம் எனக்கு நேரம் இல்ல மது…” அப்படின்னு அந்த பூ பாவமா சொன்னதும், ரொம்ப வருத்தமா போச்சு மதுவுக்கு.

அத எடுத்து மென்மையா உள்ளங்கைல வச்சுக்கிட்டு அன்போட பாக்கிறா…”ம்… அப்புறம் என்னாச்சு?” அப்படிங்கிறா.

“என் அம்மாவுக்கு கூடதான் நம்பவே முடியல. பூவுக்காவது செறகு மொளக்கிறதாவது, அப்பிடின்னு நம்பவே இல்ல, அவங்க. நானா லேசா பறந்து காண்பிக்கிற வரைக்கும். அப்புறம் அவங்களுக்கு ரொம்ப பயம் வந்துருச்சு. எங்க நான் பறந்து போயிருவனோன்னு. அவங்க பயமும் நியாயமானதுதான். பறக்கிறது எவ்வளவு சுகமான அனுபவம் தெரியுமா?”

அப்பிடியே கொஞ்ச நேரம் அந்த அனுபவத்துல மூழ்கினாப்ல மௌனமா இருந்தது ரோஜாப்பூ.

“ம்…பறக்கிறதுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். எந்த பிடிமானமும் இல்லாம சுதந்திரமா மெல்ல மெல்ல மேல எழும்பி பறக்கிற சுகம்… எதுலயுமே கெடக்காது. மேல போனப்புறம் கீழ இருக்கவங்கள அங்கேர்ந்து பார்க்கிற அனுபவம்…!”

அது சொல்லச் சொல்ல மதுவுக்கே பொறாமை ஆயிடுச்சு.

“சரி சரி… ரொம்ப அலட்டிக்காம சீக்கிரம் மேல சொல்லு” அப்பிடின்னு அவசரப்படுத்தறா.

“அதான் என் அம்மாவுக்கு பயம். நாம்பாட்டுக்கு எங்கயாச்சும் பறந்து தொலைஞ்சு போயிருவனோன்னு… நான் அம்மா சொல்றதயெல்லாம் கேக்கறதா இல்ல. இதோ கொஞ்ச நேரம்மா… இதோ கொஞ்ச தூரம்மா… இப்படி சொல்லி சொல்லி அந்த சுகத்த அனுபவிச்சேன். நான் பறந்து வரத பாத்து என்கிட்ட வர பட்டாம்பூச்சி, தேனீ எல்லாம், தான் பயந்து வெலகி போயிடும். அத பார்த்தா எனக்கு ஜாலியா இருக்கும். கை தட்டி சிரிப்பேன். என் அம்மா திட்டுவாங்க. இப்படி ஒன்ன தேடி வரவங்களையெல்லாம் வெரட்டறியே, கர்வம் கூடாதுன்னு…”

“ரொம்ப தூரம் போயிடாதே. காத்துல மாட்டிக்குவே. பட்டாம்பூச்சி செறக விட ஒன்னுது எளசா இருக்கு, தாங்க மாட்டேன்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. நான் தான் கேக்காம ஒரு நாள்…”

மறுபடி கொஞ்சம் மூச்சு விட நிறுத்திச்சு பூ.

“என்ன? என்ன ஆச்சு?” மதுவுக்கு ஆவல அடக்க முடியல.

“ஹ்ம்ம்… என்னத்த சொல்ல? ஒரு நாள் அதோ அங்க இருக்க மரத்த தொடப் போறேன் இன்னிக்குன்னு சொல்லிட்டு அம்மா சொல்ல சொல்ல கேக்காம பறந்தேன். கொஞ்சம் எழும்ப எழும்ப தைரியம் வந்து இன்னும் வேகமா பறக்க போனப்போ…”

“வேகமா ஒரு காத்து சொழட்டி அடிச்சது. அதுல நான் ஒண்ணுமே செய்ய முடியல. காத்தோட சேந்து போய் சுத்தியடிச்சு, கடைசீல கீழ விழுந்தேன். நான் சுதாரிக்கிறதுக்குள்ள இன்னொரு காத்து. மறுபடி இழுத்து பொரட்டி எங்கயோ போய் தள்ளி விட்டுச்சு. இப்படியே காத்துல அகப்பட்டு அகப்பட்டு, என் அம்மாவ விட்டு தொலை தூரம் வந்துட்டேன். உடம்பெல்லாம் காயப்பட்டு… சாகப் பொழக்கக் கெடந்துக்கிட்டு… இதோ ஒங்கூட பேசிக்கிட்டிருக்கேன்..” கண்ணீரை வரவைக்கிற மாதிரி உருக்கமான கொரல்ல சோகமா சொல்லி முடிச்சது ரோஜாப்பூ.

மதுவுக்கு ரோஜாப்பூ மேலதான் கோவம் கோவமா வருது.

“செறகு மொளச்ச தைரியத்துல அம்மா சொல்லை கேக்காம போனது ஒந்தப்புதானே?” அப்படின்னு மது திட்டறா அதை.

அப்புறம் அவளுக்கே பாவமா இருக்கு… எரக்கத்தோட கைல இருக்க ரோஜாப்பூவை பார்த்தா…

அதை காணும்!

“மது… மது… எவ்வளவு நேரமா கூப்புடறது ஒன்னய!”, கீழ இருந்து கேக்கற அம்மா கொரல்ல லேசா கோவம் தெரியுது.

