Sunday, August 23, 2009

மலரும் மனமும்

“வாங்கக்கா… பூ பறிக்கவா?”, வெள்ளைச் சிரிப்புடன் கேட்ட உஷாவிடம், “ஆமா உஷா. நீ வேலை இருந்தா பாரு. நாம்பாட்டுக்கு பறிச்சிட்டு கெளம்பறேன்…”, என்றாள் சுந்தரி.

“ஆமாங்க்கா. அடுப்புல குக்கர் வச்சிருக்கேன். தோ வர்றேன்…”, சுவாதீனமாக சொல்லியபடி உள்ளே சென்று விட்டாள் உஷா.

தோட்டத்தில் முல்லைக் கொடிக்குப் பக்கத்தில் நிரந்தரமாக சாற்றி வைத்திருந்த ஏணியில் ஏறியும், கீழே நின்றும், பலவிதமாக எட்டி, முடிந்த அளவு பறித்து முடித்த பின், “வரேன் உஷா”, என்று குரல் கொடுத்தபடி கிளம்பிய போது, உஷாவின் ஐந்து வயது வாண்டு அக்ஷயா ஓடி வந்தது… “நானும் வரேன் ஆண்ட்டி”, என்று.

வீட்டுக்குள் இவள் நுழையும் போதே கணவன் குமாரும் நுழைந்தான். “ம்..ம்…”, என்று மூச்சை இழுத்து வாசனையை அனுபவித்தான்.

“நீங்க ட்ரஸ் மாத்துங்க. அதுக்குள்ள காஃபி போட்டுர்றேன்…”, பூவை மேசை மீது வைத்து விட்டு அடுக்களைக்குள் நுழைந்தாள்.

இதற்குள் உஷாவின் வாண்டு அக்ஷயாவும், சுந்தரியின் வாண்டு மதுவும், வரவேற்பறை முழுக்க விளையாட்டு சாமான்களை கடை பரப்பியிருந்தார்கள். அறைக்குள் சென்று கணவனின் கையில் காஃபியை கொடுத்தாள்.

“பூ நெறய பூத்திருக்கு போலருக்கே…”, குமார் பேச்சுக் கொடுத்தான்.

“ஆமாங்க. கட்டறதுக்குள்ள விடிஞ்சிரும். அவ்ளோ இருக்கு”, குரலில் வெளிப்படையாக அலுப்பு தெரிந்தாலும், உள்ளூர இருந்த பெருமையும் சேர்ந்துதான் ஒலித்தது.

“உஷாகிட்ட கொஞ்சம் குடுத்திருக்கலாம்ல? நீயும் இத்தனை காலமா பறிக்கிற, அவங்களுக்கு ஒரு முறை கூட குடுக்கல. அவங்க ஏதும் நினைக்க மாட்டாங்களா?”

“நல்லாருக்கே… நாம வச்சு தண்ணி ஊத்தி கஷ்டப்பட்டு வளர்க்கிறது. நம்ம நேரம், கொடி பூரா காம்பவுண்டு சுவரை தாண்டி, பக்கத்து வீட்டுக்குள்ள போய் பூத்துக் குலுங்குது. எனக்கு பூன்னா உயிர்னு உங்களுக்கு தெரியாதா… அதெப்படி குடுப்பேன்?”

குமார் எதுவும் பதில் சொல்லும் முன் மது ஓடி வந்தது.

“அம்மா, என்னோட புது டாக்டர் செட் எங்கே? நானும் அக்ஷயாவும் விளையாட போறோம்”, என்றதும், உள்ளே இருந்த செட்டை எடுத்துக் கொடுத்து விட்டு அவளும் வந்து பூ தொடுக்க ஆரம்பித்தாள்.

பெரியவன் ட்யூஷன் போயிருக்கிறான். உஷாவுக்கு அக்ஷயாதான் பெரியவள். ஒன்றரை வயதில் இன்னொரு குட்டி பையன் இருக்கிறான், அவளுக்கு. அவள் கணவன் அடிக்கடி வேலை விஷயமாக வெளியூர் சென்று விடுவதால், இரண்டு சின்னக் குழந்தைகளையும் வைத்துக் கொண்டு திண்டாடுவாள். சுந்தரி அவ்வப்போது குழந்தையையும் பார்த்துக் கொள்வாள். “நீங்க இல்லைன்னா நான் என்ன செய்வேனோ தெரியலைக்கா”, என்பாள் உஷா, நன்றியுடன்.

