Monday, July 7, 2008

கைப்பைக் கனவுகள்...


அன்றொரு நாள்…

என் கனவுகளை மடித்துக்
கைப்பையில் வைத்திருந்தேன்…

மெலிதாய் ஒரு தென்றல் வந்து
முடி கலைத்துச் செல்கையிலே
காற்றின் மேல் காதல் கொண்டு
கலைந்து சென்ற தொரு கனவு...

கடற் கரையின் ஓரத்திலே
காத லரின் நேரத்திலே
நினை வலையின் வேகத்திலே
கரை ஒதுங்கிய தொரு கனவு...

வான வில்லின் வர்ணம் கண்டு
விண் வெளியில் ஆசை கொண்டு
தொடு வானம் தொட முயன்று
தொலைந்து விட்ட தொரு கனவு...

பறவை களைப் பார்த்து விட்டு
பறப்ப தற்குப் பயில எண்ணி
சிட்டுக் குருவிச் சிறகினிலே
சிக்கிக் கொண்ட தொரு கனவு...

கனவுகளை எல்லாமே
காணாமல் போக்கிய பின்
கைப்பையின் கட்டுக்குள்
இப்போது...

கசப்பான நிஜம் மட்டும்…


--கவிநயா

40 comments:

 1. ஆகா, கவித...கவித.

  ReplyDelete
 2. கரைந்து போகும் பணம் போல காற்றோடு காற்றாக அலையோடு அலையாக எனக் கலைந்து கரைந்து போயிற்றா கனவுகள்.. காலி கைப்பைக்குள் சுடும் நிஜமே மிச்சமாக..

  அருமையாக உணர வைத்திருக்கிறீர்கள் கசப்பான நிஜத்தை..

  ReplyDelete
 3. அழகான ஒரு கவிதை. கவிதையின் முடிவில் ஒரு அமைதி.

  ReplyDelete
 4. அன்பின் கவிநயா,

  கனவுகள் தொலைந்த கதையை அழகான கவிதையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  தொலைந்த கனவுகளைக் காலம் திரும்பவும் கொண்டுவரும்.
  யதார்த்தம் அதனையும் திரும்பத் தொலைத்தபடியேதான் இருக்கும்.

  நல்ல கருத்துள்ள கவிதை சகோதரி.
  தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 5. மிகவும் ரசிக்க வைத்த கவிதை.

  ReplyDelete
 6. I thoroughly enjoyed this poem.

  It is a sad fact that most of our dreams are lost somewhere along our life paths but I would like to believe that we can capture back some if not all of those precious dreams that drifted away from us, if we put our minds to it.

  May you find your lost dreams soon.

  PS: I am still having trouble typing in Tamil but hope to eventually figure that out. :-)

  -Meena

  ReplyDelete
 7. //ஆகா, கவித...கவித.//

  வருக கார்த்திக். முதல் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி.

  ReplyDelete
 8. //அருமையாக உணர வைத்திருக்கிறீர்கள் கசப்பான நிஜத்தை..//

  உங்கள் வழக்கமான ஊக்கத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி, ராமலக்ஷ்மி!

  ReplyDelete
 9. //அழகான ஒரு கவிதை. கவிதையின் முடிவில் ஒரு அமைதி.//

  நல்வரவு நர்மதா! உங்களுக்கும் முதல் வருகைன்னு நினைக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 10. //தொலைந்த கனவுகளைக் காலம் திரும்பவும் கொண்டுவரும். யதார்த்தம் அதனையும் திரும்பத் தொலைத்தபடியேதான் இருக்கும்.//

  உண்மை ரிஷான். நல்லா சொன்னீங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தம்பீ!

  ReplyDelete
 11. //மிகவும் ரசிக்க வைத்த கவிதை.//

  நன்றி சேவியர், முதல் வருகைக்கும் ரசித்ததற்கும்!

  ReplyDelete
 12. //I thoroughly enjoyed this poem.//

  வாங்க மீனா! ரொம்ப நாள் கழிச்சு உங்கள இந்தப் பக்கம் பார்த்ததுல ரொம்ப சந்தோஷம் :) கவிதை ரசிச்சதுக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்!

  ReplyDelete
 13. சோகமாய் இருப்பினும் ரசித்த கவிதை

  அனுஜன்யா

  ReplyDelete
 14. கரும்பென திதிக்குமிந்த
  கனவுப்பாடலை இயற்றியதும் அற்புதமே !
  Congratulations to Ms.Kavinaya.
  கானடா ராகத்தில் இசை நானமைத்தேன்.
  என் மருமகள் மனமுவந்து அதற்கு குரல் கொடுத்திட்டாள்.
  விரும்பிக்கேட்க‌
  வாருங்கள் இங்கே:

  http://menakasury.blogspot.com

  முதல் 30 வினாடிகள், இந்த ராகத்தின் பரிமாணங்கள்
  சாஸ்த்ரீய சங்கீத வித்தகர் நெய்வேலி சந்தான கோபால கிருஷணன்
  அடுத்த 60 வினாடிகள் வயலின் இசை யும் இந்த ராகத்தில்
  தொடர்ந்து இந்த பாடலைக் கேட்டு மகிழ்வீர்.