மதுவுக்கு ஒண்ணும் புரியல. இவ்ளோ நேரம் கைல ஒக்காந்து பேசிக்கிட்டிருந்த பூ எங்கே, எப்பிடி மாயமா போச்சுது?! மறுபடி கொஞ்ச நேரம் ‘திருதிரு’ன்னு முழிச்சதுக்கப்புறம்தான் புரியுது அவளுக்கு - கட்டில்ல ஒக்கார்ந்தவ அப்பிடியே அசந்துட்டிருக்கான்னு.

மறுநாள் காலைல காலெஜ்ல கூடப் படிக்கிற ஜோசஃபோட சொல்லாம கொள்ளாம வீட்ட விட்டு போக எடுத்த முடிவு, ஏதோ கனவைப் போல நெனைவு வருது.

“செறகு மொளச்ச தைரியத்துல அம்மா சொல்லை கேக்காம போனது ஒந்தப்புதானே?” அவ சொன்ன வார்த்தைகள் அவளுக்கே மறுபடி கேக்குது…

செறகு மொளச்சிருச்சு, சரி… ஆனா பறக்கலாமா வேணாமான்னு இப்பதான் மொதல் மொறையா யோசிக்கிறா மது.


--கவிநயா

பி.கு. படத்துல இருக்க ரோஜா எங்க வீட்ல பூத்தது... என்னோட profile-ல இருக்கதும் அதான். அழகா இருக்குல்ல? :)

15 comments:

 1. மெல்லப் பேசிய சின்னப்பூ
  மெல்ல மெல்ல மதுவின்
  மனதில் மாற்றம் கொண்டு
  வந்தது அருமை.

  ஊட்டி வளர்த்த தாய்ப்பறவை தன் குஞ்சு தனனை விட்டு செல்லுகையில் தத்தக்கா புத்தக்கா எனப் பறந்து செல்வதையா விரும்பும். போக வேண்டிய சரியான திசை புரிந்து கம்பீரமாய்ப் புறப்பட்டுச் சென்றால்தானே பூரிக்கும்!

  சிறகு முளைத்ததுமே பறந்திடப் பரபரக்கும் பூக்கள் இனி யோசிக்கும்.

  வாழ்த்துக்கள் கவிநயா!

  ReplyDelete
 2. //அழகா இருக்குல்ல?//
  நல்லா அழகா இருக்குங்க!

  ReplyDelete
 3. வாங்க ராமலக்ஷ்மி.

  //போக வேண்டிய சரியான திசை புரிந்து கம்பீரமாய்ப் புறப்பட்டுச் சென்றால்தானே பூரிக்கும்!//

  சரியா சொன்னீங்க. மிக்க நன்றி :)

  ReplyDelete
 4. வாங்க ஜீவா. நன்றி ரோஜாவை ரசிச்சதுக்கு... ஆனா கதை படிக்கவே இல்லையா? :(

  குட்டிப் பிள்ளங்கள்ளாம் 1-ஆ, 2-ஆ, ன்னு கேட்டா, இரண்டாவதா எதை சொல்றோமோ அதைத்தான் தேர்ந்தெடுப்பாங்க. அது போல உங்களுக்கும் ஆயிடுச்சோ? :)

  ReplyDelete
 5. கதை அருமை. படமும் தான் :))

  ReplyDelete
 6. வாங்க சதங்கா. கருத்துக்கும் ரசனைக்கும் நன்றி :)

  ReplyDelete
 7. Let's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond.

  Let's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com

  ReplyDelete
 8. //“செறகு மொளச்ச தைரியத்துல அம்மா சொல்லை கேக்காம போனது ஒந்தப்புதானே?” அவ சொன்ன வார்த்தைகள் அவளுக்கே மறுபடி கேக்குது…

  செறகு மொளச்சிருச்சு, சரி… ஆனா பறக்கலாமா வேணாமான்னு இப்பதான் மொதல் மொறையா யோசிக்கிறா மது.//

  உருவகமா சொல்ற விஷயமும், அதையொட்டிய உரையாடல்களும் உன்னதம்.

  மதுவின் உளப்போராட்டம் தான்,
  ரோஜாவைப் பார்த்ததும், ரோஜா-தான் என்று கற்பனையான உரையாடலை மனத்தில் ஓடவிட்டிருக்கு.
  இந்த உரையாடலில் ரோஜாவின்- அதன் தாய்ச் செடியின் பங்கு மகத்தானது.
  நல்ல கருத்துக்களை நெஞ்சில் விதைக்கும் எழுத்துக்களுக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
 9. பிரம்மாதம் கவிநயா. பாராட்டுக்கள். ஆரம்பத்திலிருந்தே சுவாரஸ்யமாக இருந்தது, இறுதி அசத்தலாக இருந்தது. நீங்கள் நல்ல எழுத்தாளர். நிறைய எழுதுங்கள்.

  ReplyDelete
 10. வாங்க ஜீவி ஐயா. உங்க பாராட்டு கண்டு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் :)

  ReplyDelete
 11. வாங்க ரமேஷ். பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க; பயமா இருக்கு :) ரசித்தமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 12. பூவும் சூப்பர், கதைக்கருவும், வித்தியாசமா சொன்ன விதமும் சூப்பர் :))

  ReplyDelete
 13. வாங்க மௌலி. பூவையும் கதையையும் ரசித்தமைக்கு மிக்க நன்றி :)

  ReplyDelete
 14. மிக அழகான புனைவுக்கதை கவிநயா.
  ஒரு பூவை வைத்து பூவையை யோசிக்க வைத்திருக்கிறீர்கள். யதார்த்தமான வரிகள். பாராட்டுக்கள்.தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி. :)

  ReplyDelete
 15. வாங்க ரிஷான். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)