Thursday, July 17, 2008

காணும் பொருள் யாவிலும்... கண்ணா உன் முகம் காண்கிறேன்...


கண்ணன் - என் காதலன்

மணலாகி துகளாகி மல்லாந்து கிடக்கின்றேன்
கடலரசி கரம் கோர்த்து கரையோரம் நடக்கின்றேன்
பதிகின்ற சுவடுகளில் உன்னடிகள் தேடுகின்றேன்
காணாமல் உனைஎண்ணி கலங்கிமனம் வாடுகின்றேன்

கண்ணாஉன் முகம் காணவே...
கண்ணீரில் தினம் மூழ்கினேன்...

அன்றொரு நாள் விண்வெளியில் தேவனாய் வந்தாய்
அன்புமிகப் பொழிந்தெனக்கு அமிழ்தமாய்த் தந்தாய்
காற்றோடு கரம்கோர்த்து எங்குநீ சென்றாய்?
கதறிநான் அழைத்தபின்னும் வாராமல் நின்றாய்!

கண்ணன்மனம் கல்லாகுமோ - என்
கண்ணீரும் வீணாகுமோ?

உன்நீல நிறமெடுத்து மேலாடை யாய்த் தரித்தேன்
உன்கருமை சேர்த்தெடுத்து மைதீட்டி அலங் கரித்தேன்
பவழவாய்ச் சிவப்பெடுத்து சிந்தூரத் திலக மிட்டேன்
மயிலிறகின் தீண்டலிலே மயக்கத்திலே எனை மறந்தேன்

காணும் பொருள் யாவிலும்...
கண்ணாஉன் முகம் காண்கிறேன்...

உன்இதழ்பூத்த சிரிப்பெடுத்து மலராகச் சூடிக் கொண்டேன்
உன்மேனி சுகந்தமதைச் சந்தனமாய்ப் பூசிக் கொண்டேன்
**உன்முகமே நொடிதோறும் என்ஆடி காட்டக் கண்டேன்
வேய்ங்குழலின் இசைக்கேற்ப என்இதயம் துடிக்கக் கண்டேன்

என்றுநீ வருவாய் கண்ணா - வந்து
எனை அழைத்துச் செல்வாய் கண்ணா??


--கவிநயா

பி.கு.
--**குமரனோட "யத் பாவம் தத் பவதி"யும், கண்ணாடி சேவையும் படிச்சதோட பாதிப்பு.
--அழகுக் கண்ணன் படத்துக்கு மாதவிப் பந்தலாருக்கு நன்றி!

29 comments:

  1. //உன்நீல நிறமெடுத்து மேலாடை யாய்த் தரித்தேன்
    உன்கருமை சேர்த்தெடுத்து மைதீட்டி அலங் கரித்தேன்
    பவழவாய்ச் சிவப்பெடுத்து சிந்தூரத் திலக மிட்டேன்
    மயிலிறகின் தீண்டலிலே மயக்கத்திலே எனை மறந்தேன்//

    உண்ணும் வெற்றிலையும் பருகும் நீரும் எல்லாம் கண்ணன்.

    கமல் ஸ்டைலில் சொல்லனும்னா

    கவிதை இது கவிதை

    வாழ்த்துக்கள் கவிநயா

    ReplyDelete
  2. காத்திருக்கோம் காத்திருக்கோம் கமலக் கண்ணா வா வா..

    நல்ல கவி .. (கவிதை + கவிநயா)

    ReplyDelete
  3. கவி நயாவின் கவிதையிலே
    கண்ணனவன் குழலைக் கேட்டேன்.
    கல்லாகுமோ கண்ணன் மனம் என
    விம்மு மிதய ஒலியும் கேட்டேன்.

    நடக்கும் நிகழ்வு யெல்லாம் அக்
    கண்ணனின் வண்ணம் என்றே
    யாவர்க்கும் எடுத்துச் சொல்லும்
    சொல்லில் ஓர் சுவையும் கண்டேன்.

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.
    பின் குறிப்பு: உங்கள் பின்னூட்டம் " கன்னற் சிரிப்பாலே "
    கானடாவில் கேட்டு மகிழ்ந்தீரோ
    http://menakasury.blogspot.com
    http://ceebrospark.blogspot.com

    காவிரியில் தண்ணீர் இன்னும் வரவில்லையே என்ற குறை
    கவி நயாவின் கவிதை மழையால் மறந்து போகிறது.

    ReplyDelete
  4. கவிதையெனும் சந்தத்தில் கவின்மிகு கவிதையினை

    இதுவென்றே காட்டியிங்கு இன்கவிதை படைத்திட்டாய்

    கண்ணனவன் முகத்தினையே காணாமல் காதலித்தேன்

    என்னவனும் வருவானோ எனையிங்கு மீட்பானோ

    ReplyDelete
  5. எங்கெங்கும் நிறைந்தவனை காணும் பொருள் யாவிலும் கண்டு உங்கள் உள்ளம் உருக உருக அழைத்த பின்னும் வாராது போய் விடுவானா கமலக் கண்ணன்?

