Wednesday, June 4, 2008

விடுதலை

உணர்வுக் குவியலான இதைப் போன்ற கதைகளை, கவிதைகளை இட ஒரு தயக்கம் உண்டு... ஆனால் பதிவுலகின் செல்லப் பிள்ளையாக வலம் வருகின்ற அன்புத் தம்பி ரிஷானின் விருப்பத்துக்கு இணங்கி, இதனை இடுகிறேன்... இந்தக் கதை முன்பு "திசைகளில்" வெளியானது... கதை, கவிதை, கட்டுரை, நகைச்சுவை எனப் பலவாறாகக் கலக்கும் ரிஷானுடைய இந்தக் கதையையும் படித்துப் பாருங்கள்...

***

விடுதலை

அவள் நின்ற இடத்திலேயே உறைந்து போய் நிற்கிறாள். தொலைபேசியைப் பிடித்திருந்த கை அதனுடனேயே ஒட்டிக் கொண்டு விட்டது போல் இருக்கிறது. ஏதாவது ஒரு உணர்ச்சிக்காகக் காத்திருக்கிறாள். வருத்தம், கவலை, அழுகை, ஏன் மகிழ்ச்சிக்கும் கூடத்தான். ஆனால் ஒன்றுமே வரவில்லை. மனசு மரத்துப் போயிருக்கிறது. "மிஸஸ். சங்கர், ஹலோ, ஏதாவது பேசுங்க மேடம்..." தொலைபேசியின் மறு முனையிலிருந்த குரல் சற்றே பதட்டமாய் ஒலிக்கிறது. "ஒ...ஒண்ணும் இல்ல சார். எ...எந்த மருத்துவமனைன்னு சொன்னீங்க?" வார்த்தைகள் கொஞ்சம் உடைந்து வருகின்றன. "விஜயா ஹாஸ்பிடல், மேடம்". "ரொம்ப நன்றி, சார்", தொலைபேசியை அதன் இடத்தில் மெதுவாக வைக்கிறாள்.

எல்லாமே கனவு மாதிரி இருக்கிறது. அன்று காலையில் நடந்ததை மனசு திரும்பிப் பார்க்கிறது. அவள் குளியலறையில் இருக்கிறாள். அவளுடைய அடைக்கல வாசஸ்தலம். சக்தி அனைத்தையும் பிரயோகித்து உடம்பு பூராவும் தேய்க்கிறாள். தோலே சிவந்து புண்ணாகி உரிந்து விடும் போலிருக்கிறது. அப்படியும் அவளுக்கு சுத்தமான திருப்தி இல்லை. முதல் நாள் இரவின் அடையாளங்களையும் சேர்த்துக் கழுவுதல் அத்தனை சுலபமாக இல்லை. அழுகையும் கையாலாகாத ஆத்திரமுமாக அவள் தேய்க்கையில், அவள் கணவன் சங்கரின் குரல் அவளைத் திடுக்கிட வைக்கிறது: "ஏய், என்னடி பண்ற? நாந்தான் இங்க வேலக்குப் போறவன். எனக்கு லேட்டாகுது. இப்ப வெளிய வரப் போறியா இல்லயா?" தூக்கி வாரிப் போட, குளியலைக் கூட முடிக்காமல் அப்படியே அரைகுறையாக சேலையைச் சுற்றிக் கொண்டு சங்கர் கதவை உடைக்கும் முன் அவசரமாக வெளியே வருகிறாள். வேக வேகமாக அவனுக்குக் காலை இட்லியும், மதியச் சாப்பாடும் தயார் பண்ணுகிறாள். அவன் வந்து இட்லியைப் பிட்டுச் சட்னியில் தோய்த்து ஒரு வாய் வைக்கிறான். அவ்வளவுதான், தட்டு அவள் முகத்தைக் குறி வைத்துப் பறக்கிறது. "ஏய், என்ன சமையல்லயே என்னக் கொன்னுடலாம்னு திட்டமா? உன் சமையலும் உன் மூஞ்சி மாதிரியே இருக்கு", உறுமியபடி அதே கோபத்துடன் ஸ்கூட்டரை உதைத்துக் கிளப்புகிறான். தினமும் நடக்கும் கதைதான் என்றாலும், அவளுக்கு அழுகையும், ஆத்திரமும் தினமும் போலவே கொப்பளிக்கிறது. அணைக்கு அடங்காமல் திமிறிக் குதிக்கும் புது வெள்ளம் போல் அடி வயிற்றைக் கீறிக் கொண்டு பொங்குகிறது கோபம். "பாவி, நீ அப்படியே ஏதாவது விபத்தில சிக்கித் தொலைய மாட்டியா?" .

