Thursday, June 26, 2008

வண்டாடப் பூமலர வள்ளி வனங்காக்க கண்டாராம் வேல்முருகர்...

நாளைக்கு கிருத்திகை. வள்ளி கதையைத் தாலாட்டா போட்டா பொருத்தம்தானே! குழந்தைகள் இருக்கறவங்களும், குழந்தையா இருக்கறவங்களும், முருகனோட பக்தர்களும், அவன் அம்மா, அப்பா, அண்ணா, மாமன், இப்படி அவனோட உறவினர்களுடைய பக்தர்களும், இப்படி யார் வேணுன்னாலும் படிக்கலாம்! :)

ஆழ்ந்த தூக்கத்துக்கு போற நேரத்துல என்ன சொன்னாலும் மனசுல பதியுமாம். எங்கயோ படிச்சதுங்க. அதுக்குன்னு தரவெல்லாம் கேக்காதீங்க. தரத் தெரியாது, நமக்கு :) அதனாலதான் அந்தக் காலத்துல தூங்க வைக்கும்போது அருமையான தாலாட்டுகளையும், கதைகளயும் சொல்லித் தந்தாங்க. கதைகளை படிக்கிறதை விட சொல்லிக் கேக்க நல்லாருக்கும். அதை விட பாடிக் கேட்டா இன்னும் நல்லா மனசுல பதியும்தானே. குழந்தையா இருக்கும்போதே இப்படிக் கதைகளை மனசுல பதிய வைக்க தாலாட்டை விட சிறந்த யுக்தி எது!

வள்ளி தாலாட்டு கொஞ்சம் நீளம்தானுங்க. பொறுமையாப் படிங்க! பின்ன, குழந்தை தூங்கற வரை பாடறதுக்கு வேணுமில்ல? அதனாலதான் தாலாட்டெல்லாம் நீளமா இருக்குதுங்க! ஏதாச்சும் வார்த்தைக்கு அர்த்தம் தெரியலைன்னா, நம்ம குமரன்கிட்ட கேட்டுக்கலாம் :)

இதுக்கு முன்னாடி இட்ட "ஆரடிச்சா ஏனழுதாய்" தாலாட்டை இன்னும் படிக்காதவங்க இங்க படிக்கலாம்...

சரி சரி... நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருந்தா தாலாட்டக் கேக்காமயே தூங்கிடப் போறீங்க! இதோ தாலாட்டு:


வள்ளி தாலாட்டு

வள்ளி என்றால் வள்ளி மலைமேல் படரும் வள்ளி
கொடியில் கிடந்த வள்ளி கூவி அழும்போது…

வனத்துக் குறவர்களாம் மான்பிடிக்கும் வேடர்களாம்
குழந்தை குரல்கேட்டு குறவேடர் ஓடிவந்து
மதலை குரல்கேட்டு மான்வேடர் ஓடிவந்து
வாரியெடுத்து வண்ண மடியில் வைத்து
தூக்கியெடுத்து சொர்ண மடியில் வைத்து
மண்துடைத்து மடியில் வைத்து
வள்ளி என்ற பேருமிட்டு
வைத்தார் வனந்தனிலே…

உழக்குத் தினை விதைத்து வள்ளி உத்தமியை காவல் வைத்து
உத்தமியாள் காவலிலே ஓடிக் கிளிவிரட்டி
நாழி தினை விதைத்து வள்ளி நாயகியை காவல் வைத்து
நாயகியாள் காவலிலே நடந்து கிளிவிரட்டி
பதக்குத் தினை விதைத்து வள்ளி பசுங்கிளியை காவல் வைத்து
பசுங்கிளியாள் காவலிலே பாடி கிளிவிரட்டி
குறுணி தினை விதைத்து வள்ளி கொம்பனையாள் காவல் வைத்து
கொம்பனையாள் காவலிலே கூவி கிளிவிரட்டி
ஆலோலம் என்று சொல்லி வள்ளி அழகாய்க் கிளிவிரட்டி
எய்து கிளி விரட்டி வள்ளி இருந்தாள் பரண்மீது…