திடீரென்று சப்தம் பெரிதாகவும், கவனம் சிதற, “என்ன சண்டை அங்கே?” என்று விசாரித்தாள்.

“ஆண்ட்டி, இனிமே நான் மதுவோட விளையாட மாட்டேன். அவ டாக்டர் செட்டை ஷேர் பண்ண மாட்டேங்கிறா. அவளே எப்பவும் டாக்டரா இருக்கா”, அழுகை கலந்த குரலில் குற்றப் பத்திரிகை வாசித்தாள், அக்ஷயா.

“மதூ! ஷேர் பண்ணிதான் விளையாடணும்னு தெரியாதா உனக்கு? அக்ஷயா உன் ப்ரெண்டுதானே? ஸ்டெதாஸ்கோப்பை அவகிட்ட குடு. அவ கொஞ்ச நேரம் டாக்டரா இருக்கட்டும்!”, கண்டிப்பான குரலில் அறிவித்தாள்.

“ஏம்மா, உஷா ஆண்ட்டியும் உன் ப்ரெண்டுதானே? நீ மட்டும் அவங்க கூட பூவை ஷேர் பண்ண மாட்டேங்கிறே?”

பூ தொடுத்துக் கொண்டிருந்த கை அப்படியே உறைந்தது.

சுதாரித்துக் கொண்டு, “சரி.. சரி.. பெரிய மனுஷி மாதிரி என்கூட வாதம் பண்ணாம ஒழுங்கா ஷேர் பண்ணி விளையாடு… அம்மா வேலை முடிச்சதும் அக்ஷயாவை அவ வீட்டில் விட்டுட்டு வரலாம்…”, உறுத்தும் மனசுடன் விறுவிறுவென்று பூவைக் கட்டி முடித்தாள்.

அஷயாவை விடப் போகையில், உஷாவின் கையில் அந்த பூப்பந்தை வைத்த போது, அவள் முகம் பூவுடன் போட்டி போட்டுக் கொண்டு அதை விட அதிகமாய் மலர்ந்தது.

“அக்கா… எல்லாமே எனக்கா? இவ்வளவு கஷ்டப்பட்டு பறிச்சு, இவ்வளவு நேரம் கட்டி, எனக்கே கொடுத்திட்டீங்களே… உங்களுக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ? இந்தாங்க… நீங்க கொஞ்சமாவது வச்சுக்கோங்க”, சந்தோஷத்தில் படபடவென்று பேசிக் கொண்டே, பாதியை வெட்டி அவளிடமே கொடுத்தாள், உஷா.

தோழியின் கள்ளமில்லா உள்ளத்தை கண்டு கொஞ்சம் நாணினாலும்,
சுந்தரிக்கு பூவோடு மனசும் சேர்ந்து இன்றைக்கு அதிகமாகவே மணத்தது!


--கவிநயா

36 comments:

  1. தோழியின் கள்ளமில்லா உள்ளத்தை கண்டு கொஞ்சம் நாணினாலும்,
    சுந்தரிக்கு பூவோடு மனசும் சேர்ந்து இன்றைக்கு அதிகமாகவே மணத்தது!///

    கருத்தும் மணமாக இருக்கு!!

    ReplyDelete
  2. மலரும் மணமும் நிறைந்த பதிவு. பூக்களைக் கொடுப்பதே ஒரு பாக்கியம். அதுவும் நமக்குச் சொந்தமான பொருட்களைப் பகிர்ந்து கொள்வதில்

    அரிய இன்பம் அநேகம் கிடைக்கும்,.

    ReplyDelete
  3. //கருத்தும் மணமாக இருக்கு!!//

    நன்றிங்க தேவன் மாயம்.

    ReplyDelete
  4. //அதுவும் நமக்குச் சொந்தமான பொருட்களைப் பகிர்ந்து கொள்வதில்

    அரிய இன்பம் அநேகம் கிடைக்கும்.//

    உண்மைதான் வல்லிம்மா. மிக்க நன்றி.