    அத்தனை வரிகளும் அத்தனை அருமை!

    பாராட்டுக்கள் கவிநயா!

    ReplyDelete
  6. கவிநயா! நீங்கள் திரைப்பாடல் எழுதும் அளவிற்குச் சொல்லாட்சி பெற்றிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. நல்லாயிருக்கு யக்கோவ்!!

    ReplyDelete
  8. //கவிதை இது கவிதை//

    மிக்க நன்றி, கைலாஷி!

    ReplyDelete
  9. //காத்திருக்கோம் காத்திருக்கோம் கமலக் கண்ணா வா வா..

    நல்ல கவி .. (கவிதை + கவிநயா)//

    கண்ணன் வரும் முன்னாடி உங்கள வர வச்சுட்டான் போல. நன்றி ராகவ்!

    ReplyDelete
  10. ஆஹா, அழகுக் கவிதையாவே சொல்லீட்டிங்க, சுப்புரத்தினம் ஐயா. கவிதையில் சொல்லியிருக்கும் உணர்வுகளையும் சரியாப் புரிஞ்சுக்கிட்டீங்க.

    'கன்னற்சிரிப்பாலே' பின்னூட்டத்தையும் நீங்க இனிய பாடலாக்கியதை கேட்டு ரசித்தேன்.

    //காவிரியில் தண்ணீர் இன்னும் வரவில்லையே என்ற குறை
    கவி நயாவின் கவிதை மழையால் மறந்து போகிறது.//

    ஆஹா, மழையில நனைஞ்ச மாதிரி குளிர்ச்சியா இருக்கு :)

    மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  11. //கவிதையெனும் சந்தத்தில் கவின்மிகு கவிதையினை
    இதுவென்றே காட்டியிங்கு இன்கவிதை படைத்திட்டாய்
    கண்ணனவன் முகத்தினையே காணாமல் காதலித்தேன்
    என்னவனும் வருவானோ எனையிங்கு மீட்பானோ//

    கண்ணனை நினைச்சாலே காதல் வந்துருதே. நிச்சயம் வருவான், காத்திருப்போரைக் காக்க... அழகுக் கவிதை வாழ்த்துக்கு நன்றி அண்ணா.

    ReplyDelete
  12. //உங்கள் உள்ளம் உருக உருக அழைத்த பின்னும் வாராது போய் விடுவானா கமலக் கண்ணன்?//

    வருவான்தான்... ஆனா இன்னும் கொஞ்சம் வேகமா வந்தா பரவாயில்ல :) பாராட்டுக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  13. //நீங்கள் திரைப்பாடல் எழுதும் அளவிற்குச் சொல்லாட்சி பெற்றிருக்கிறீர்கள்.//

    அச்சச்சோ! 'இது வரமா, சாபமா'ங்கிற மாதிரி, இது திட்டா பாராட்டான்னு தெரியல... இருந்தாலும் ஒரு நன்றி சொல்லி வச்சிர்றேன் :) நன்றிங்க அகரம்.அமுதா.

    ReplyDelete
  14. வருக மௌலி!

    //நல்லாயிருக்கு யக்கோவ்!!//

    நன்றிங்க தம்பியோவ் :)

    ReplyDelete
  15. படத்தையே பார்த்துக் கொண்டிருக்கலாம் போலிருக்கிறது, அப்புறமா வந்து கவிதையைப் படிக்கிறேன்!

    ReplyDelete
  16. //படத்தையே பார்த்துக் கொண்டிருக்கலாம் போலிருக்கிறது, அப்புறமா வந்து கவிதையைப் படிக்கிறேன்!//

    எனக்கும் ரொம்ப ரொம்பப் பிடிச்ச படம் :) மெதுவா வாங்க; ஆனா கண்டிப்பா வாங்க ஜீவா!

    ReplyDelete
  17. கண்ணன் பாட்டுக்கே உரிய ஒரு நல்ல படத்தை தேர்வு செய்துள்ளீர்கள். வரிகளும் அருமை. கண்ணனிடம மயங்காதார் உண்டோ என்று மயக்கவைக்கும் வரிகள். பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  18. அருமையாக அமைந்திருந்தது கவி, அகமகிழ அருந்தமிழில் அமைந்த க(ரு)வி.
    //பதிகின்ற சுவடுகளில் உன்னடிகள் தேடுகின்றேன்//
    பதிகின்ற இடுகைகளில் சுவடுகளிலும் அவை தெரிய, படிப்போரின் இதயமும் தேடுவதென்னே!
    நன்றிகள்.

    ReplyDelete
  19. //கண்ணனிடம மயங்காதார் உண்டோ என்று மயக்கவைக்கும் வரிகள்.//

    உண்மைதான் பா.ந.இளவரசரே. அவனிடம் மயங்காத உயிரும் உண்டோ?