தினைப்புனமும் காத்து வள்ளி திகைத்து நிற்கும் வேளையிலே
வனத்திருக்கும் வேடரைப் போல் வந்தாராம் வேல்முருகர்
வண்டாடப் பூமலர வள்ளி வனங்காக்க கண்டாராம் வேல்முருகர்
கானக்குறவடிவேல் வள்ளி அழகுக்கும் வலதுகைத் தேமலுக்கும்
கன்னத்து மஞ்சளுக்கும் சுப்பையா கண்டாசை கொண்டாரோ
உட்கழுத்து மஞ்சளுக்கு சுப்பையா உள்ளாசைப் பட்டாரோ
கூந்தலழகுக்கு சுப்பையா குறவேசம் ஆனாரோ

தேனும் தினைமாவும் தெவிட்டாத வேலவரும்
பாலுந் தினைமாவும் பசியாற வந்தாராம் வள்ளியிடம்
தாகம் எடுக்குதென்று சாலங்கள் செய்தாராம்
நல்ல கிழவனைப்போல் சுப்பையா நடித்தாராம் தினைப்புனத்தில்…

ஆனை கொண்டு வந்தார் சுப்பையா
வள்ளி ஆரணங்கை மாலையிட்டார்
சிகப்பு வளையலிட்டார் சுப்பையா
வள்ளி தேன்மொழியை மாலையிட்டார்
பச்சை வளையலிட்டார் சுப்பையா
வள்ளி பசுங்கிளையை மாலையிட்டார்
கிள்ளு வளையலிட்டார் சுப்பையா
வள்ளி கிளிமொழியை மாலையிட்டார்…

வண்டாடும் தோகைமலை
வள்ளியம்மை வாழும்மலை
கைலாசநாதர் மலை
மானென்றும் வள்ளி
மயிலென்றும் சுப்பையா
தேனென்றும் தெய்வயானை
தென்பழனி வேலவரே!

***

தூங்கி எழுந்ததுக்கப்புறம் மறக்காம உங்க கருத்துகளைப் பகிர்ந்துக்கோங்க! :)

--கவிநயா

31 comments:

  1. //மானென்றும் வள்ளி
    மயிலென்றும் சுப்பையா
    தேனென்றும் தெய்வயானை
    தென்பழனி வேலவரே!

    ***

    தூங்கி எழுந்ததுக்கப்புறம் மறக்காம உங்க கருத்துகளைப் பகிர்ந்துக்கோங்க! :)//

    அற்புதமாய் பாடி வந்து இப்படி நிறுத்தினால் தூக்கம் வராது கவிநயா.
    ஏன் நிறுத்தி விட்டாய் என குழந்தை கூட எட்டிப் பார்க்கும் தொட்டிலிலிருந்து.

    ReplyDelete
  2. உழக்கு, நாழி, பதக்கு, குறுணி - அளவெல்லாம் சொல்லி அளக்கறீங்க!

    ReplyDelete
  3. வள்ளிக்குத் தாலாட்டா? அப்படின்னா எங்க முருகன் தூங்கிடுவாரு! :-))

    //பச்சை வளையலிட்டார் சுப்பையா
    வள்ளி பசுங்கிளையை மாலையிட்டார்
    கிள்ளு வளையலிட்டார் சுப்பையா
    வள்ளி கிளிமொழியை மாலையிட்டார்//

    அப்படியே பெண் குழந்தை தாலாட்டு!
    இந்தப் பதிவைப் பாடிக்கிட்டே இருக்கேன்! ஒட்டிக்கிச்சு!

    சூப்பர் யக்கோவ்! சூப்பர்! :-)

    ReplyDelete
  4. 'ஆரடிச்சா ஏனழுதாய்..' கேட்டப்ப மட்டும் தூங்கி விட்டிருந்தீர்களே. அப்ப அது அற்புதமாயில்லையா எனக் கேட்டிருப்பீர்கள் எனப் பார்க்க வந்தேன். அப்பாடி..:)! அது அடிபட்ட குழந்தைக்கு ஆறுதல் பாட்டன்றோ, ஆதரவான குரல் ஒலிக்க அமைதியடைந்து தூங்கி விட்டது. என்ன சரியா..:)?

    ReplyDelete
  5. This is a response to your song on the ARRIVAL OF THE ANGEL.

    தேவதை வருவாள் என்று சொல்லியாச்சுன்னா
    சும்மா இருப்பாரா எங்க சுப்பு தாத்தா ?