  சுப்பு ரத்தினம்.
  தஞ்சை.

  ReplyDelete
 15. /////மெலிதாய் ஒரு தென்றல் வந்து
  முடி கலைத்துச் செல்கையிலே
  காற்றின் மேல் காதல் கொண்டு
  கலைந்து சென்ற தொரு கனவு...

  கடற் கரையின் ஓரத்திலே
  காத லரின் நேரத்திலே
  நினை வலையின் வேகத்திலே
  கரை ஒதுங்கிய தொரு கனவு...

  வான வில்லின் வர்ணம் கண்டு
  விண் வெளியில் ஆசை கொண்டு
  தொடு வானம் தொட முயன்று
  தொலைந்து விட்ட தொரு கனவு...

  பறவை களைப் பார்த்து விட்டு
  பறப்ப தற்குப் பயில எண்ணி
  சிட்டுக் குருவிச் சிறகினிலே
  சிக்கிக் கொண்ட தொரு கனவு...//////

  கவிதை வரிகள் என்னை மெய்சிலிக்க வைக்கிறது. இறுதிவரிகளும் அருமை. மெய் எப்பொழுதுமே கசக்கத்தான் செய்யும். இருப்பினும் அம்மெய்யை ஏற்றுக்கொள்வதுதானே நன்மை.

  ReplyDelete
 16. அருமையான கவிதை, கவிநயா. தொலைந்து போன கவிதைகள்/கனவுகள் மீண்டும் கிடைக்க நமதனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. சுருக்குப் பையை நல்லா இருக்கிக் கட்டி வெச்சிருந்தா கனவுகள் காணாம போகுமா?

  ReplyDelete
 18. நல்ல அழகான அருமையான கவிதை!

  ReplyDelete
 19. கனவையெல்லாம் எதுக்கு பையில போட்டு வைக்குறீங்க. பதிவுல ஏத்திடுங்க. பத்திரமா இருக்கும் :))

  ReplyDelete
 20. கவிதை சூப்பர்... மேலே சொன்ன கமெண்டு சும்மா நக்கலுக்குத்தான். கோபித்துக்கொள்ளவேண்டாம் :)

  ReplyDelete
 21. //சோகமாய் இருப்பினும் ரசித்த கவிதை//

  நல்வரவு அனுஜன்யா! முதல் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி.

  ReplyDelete
 22. //கரும்பென திதிக்குமிந்த
  கனவுப்பாடலை இயற்றியதும் அற்புதமே !
  Congratulations to Ms.Kavinaya.
  கானடா ராகத்தில் இசை நானமைத்தேன்.
  என் மருமகள் மனமுவந்து அதற்கு குரல் கொடுத்திட்டாள்.//

  நன்றி ஐயா. மருமகளின் குரலில் கானடா ராகத்தில் மிக இனிமையாயிருந்தது கவிதை. மீண்டும் உங்கள் இருவருக்கும் நன்றிகள்!

  ReplyDelete
 23. //மெய் எப்பொழுதுமே கசக்கத்தான் செய்யும். இருப்பினும் அம்மெய்யை ஏற்றுக்கொள்வதுதானே நன்மை.//

  உண்மைதான் அகரம்.அமுதா. அந்தப் பக்குவம் வந்து விட்டால் எல்லாம் நன்றுதான் :)

  ReplyDelete
 24. //தொலைந்து போன கவிதைகள்/கனவுகள் மீண்டும் கிடைக்க நமதனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

  'நமதனைவருக்கும்' அப்படின்னு நல்லா சொன்னீங்க நாகு. இந்தப் பக்கம் எட்டிப் பார்த்ததுக்கு நன்றி!

  ReplyDelete
 25. //சுருக்குப் பையை நல்லா இருக்கிக் கட்டி வெச்சிருந்தா கனவுகள் காணாம போகுமா?//

  ஆமாங்க சிபி. அது தெரியாமத்தான் தொலச்சுட்டேன்.

  //நல்ல அழகான அருமையான கவிதை!//

  இது வேறயா? நன்றிங்க :)

  (உங்க புது படத்தைப் பார்த்து ஒரு நிமிஷம் பயந்துட்டேன் :)

  ReplyDelete
 26. //கனவையெல்லாம் எதுக்கு பையில போட்டு வைக்குறீங்க. பதிவுல ஏத்திடுங்க. பத்திரமா இருக்கும் :))//

  சரிதான். யோசனைக்கு நன்றிங்க!

  //கவிதை சூப்பர்... மேலே சொன்ன கமெண்டு சும்மா நக்கலுக்குத்தான். கோபித்துக்கொள்ளவேண்டாம் :)//

  இதுக்கெல்லாம் கோச்சுக்க மாட்டேங்க. தாரளாமா நக்கல், கிண்டல், கலாய்ச்சல், எல்லாம் பண்ணலாம் :)

  முதல் வருகைக்கும் கவிதை ரசிச்சதுக்கும் நன்றிங்க சென்ஷி!