    //பதிவுக்கு நன்றி.//

    வந்து படிச்சு ரசிச்ச உங்களுக்குத்தான் மிகவும் நன்றி.

    ReplyDelete
  20. //அருமையாக அமைந்திருந்தது கவி, அகமகிழ அருந்தமிழில் அமைந்த க(ரு)வி.//

    மீண்டும் வந்தமைக்கு நன்றி ஜீவா.

    //பதிகின்ற இடுகைகளில் சுவடுகளிலும் அவை தெரிய, படிப்போரின் இதயமும் தேடுவதென்னே!//

    மனமுருகித் தேடுவோரை மறுப்பானோ மாயவன்?

    ReplyDelete
  21. /அன்றொரு நாள் விண்வெளியில் தேவனாய் வந்தாய்
    அன்புமிகப் பொழிந்தெனக்கு அமிழ்தமாய்த் தந்தாய்
    காற்றோடு கரம்கோர்த்து எங்குநீ சென்றாய்?
    கதறிநான் அழைத்தபின்னும் வாராமல் நின்றாய்!/


    /காணும் பொருள் யாவிலும்...
    கண்ணாஉன் முகம் காண்கிறேன்.../


    என்னவென்று உரைப்பது
    அத்தனையும்
    அருமை

    ReplyDelete
  22. //என்னவென்று உரைப்பது
    அத்தனையும்
    அருமை//

    மிக்க நன்றி, திகழ்மிளிர்!

    ReplyDelete
  23. ப்பா... பிரம்மாதம்... கண்ணனை பாடிய உங்கள் கவிதையும் கண்ணனின் அம்சமே... அருமை... எனக்கு தெரிந்து, ஆண்டாளுக்கு பிறகு கண்ணனை தன் காதலனாக அறிவித்தது நீங்கள் தான்...

    ReplyDelete
  24. வருக ரமேஷ். நல்லாவே ரசிச்சிருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கிட்டேன். மிக்க மகிழ்ச்சி :) மகாகவி பாரதி கண்ணனை விதவிதமான நிலைகளில் வச்சு பாடியிருக்காரே. அதே போலதான் எனக்கும் ஒரு சின்ன(!) ஆசை. அவன் மனசு வைக்கணும்.

    குட்டிக் கண்ணனைக் குழந்தையாகவும் வரிச்சு ஒரு பாட்டு எழுதியிருக்கேன். படிச்சுப் பாருங்க.

    வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  25. kanna un mukam kaanave..

    one of our relatives sings this song here.
    in Carnatic Classical
    Raag Sama.

    http://menakasury.blogspot.com

    subbu rathinam.
    thanjai.
    PS; tamil font unicode is not working

    ReplyDelete
  26. //உன்நீல நிறமெடுத்து மேலாடை யாய்த் தரித்தேன்//
    கண்ணனின் உடலேநீலம் ,,அவனே ஆடையாய் ....!அன்பின் ஆளுமை இங்கு அழகு!

    //உன்கருமை சேர்த்தெடுத்து மைதீட்டி அலங் கரித்தேன்//
    காக்கைச்சிறகினிலே நந்தலாலா நிந்தன்
    கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா!

    //பவழவாய்ச் சிவப்பெடுத்து சிந்தூரத் திலக மிட்டேன்//

    அழகு!
    //மயிலிறகின் தீண்டலிலே மயக்கத்திலே எனை மறந்தேன்//

    கவிதை சொற்களின் அழகிலே நானும் மயங்கிவிட்டேன்....பாராட்டு கவிநயா!

    ReplyDelete
  27. //கவிதை சொற்களின் அழகிலே நானும் மயங்கிவிட்டேன்....பாராட்டு கவிநயா!//

    நல்வரவு மைபாக்கா! கவிதை ரசித்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  28. பாட்டைப் படித்துக் கொண்டே வரும் போது கோதையின் சாயல் இந்தப் பாடலில் தெரிகிறதே என்று எண்ணிக் கொண்டே வந்தேன். அதனையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். கோதை தமிழுக்குச் சுட்டி தந்திருக்கிறேன் என்று நீங்கள் சொன்ன இடுகை இது தான் என்று இப்போது தெரிகிறது. :)

    ReplyDelete
  29. அப்பாடி! ஒரு வழியா வந்துட்டீங்களா. குமரனுக்காக வழியப் பாத்துப் பாத்து கண்ணு பூத்துப்போச்சு :)

    //பாட்டைப் படித்துக் கொண்டே வரும் போது கோதையின் சாயல் இந்தப் பாடலில் தெரிகிறதே என்று எண்ணிக் கொண்டே வந்தேன்.//

    "யத் பாவம் தத் பவதீ". கோதையை நினைச்சுக்கிட்டே இருந்தா அவளாகவே மாற ஒரு குட்டியூண்டு வாய்ப்பு இருக்கில்ல? :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)