    நாங்களும் சொல்லிப்பாத்தூட்டோம். தாத்தா
    நீங்க மெட்டு மட்டும் போடுங்க . ரிச்மன்டு ஆன்டியோட‌
    ஃப்ரென்டு பாடட்டும்னு சொல்லிட்டோம். கேட்டாதானே

    புடிவாதமா, அடாணா ராகமா அது
    பாடிகினு கீராரு.

    பாவம் அங்க எங்க பாட்டி மட்டும் பொறுமையா
    கேட்டுகிட்டு இருக்காங்க. நீங்க போய் ஒரு
    மூணு நிமிசம் அவங்க என்ன கேட்கறாங்கன்னு
    நீங்களும் கேளுங்களேன்.

    சுப்பு தாத்தாவின்
    செல்லப் பேரக்குழந்தகள்.
    தஞ்சை.
    http://menakasury.blogspot.com

    ReplyDelete
  6. " A thing in Beauty is a joy for ever "
    I FELT LIKE READING A SONNET BY KEATS.

    //உத்தமியாள் காவலிலே ஓடிக் கிளிவிரட்டி
    நாழி தினை விதைத்து வள்ளி நாயகியை காவல் வைத்து
    நாயகியாள் காவலிலே நடந்து கிளிவிரட்டி
    பதக்குத் தினை விதைத்து வள்ளி பசுங்கிளியை காவல் வைத்து
    பசுங்கிளியாள் காவலிலே பாடி கிளிவிரட்டி
    குறுணி தினை விதைத்து வள்ளி கொம்பனையாள் காவல் வைத்து
    கொம்பனையாள் காவலிலே கூவி கிளிவிரட்டி
    ஆலோலம் என்று சொல்லி வள்ளி அழகாய்க் கிளிவிரட்டி
    எய்து கிளி விரட்டி வள்ளி இருந்தாள் பரண்மீது…//

    காலை முதல் இவ்வரிகளை எத்தனை தடவை
    படித்திருப்பேன் என கணக்கும் மறந்து போனேன்.
    எப்படி உங்களைப் பாராட்டுவது எனத்
    தெரியவில்லை. என் தமிழும் நான் மறந்து போனேன்.

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.
    பின் குறிப்பு: உங்கள் தோழியை ஒன்று நாட்டக்குறிஞ்சி அல்லது
    தோடி யில் பாடச்சொல்லிக் கேளுங்கள்.

    ReplyDelete
  7. இது வரை கருத்து சொன்னவங்களுக்கெல்லாம் நன்றி. அப்புறமா வந்து பின்னூட்டங்களுக்கு பதில் இடறேன்...

    இப்போதைக்கு சொல்ல வந்தது - நான் முன்னயே சொன்னபடி நான் இடற தாலாட்டெல்லாம் எங்க ஊர்ப் பக்கங்கள்ல பரம்பரை பரம்பரையா வந்தது - நாட்டுப் புறப் பாடல்கள் மாதிரி - அவை நான் எழுதினதில்லைன்னு தெளிவுபடுத்தத்தான் :)

    ReplyDelete
  8. வாங்க ராமலக்ஷ்மி! நீங்க ரெண்டு தாலாட்டு பற்றியும் சொன்னது உண்மைதான் :) மிக்க நன்றி!

    ReplyDelete
  9. //உழக்கு, நாழி, பதக்கு, குறுணி - அளவெல்லாம் சொல்லி அளக்கறீங்க!//

    வாங்க ஜீவா. முன்ன யாரோ அளந்து வச்சதத்தான் நான் வந்து கொட்டறேன் :)

    ReplyDelete
  10. இந்த அளவெல்லாம் எவ்வளவென தேடிப்பார்த்தில், விக்கியின் சுட்டி கிடைத்தது:
    இவற்றில் குறுணி மட்டும் சின்ன வயதில் பயன்படுத்திக் கேட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  11. //வள்ளிக்குத் தாலாட்டா?//

    வள்ளிக்குத் தாலாட்டில்லை; பிள்ளைக்கு வள்ளி கதை தாலாட்டு :)

    //அப்படியே பெண் குழந்தை தாலாட்டு!
    இந்தப் பதிவைப் பாடிக்கிட்டே இருக்கேன்! ஒட்டிக்கிச்சு!//

    என்னாச்சு கண்ணா? என்ன ஒட்டிக்கிச்சு? :)

    //சூப்பர் யக்கோவ்! சூப்பர்! :-)//

    நன்றி தம்பீ, நன்றி :)

    ReplyDelete
  12. //super paattu//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, விஜி!

