Sunday, June 19, 2011

வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 4

முதல் பகுதி இங்கே; இரண்டாம் பகுதி இங்கே; மூன்றாம் பகுதி இங்கே.

அம்மாவை மடியில் தாங்கிக்கிட்டு பலமுறை எழுப்பியும் எழுந்திருக்கலை. தலையில் சின்னதா வீக்கம் இருந்தது. இதுக்குள்ள கூட்டம் கூடிடுச்சு. தண்ணீர் வாங்கி தெளிச்சோம், விசிறி விட்டோம். ஒண்ணும் பலனில்லை.

எப்பவும் கையில் விபூதி வச்சிருப்போம். கை நிறைய விபூதியை அள்ளி தையல்நாயகி, நீயே துணைன்னு நினைச்சுக்கிட்டே பூசி விட்டேன். ரொம்ப நேரம் கழிச்சு “என்ன ஆச்சு?” ன்னு கேட்டுக்கிட்டு அம்மா கண்ணு முழிச்சாங்க. கீழே விழுந்த நினைவே இல்லை. தண்ணி குடிக்க வச்சோம். ஏற்கனவே சர்க்கரை இருக்கதால மாத்திரை சாப்பிடாததாலதான் மயக்கம் வந்திருக்குமோன்னு என் தங்கை மாத்திரை சாப்பிட்டீங்களான்னு கேட்டா. அம்மாவுக்கு அதுவும் சொல்லத் தெரியலை. இப்படி தடுமாற்றத்தோடயே பேசவும் பயமாஆயிடுச்சு. உடனடியா மருத்துவமனைக்கு கூட்டிப் போய் பாத்துடணும்னு நினைச்சோம்.

அங்கதான் பிரச்சனை. நடக்கறதை விட்டுட்டு அம்மாவைக் கூட்டிக்கிட்டு அப்பாவோட மருத்துவமனை போறதா, என்ன பண்றது? அப்பதான் எங்க உறவினர்கள் ரெண்டு பேர் அப்பாவோட கூட போறதுக்கு முன் வந்தாங்க. பக்கத்தில்தான் தஞ்சாவூர். அங்கே 24-மணி நேரம் ஒரு மருத்துவமனை இருக்கும், அங்கே கூட்டிப் போறோம்; விழுந்ததால ஏற்பட்ட மயக்கமாதான் இருக்கும், நீங்க சாமியை வேண்டிக்கிட்டு தைரியமா நடங்க, ஒண்ணும் ஆகாது, நாங்க பாத்துக்கறோம்னாங்க.

அவங்களுக்கு ரொம்ப நன்றி சொல்லி அப்பா அம்மாவோட அவங்களை அனுப்பி வச்சுட்டு, மறுபடியும் நடக்க ஆரம்பிச்சோம். தஞ்சாவூர் ஊரைக் கடந்து போறதுக்கு ரொம்ப நேரம் ஆகும். அம்மாவைப் பற்றியும், நாங்களும் அந்த நாற்காலியை சரியா கவனிக்காம விட்டுட்டது பற்றியும் வருத்தப்பட்டு பேசிக்கிட்டே நடந்தோம். இப்ப செருப்பு போட்டுக்கலை நானு.

போன முறையை விட ஊர் நிறைய மாறி இருந்தது. புதுசா பாலம்லாம் இருந்த்து. ஆள் நடமாட்டம் இருக்கலைன்னா சில சமயம் நாம சரியான வழியிலதான் போறமான்னு சந்தேகம் வந்துரும்! அப்பவும் அப்படிதான் வந்திடுச்சு. ஒரு இடத்தில் கொஞ்சம் உட்கார்ந்து வேற யாரும் வர்றாங்களான்னு பாத்து, வழியை நிச்சயம் பண்ணிக்கிட்டு நடந்தோம்.

இதுக்குள்ள எனக்கு இடது காலில் கொப்புளம் வந்திருச்சு. நினைச்சாலும் செருப்பு போட முடியாது, இனி. ஆனா அது எனக்கு ரொம்ப நிம்மதியா இருந்தது!

நடுநடுவில் அப்பாவுடன் போன் பேசிக்கிட்டு போனோம். ஸ்கான் எடுத்து பார்த்த்தில் அம்மாவுக்கு எதுவும் இல்லைன்னு சொல்லிட்டாங்களாம். ரெண்டு நாள் ஓய்வெடுக்க சொன்னார் டாக்டர்னு சொன்னாங்க. அப்புறம்தான் நிம்மதியாச்சு. தையல்நாயகிக்கு மானசீகமா ஒரு பெரிய்ய்ய்ய நன்றி சொன்னேன்.

தஞ்சாவூரில் ஒரு பெரிய திடல் இருக்கும். அங்கே குடிக்க ஏதாச்சும் குடுப்பாங்க. மக்கள் படுப்பாங்க. நாங்க அங்கே போனப்ப யாருமே இல்ல. அங்கங்க சிலர் மட்டும் படுத்திருந்தாங்க. அங்கே உட்கார்ந்திருந்த போது, அப்பா காரை பாத்துட்டோம். அப்பதான் தஞ்சாவூரிலேயே இருக்கிற உறவினர் வீட்டுக்கு போய்கிட்டிருந்தாங்க. அப்ப ஒரு ஒரு மணி இருக்கும்னு நினைக்கிறேன். அப்புறம் ஓ…டி போய் அவங்களை நிறுத்தி பேசினோம். அம்மா இப்ப தெளிவா பேசினாங்க. இனி எங்க பின்னாடியே வர வேணாம், இனி கோவில்ல பார்ப்போம், ஓய்வெடுங்கன்னு கண்டிப்பா சொல்லி அனுப்பி வச்சோம்.