    ReplyDelete
  5. \\அந்த பூப்பந்தை வைத்த போது, அவள் முகம் பூவுடன் போட்டி போட்டுக் கொண்டு அதை விட அதிகமாய் மலர்ந்தது.\\

    நல்லாயிருக்குக்கா ;))

    காலையில இந்த மலர்ந்த கதையோட போயி தூங்க போறேன் ;))

    ReplyDelete
  6. அட???? இப்படிக் கூட இருக்காங்களா என்ன?? அதுவும் பூக் கொடுக்காமல்??? ஆச்சரியம் தான். மதுரையிலே மல்லிகைப் பூக்கள் பூக்கும் காலங்களில் லட்சம் மல்லி, கோடி மல்லி எனக் கணக்கு வச்சு வீட்டுக்கு வீடு கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கொடுக்கிறதுண்டு. இத்தனைக்கும் விலைக்குத் தான் வாங்குவோம். மஞ்சளும், மல்லியும்னாலே மதுரை தான் நினைவில் வருது! :)))

    ReplyDelete
  7. //காலையில இந்த மலர்ந்த கதையோட போயி தூங்க போறேன் ;))//

    நல்லது கோபி... நல்லா தூங்குங்க! வாசிப்புக்கு நன்றி :)

    ReplyDelete
  8. //அட???? இப்படிக் கூட இருக்காங்களா என்ன?? அதுவும் பூக் கொடுக்காமல்???//

    தெரியலை அம்மா. ஆனால் மனிதர்கள் பலவிதம். அத்துடன், நான் சொல்ல வந்த கருத்துக்கு பூவை உதாரணமா எடுத்துக்கிட்டேன், அவ்ளோதான் :)

    //மதுரையிலே மல்லிகைப் பூக்கள் பூக்கும் காலங்களில் லட்சம் மல்லி, கோடி மல்லி எனக் கணக்கு வச்சு வீட்டுக்கு வீடு கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கொடுக்கிறதுண்டு. இத்தனைக்கும் விலைக்குத் தான் வாங்குவோம்.//

    அப்படியா! நினைச்சாலே கமகமக்குது!

    //மஞ்சளும், மல்லியும்னாலே மதுரை தான் நினைவில் வருது! :)))//

    :)))

    ReplyDelete
  9. நானே கண்ணால பாத்திருக்கேன் கவிநயா. பெரியவங்க உதட்டால குழந்தைங்களுக்கு உபதேசம் பண்ணறதையும் அவங்களே அதுக்கு எதிர் மறையா நடந்துக்கறதும். நல்ல கருத்தை பூப்போலமென்மையா சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. //நானே கண்ணால பாத்திருக்கேன் கவிநயா. பெரியவங்க உதட்டால குழந்தைங்களுக்கு உபதேசம் பண்ணறதையும் அவங்களே அதுக்கு எதிர் மறையா நடந்துக்கறதும்.//

    ஆமாம் மீனா. ஊருக்குதான் உபதேசம் நமக்கில்லைன்னு நிறைய பேர் இருக்கத்தான் இருக்காங்க.

    கருத்துக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  11. நல்லாயிருக்கு

    ReplyDelete
  12. உங்களது கதையில் நடந்தது போலவே எங்களது வீட்டிலும் 1990ல் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

    பக்கத்து வீட்டு எலுமிச்சை கொடி மரம் நன்றாக தளைத்து காம்பெளன்ட் சுவரைத் தாண்டி
    எங்கள் வீட்டுப்பக்கத்திலும் பரவியிருந்தது. அவ்வப்போது நல்ல எலுமிச்சை காய்க்கும்.
    அந்தப்பக்கம் ஒரு முக்காற்பங்கு இருந்தாலும் இந்தப்பக்கம் ஒரு காற்பங்கு இருக்கத்தான் செய்தது.

    கொடியில் முட்கள் அதிகம். பறிப்பது கடினம். அந்த வீட்டில் இருந்தவர்க்ளால் அதைப்பறித்து எடுக்க முடியவில்லையே என்று சில எலுமிச்சை பழங்களை எடுத்து அவர்களிடம் கொடுக்கச்சென்றேன். ஏது இவையெல்லாம் என்றார்கள்.
    உங்கள் வீட்டு கொடி தான். இந்தப்பக்கமும் கொஞ்சம் காய்த்திருக்கிறது. அதைப்பறித்து, உங்களிடம் கொடுத்துவிட்டுப்ப் போகலாம் என்று வந்தேன் என்றேன்.