அவளுடைய தினசரிச் சாபம் இன்றைக்குப் பலித்து விட்டது போலிருக்கிறது. அவன் ஸ்கூட்டருடன் தண்ணீர் லாரி ஒன்றின் அடியில் சிக்கி விட்டானாம். விஜயா மருத்துவமனையில் சீரியஸான நிலைமையில் இருக்கிறானாம். ஒரு காவல் அதிகாரிதான் அவளுக்குத் தொலைபேசியில் விஷயத்தைத் தெரிவித்தார். அவளுக்கு என்ன நினைப்பது என்று தெரியவில்லை. உடை மாற்றிக் கொண்டு ஆஸ்பத்திரிக்குக் கிளம்புகிறாள். அவனை ஐ.சி.யு - வில் வைத்திருக்கிறார்கள். அவளை உள்ளே அனுமதிக்கவில்லை. அதுவும் அவளுக்கு நல்லதாகவே போயிற்று. அவனைக் கண்ணாடிக் கதவின் வழியாகப் பார்க்கிறாள். அவனைச் சுற்றிலும் பலவித உபகரணங்கள். அடையாளமே தெரியாத அளவு உடல் முழுக்கக் கட்டுகள். அவன் கோமாவில் இருப்பதாகவும், அதிலிருந்து மீண்டு வருவானா என்று இப்போதைக்குச் சொல்ல முடியாது என்றும் டாக்டர் சொல்கிறார். அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. டாக்டரும் அதைக் கவனித்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை.

ஆஸ்பத்திரியில் அவள் செய்யக் கூடியது எதுவும் இல்லை. அதனால் அவள் வீட்டுக்குத் திரும்பிப் போகிறாள். அவனுடைய அக்காவைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்கிறாள். அக்காவும் பதறிப் போகிறாள். குழந்தைகள் பள்ளியில் இருக்கிறார்கள், உடனே வர முடியாது என்று வருந்துகிறாள். அவள் வந்தாலும் செய்யக் கூடியது ஒன்றும் இல்லை என்று இவள் புரிய வைக்கிறாள். தானே சமாளித்துக் கொள்வதாகவும், ஏதாவது முன்னேற்றம் இருந்தால் மறுபடி தெரிவிப்பதாகவும் சொல்கிறாள்.

நேரம் ஆக ஆக அவளுக்கு நிலைமை புரிவது போல் இருக்கிறது. விடுதலை உணர்வு இலேசாக எட்டிப் பார்க்கிறது. இனி மணிக்கொரு தரம் தொலைபேசி ஒலிக்காது - அவள் வீட்டில்தான் இருக்கிறாளா இல்லையா என்று பார்க்க. அவள் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் போகலாம். யாரிடம் வேண்டுமானாலும், எவ்வளவு நேரமானாலும் பேசலாம். ஒவ்வொரு இரவும் நரகம் அனுபவிக்கத் தேவையில்லை. மனதைக் குத்திக் கிழிக்கும் வார்த்தைகளையும், உடலை இரணமாக்கும் தாக்குதல்களையும் எதிர் கொள்ள வேண்டியதில்லை.

இவ்வளவு மோசமான மனிதனுடன் ஏன் இன்னும் வாழ்கிறாள் என்று அவளுக்கே புரியவில்லை. அவளுக்குக் கஷ்டப்பட்டுத் திருமணம் முடித்து வைத்த அவளுடைய பெற்றோர் கூட இப்போது உயிருடன் இல்லை. போன வருடம்தான் ஒருவர் பின் ஒருவராக இறந்து விட்டார்கள். குழந்தையும் இல்லை. பிறகு ஏன்? படுக்கையில் படுத்த வண்ணம் பலவற்றையும் சிந்திக்கிறாள். இப்படியெல்லாம் நினைத்துப் பார்க்க இது வரை எங்கே சந்தர்ப்பம் கிடைத்தது? அவனையும், அவன் கோபத்தையும் சமாளிப்பதிலேயே எல்லா சக்தியும் செலவழிந்து விட்டது. தன்னுடைய சாபம் பலித்து விட்டது குறித்து குற்ற உணர்வோ, வருத்தமோ இருக்கிறதா என்று தன்னையே கேட்டுப் பார்க்கிறாள். எதுவும் இல்லை. அவளுக்கே கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. வெகு நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக குழந்தையைப் போல் தூங்குகிறாள்.

