ஆழ்ந்த தூக்கத்துக்கு போற நேரத்துல என்ன சொன்னாலும் மனசுல பதியுமாம். எங்கயோ படிச்சதுங்க. அதுக்குன்னு தரவெல்லாம் கேக்காதீங்க. தரத் தெரியாது, நமக்கு :) அதனாலதான் அந்தக் காலத்துல தூங்க வைக்கும்போது அருமையான தாலாட்டுகளையும், கதைகளயும் சொல்லித் தந்தாங்க. கதைகளை படிக்கிறதை விட சொல்லிக் கேக்க நல்லாருக்கும். அதை விட பாடிக் கேட்டா இன்னும் நல்லா மனசுல பதியும்தானே. குழந்தையா இருக்கும்போதே இப்படிக் கதைகளை மனசுல பதிய வைக்க தாலாட்டை விட சிறந்த யுக்தி எது!
வள்ளி தாலாட்டு கொஞ்சம் நீளம்தானுங்க. பொறுமையாப் படிங்க! பின்ன, குழந்தை தூங்கற வரை பாடறதுக்கு வேணுமில்ல? அதனாலதான் தாலாட்டெல்லாம் நீளமா இருக்குதுங்க! ஏதாச்சும் வார்த்தைக்கு அர்த்தம் தெரியலைன்னா, நம்ம குமரன்கிட்ட கேட்டுக்கலாம் :)
இதுக்கு முன்னாடி இட்ட "ஆரடிச்சா ஏனழுதாய்" தாலாட்டை இன்னும் படிக்காதவங்க இங்க படிக்கலாம்...
சரி சரி... நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருந்தா தாலாட்டக் கேக்காமயே தூங்கிடப் போறீங்க! இதோ தாலாட்டு:

வள்ளி தாலாட்டு
வள்ளி என்றால் வள்ளி மலைமேல் படரும் வள்ளி
கொடியில் கிடந்த வள்ளி கூவி அழும்போது…
வனத்துக் குறவர்களாம் மான்பிடிக்கும் வேடர்களாம்
குழந்தை குரல்கேட்டு குறவேடர் ஓடிவந்து
மதலை குரல்கேட்டு மான்வேடர் ஓடிவந்து
வாரியெடுத்து வண்ண மடியில் வைத்து
தூக்கியெடுத்து சொர்ண மடியில் வைத்து
மண்துடைத்து மடியில் வைத்து
வள்ளி என்ற பேருமிட்டு
வைத்தார் வனந்தனிலே…
உழக்குத் தினை விதைத்து வள்ளி உத்தமியை காவல் வைத்து
உத்தமியாள் காவலிலே ஓடிக் கிளிவிரட்டி
நாழி தினை விதைத்து வள்ளி நாயகியை காவல் வைத்து
நாயகியாள் காவலிலே நடந்து கிளிவிரட்டி
பதக்குத் தினை விதைத்து வள்ளி பசுங்கிளியை காவல் வைத்து
பசுங்கிளியாள் காவலிலே பாடி கிளிவிரட்டி
குறுணி தினை விதைத்து வள்ளி கொம்பனையாள் காவல் வைத்து
கொம்பனையாள் காவலிலே கூவி கிளிவிரட்டி
ஆலோலம் என்று சொல்லி வள்ளி அழகாய்க் கிளிவிரட்டி
எய்து கிளி விரட்டி வள்ளி இருந்தாள் பரண்மீது…
தினைப்புனமும் காத்து வள்ளி திகைத்து நிற்கும் வேளையிலே
வனத்திருக்கும் வேடரைப் போல் வந்தாராம் வேல்முருகர்
வண்டாடப் பூமலர வள்ளி வனங்காக்க கண்டாராம் வேல்முருகர்
கானக்குறவடிவேல் வள்ளி அழகுக்கும் வலதுகைத் தேமலுக்கும்
கன்னத்து மஞ்சளுக்கும் சுப்பையா கண்டாசை கொண்டாரோ
உட்கழுத்து மஞ்சளுக்கு சுப்பையா உள்ளாசைப் பட்டாரோ
கூந்தலழகுக்கு சுப்பையா குறவேசம் ஆனாரோ
தேனும் தினைமாவும் தெவிட்டாத வேலவரும்
பாலுந் தினைமாவும் பசியாற வந்தாராம் வள்ளியிடம்
தாகம் எடுக்குதென்று சாலங்கள் செய்தாராம்
நல்ல கிழவனைப்போல் சுப்பையா நடித்தாராம் தினைப்புனத்தில்…
ஆனை கொண்டு வந்தார் சுப்பையா
வள்ளி ஆரணங்கை மாலையிட்டார்
சிகப்பு வளையலிட்டார் சுப்பையா
வள்ளி தேன்மொழியை மாலையிட்டார்
பச்சை வளையலிட்டார் சுப்பையா
வள்ளி பசுங்கிளையை மாலையிட்டார்
கிள்ளு வளையலிட்டார் சுப்பையா
வள்ளி கிளிமொழியை மாலையிட்டார்…
வண்டாடும் தோகைமலை
வள்ளியம்மை வாழும்மலை
கைலாசநாதர் மலை
மானென்றும் வள்ளி
மயிலென்றும் சுப்பையா
தேனென்றும் தெய்வயானை
தென்பழனி வேலவரே!
***
தூங்கி எழுந்ததுக்கப்புறம் மறக்காம உங்க கருத்துகளைப் பகிர்ந்துக்கோங்க! :)
--கவிநயா