“வாங்கக்கா… பூ பறிக்கவா?”, வெள்ளைச் சிரிப்புடன் கேட்ட உஷாவிடம், “ஆமா உஷா. நீ வேலை இருந்தா பாரு. நாம்பாட்டுக்கு பறிச்சிட்டு கெளம்பறேன்…”, என்றாள் சுந்தரி.
“ஆமாங்க்கா. அடுப்புல குக்கர் வச்சிருக்கேன். தோ வர்றேன்…”, சுவாதீனமாக சொல்லியபடி உள்ளே சென்று விட்டாள் உஷா.
தோட்டத்தில் முல்லைக் கொடிக்குப் பக்கத்தில் நிரந்தரமாக சாற்றி வைத்திருந்த ஏணியில் ஏறியும், கீழே நின்றும், பலவிதமாக எட்டி, முடிந்த அளவு பறித்து முடித்த பின், “வரேன் உஷா”, என்று குரல் கொடுத்தபடி கிளம்பிய போது, உஷாவின் ஐந்து வயது வாண்டு அக்ஷயா ஓடி வந்தது… “நானும் வரேன் ஆண்ட்டி”, என்று.
வீட்டுக்குள் இவள் நுழையும் போதே கணவன் குமாரும் நுழைந்தான். “ம்..ம்…”, என்று மூச்சை இழுத்து வாசனையை அனுபவித்தான்.
“நீங்க ட்ரஸ் மாத்துங்க. அதுக்குள்ள காஃபி போட்டுர்றேன்…”, பூவை மேசை மீது வைத்து விட்டு அடுக்களைக்குள் நுழைந்தாள்.
இதற்குள் உஷாவின் வாண்டு அக்ஷயாவும், சுந்தரியின் வாண்டு மதுவும், வரவேற்பறை முழுக்க விளையாட்டு சாமான்களை கடை பரப்பியிருந்தார்கள். அறைக்குள் சென்று கணவனின் கையில் காஃபியை கொடுத்தாள்.
“பூ நெறய பூத்திருக்கு போலருக்கே…”, குமார் பேச்சுக் கொடுத்தான்.
“ஆமாங்க. கட்டறதுக்குள்ள விடிஞ்சிரும். அவ்ளோ இருக்கு”, குரலில் வெளிப்படையாக அலுப்பு தெரிந்தாலும், உள்ளூர இருந்த பெருமையும் சேர்ந்துதான் ஒலித்தது.
“உஷாகிட்ட கொஞ்சம் குடுத்திருக்கலாம்ல? நீயும் இத்தனை காலமா பறிக்கிற, அவங்களுக்கு ஒரு முறை கூட குடுக்கல. அவங்க ஏதும் நினைக்க மாட்டாங்களா?”
“நல்லாருக்கே… நாம வச்சு தண்ணி ஊத்தி கஷ்டப்பட்டு வளர்க்கிறது. நம்ம நேரம், கொடி பூரா காம்பவுண்டு சுவரை தாண்டி, பக்கத்து வீட்டுக்குள்ள போய் பூத்துக் குலுங்குது. எனக்கு பூன்னா உயிர்னு உங்களுக்கு தெரியாதா… அதெப்படி குடுப்பேன்?”
குமார் எதுவும் பதில் சொல்லும் முன் மது ஓடி வந்தது.
“அம்மா, என்னோட புது டாக்டர் செட் எங்கே? நானும் அக்ஷயாவும் விளையாட போறோம்”, என்றதும், உள்ளே இருந்த செட்டை எடுத்துக் கொடுத்து விட்டு அவளும் வந்து பூ தொடுக்க ஆரம்பித்தாள்.
பெரியவன் ட்யூஷன் போயிருக்கிறான். உஷாவுக்கு அக்ஷயாதான் பெரியவள். ஒன்றரை வயதில் இன்னொரு குட்டி பையன் இருக்கிறான், அவளுக்கு. அவள் கணவன் அடிக்கடி வேலை விஷயமாக வெளியூர் சென்று விடுவதால், இரண்டு சின்னக் குழந்தைகளையும் வைத்துக் கொண்டு திண்டாடுவாள். சுந்தரி அவ்வப்போது குழந்தையையும் பார்த்துக் கொள்வாள். “நீங்க இல்லைன்னா நான் என்ன செய்வேனோ தெரியலைக்கா”, என்பாள் உஷா, நன்றியுடன்.
திடீரென்று சப்தம் பெரிதாகவும், கவனம் சிதற, “என்ன சண்டை அங்கே?” என்று விசாரித்தாள்.
“ஆண்ட்டி, இனிமே நான் மதுவோட விளையாட மாட்டேன். அவ டாக்டர் செட்டை ஷேர் பண்ண மாட்டேங்கிறா. அவளே எப்பவும் டாக்டரா இருக்கா”, அழுகை கலந்த குரலில் குற்றப் பத்திரிகை வாசித்தாள், அக்ஷயா.
“மதூ! ஷேர் பண்ணிதான் விளையாடணும்னு தெரியாதா உனக்கு? அக்ஷயா உன் ப்ரெண்டுதானே? ஸ்டெதாஸ்கோப்பை அவகிட்ட குடு. அவ கொஞ்ச நேரம் டாக்டரா இருக்கட்டும்!”, கண்டிப்பான குரலில் அறிவித்தாள்.
“ஏம்மா, உஷா ஆண்ட்டியும் உன் ப்ரெண்டுதானே? நீ மட்டும் அவங்க கூட பூவை ஷேர் பண்ண மாட்டேங்கிறே?”
பூ தொடுத்துக் கொண்டிருந்த கை அப்படியே உறைந்தது.
சுதாரித்துக் கொண்டு, “சரி.. சரி.. பெரிய மனுஷி மாதிரி என்கூட வாதம் பண்ணாம ஒழுங்கா ஷேர் பண்ணி விளையாடு… அம்மா வேலை முடிச்சதும் அக்ஷயாவை அவ வீட்டில் விட்டுட்டு வரலாம்…”, உறுத்தும் மனசுடன் விறுவிறுவென்று பூவைக் கட்டி முடித்தாள்.
அஷயாவை விடப் போகையில், உஷாவின் கையில் அந்த பூப்பந்தை வைத்த போது, அவள் முகம் பூவுடன் போட்டி போட்டுக் கொண்டு அதை விட அதிகமாய் மலர்ந்தது.
“அக்கா… எல்லாமே எனக்கா? இவ்வளவு கஷ்டப்பட்டு பறிச்சு, இவ்வளவு நேரம் கட்டி, எனக்கே கொடுத்திட்டீங்களே… உங்களுக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ? இந்தாங்க… நீங்க கொஞ்சமாவது வச்சுக்கோங்க”, சந்தோஷத்தில் படபடவென்று பேசிக் கொண்டே, பாதியை வெட்டி அவளிடமே கொடுத்தாள், உஷா.
தோழியின் கள்ளமில்லா உள்ளத்தை கண்டு கொஞ்சம் நாணினாலும்,
சுந்தரிக்கு பூவோடு மனசும் சேர்ந்து இன்றைக்கு அதிகமாகவே மணத்தது!
--கவிநயா