முதல் பகுதி; இரண்டாம் பகுதி; மூன்றாம் பகுதி;
நான்காம் பகுதி; ஐந்தாம் பகுதி; ஆறாம் பகுதி; ஏழாம் பகுதி;

அங்கேருந்து வந்து ஒரு ஆட்டோ பிடிச்சு, ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம்! அங்கே தோழியுடைய அம்மா, நாத்தனார் கணவர், அம்மா, அப்பா, இப்படி எல்லாரும் ஒண்ணு சேர்ந்தாச்சு. முதல்ல காலெல்லாம் நல்லா கழுவிட்டு சாப்பிட்டு ஒரு தூக்கம் போட்டோம். சாயந்திரமா எழுந்து குளிச்சிட்டு கோவிலுக்கு போனோம்.
இந்த இடத்தில், வை.கோவிலைப் பற்றி சுருக்கமா சொல்லிடறேன் –
புள்(ஜடாயு), இருக்கு(ரிக் வேதம்), வேள்(முருகன்), ஊர்(சூரியன்), இந்நால்வரும் இங்கிருக்கும் இறைவனை பூசித்ததால் புள்ளிருக்கு வேளூர்னு பேர் வந்துச்சாம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், இருவராலும் பாடல் பெற்ற ஸ்தலம். புகழ் பெற்ற அங்காரக (செவ்வாய்) தலமும் கூட. நவக்கிரகங்கள் இங்கே திரும்பித் திரும்பி இல்லாம, வரிசையாய் இருக்கும். இங்கே பிரசாதமாகக் கிடைக்கிற திருச்சாந்து உருண்டை தீராத நோய்களையும் தீர்க்கும் என்பது நம்பிக்கை. இங்கேதான் செல்வ முத்துக்குமரன் சூரபத்மனை அழிக்க, அன்னை பராசக்தியிடம் வேல் வாங்கினானாம். இந்த செல்வ முத்துக்குமாரசுவாமியின் மீதுதான் குமரகுருபரர் பிள்ளைத்தமிழ் பாடியிருக்கார்.
இன்னும் நிறைய இருக்கு, விவரமாக தெரிந்து கொள்ள விரும்பறவங்க, இங்கே பாருங்க…
வாங்க, இப்ப கோவிலுக்குள்ள போகலாம்…
கோவில்ல சரியான கூட்டம். கோவில் குளம் ரொம்ப மோசமா ஆயிருச்சு. மக்களெல்லாம் அதிலயே குளிச்சு, துவைச்சு, குப்பைகளை போட்டு, அநியாயம் பண்றாங்க. குளிச்சவங்க ஈரத்தோட கோவிலுக்குள்ள வர்றாங்க. அதனால கோவில் பூரா கால் வைக்கிற இடமெல்லாம் ஈரம். சில இடங்கள்ல தண்ணி தேங்கி வழுக்கி வேற விடுது. இதெல்லாம் யார், எப்ப, எப்படி, சரி பண்ணப் போறா? :(
நம்ம நடந்து வந்த காலோட ஈரத்தில் கால் வச்சா, வலி உயிர் போயிடும். ஒரு நிமிஷம் கூட காலை ஊணி நிக்க முடியாது. ரெண்டு காலையும் மாத்தி மாத்தி வச்சுக்கிட்டே நிக்கணும். இதனால முந்தின வருஷமெல்லாம் சரியாக்கூட சாமி கும்பிடாம, மற்ற சந்நிதிக்கெல்லாம் போகாமலேயே வந்திருக்கேன். இந்த வருஷம் கொஞ்சம் பரவாயில்லை. ஓரளவு நின்னு கும்பிட்டேன்.