    அப்படியா என்றார்கள். எண்ணிப்பார்த்தார்கள். ஒரு பத்து இருந்தது. பத்து தானா என்றார்கள். இன்னமும்
    இருக்கிறது. என்றேன்.

    இவ்வாறாக, வாரத்திற்கொருமுறை அவர்களுக்கு பறித்து கொடுத்து வந்தேன். கொடுக்கும்போதெல்லாம்
    அதை எண்ணிப்பார்த்தார்கள். அவர்கள் முகத்தில் ஒரு சந்தேகக் குறி இருப்பதை நான் காணத்தவறியதில்லை.
    என் மனைவி கூட சொன்னாள்: " நீங்கள் ஏன் சிரமப்படுகிறீர்கள் ? நாம் ஏதோ எடுத்துக்கொள்கிறோமோ என்று
    அவர்கள் ஐயுறுவதுதான் நன்றாகத் தெரிகிறதே " நான் சொன்னேன்: : யாருக்குமே உபயோகமில்லாமல்
    போய்விடுகிறதே, அப்போது அதனால்தான். "

    அதே சமயம் அவர்கள் பக்கத்தில் காய்ப்பவற்றை அவர்கள் பறிப்பதில்லை.
    அவை ஐமபது அறுபது காய்ந்து போய் கீழே விழுந்து இருப்பது எப்போதும் போல் இருந்தது.

    அடுத்த இரண்டு வாரங்கள் நான் பறிக்கவும் இல்லை. அவர்களில் ஒருவர் கேட்டார்: " பறித்ததை கொடுக்கவில்லையே
    என்றார். " நான் பறிக்கவே இல்லையே " என்றேன். " அப்படியா ?" என்று சந்தேகக்கண்ணுடன் பார்த்தார்.
    இந்தப்பக்கம் வந்தும் பார்த்தார். காய்கள் இருப்பதையும் கவனித்தார்.

    அடுத்த வாரம் நாங்கள் வெளியூர் போய்விட்டு ஓரிரு நாட்கள் கழித்து திரும்பினோம்.
    எலுமிச்சை செடி நன்றாக வேரோடு வெட்டப்பட்டிருந்தது தெரிந்தது.
    அந்தப்பக்கம், இந்தப்பக்கம் எல்லாமே சுத்தம்.

    என் மனைவி ஒரு அர்த்தபுஷ்டியுடன் என்னைப் பார்த்தாள். சிரித்தாளோ என்றும் தோன்றியது.

    அடுத்த இரண்டு நாட்கள் கழித்து, அடுத்த வீட்டு வாசலில் ஒரே சத்தமாக இருந்தது. என்னவென்று
    வாசலுக்கு போனேன். அடுத்த வீட்டுக்காரர் காய்கறிக்காரனுடன் வாய்ச்சண்டை போட்டுக்கொண்டிருந்தார்.
    என்னவென்று ஒரு க்யூரியாசிடி மேலிட சென்றேன்.

    எலுமிச்சை பழம் ரூபாய் ஒன்றாம். ஒன்று தான் வேண்டுமாம். அது இவ்வளவு விலை சொல்கிறாயே
    நியாயமா என்று அவனிடம் கேட்டுக்கொண்டிருந்தார். என்னைப்பார்த்த உடன், " நான் மரத்தை வெட்டினது
    எத்தனை முட்டாள்தனம் என்று இப்பதான் தெரிகிறது " என்றார்.

    நான் ஏதோ சொன்னதைக் கவனித்து " என்ன சொல்கிறீர்கள்?" என்றார்.

    " அப்பவே தெரியும் " என்றேன்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  13. //“ஏம்மா, உஷா ஆண்ட்டியும் உன் ப்ரெண்டுதானே? நீ மட்டும் அவங்க கூட பூவை ஷேர் பண்ண மாட்டேங்கிறே?”//

    இந்த 'மாரலை'ச் சொல்வது தான் குறி.
    அதை நோக்கித் தான் சரளமாக கதை முன்னேறுகிறது.. இருந்தாலும் இப்படி நேரடியாகப் போட்டு உடைத்திருக்க வேண்டாமோ என்று தோன்றுகிறது.
    இருந்தாலும், தாயைப் பார்த்துத்தான்
    பிள்ளையையும் தனது விளையாட்டை ஷேர் பண்ணவில்லை என்கிற இன்னொரு கோணமும் தெரிந்து, 'குழந்தைகளூக்கு 'ரோல் மாடல்'அவர்களின் பெற்றோர்களே; ஆக, பெற்றோர்களே,'கவனம்,கவனம்'
    என்று இன்னொரு நீதியும் புலப்படுகிறது.
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  14. //நல்லாயிருக்கு//

    மிக்க நன்றி ஆனந்த்.