  ReplyDelete
 27. கனவுகளை கட்டி வைக்க முயன்று அழகாக கவிதையிட்டது அருமை கவிநயா. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 28. //கனவுகளை கட்டி வைக்க முயன்று அழகாக கவிதையிட்டது அருமை கவிநயா.//

  நன்றிங்க சதங்கா!

  ReplyDelete
 29. இதெல்லாம் அப்படியே வர்றது தானில்லே:)

  ReplyDelete
 30. கட்டிவைத்த கனவுகளைக்
  கொட்டிவிட்ட வேகத்தில்
  காலியான கைப்பையுள்

  வேலையின்றித் தேடிநின்றால்
  காலைமுதல் மாலைவரை

  அடுக்கடுக்காய் இதுபோல
  மிடுக்கான கவிதைவரும்

  கலைந்துவிட்ட கனவுகளை
  நினைந்திங்கு வாடாமல்

  பொலிவாக நடைபோட்டால்
  எழிலான வாழ்வுவரும்!

  நிஜமெல்லாம் கசப்பல்ல
  புஜம்மடக்கி துணிந்துவிட்டால்

  இனிமையெல்லாம் கூடவரும்
  தனிமையிங்கே தொலைந்துவிடும்

  வானவில்லைக் காண்பதுவும்
  வண்ணங்களை ரசிப்பதற்கே

  அதைவிட்டு பறக்கநினைத்தால்
  கதையொன்றே எஞ்சிவிடும்

  வாழ்க்கையிங்கே வாழ்வதற்கே
  வாழ்ந்துவிடக் கனவொழியும்

  வாழ்த்துகள்!

  ReplyDelete
 31. ஆஹா V.S.K. ஐயா, தன்னம்பிக்கை மிகுந்த எளிய சொற்களில் அருமையான பின்னூட்டம்.

  ReplyDelete
 32. //கவிதை சூப்பர்... மேலே சொன்ன கமெண்டு சும்மா நக்கலுக்குத்தான். கோபித்துக்கொள்ளவேண்டாம் :)//

  என்ன இது! சின்னப் புள்ளைத் தனமா டிஸ்கியெல்லாம் போட்டுகிட்டு1

  நமக்கில்லாத உரிமையா கலாய்க்க!

  ReplyDelete
 33. //நிஜமெல்லாம் கசப்பல்ல
  புஜம்மடக்கி துணிந்துவிட்டால்//

  //வாழ்க்கையிங்கே வாழ்வதற்கே//

  வணங்க வேண்டிய வரிகள்!
  வணக்கங்கள் vsk!

  ReplyDelete
 34. நல்வரவு ராப்!

  //இதெல்லாம் அப்படியே வர்றது தானில்லே:)//

  எதைச் சொல்றீங்கன்னு தெரியல - கனவையா, கவிதையையா? ஆனா ரெண்டுக்குமே பதில் ஒண்ணுதான் - "ஆமா!" :)

  ReplyDelete
 35. வாங்க எஸ்.கே அண்ணா! கனவு காணாமப் போச்சுன்னுதான் சொன்னேன்; தேடிக்கிட்டிருந்தேன்னு சொன்னேனா :) இருந்தாலும் அழகான நம்பிக்கைக் கவிதைக்கு நன்றி.

  ReplyDelete
 36. //நமக்கில்லாத உரிமையா கலாய்க்க!//

  நன்று சொன்னீர், நாமக்கல்லாரே :)

  ReplyDelete
 37. இனிமை ஒருபக்கமும், இடர் ஒருபக்கமும்

  என வாழ்வின் இருபக்கமும் இணைந்து
  வீசக் கண்டேன், உங்கள் கவிதையில். இயற்கை என்னை அணைக்கிறதா, அடிக்கிறதா என வியந்து கொண்டிருக்கையில், அதே சாயலில் இதமாய் வருடிப் போகும் கவிதை.
  அதை அழகாக கானடா இராகத்தில் பாடிக் கேட்கும்போது, அந்த இனிமைக்கு இனிமை சேர்த்தாற்போல் இருந்தது.

  ReplyDelete
 38. ஆஹா, என்ன அழகா ரசிச்சிருக்கீங்க. மிக்க நன்றி, ஜீவா.

  ReplyDelete
 39. அழகான கவிதை,
  கடைசியில் மட்டும் “கசப்பா”ல் ஒரு சின்ன நெருடல். பலருக்கு அது பிடித்திருக்கிறது என்பதும் புரிகிறது. நான் மட்டும் அதை இப்படி மாற்றிக் கொள்கிறேன்.

  கைப்பையின் கட்டுக்குள்
  இப்போது...

  தித்திக்கும் நி்னைவுகள் மட்டும்…

  ReplyDelete
 40. நல்வரவு கபீரன்பன்!

  //நான் மட்டும் அதை இப்படி மாற்றிக் கொள்கிறேன்.

  “கைப்பையின் கட்டுக்குள்
  இப்போது...

  தித்திக்கும் நி்னைவுகள் மட்டும்…”//

  கைப்பையின் கட்டுக்குள் தித்திக்கும் நினைவுகளே நிலைக்க வாழ்த்துக்கள் :) முதல் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)