கேயாரெஸ் அனுப்பிய முத்துக்குமாரசுவாமி படம்
இன்றைக்கு நிறைய ஊர்க்காரங்க அபிஷேகத்துக்கு குடுப்பாங்க. முத்துக்குமாரசாமி சந்நிதியில் முத்துலிங்கம்னு ஒரு குட்டி லிங்கம் இருக்குமாம். அதுக்குத்தான் முதலில் அபிஷேகமாம். (நான் பார்க்கலை). அப்புறம் வைத்தியநாதனுக்கு, அப்புறம்தான் தையல்நாயகிக்கு.
நான் ஊருக்கு போனபோது கண்ணன் என்கிற கேயாரெஸ், ஒரு வேண்டுதலுக்காக, தையல்நாயகிக்கு பட்டுப்புடவை வாங்கிட்டு போகச் சொல்லி பணம் அனுப்பி இருந்தார். இங்கேருந்து போன அன்னிக்கே சென்னையில் குமரன்ல போய் ஒரு அழகான ஒன்பது கெஜம் பட்டுப் புடவை அம்மாவுக்கு வாங்கினேன். நல்ல சிவப்பு நிறத்தில், கட்டம் போட்ட புடவை. ரொம்ப நாளா அவளுக்கு வாங்கணும் நினைச்ச நிறம், கண்ணன் காசுல என் ஆசைக்கு வாங்கிட்டேன் :)
அதை நாங்க இன்றைக்கு சாயந்திரம் கோவிலுக்கு போனப்ப குடுத்தோம். ஆனா அபிஷேகத்துக்குப் பிறகு வெள்ளிக்கவசம் சார்த்துவோம், அதனால இப்ப சேலை சார்த்த முடியாதுன்னுட்டாங்க. காலைல 6 மணிக்கு அபிஷேகம் ஆகும், அப்ப கொண்டு வாங்கன்னு சொன்னாங்க.
பிறகு தையல்நாயகி, முத்துக்குமாரசாமி, வைத்தியநாதன், எல்லாரையும் ஓரளவு நல்லாவே கும்பிட்டோம், அந்தக் கூட்டத்திலயும். முத்துக்குமரன் வள்ளி தெய்வானையோட ஜம்முன்னு இருந்தான். அவனுக்கும் வெள்ளிக்கவசம் சார்த்தி இருந்தாங்க. (போன முறை அவனுக்கு இரத்தின அங்கி போட்டிருந்தாங்க!) அர்ச்சனையெல்லாம் தனித்தனியா செய்ய முடியாது. அப்படியே தேங்காயை மட்டும் உடைச்சு தருவாங்க அவ்வளவுதான். அத்தனை அர்ச்சகர்கள் இருக்காங்க, ஆனா எல்லாருமே விபூதி, குங்குமம் குடுத்தே அசந்து போயிருப்பாங்க அன்றைக்கு. சாமி கும்பிட்ட பிறகு நாத்தனார் குடும்பம் கிளம்பிட்டாங்க.
அர்த்தசாமப் பூசை ஆன பிறகு, செல்வ(ல) முத்துக்குமாரசாமியை படுக்க வச்சிட்டுதான், சாமியும் அம்பாளும் படுக்க போவாங்களாம்! ச்வீட், இல்ல? :)
சாதாரணமா, மறுநாள் மறுபடி கோவிலுக்கு போறதில்லை, உடனே கிளம்பிடுவோம். இன்றைக்கு புடவை சார்த்தறதுக்காக காலைல 6 மணிக்கே எழுந்து குளிச்சு கிளம்பி போனோம். கோவிலுக்குள்ள இருக்கிற மண்டபத்திலயே நிறைய பேர் படுத்திருந்தாங்க. கோவில் பணியாளர்களை சும்மா சொல்லக் கூடாது, அந்த நேரத்திலும் சுத்தம் பண்ணிக்கிட்டேதான் இருந்தாங்க!
தையல்நாயகியுடைய அபிஷேகம் பார்த்தோம். எக்கச்சக்க புடவை வந்திருந்தாலும், இது பட்டுப் புடவைங்கிறதாலயோ என்னவோ, இதை உடனே சார்த்திட்டாங்க. செகப்புப் பட்டுப் புடவையில், கர்ப்பூர தீபத்தோட வெளிச்சத்தில், அவள் அழகுக்கு கேட்கணுமா! கண்ணன் புண்ணியத்தில் எங்களுக்கு இப்படி ஒரு தரிசனம். நன்றி கண்ணா!