    ReplyDelete
  15. வாங்க தாத்தா.

    //உங்களது கதையில் நடந்தது போலவே எங்களது வீட்டிலும் 1990ல் ஒரு நிகழ்ச்சி நடந்தது.//

    ஆத்தாடி! உங்களோடது இதை விட சூப்பர் கதை கணக்கால்ல இருக்கு! முடிவு உட்பட :) சுவையார்வமான பகிர்தலுக்கு மிக்க நன்றி தாத்தா.

    பி.கு. கதை 'கணக்கால்ல' அப்படின்னா என்னன்னு கீதாம்மாவுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்!

    ReplyDelete
  16. வாங்க ஜீவி ஐயா.

    //இருந்தாலும் இப்படி நேரடியாகப் போட்டு உடைத்திருக்க வேண்டாமோ என்று தோன்றுகிறது.//

    :))) வேற எங்கே எப்படி சொல்றதுன்னு தெரியல. இன்னும் கொஞ்சம் நேரம் செலவழிச்சிருக்கணுமோ? ஆனால், குழந்தைங்க அப்படித்தானே உடைப்பாங்க, சுற்றுப்புறம் பார்க்காம :)

    //இருந்தாலும், தாயைப் பார்த்துத்தான்
    பிள்ளையையும் தனது விளையாட்டை ஷேர் பண்ணவில்லை என்கிற இன்னொரு கோணமும் தெரிந்து, 'குழந்தைகளூக்கு 'ரோல் மாடல்'அவர்களின் பெற்றோர்களே; ஆக, பெற்றோர்களே,'கவனம்,கவனம்'
    என்று இன்னொரு நீதியும் புலப்படுகிறது.//

    அதே... அதே! மது அறைக்குள் வரும்போது அம்மா அப்பா பேசுவது அவள் காதில் விழுகிறது. அதை வைத்துதான் அதற்குப் பிறகு நடப்பவை...

    விரிவான கருத்துக்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  17. Jeevi said:
    //“ஏம்மா, உஷா ஆண்ட்டியும் உன் ப்ரெண்டுதானே? நீ மட்டும் அவங்க கூட பூவை ஷேர் பண்ண மாட்டேங்கிறே?”//

    //இந்த 'மாரலை'ச் சொல்வது தான் குறி.
    அதை நோக்கித் தான் சரளமாக கதை முன்னேறுகிறது.. இருந்தாலும் இப்படி நேரடியாகப் போட்டு உடைத்திருக்க வேண்டாமோ என்று தோன்றுகிறது.//

    உடைப்பது கவி நயா மேடம் அல்ல. அந்தக் குழந்தை. குழந்தைகளின் இயல்பான ஸ்வபாவம், தனக்கு சரியெனத் தோன்றுவதை, தோன்றிய
    உடனேயே சொல்வதுதான். இந்த இயல்பு குழந்தைகளின் ஐந்து அல்லது அதிக பட்சம் ஆறு வயது வரை மட்டுமே தொடரச் செய்யும்.
    அதற்குப் பிறகு தான், குழந்தைகள், 'எதை' ச் சொல்கிறார்களோ அதை ' எப்ப " சொல்லவேண்டும் என தீர்மானிக்கிறார்கள். இந்த செயல்
    இன்வாலன்டரி . குழந்தைக்கு பேசத்தெரிந்த உடன் துவங்கும் இந்த வாலன்டரி இமீடயட் ரெஸ்பான்ஸ் தருவது, கொஞ்சம் கொஞ்சமாக நின்று போய்
    விடுகிறது. இதற்கு அறிகுறி, குழந்தைகள் ஒரு ஆறு அல்லது ஏழு வயதில், பேசத் தயக்கம் காட்டுவது. பின் உடன் பேசாது இருப்பது அல்லது யாரிடம் பேசுவேண்டுமோ
    அவர்களிடம் மட்டுமே பேசுவது. இந்த ஸென்ஸ் ஆஃப் டிஸ்கிரிமினேஷன் குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு ஒரு அறிகுறி என்றும் கருதப்படுகிறது.

