“இசை கேட்டால் புவி அசைந்தாடும்” அப்படின்னார் கண்ணதாசன். இசைக்கு மயங்காதவங்க யாரு? அதுவும் இசை மென்மையா மனதுக்கு இதமா இருக்கும்போது கண்கள் தானே சொருகாதோ? அப்படிப்பட்ட இசைதானேங்க தாலாட்டு! தாலாட்டுப் பாடல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுல இருக்கற தமிழும், இயல்பா வந்து விழற சொற்களும், உவமைகளும், கதைகளும், அடடா... இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்! எனக்குத் தெரிஞ்ச சில தாலாட்டுப் பாடல்களை உங்களோட பகிர்ந்துக்கணும்ங்கிறது என்னுடைய சின்ன ஆசை.
சின்னக் குழந்தைங்களுக்கு அம்மா குரல் எப்படி இருந்தாலும் இனிமைதான். ‘வீல்’னு கத்திக்கிட்டிருக்க குழந்தை அம்மாவோட அன்புக் குரல் கேட்டோன்ன பொட்டிப் பாம்பா அடங்கிடும்! அம்மாவுக்கு பாடத் தெரிஞ்சிருக்கணும்கிற அவசியமே இல்லை! என் பிள்ளை கூட நான் பாடினதைக்(!) கேட்டு தூங்கியிருக்கான்! (இப்ப அவன்கிட்ட வாயே திறக்க முடியாதுங்கிறது வேற விஷயம் :)
இந்த சமயத்துல ஒண்ணு சொல்லியே ஆகணும். நம்ம குமரன் இருக்காரே, அவர் தன் குழந்தைங்களுக்கு திருப்பாவை மாதிரியான சமய இலக்கியப் பாடல்களையெல்லாம் தாலாட்டா பாடுவாராம்! எவ்ளோ க்ரேட் பாருங்க! இதைக் கேட்டோன்ன அசந்தே போய்ட்டேங்க!
எங்க ஊர்ப்பக்கமெல்லாம் இப்பவும் விசேஷங்களுக்கு சின்னச் சின்ன புத்தகங்கள் போட்டுக் கொடுக்கிற பழக்கம் இருக்கு. அப்படி ஒரு முறை ஒரு அறுபதாவது கல்யாணத்துக்கு தாலாட்டுப் பாடல்களைத் தொகுத்துக் கொடுத்தாங்க! வித்தியாசமான, எனக்குப் பிடிச்ச, யோசனை!
தாலாட்டுங்கிற தலைப்புல நான் தரப் போறதெல்லாம் எனக்கு என் அம்மா பாடி, நான் என் பிள்ளைக்குப் பாடினதும், அப்புறம் நான் மேல சொன்ன புத்தகத்துல இருக்கறதும்தான். அதனால காப்பிரைட் ப்ரச்னை வராதுன்னு நெனக்கிறேன்! :) உங்களுக்கு தெரிஞ்ச தாலாட்டுகளையும் பகிர்ந்துக்கோங்க!
அவசர உலக அம்மாக்களே! இனியாவது, “தாலாட்டா? எனக்கு தெரியாதே” அப்படின்னு எஸ்கேப் ஆகாம குழந்தையை அன்பா ஆசையா தூங்க வைப்பீங்கன்னு நம்பறேன்!