ஒரு வாரம் ஓடி விடுகிறது. தினமும் ஒரு முறை மருத்துவமனைக்குப் போய் அவனைப் பார்த்து விட்டு வருகிறாள். வீட்டின் அமைதி அவளுக்கு சீக்கிரத்தில் பழகி விடுகிறது. பிடித்தும் இருக்கிறது. திருமணமான மூன்று நீண்ட வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறாள். எதிர்காலத்தைப் பற்றியோ, மருத்துவச் செலவை எப்படிச் சமாளிப்பது என்பது போன்ற விஷயங்களைப் பற்றியோ இன்னும் எதுவும் யோசிக்கவில்லை.

அன்றைக்குக் காலையில் சூரியன் உதித்த பின்னும் தூங்கிக் கொண்டிருப்பவளைத் தொலைபேசி பிடிவாதமாக ஒலித்து எழுப்புகிறது. "ஹலோ?" தூக்கக் கலக்கத்துடன் ஒலிக்கிறது அவள் குரல். "மிஸஸ். சங்கர். எப்படி இருக்கீங்க? உங்களை எழுப்பிட்டேன் போல இருக்கு. மன்னிச்சிடுங்க", மறு முனையில் இதமாக ஒலித்த டாக்டரின் குரலைக் கண்டு கொள்கிறாள். "பரவாயில்லை. சொல்லுங்க டாக்டர்", கேட்கும் போதே "எதற்கு இந்தக் காலையில் கூப்பிடுகிறார்?" என்ற எண்ணம் எழ, மூச்சு விடக் கூட மறந்து அவர் பதிலுக்குக் காத்திருக்கிறாள். "உங்க மேலயும் அவர் வாழ்க்கை மேலயும் உங்க கணவர் எவ்வளவு ஆசை வச்சிருக்கார்னு இப்பதான் தெரியுது, மேடம். இன்னிக்குக் காலைல உங்க கணவருக்கு நினைவு திரும்பிடுச்சு. கண் விழிச்சதும் உங்களத்தான் கேட்டார்", டாக்டர் உற்சாகமாகப் பேசிக் கொண்டே போகிறார்.

அவள் நின்ற இடத்திலேயே உறைந்து போய் நிற்கிறாள்.


-- கவிநயா

11 comments:

  1. அன்பின் கவிநயா,

    மிகவும் அருமையான ஒரு சிறுகதை.இதனைப் பதிவிட ஏன் தயங்கினீர்களெனப் புரியவில்லை.

    அநேக இடங்களில் பெண்ணெனப் படுபவளின் பிறப்பினூடு ஆரம்பிக்கும் சந்தோஷமும் சுதந்திரமும் அவள் திருமணம்வரைதான்.

    கல்யாணத்திற்குப் பிறகு அவளின் ஒவ்வொரு அடிச் சுவடும் கணவனின் தீர்மானங்களிலேயே நிறைவேற்றப்படவேண்டியிருக்கிறது.

    அதிலும் இதுபோன்றதொரு சந்தேகக் கணவன் வாய்த்திட்டால்..?

    அவன் வாய்த் திட்டாலேயே தினம் தினம் செத்துமடிவாள் பேதைப்பெண்.

    விட்டு விடுதலையாகுமெண்ணம் தோன்றாது.அதிலும் வழிவழியாய்த் தொடரும் தாய்மை அவளது மனதை இழுத்துப் பிடிக்கும்.

    கதை அருமை.கதையின் இறுதியில் கணவனின் தேடல் சந்தேகக் கண் கொண்டோ என எண்ணச் செய்கிறது.

    தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி.
    இது போன்ற கதைகளினூடு வாசகர்கள் மத்தியில் நீண்ட காலம் நெஞ்சினில் வாழ்வீர்கள்.