    நிற்க. உடைத்ததினால் தான், கதையே மூவ் ஆகிறது என நினைக்கிறேன். ஒரு வேளை அவள், அம்மா காதைக் கடித்திருந்தாலோ அல்லது
    அந்த ஃப்ரென்ட் கிட் போனப்பறம் சொல்லியிருந்தாலோ, அம்மாக்காரி, தான் செய்தது தான் சரி என்று நினைத்து வாளா இருந்திருக்கவும்
    கூடும்.

    உங்களுக்கு போர் அடிக்கவில்லை எனின் இன்னொரு நிகழ்ச்சியும், இதற்கு உதாரணமாகச் சொல்கிறேன்.
    என்னது ! கொட்டாவி கொட்டாவியா வர்றதா !!
    அப்ப சரி ! இன்னொரு தரம் சொல்கிறேன்.


    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  18. // ஆச்சரியம் தான். மதுரையிலே மல்லிகைப் பூக்கள் பூக்கும் காலங்களில் லட்சம் மல்லி,
    கோடி மல்லி எனக் கணக்கு வச்சு வீட்டுக்கு வீடு கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கொடுக்கிறதுண்டு.//

    கோணிப்பையிலே அல்லது சாக்கு மூட்டையிலே மஞ்சள் கொண்டு வந்து வீட்டுக்கு வீடு வாசலிலே நின்று கூப்பிட்டு கொடுக்கும்
    பழக்கம் நான் கடைசியா 1994 ல் தஞ்சாவூரில் பார்த்தேன். இப்ப காலம் மாறிப்போச்சு கீதாம்மா . இப்பல்லாம், வீட்டுக்கு வந்தவர்களுக்குக் கூட,
    மஞ்சள் கொடுப்பது ஒரு சில வீடுகளில் தான்.

    அந்த நாளும் வந்திடாதோ !

    மீனாட்சி பாட்டி.

    ReplyDelete
  19. //கோணிப்பையிலே அல்லது சாக்கு மூட்டையிலே மஞ்சள் கொண்டு வந்து வீட்டுக்கு வீடு வாசலிலே நின்று கூப்பிட்டு கொடுக்கும்
    பழக்கம் நான் கடைசியா 1994 ல் தஞ்சாவூரில் பார்த்தேன். இப்ப காலம் மாறிப்போச்சு கீதாம்மா . இப்பல்லாம், வீட்டுக்கு வந்தவர்களுக்குக் கூட,
    மஞ்சள் கொடுப்பது ஒரு சில வீடுகளில் தான்.//

    வந்துட்டு இருந்தாங்க 2006 வரைக்கும் ஒரு தம்பதியினர். கிழவிக்கு ஒரு கை இல்லை, அப்படியும் விடாமல் ஈரோடில் இருந்து எடுத்துவருவாள். இப்போத் தான் காணோம், என்ன ஆச்சோ? தெரியலை! மஞ்சள் கொடுக்கும் வழக்கம் இன்னிக்கும் உண்டு. லட்சம் மஞ்சள் கொடுக்கிறவங்களும் இருக்காங்க! கொடுத்து முடிச்சதும் போனால் கூட வாங்கிக் கொடுக்கிறாங்க. சிலர் மாற மாட்டாங்க! :))))))))))

    ReplyDelete
  20. அது சரி, மீனாக்ஷிப் பாட்டிக்கும் நான் கீதாம்மாவா?? ஓகே, பாட்டியே அப்ரூவ் பண்ணிட்டாங்க! :)))))))))

    ReplyDelete
  21. //பி.கு. கதை 'கணக்கால்ல' அப்படின்னா என்னன்னு கீதாம்மாவுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்!//
    :))))))))))

    ReplyDelete
  22. கவிநயா said...
    வாங்க ஜீவி ஐயா.