    ReplyDelete
  13. //நீங்க போய் ஒரு
    மூணு நிமிசம் அவங்க என்ன கேட்கறாங்கன்னு
    நீங்களும் கேளுங்களேன்.//

    வாங்க சுப்புரத்தினம் ஐயா. பாட்டி கேட்டதை நானும் கேட்டேன், தேவதையும்.. ரொம்ப நல்லாருந்தது! அதுக்காகவே சீக்கிரம் வரேன்னு சொல்லிட்டா :) மிக்க நன்றி!

    ReplyDelete
  14. //எப்படி உங்களைப் பாராட்டுவது எனத் தெரியவில்லை. என் தமிழும் நான் மறந்து போனேன்.//

    மிக்க மகிழ்ச்சி, ஐயா. பாராட்டு முன்னோர்களுக்குதான் சேரணும் :)

    //உங்கள் தோழியை ஒன்று நாட்டக்குறிஞ்சி அல்லது
    தோடி யில் பாடச்சொல்லிக் கேளுங்கள்.//

    தோழி ரொம்ம்ப பிஸியாகிட்டாங்க :( இப்போதைக்கு கிடைக்க மாட்டாங்க...

    ReplyDelete
  15. //இந்த அளவெல்லாம் எவ்வளவென தேடிப்பார்த்தில், விக்கியின் சுட்டி கிடைத்தது://

    சுட்டிக்கு நன்றிகள், ஜீவா!

    ReplyDelete
  16. யாருங்க இந்த சுப்பையா ?

    மீனாட்சி பாட்டி.
    தஞ்சை.

    ReplyDelete
  17. மீனாட்சி பாட்டி said..
    //யாருங்க இந்த சுப்பையா ?//

    கவிநயா, உங்களைக் கேட்டிருந்தாலும் நானும் சொன்னா தப்பில்லைதானே?:)

    பாட்டி, முருகப் பெருமானுக்கு சுப்பிரமணியன் என்றும் பெயருண்டன்றோ! அவரைத்தான் சுப்பையா என கவிநயா விளிக்கிறார்.

    கவிநயா, விளக்கம் தப்பாயிருந்தா தாராளமா சொல்லலாம், தப்பேயில்லை:)!

    ReplyDelete
  18. பாடல் மிக நன்றாயிருக்கிறது. இதுபோன்றவை கிடைப்பின் இடுகைகளாக்கவும். நாங்களும் தெரிந்து கொள்கிறோம். நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. //யாருங்க இந்த சுப்பையா ?//

    வாங்க பாட்டீ!

    பாட்டி கேள்விக்கு விளக்கம் சொன்னதுக்கு நன்றி, ராமலக்ஷ்மி! நீங்க சொன்னது சரிதான். ஆனா அவங்க அப்படி தெரியாம கேட்டிருப்பாங்கன்னு தோணல. அவங்க சுப்பு(ரத்தினம்) ஐயாவை நினைச்சு கேட்டாங்கன்னு தோணுது :) என்ன பாட்டி? சரிதானா?

    ReplyDelete
  20. //பாடல் மிக நன்றாயிருக்கிறது.//

    வாங்க அகரம்.அமுதா. ரசித்ததற்கு நன்றி!

    //இதுபோன்றவை கிடைப்பின் இடுகைகளாக்கவும்.//

    அப்படி நெனச்சு ஆரம்பிச்சதுதான் தாலாட்டுப் பாடல்கள் பற்றிய பதிவுகள். தெரிஞ்ச வரை பகிர்ந்துக்கறேன்...

    ReplyDelete
  21. kavinaya said:

    // அவங்க சுப்பு(ரத்தினம்) ஐயாவை நினைச்சு கேட்டாங்கன்னு தோணுது :) என்ன பாட்டி? சரிதானா?//

    ரி.

    மீனாட்சி பாட்டி.
    தஞ்சை.