    (எனது சிறுகதைக்கான இணைப்பையும் வழங்கியுள்ளமைக்கு நன்றி சகோதரி :) )

    ReplyDelete
  2. கவிநயா,

    கதையின் ஓட்டம் கடைசி வரை என்ன என்ன என சிந்திக்க வைத்தது உண்மை. மிஸஸ் சங்கர் போல் நிறைய பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். விடுதலை கொடுத்து, கடைசியில் எடுத்தது நல்ல twist.

    ReplyDelete
  3. கவிநயா தங்கள் கதையும், ரிஷானின் விமர்சனமும் மிக அருமை. எத்தனை பேர் பின்னூட்டமிட்டாலும் சொல்ல முடியாத, கதையின் அத்தனை அருமைகளையும் ரிஷான் அழகுறச் சொல்லி விட்டார். இனி வருபவர்களுக்கு அவரை வழிமொழிவதைத் தவிர வேறு வழியில்லை!

    ReplyDelete
  4. முடிவு மட்டும் வேறாகினும், ரிஷானின் 'எனக்கே எனக்கானதாக மட்டும்' என்ற கவிதையும் இதே கருத்தைக் கொண்டதென்பது என் எண்ணம். தாங்கள் சுட்டிய ரிஷானின் கதையை இன்னும் படிக்கவில்லை. கண்டிப்பாக படித்து விடுகிறேன்.

    ReplyDelete
  5. //"உங்க மேலயும் அவர் வாழ்க்கை மேலயும் உங்க கணவர் எவ்வளவு ஆசை வச்சிருக்கார்னு இப்பதான் தெரியுது, மேடம்.//

    ஏன்?்ஈண்டும் நரகமாக்க அவள் இருக்காளா எனத் தெரிந்துகொள்ள[ல்ல]வா?

    இப்படித்தான் ஏமாந்து போகிறார்கள் பெண்கள்

    முடிவு இன்னும் விளங்கவில்லை!

    ஒருவேளை அதுதான் கதையின் சிறப்போ!

    ReplyDelete
  6. //கல்யாணத்திற்குப் பிறகு அவளின் ஒவ்வொரு அடிச் சுவடும் கணவனின் தீர்மானங்களிலேயே நிறைவேற்றப்படவேண்டியிருக்கிறது.//

    உண்மை! மிகவும் உண்மை!

    //வாய்த்திட்டால்..?
    அவன் வாய்த் திட்டாலேயே //

    :))

    //அதிலும் வழிவழியாய்த் தொடரும் தாய்மை அவளது மனதை இழுத்துப் பிடிக்கும்.//

    எப்படி இத்தனை சின்ன வயதில் இவ்வளவு ஆழமாகச் சிந்திக்கிறீர்கள் என்பது எனக்கு எப்போதுமே வியப்பளிக்கும் விஷயம்!

    மிக்க நன்றி, ரிஷான்!

    ReplyDelete
  7. //கதையின் ஓட்டம் கடைசி வரை என்ன என்ன என சிந்திக்க வைத்தது உண்மை.//

    வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி, சதங்கா!

    ReplyDelete
  8. //கதையின் அத்தனை அருமைகளையும் ரிஷான் அழகுறச் சொல்லி விட்டார்//

    என்று ரிஷானின் அருமையை நீங்களும் சொல்லி விட்டீர்கள், ராமலக்ஷ்மி! அவருடைய 'எனக்கே எனக்கானதாக மட்டும்' கவிதை பற்றி நீங்கள் சொன்னதும் சரியே. உங்களுக்கு கதை பிடித்திருப்பது அறிந்து மெத்த மகிழ்ச்சி!

    ReplyDelete
  9. //முடிவு இன்னும் விளங்கவில்லை!//

    :)) ஆம் அண்ணா. கதையின் நாயகிக்கே விளங்கவில்லை, அவள் இனி என்ன செய்யப் போகிறாள் என்று!

    கதை வாசித்தமைக்கு நன்றி, அண்ணா!

    ReplyDelete
  10. ரிஷான் நான் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிவிட்டார். அப்படியே ஒத்துக் கொள்கிறேன். வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  11. வருகைக்கும், வாசிப்புக்கும், வழிமொழிந்தமைக்கும், நன்றி குமரா!

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)