இன்னக்குதான் அந்தப் பொன்னான நாள். எங்க அப்பா அம்மாவப் பொறுத்த வரைக்கும். சாயந்திரம் என்ன பொண்ணு பாக்க வராங்க. யாரு என்னன்னு கேக்காதீங்க. நான் எதுவுமே கேட்டுக்கல. கேட்டு என்ன ஆகப் போகுது அப்படிங்கிற நெனப்புதான். காலைல என்னய வழக்கத்துக்கு மீறி ரொம்ப நேரம் தூங்க விட்டுட்டாங்க எங்கம்மா. எண்ணெயத் தேச்சு ஷாம்பூ போட்டு குளிச்சிட்டு வந்தேன். என்னய ஒரு வேலயும் பாக்க விடல. “பேசாம இருடி.. வேல பாத்தா டயர்டாயிரும். போய் உக்காரு. நாம் பாத்துக்கிறேன்”ன்னு சொல்லிட்டாங்க. இப்பிடிப்பட்ட அம்மாவுக்காக எதுவும் செய்யலாம்னு தோணுச்சு. நான் செஞ்சதில தப்பில்லன்னு மறுபடியும் தோணிச்சு. ஆனா, இந்த மனசு இருக்கே… அதுதான் மொரண்டு பண்ணிக்கிட்டே இருக்கு.
அதுக்கப்பறமும் நான் அவர நெனக்காம இருந்ததே இல்ல. தேவிகிட்ட கேட்டிருந்தா ஏதாச்சும் சொல்லியிருப்பா அவரப் பத்தி. ஆனா நான் கேட்டுக்கல. அவளும் சொல்லல. ஒரே ஒரு தரம், “ஏய், நாம ரெண்டு பேரும் மாத்ஸ்ல எவ்வளவு வாங்கினோம்னு சுந்தரண்ணா கேட்டாருடி”, அப்பிடின்னா. அதோட சரி.
காலேஜ் போக ஆரம்பிச்சோன்ன மத்த வேலைகள்ல அவர அப்பப்ப நெனக்காம இருந்தாலும், அவர நெனக்கும்போதெல்லாம் கூடவே தாள முடியாத ஒரு ஏக்கமும் வரும். கண்ணெல்லாம் கலங்கிரும். எதையோ எழந்துட்டாப்ல தவிப்பா இருக்கும். எல்லாத்தையும் பின்னுக்குத் தள்ளி வச்சுட்டு இயல்பா இருக்க முயற்சிக்கிறதுலயே இத்தன காலமும் ஓடிருச்சு. இப்ப கல்யாணத்த பத்தி பேச்சு வந்தோன்னதான் இதோட முழு பாதிப்பும் என் மனநிலையும் எனக்கே புரிய ஆரம்பிச்சுது.
ஆனா இப்ப என்ன செய்ய முடியும்? தேவிகிட்டயாவது சொல்லியிருக்கலாம்னு தோணுது இப்ப. மனசு பூரா இவ்ளோ அன்பை வச்சுக்கிட்டு… இது என்ன பைத்தியக்காரத்தனம், இது வாழ்க்கைடி… அப்பிடின்னு இந்த மனசு இப்பதான் இடிச்சுக் காட்டுது. எங்க அம்மா அப்பாவும் கண்ண மூடிக்கிட்டு காரியம் பண்ணுறவங்க இல்ல. அதுனால சொல்லித்தான் பாக்கலாமே அப்பிடின்னு தோணுது… இந்த மாப்பிள்ளய புடிக்கலன்னு சொல்லிட்டு அம்மாகிட்ட இன்னக்கி ராத்திரியே சொல்லிர வேண்டியதுதான்…
ஆனா… இத்தன வருஷத்துல…ஒரு வேள அவருக்கு… ஏற்கனவே கல்யாணம்… இந்த நெனப்பு வந்தோன்ன என்னால அத தாங்கவே முடியல! கண்ணு ரெண்டையும் இறுக்கி மூடிக்கிட்டு வேகமா தலைய ஆட்டி அந்த நெனப்ப ஒதறித் தள்ளுனேன். அப்பிடி ஏதாச்சும் பெரிய விஷயமா இருந்தா தேவி கட்டாயம் எங்கிட்ட சொல்லியிருப்பா. எப்பிடியும் இன்னக்கி அம்மாகிட்டயும் தேவிகிட்டயும் பேசிர்றதுன்னு முடிவு பண்ணிட்டேன். இந்த தீர்மானம் வந்தப்புறம் கொஞ்சம் நிம்மதியானாப்ல இருக்கு.
“கண்ணன் முகம் கண்ட கண்கள், மன்னர் முகம் காண்பதில்லை;
கண்ணனுக்குத் தந்த உள்ளம், இன்னொருவர் கொள்வதில்லை…”
சிடில சுசீலாம்மாவும் என் மன நெலைக்கு ஏத்த மாதிரி உருகிக்கிட்டிருக்காங்க…
“மது. போயி மொகத்தக் கழுவிட்டு வா. காப்பி போட்டு தரேன். குடிச்சிட்டு போய் ரெடியாகலாம்”, அம்மா அடுப்படிலருந்தே கொரல் குடுக்கறாங்க.