    ReplyDelete
  22. வள்ளிக்கு வலக்கையில் தேமலா? சுப்பையாவுக்குத் தெரிஞ்சிருக்கலாம்; நம்ம கோ.இராகவனுக்கும் தெரிஞ்சிருக்கலாம் (அம்மா கையில தேமல் இருந்தா புள்ளைக்குத் தெரியாம இருக்குமா?) எனக்கு இன்னைக்குத் தான் தெரியும்.

    புரியாத சொல்லே இதுல இல்லியே கவிநயா அக்கா. அப்புறம் எதுக்கு இந்தத் தம்பியை வம்புக்கிழுக்கிறீங்க? :-)

    ReplyDelete
  23. paattiennasolkiral said...
    //kavinaya said:

    // அவங்க சுப்பு(ரத்தினம்) ஐயாவை நினைச்சு கேட்டாங்கன்னு தோணுது :) என்ன பாட்டி? சரிதானா?//

    ரி.//

    எனக்கும் அது தோன்றவே செய்தது கவிநயா. ஆனால் பாட்டியிடம் மரியாதை நிமித்தம் அப்படி வேடிக்கை பண்ணலாமான்னு தெரியாததால்..சொல்லலை. பாட்டி அதற்கு உரிமை கொடுப்பார்களா, கேட்டுச் சொல்லுங்க கவிநயா:)!

    ReplyDelete
  24. //வள்ளிக்கு வலக்கையில் தேமலா? சுப்பையாவுக்குத் தெரிஞ்சிருக்கலாம்; நம்ம கோ.இராகவனுக்கும் தெரிஞ்சிருக்கலாம்//

    எனக்கும் இந்த கேள்வி வந்தது. கோ.ரா. வந்து சொல்றாரான்னு பார்ப்போம் :)

    //அப்புறம் எதுக்கு இந்தத் தம்பியை வம்புக்கிழுக்கிறீங்க? :-)//

    அட, வம்புக்கிழுக்கலப்பா, குமரா! தம்பியைத் துணைக்கு அழைச்சுக்கிட்டேன். அம்புட்டுதான். வருவீகல்ல? துணைக்கு? :)

    ReplyDelete
  25. //பாட்டியிடம் மரியாதை நிமித்தம் அப்படி வேடிக்கை பண்ணலாமான்னு தெரியாததால்..சொல்லலை. பாட்டி அதற்கு உரிமை கொடுப்பார்களா//

    வேடிக்கையும் மரியாதையாகவே பண்ணும் பட்சத்தில ஒண்ணும் சொல்ல மாட்டாங்கன்னு நெனக்கிறேன், ராமலக்ஷ்மி :)

    ReplyDelete
  26. Ramalakshmi said:
    //ஆனால் பாட்டியிடம் மரியாதை நிமித்தம் அப்படி வேடிக்கை பண்ணலாமான்னு தெரியாததால்..சொல்லலை. பாட்டி அதற்கு உரிமை கொடுப்பார்களா, கேட்டுச் சொல்லுங்க கவிநயா:)!
    kavinaya said:
    //வேடிக்கையும் மரியாதையாகவே பண்ணும் பட்சத்தில ஒண்ணும் சொல்ல மாட்டாங்கன்னு நெனக்கிறேன்,//

    தன்னோட பொண்ணுகிட்டவே, பேத்திகிட்டவே எந்த
    பாட்டியாச்சும் கோவிச்சுப்பாங்களா ?
    (விட், ஹ்யூமர், ஸாடயர் என்று மூணு ரகம் இருக்குங்க.
    இதைத்தவிர்த்து லாஃபிங்க் அட் ஒன்செல்ஃப் என்னு
    வேற இருக்குங்க. நான் " யாருங்க சுப்பையா?" ந்னு
    கேட்டது ஹ்யூமர். ( நிசமா, அந்தக் கேள்வி எழுதினப்போ
    அதுக்கு முன்னாடி ஒரு சென்டன்ஸ் எழுதியிருந்தேன்.
    இந்த மனுசன் என்ன சொல்லப்போராறன்னு அதை
    டெலிட் பண்ணிட்டேன். இவரும் என் டைப் தான்.
    ஆனா பொசுக்குன்னு கோபம் வந்துடும். )அதே ப்ளேனிலே கவினயா மேடமும்
    பதில் கொடுத்திருக்காங்க. ) (ராமலக்ஷ்மி மேடம் கேட்டது
    எந்த வகைன்னு கேட்கறீங்களா ?
    அது இன்னொரு வகை.
    நம்ம சொல்ற ஜோக்கை ரசிப்பாங்களான்னு தெரியல்லையே
    ந்னு நினைக்கிற இடத்திலே ஒரு ஃபீலர் விடுவாங்களா இல்லையா?
    அது தான். எனக்கு வயசாச்சு . உண்மைதான். ஆனாலும்
    நானும் ஒரு ஹை ஸ்கூல்லே டீச்சராய் இருந்திருக்கேனுல்ல.
    இட் இஸ் ரியலி எ ப்லெஷர் இன் டாக்கிங் டு யங்கர்
    ஜெனரஷன் ஆஃப் த டே.