    //இருந்தாலும் இப்படி நேரடியாகப் போட்டு உடைத்திருக்க வேண்டாமோ என்று தோன்றுகிறது.//

    :))) வேற எங்கே எப்படி சொல்றதுன்னு தெரியல. இன்னும் கொஞ்சம் நேரம் செலவழிச்சிருக்கணுமோ? ஆனால், குழந்தைங்க அப்படித்தானே உடைப்பாங்க, சுற்றுப்புறம் பார்க்காம :)//

    அடுத்த வீட்டு அம்மா, தங்கள் வீட்டில் செய்த பலகாரம் என்று இப்படி ஏதாவது கொண்டு வந்து கொடுத்து, ஷேர் பண்ணிக் கொள்ளும் உணர்வை ஏற்படுத்தியிருக்கலாம் என்று தோன்றியது. அந்தப் பலகாரத்தை தனது குழந்தைக்குக் கொடுக்கும் பொழுது, 'நானும் டாக்டர் விளையாட்டை ஷேர் பண்ணிக்கறேன் அம்மா!" என்று சொல்கிற மாதிரி..
    இந்தக் கால குழந்தைகள், குழந்தைகள் என்கிற அளவுக்கு மீறிய கில்லாடிகள் ஆனாலும், அவர்களை ஊக்குவித்து மேலும் கில்லாடிகளாக்கமலிருக்கலாம்.
    பெற்றவர்களுக்கு புத்தி புகட்டும், ஆரம்பத்தில் நாம் சந்தோஷப்படும், பெருமைப்படும் இந்த மாதிரியான காரியங்கள் பின்னால் வினையாகிப் போகும்.

    இப்படித்தான் எழுத வேண்டும் யாரும் யாருக்கும் சொல்லக்கூடாது.
    நீங்கள் கேட்டதால் படிக்கும் பொழுதே நினைவில் நெருடியதைச் சொல்லிவிட்டேன்.

    ReplyDelete
  23. //நீங்கள் கேட்டதால் படிக்கும் பொழுதே நினைவில் நெருடியதைச் சொல்லிவிட்டேன்.//

    நீங்கள் சொல்வது சரிதான் ஜீவி ஐயா. சொன்னால்தானே எனக்கும் தெரியும்... நான் அந்த அளவெல்லாம் யோசிக்கலை என்பதே உண்மை. இனி நினைவில் வச்சுக்க(முயற்சிக்கி)றேன் :)

    ReplyDelete
  24. //பின் உடன் பேசாது இருப்பது அல்லது யாரிடம் பேசுவேண்டுமோ
    அவர்களிடம் மட்டுமே பேசுவது. இந்த ஸென்ஸ் ஆஃப் டிஸ்கிரிமினேஷன் குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு ஒரு அறிகுறி என்றும் கருதப்படுகிறது.//

    நான் பேசாம இருந்தா மட்டும் யாரும் அப்படி எடுத்துக்கறதில்லை :(:) ஏன்னு தெரியலை.

    //உங்களுக்கு போர் அடிக்கவில்லை எனின் இன்னொரு நிகழ்ச்சியும், இதற்கு உதாரணமாகச் சொல்கிறேன்.
    அப்ப சரி ! இன்னொரு தரம் சொல்கிறேன்.//

    இப்பவே சொல்லுங்க... ஆவலுடன்...

    ReplyDelete
  25. கீதாம்மா, தாத்தா, மற்றும் ஜீவி ஐயாவின் மீள் வருகைக்கும் சுவையான கருத்து பரிமாறல்களுக்கும் மிக்க நன்றி :)

    ReplyDelete
  26. அச்சோ! மீனாட்சி பாட்டிக்கு நன்றி சொல்ல மறந்துட்டேன் :( கோச்சுக்காதீங்க பாட்டீ! வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  27. கவி... ஒரு சின்ன பரிசு குடுத்திருக்கேன் ...

    http://swarnarekha-thegoldenline.blogspot.com/2009/08/blog-post_28.html

    ReplyDelete
  28. //“ஏம்மா, உஷா ஆண்ட்டியும் உன் ப்ரெண்டுதானே? நீ மட்டும் அவங்க கூட பூவை ஷேர் பண்ண மாட்டேங்கிறே?”//

    அதிர‌டி சூப்ப‌ர் கேள்வி....

    //“அக்கா… எல்லாமே எனக்கா? இவ்வளவு கஷ்டப்பட்டு பறிச்சு, இவ்வளவு நேரம் கட்டி, எனக்கே கொடுத்திட்டீங்களே… உங்களுக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ? இந்தாங்க… நீங்க கொஞ்சமாவது வச்சுக்கோங்க”, சந்தோஷத்தில் படபடவென்று பேசிக் கொண்டே, பாதியை வெட்டி அவளிடமே கொடுத்தாள், உஷா.//

    அட‌... என்று சொல்ல‌ வைத்த‌து இந்த‌ பகுதி....