ஆராரோ, ஆரிரரோ - 1
ஆரடித்தார் ஏனழுதாய்
அடித்தாரைச் சொல்லி அழு
கண்ணே என் கண்மணியே
கடிந்தாரைச் சொல்லி அழு
விளக்கிலிட்ட வெணையைப் போல்
வெந்துருகி நிற்கையிலே
கலத்திலிட்ட சோறது போல்
கண்கலக்கம் தீர்த்தாயே
கொப்புக் கனியே
கோதுபடா மாங்கனியே
ஏனழுதாய் என்னுயிரே
ஏலம்பூ வாய் நோக
பாலுக்கழுதாயோ
பவழ வாய் முத்துதிர
தேனுக்கழுதாயோ
கனிவாயில் தேனூற
வம்புக்கழுதாயோ
வாயெல்லாம் பால் வடிய
அத்தை அடித்தாளோ
அல்லி மலர்த் தண்டாலே
மாமன் அடித்தானோ
மல்லிகைப் பூச் செண்டாலே
அடித்தாரைச் சொல்லி அழு
ஆக்கினைகள் செய்து வைப்போம்
கடிந்தாரைச் சொல்லி அழு
கைவிலங்கு போட்டு வைப்போம்
தொட்டாரைச் சொல்லி அழு
தோள்விலங்கு போட்டு வைப்போம்
மண்ணால் விலங்கு பண்ணித்
தண்ணீரிலே போட்டு வைப்போம்
வெண்ணையால் விலங்கு பண்ணி
வெய்யிலிலே போட்டு வைப்போம்!
--
ஹலோ! தூங்கிட்டீங்களா! தாலாட்டு முடிஞ்சிருச்சுங்கோ!! :)
நல்ல தொடக்கம்.
ReplyDeleteகொஞ்சநேரம் கழித்து எனக்குப் பிடித்த பாடல்களுடன் வருகிறேன்.
நல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள்
ReplyDeleteசூப்பர் விஷயம்....;))
ReplyDeleteவாழ்த்துக்கள் ;)
கட்டிலுக்கும் கீழே காவலிருப்பாள் மீனாட்சி
ReplyDeleteதொட்டிலுக்கும் கீழே துணையிருப்பான் சொக்கலிங்கம்!
தூக்கம் வருதே
ReplyDeleteதொட்டில் இல்லையே
:)
அருமையான பாடல் கவிநயா.
என் பேத்திக்குப் பாட ஒரு பாட்டு கிடைத்தது.
நான் வரவீணா பாடினால் அது விழித்துக் கொண்டு விளையாட ஆரம்பிக்கிறது:)
நல்ல ஆரம்பம்...எனக்கு எம்.எல்.வி அம்மா பாடிய தாலாட்டுப் பாடல்கள் சில பாடமாச்சு....அப்பறமா மீண்டும் வரேன்.
ReplyDelete//வரவீணா பாடினால் அது விழித்துக் கொண்டு விளையாட ஆரம்பிக்கிறது//
ஆகா, வல்லியம்மா ரெக்கார்ட் பண்ணிப் போடுங்க....
கே.ஆர்.எஸ், எங்கிருந்தாலும் வந்து அம்மா பாட ஏது செய்யவும்.
வரவீணா பாடினா தூக்கம் போகத்தான் செய்யும் இல்லையா வல்லியம்மா?...கொஞ்சம் கவனிச்சுக்கிட்டே இருங்க, திடிரென, குழந்தை புஸ்தத்தை எடுத்து படிக்க ஆரம்பிச்சுடப் போகுது :-)
ஆஹா, நல்ல முயற்சி. தொடர்ந்து தாலாட்டுப் பாட வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅது எப்படிங்க உங்க தாத்தா பாட்டி நீங்க குழந்தயா இருந்தப்போ பாடினத
ReplyDeleteநினவு வச்சுகினு பாடறீக !!
தாத்தாவுக்கு அவரு பேரக்குழநதைகனா உசிரு.
எப்படி பாடறாருன்னு கேட்கவேண்டாமா ?
எங்க வீட்டு வ்லைப்பதிவுக்கு வந்தீங்கன்னா ஒரு தஞ்சாவூர்
டிகிரி காபி சாப்பிட்டுகிட்டே கேட்கலாம்.
http://menakasury.blogspot.com
மீனாட்சி பாட்டி.
தஞ்சை.
www.youtube.com/PichuPeran
http://arthamullavalaipathivugal.blogspot.com
//vallinarasimhan said:
ReplyDeleteதூக்கம் வருதே
தொட்டில் இல்லையே
:)
அருமையான பாடல் கவிநயா.
என் பேத்திக்குப் பாட ஒரு பாட்டு கிடைத்தது.