அம்மா எடுத்துக் குடுத்த பட்டுச் சேலைய கேள்வி கேக்காம கட்டிக்கிறேன். வேலயோட வேலயா அம்மா எந்தல முடியத் தளரப் பின்னி, எனக்குப் புடிச்ச மல்லிகப் பூவ தலை கொள்ளாம வச்சு விடறாங்க. “இந்த வளயலப் போடு, அந்த ஜிமிக்கியப் போடு”ன்னு கவிதா வேற என்னய ஒரேயடியா கவனிக்கிறா. பொட்டு வச்சு, மை எழுதி, கண்ணாடியில என்னய பாத்துக்கிறப்போவும் அவரு மொகம்தான் தெரியுது. இப்ப அவரு என்னயப் பாத்தா என்ன சொல்லுவாருன்னு மனசுக்குள்ள ஓடுது. எப்ப கொஞ்சம் நல்லா ட்ரஸ் பண்ணிக்கிட்டாலும் அவர் பாக்கலயேன்னு இருக்கும். இன்னக்கும் அப்பிடித்தான்…
என் இஷ்ட தெய்வமான விநாயகர் முன்னாடி போய் கையெடுத்துக் கும்பிடறேன், “எது நடந்தாலும் ஏத்துக்கிற மனப் பக்குவத்தை எனக்குத் தா”, அப்பிடின்னு எப்பவும் போல வேண்டிக்கிறேன். விபூதிய கீத்தா எடுத்து பொட்டுக்கு மேல இட்டுக்கும்போது, “அம்மா. அவங்கல்லாம் வந்துட்டாங்க”, கவிதா உற்சாகத்துல எட்டு வீட்டுக்குக் கேக்குறாப்ல கத்தறா.
“வாங்க வாங்க”, அப்பாவும் அம்மாவும் அவங்கள வரவேற்குறது எனக்கு கேக்குது. கொஞ்ச நேரத்துல என்னயக் கூப்புட அம்மா உள்ள வராங்க. “எங்கண்ணே பட்டுரும் போல இருக்கேடி”ன்னு சொல்லி கண்ணு கலங்க என் கன்னத்த வழிச்சு திருஷ்டி கழிக்கிறாங்க.
அம்மாவோட நான் ஹாலுக்கு போனதும் போகாததுமா அப்பா, “மாப்பிள்ள, இவதான் எம் பொண்ணு மது. அட, பாருங்க, உங்களுக்கே இண்ட்ரட்யூஸ் பண்ணிக்கிட்டிருக்கேன்… உங்களுக்குதான் தெரியுமே. மது, இவருதாம்மா மாப்பிள்ள சுந்தர்”, அப்பிடிங்கிறார்!
என்ன! தரையப் பாத்துக்கிட்டு நின்ன எனக்கு தூக்கிவாரிப் போடுது. என் இதயம் துடிக்கிற சத்தம் அங்க இருந்த எல்லாருக்குமே கேட்டிருக்குமோ… மெதுவா நிமிந்து அப்பாவப் பாக்கிறேன். அப்பா கண்ணச் சிமிட்டி சிரிக்கிறார். அப்பா பக்கத்துல உக்காந்திருக்கது… அவர்தான்… என்னோட உயிர்த் துடிப்போட ஒண்ணாக் கலந்துட்ட என்னோட அவரேதான்!
மனசு இறைவனுக்கு இடைவிடாம நன்றி சொல்ல, மந்திரிச்சு விட்ட மாதிரி அவரயே, அவரோட அந்த அழகுப் புன்னகை முகத்தையே பாத்துக்கிட்டு நிக்கிறேன்!
***
என்னய மொத மொதல்ல பாத்தோன்னயே அவருக்கும் எம்மேல பிரியம் வந்ததையும், நான் ட்யூஷன விட்டு நின்ன பெறகும் அவரு என்னய மறக்கவே இல்லைங்கிறதையும், தேவி வீடு மூலமா அவரு எப்பவுமே எம்மேல ஒரு கண்ணு வச்சிருந்தாருங்கிறதையும், எனக்கு கல்யாணம் பேச ஆரம்பிச்சது தெரிஞ்சோன்ன, தன் அப்பா அம்மாவ விட்டு எங்க வீட்டுல கேக்கச் சொன்னதையும்… இப்படி எல்லாத்தையும் அவர் அவருக்கே உரிய மென்மையான இனிமையான குரல்ல சொல்லச் சொல்ல, வாழ்நாள் பூரா……ம்… கொஞ்சம் இருங்க… என்னவர் கூப்பிடறாப்ல இருக்கு…. வரேங்க… அப்பறம் பாக்கலாங்க…
*சுபம்*
--கவிநயா