    //தோழியின் கள்ளமில்லா உள்ளத்தை கண்டு கொஞ்சம் நாணினாலும்,
    சுந்தரிக்கு பூவோடு மனசும் சேர்ந்து இன்றைக்கு அதிகமாகவே மணத்தது!//

    ந‌ன்று.... ந‌ல்ல‌ முடிவா தந்த‌துக்கு...

    ந‌ல்லா தான் எழுத‌றீங்க‌ கவிந‌யா...(பேர் கூட‌ க‌விதையாதான் இருக்கு...).

    இன்னிக்குதான் முதன்முத‌‌லில் வந்தேன்...இனி தொடர்ந்து வ‌ருவேன்...

    ReplyDelete
  29. அருமையாக எழுதி இருக்கின்றிங்க...

    என்னுடைய ப்ளாக் பக்கம் வந்து தங்கள் கருத்தினை தெரிவித்தமைக்கு நன்றி..

    கண்டிப்பாக அடிக்கடி என்னுடைய ப்ளாக் பக்கம் வாங்க..

    ReplyDelete
  30. //கவி... ஒரு சின்ன பரிசு குடுத்திருக்கேன் ...//

    வாங்க ஸ்வர்ணரேக்கா... நினைச்சுக்கிட்டு பரிசு தந்ததற்கு மிக்க நன்றி! உங்க பதிவில் பின்னூட்டி இருக்கேன்.

    ReplyDelete
  31. //ந‌ல்லா தான் எழுத‌றீங்க‌ கவிந‌யா...(பேர் கூட‌ க‌விதையாதான் இருக்கு...)//

    மிக்க நன்றி கோபி :)

    //இன்னிக்குதான் முதன்முத‌‌லில் வந்தேன்...இனி தொடர்ந்து வ‌ருவேன்...//

    மிக்க மகிழ்ச்சி! உங்க வருகையை எதிர்பார்த்து...

    முதல் வருகைக்கும் ரசனைக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  32. //அருமையாக எழுதி இருக்கின்றிங்க...//

    நன்றி கீதா!

    //கண்டிப்பாக அடிக்கடி என்னுடைய ப்ளாக் பக்கம் வாங்க..//

    அவசியம் வர்றேன்! நீங்க தரும் சமையல் குறிப்புகள் எளிமையாகவும் வித்தியாசமாகவும் இருக்கு!

    முதல் வருகைக்கும் வாசிப்பிற்கும் மிக்க நன்றி :)

    ReplyDelete
  33. ந.செந்தில்குமார், புதுக்கோட்டைSeptember 4, 2009 at 6:45 AM

    உங்கள் சிறுகதையில் இரு பெரிய கருத்துக்கள் எங்களுக்கு தெரிவித்துள்ளீர்கள்.

    1. நமக்குச் சொந்தமான பொருட்களை பிறருக்கு பகிர்ந்து கொள்வதே இன்பம்.

    2. நல்ல விஷயங்களை யார் (குழந்தைகள்) சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    அந்த வகையில் சுந்தரி (கவிநயா) இஸ் கிரேட்.

    ReplyDelete
  34. //உங்கள் சிறுகதையில் இரு பெரிய கருத்துக்கள் எங்களுக்கு தெரிவித்துள்ளீர்கள்.//

    வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்!

    ReplyDelete
  35. அப்பாடா பாஸிடிவ்வா கதை படிச்சு நாளாச்சு! நன்னி!
    சூரி சார் கதை பிரமாதம். போடாத கதையை எங்கே எப்ப போடப்போறீங்க?

    ReplyDelete
  36. //அப்பாடா பாஸிடிவ்வா கதை படிச்சு நாளாச்சு! நன்னி!//

    இப்படி சொல்லீட்டீங்களே? அதனால இப்ப தோணின கதையை எழுதலை போங்க! :)

    //சூரி சார் கதை பிரமாதம். போடாத கதையை எங்கே எப்ப போடப்போறீங்க?//

    நினைவுறுத்தலுக்கு நன்றி :) ஆமா தாத்தா, சீக்கிரம் சொல்லுங்க!

    வருகைக்கு நன்றி திவா.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)