நான் வரவீணா பாடினால் அது விழித்துக் கொண்டு விளையாட ஆரம்பிக்கிறது:)//
intha ragathile konjam try pannungalen
http://www.youtube.com/watch?v=ekWoMGk2VbE
subbu rathinam
thanjai.
கவிநயா said://ஹலோ! தூங்கிட்டீங்களா! தாலாட்டு முடிஞ்சிருச்சுங்கோ!! :)//
ReplyDeleteஎழுப்பி விட்டதற்கு நன்றி கவிநயா! சுகமாகத் தூங்கி விட்டிருந்தேன்!
சுகமான தாலாட்டு, கவிநயா....
ReplyDeleteஎனக்கு தெரிஞ்ச, ரொம்ப பிடிச்ச தாலாட்டு இதோ..
புன்னை மரத்து கொம்பை வளைத்து
ஒரு தொட்டில் தொங்குது
அதில் பூவினை போல மேனி படைத்த
குழந்தை தூங்குது
என்ன நினைத்து காலை உதைத்து
பாப்பா சிரிக்குது
அதன் சின்ன சின்ன
மணி கண்ணுக்குள்ளே
ஒரு நாடகம் நாடகம் நடக்குது
சலசலன இலை அசைந்து
சாடை காட்டுது
உடல் சிலுசிலுக்கும்
தென்றல் தவழ்ந்து
தொட்டிலை ஆட்டுது!
-மீனா
எஸ்.கே அண்ணா, விஜி, கோபிநாத், அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி!
ReplyDelete//கட்டிலுக்கும் கீழே காவலிருப்பாள் மீனாட்சி
ReplyDeleteதொட்டிலுக்கும் கீழே துணையிருப்பான் சொக்கலிங்கம்!//
ஆமா, ஐயா. அந்த தாலாட்டும் அப்புறமா போடறதா இருக்கேன் :)
வல்லியம்மா, உங்க பேத்தி இந்த தாலாட்டுக்கு தூங்கறாளா இப்ப? :)
ReplyDelete//திடீரென, குழந்தை புஸ்தத்தை எடுத்து படிக்க ஆரம்பிச்சுடப் போகுது :-)//
நல்லா சொன்னீங்க மௌலி! :) அப்புறம் அவளே தாலாட்டும் பாடிக்க வேண்டியதுதான் :)
//எங்க வீட்டு வ்லைப்பதிவுக்கு வந்தீங்கன்னா ஒரு தஞ்சாவூர்
ReplyDeleteடிகிரி காபி சாப்பிட்டுகிட்டே கேட்கலாம்.//
கேட்டேன் பாட்டி; ஆனா டிகிரி காப்பி கிடைக்கலயே :(
//http://www.youtube.com/watch?v=ekWoMGk2VbE//
நன்றி ஐயா. வழக்கம் போல இசை கூட்டி அழகூட்டி விட்டீர்கள்!
வாழ்த்துகளுக்கு நன்றி, சதங்கா!
ReplyDelete//எழுப்பி விட்டதற்கு நன்றி கவிநயா! சுகமாகத் தூங்கி விட்டிருந்தேன்!//
ReplyDeleteஎழுந்து, மறக்காம பின்னூட்டமிட்டதுக்கு நன்றி, ராமலக்ஷ்மி! :)
அடடா, சூப்பர் தாலாட்டை இங்கே பகிர்ந்துகிட்டதுக்கு மிக்க நன்றி, மீனா!
ReplyDeleteநானும் இப்படித் தொகுக்கணும் என்று சமீப காலமாக நினைத்து வந்ததுண்டு. சிலவற்றை சேமித்தும் வைத்திருந்தேன். ஆனால், அவை அவ்வளவு நன்றாக இல்லாததால் விட்டு விட்டேன்.எனவே, தற்போது தங்கள் முயற்சியைக் காண ஆனந்தம்!
ReplyDeleteஉங்க ஆனந்தத்தைக் கண்டு எனக்கும் ஆனந்தம், ஜீவா! மிக்க நன்றி!