மறுபடியும் அப்பா, புள்ளை, இவங்களையெல்லாம் பார்த்து விடைபெற்றுக்கிட்டு வந்தோம். கூட நடந்த நண்பர்கள்கிட்ட நேற்றே விடை பெற்றாச்சு.
வை. கோவிலுக்கு நடக்கிறவங்க, சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கும், தில்லை காளி கோவிலுக்கும் போயிட்டுதான் வீட்டுக்கு போகணுமாம். அதனால ஹோட்டலில் சாப்பிட்டுட்டு, அறையைக் காலி பண்ணிட்டு, அங்கேருந்து சிதம்பரத்துக்கு போனோம். அப்பதான் சரியா மரகத லிங்கத்துக்கு அபிஷேகம் ஆகிக்கிட்டு இருந்தது. நல்ல தரிசனம். துபாய் குமாரை அங்கே பார்த்தோம். மறுநாளே துபாய் கிளம்பறதா சொன்னார். எப்படித்தான் விமானத்தில் உட்காரப் போறாரோன்னு நினைச்சிக்கிட்டோம்.
எப்பவும் நடராஜரை மட்டும் பார்த்துட்டு அப்படியே வந்துருவோம். இந்த முறை சிவகாமி சந்நிதி வரை நடக்கறதுக்கு தெம்பிருந்தது. ஆனா அவளை பார்த்துட்டு வரதுக்குள்ள தில்லை காளி கோவில் மூடிட்டாங்க. மூடின கதவுக்கு முன்னாடி நின்னு கும்பிட்டு வர வேண்டியதாயிடுச்சு.
சென்னை வர வழியில்தான் கடலூர். அங்கே பாடலீஸ்வரர் கோவிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்ததுன்னு தெரியும். அதனால அங்கேயும் நின்னு பாடலீஸ்வரரையும், பெரியநாயகியையும் பார்த்தோம். போகும்போதுதான் நம்ம திவாஜியைக் கூப்பிட்டு சொன்னேன், வந்துக்கிட்டிருக்கோம்னு. அவ்வளவு குறைச்ச நேரத்தில் சொன்னாலும், எங்களுக்காக கோவிலுக்கு வந்தார்.
இப்படியாக ஊரெல்லாம் சுத்திட்டு, ஒரு வழியா அன்றைக்கு ராத்திரி சென்னை வந்து சேர்ந்தோம்!
[மருந்தை தேனில் குழைச்சு சாப்பிடும் போது, கடைசியில் தேனின் தித்திப்பு மட்டுமே அடிநாக்கில் நிக்குமே, அது போலத்தான் வைத்தீஸ்வரன் கோவில் நடைப் பயணம்! நடந்து போய்ச் சேர்றதுக்குள்ள படற பாடு இருக்கே…. அப்பப்பா! அப்படில்லாம் கஷ்டப்படும் போது, ‘போதும், போதும், இனிமே இப்படி நடக்க முடியாது’ அப்படின்னு தோணும்; ஆனா போய் சேர்ந்த பிறகு, அந்த சந்தோஷமும், நிறைவும் மட்டுமே மனசில் நிக்கும்; அந்த சமயத்தில் பார்த்தா, இன்னொரு முறையும் நடக்க மாட்டமான்னுதான் தோணும்!]
வைத்தியநாதன் வழித்துணை வருவான்!
தையல்நாயகி தைரியம் தருவாள்!
முத்துக்குமரன் முன்னே வருவான்!
கூடவே வந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்! அவங்களும் நம்ம கூடவே இருந்து நம்மை வழி நடத்துவாங்க!
எல்லோரும் நல்லாருக்கணும்!
~சுபம்~
அன்புடன்
கவிநயா