    அது சரி ! வள்ளி தாலாட்டு பாட்டு கேட்டீங்களா ?
    அது தோடி ராகம்.
    என்னாலேயே பாடமுடியலே.
    மூச்சை அடக்கினு எங்க வீட்டு அய்யா பாடி இருக்காரு.
    என்னோட நாத்தி சொல்லுது. ( அது ரேடியோ ஆர்டிஸ்ட் )
    ஜோரா இருக்குது. மெட்டு போடறவங்களுக்கெல்லாம்
    பாடத்தெரியணும்னு அவசியமே இல்லைங்கறது.
    அந்தக்காலத்திலேந்து அது அவங்க கட்சி.
    நீங்க கேட்டு சொல்லுங்க.

    மீனாட்சி பாட்டி.
    தஞ்சை.
    http://menakasury.blogspot.com

    ReplyDelete
  27. //பாட்டி அதற்கு உரிமை கொடுப்பார்களா?//


    பாட்டியிலே பல வகை.
    பளிச் பளிச் ந்னு சொல்றது ஒரு வகை.
    பக்குவமா சொல்றது ஒரு வகை.
    பந்தாவா சொல்றது ஒரு வகை.
    பாசமா சொல்றது ஒரு வகை.


    மீனாட்சி பாட்டி.
    தஞ்சை.

    ReplyDelete
  28. வாங்க பாட்டி! வேடிக்கை பண்றது பத்தி அழகா சொன்னீங்க.

    ஐயா பாடின வள்ளி தாலாட்டைக் கேட்டுக்கிட்டே தூங்கிட்டேன். அதான் பதில் எழுத லேட்டாயிடுச்சு :)

    //மெட்டு போடறவங்களுக்கெல்லாம்
    பாடத்தெரியணும்னு அவசியமே இல்லைங்கறது. அந்தக்காலத்திலேந்து அது அவங்க கட்சி.//

    :))

    //பாட்டியிலே பல வகை.
    பளிச் பளிச் ந்னு சொல்றது ஒரு வகை.
    பக்குவமா சொல்றது ஒரு வகை.
    பந்தாவா சொல்றது ஒரு வகை.
    பாசமா சொல்றது ஒரு வகை.//

    நீங்க பாசமா பக்குவமா சொல்ற பாட்டிதானே :)

    ReplyDelete
  29. மீனாட்சி பாட்டி என்ன சொன்னார்கள் என்றால்..
    //பாட்டியிலே பல வகை.
    பளிச் பளிச் ந்னு சொல்றது ஒரு வகை.
    பக்குவமா சொல்றது ஒரு வகை.
    பந்தாவா சொல்றது ஒரு வகை.
    பாசமா சொல்றது ஒரு வகை.//

    கவிநயா said..//நீங்க பாசமா பக்குவமா சொல்ற பாட்டிதானே :)//

    ஆமாம் அந்தப் பக்குவத்தையும் பாசத்தையும் நானும் உணர்ந்தேன், என் வீட்டுத் திண்ணை(பதிவு)க்கு அவர்களும் சூரி அய்யாவும் வந்து வாழ்த்திய போது.

    ReplyDelete
  30. //ஆமாம் அந்தப் பக்குவத்தையும் பாசத்தையும் நானும் உணர்ந்தேன், என் வீட்டுத் திண்ணை(பதிவு)க்கு அவர்களும் சூரி அய்யாவும் வந்து வாழ்த்திய போது.//

    நானும் :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)