ReplyDeleteகிரேட் எல்லாம் ஒன்னுமில்லை அக்கா. நான் எதைப் பாடுனாலும் தூக்கம் வரும்; அதனால எல்லாமே நான் பாடுனா தாலாட்டு தான். :-) சமய இலக்கியம்னா எனக்கு பிடிச்ச மாதிரியெல்லாம் பாடலாம். சினிமா பாட்டுன்னா நான் பாடி கொலை செய்றதைக் கேட்டு என் பொண்ணே எந்திரிச்சு அடிப்பா. அவங்க அம்மா 'ஐயோ ஐயோ'ன்னு அழுவாங்க. அதனால தான் எதுக்கு வம்புன்னு சமய இலக்கியங்களா எடுத்துப் பாடிர்றது. :-)
ReplyDeleteஇந்தப் பாட்டை மனப்பாடம் செய்ய முயல்கிறேன்.
குமரா, உங்களுக்கு ரொம்ப தன்னடக்கம்னு தெரியுமே! நீங்க என்ன சொன்னாலும் எனக்கு க்ரேட்தான்!
ReplyDelete//எல்லாமே நான் பாடுனா தாலாட்டு தான்//
:))
கொப்புக்கனியே கோதுபடா மாங்கனியே ஆக்கினைகள் என்றெல்லாம் 'சொல் ஒரு சொல்'லில் வர வேண்டிய சொற்கள் நிறைய இருக்கின்றன அக்கா இந்தத் தாலாட்டில். :-)
ReplyDelete//கொப்புக்கனியே கோதுபடா மாங்கனியே ஆக்கினைகள் என்றெல்லாம் 'சொல் ஒரு சொல்'லில் வர வேண்டிய சொற்கள் நிறைய இருக்கின்றன அக்கா//
ReplyDeleteஆம் குமரா. நானே சொல்லணும்னு நெனச்சேன். எனக்குமே உள்ளுணர்வுக்கு பொருள் புரியுமே தவிர மற்றவங்களுக்கு புரியற மாதிரி எடுத்துச் சொல்லும் திறனில்லை :(
ஆனா நீங்க இருக்கும்போது எனக்கென்ன கவலை! :) சீக்கிரமே "சொல் ஒரு சொல்"லில் எதிர்பார்க்கிறேன்... :)
கவிநயா! மிக அற்புதமான தாலாட்டுப் பாடலைப் பதிவு செய்திருக்கிறீர்கள். தங்களை எப்படிப் பாராட்டி (உரை நடையில் ) எழுதுவது என்று எனக்குத் தெரியவில்லை. ஆகையால் எனக்குத் தெரிந்த வெண்பாவில் பாடிவிடுகிறேன்.
ReplyDeleteபல்லாண்டு நீவாழப் பண்பார்ந்த பைந்தமிழின்
சொல்லாண்டுப் பாடுகிறேன் தூயவளே! -இல்லாண்டு;
செய்யும் தொழிலாண்டு; சேரும் புகழாண்டு
வையத்துள் வாழ்வாங்கு வாழ்க! .அகரம்.அமுதா
ஒரு அழகான வெண்பாவைக் கண்டு உளம் களிப்புற்றதை எப்படிச் சொல்வேன் !
ReplyDeleteஇதுபோன்ற மரபுக் கவிதைகள் நமது தமிழ் இலக்கியத்திற்கு வளம் ஈட்டும் என்பதில்
ஐயமுண்டோ ?
அக்கால வெண்பா நடையில் உள்ள இப்பாவிற்கு அக்கால தமிழ்ப்பண்ணில்
மெட்டு போட்டு பாட முயற்சித்து உள்ளேன்.
http://www.youtube.com/watch?v=Ar_3GTJHeDo
அகரம் அமுதா அவர்களுக்கு எனது ஆசிகள்.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://arthamullavalaipathivugal.blogspot.com
வாங்க, வெண்பா புலவரே! எனக்கு சுவாசம் மாதிரி உங்களுக்கு வெண்பா போல் இருக்கிறது! எவ்வளவு அருமையாக வெண்பா உங்கள் சொல் கேட்கிறது! எனக்கு ஒரு வெண்பா எழுதவே நீ...ண்ட நாளாகும். இல்லாண்டு, தொழிலாண்டு, புகழாண்டு... அடடா, உங்கள் ஒரு வெண்பாவைப் புகழவே பல்லாண்டு ஆகிவிடும் போல் இருக்கிறது! :) வருகைக்கும் வெண்பா வாழ்த்துக்கும் மனம் கனிந்த நன்றிகள்!
ReplyDelete//ஒரு அழகான வெண்பாவைக் கண்டு உளம் களிப்புற்றதை எப்படிச் சொல்வேன் !//
ReplyDeleteஐயா, அவர் வெண்பா எழுதும் வேகத்துக்கு என்னால் பேசக் கூட முடியாது! அவ்வளவு சரளமாக உடனுக்குடன் எழுதுகிறார்!
வெண்பா வாழ்த்தை உங்கள் இசையமைப்பில் கேட்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி, உங்களுக்கு!
///எனக்கு ஒரு வெண்பா எழுதவே நீ...ண்ட நாளாகும்///
ReplyDelete///ஐயா, அவர் வெண்பா எழுதும் வேகத்துக்கு என்னால் பேசக் கூட முடியாது! அவ்வளவு சரளமாக உடனுக்குடன் எழுதுகிறார்!///
அடக்கத்தால் கூறுகிறீர் ஆம்கவிந யாநம்
பழக்கத்தால் செய்வதுவெண் பா!
///அக்கால வெண்பா நடையில் உள்ள இப்பாவிற்கு அக்கால தமிழ்ப்பண்ணில்
மெட்டு போட்டு பாட முயற்சித்து உள்ளேன்.///
இசைகோர்த்தென் வெண்பாவை ஈண்டளித்த சுப்பின்
இசையோங்க வேண்டும் இனிது!
இரண்டாமடியில் உள்ள இசையென்ற சொல் புகழைக் குறிக்கிறது.
ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர்
ReplyDeleteதோற்றம் இலக்குப்பொறை
ஈதல் இசைபட வாழ்தல் அது அல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு
இசை எனும் சொல் புகழையும் குறிக்கும்.
இயலுக்கும் நாடகத்திற்கும் நடுவிலும் நிற்கும்.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://vazhvuneri.blogspot.com
1, ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்களும்
ஆங்கில மொழிபெயர்ப்புடன் ஆன் லைனில்
இனிதாய் ஒரு வெண்பா பாட
இலக்கணம் பயில இங்கே செல்லவும்.
ஈண்டு படிகள் உள்ளன.
2. கவினயாவின் (viduthalai)கதை கேட்டு
கண்கள் கலங்கின.
காலங்கள் மாறினும்
கதை அதுவே தொடர்கிறது.
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ,
ReplyDeleteநல்ல பதிவு
நன்றி, சுப்புரத்தினம் ஐயா. இணைப்புக்கும், 'விடுதலை' பற்றிய கருத்துக்கும்!
ReplyDeleteஅகரம்.அமுதாவும் இங்கே வெண்பா பாட பயிற்றுவிக்கிறார்:
http://venbaaeluthalaamvaanga.blogspot.com/
வருக, அதிஷா! முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி!
ReplyDeleteநல்ல பதிவு :-)
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=hOFfls7TyMo
இங்கே பாம்பே ஜெயஷ்ரீ பாடின அழகான ஒரு பாட்டு இருக்கு. related videos லேயும் நிறைய நல்ல தாலாட்டுப் பாடல்கள் இருக்கு.
வருக தேவதையே! உங்க பேரை எப்படி தமிழ்ல எழுதறது?
ReplyDeleteநீங்க தந்த சுட்டி ரொம்ப அருமை. பாடல் மட்டுமில்லை, படங்களும் கொள்ளை அழகு! மிக்க நன்றி!
நல்ல பதிவுங்க கவி..
ReplyDeleteபாடல் அழகு!
வாங்க கோகுலன்! நன்றி! :)
ReplyDelete