கொஞ்ச நேரத்துல நல்ல மழை பிடிச்சிக்கிச்சு. அங்கேயே ஒரு பேருந்து நிறுத்தத்தில் தங்க வேண்டியதாயிடுச்சு. அங்கே இன்னும் நிறைய பேரும் மழைக்கு ஒதுங்கி இருந்தாங்க. அரை மணி நேரத்தில் மழை விட்டதும் கிளம்பினோம்.

தோழிக்கு ஷூ போட்டு நடந்ததில் ஒரு பக்கமா உரசி, அவளுக்கு பாதத்தில் வலிச்சுக்கிட்டே இருந்தது. இந்த பயணத்தின் போது, ராத்திரியெல்லாம் மருத்துவ முகாம்கள் போட்டிருப்பாங்க. அந்த மாதிரி ஒரு இடத்தில் போய், அவளுக்கு மருந்து போட்டுக்கிட்டு, கையிலயும் மருந்து வாங்கிக்கிட்டோம். இதெல்லாமும் இலவச சேவையாதான் செய்யறாங்க.

நடக்கும் போது அடுத்த ஊருக்கு எத்தனை கிலோமீட்டர்னு யாரையும் கேட்டுறவே கூடாது! ஒரே மாதிரி ரெண்டு பதில் கிடைக்கவே கிடைக்காது. ஒருத்தர் 12-ம்பார், ஒருத்தர் 6-ம்பார்! மைல் கல்லே கூட அப்படித்தான் போட்டுருக்கும். ஒரு இடத்தில் 6-ன்னு போட்டிருந்தா, இன்னும் ஒரு மணி நேரம் நடந்துட்டு பார்த்தா மறுபடியும் 6! அதே ஊருக்கு!

சில சமயம் இவ்வளவு தூரமான்னு மலைப்பா இருக்கும். எவ்வளவு தூரமா இருந்தாலும் நடந்துதானே ஆகணும், வா, அப்படின்னு சொல்லிக்கிட்டே நடப்போம்.

‘ஹர ஹர… சிவசிவ
ஓம்சக்தி… பராசக்தி
வைத்தியநாதன்… வழித்துணை வருவான்
தையல்நாயகி… தைரியம் தருவாள்
முத்துக்குமரன்…முன்னே வருவான்’

இதுதான் அடிப்படையான கோஷம். இதெல்லாம் வை.கோவிலில் இருக்கிற சிவன், அம்பாள், முருகன், பெயர்கள். இதோட அவங்கவங்க கற்பனை வளத்துக்கும் அனுபவத்துக்கும் தகுந்தாற்போல நிறைய சேர்த்துக்குவாங்க. தெரிஞ்ச பாட்டெல்லாம் பாடியாச்சுன்னா, இதைச் சொல்லிக்கிட்டே நடப்போம். அல்லது ரொம்ப தெம்பே இல்லாத மாதிரி இருந்தாலும், சொல்லுவோம்.

ரோடெல்லாம் இந்த முறை பரவாயில்லைன்னாலும், நிறைய இடங்களில் பார்க்கிறதுக்கு நல்லாருக்க மாதிரி இருந்தாலும், காலை வச்சா அம்புட்டுதான்! அப்படி ஒரு குத்தல். அந்த மாதிரி இடங்களில், ‘ஓம் சக்தி.. பராசக்தி’ன்னு சொல்லிக்கிட்டே பல்லைக் கடிச்சுக்கிட்டு முழு பாத்த்தையும் பதிச்சு நடப்பேன். அப்படி ஒரு இடத்தில், ‘பாருடி ரோடு பூரா ரோஜாப்பூவா விரிச்சிருக்கு’, அப்படின்னேன்… பக்கத்தில் நடந்தவங்கள்லாம் சிரிச்சாங்க!

தஞ்சாவூரில் கவிதா மன்றம்னு ஒரு இடம் இருக்கு. அங்கே காலைல இட்லி, பொங்கல் சுடச் சுட. அதாவது 3 மணி, 4 மணி காலைல! மருத்துவ முகாமும் அங்கேயே போட்டிருப்பாங்க. அதனால ஒரே கூட்டம். நாங்க அங்கே போன போது மூணரை இருக்கும்னு நினைக்கிறேன். அங்க போய் சாப்பிட்டுட்டு, ஒரு அரை மணி நேரத்துக்கு படுத்து நல்லா தூங்கிட்டோம். மண்டபமா இருக்கறதால கட்டிடத்துக்குள்ள படுக்கலாம்.

போன முறை நடந்த போது பூண்டிக்கு போய் சேர முடியலை. அதுக்கு 3,4 கி.மீ முன்னாடி மயில் பண்ணைன்னு ஒரு குட்டி இடம் (ஊர்?) இருக்கு. அங்க பம்பு செட்டு இருக்கும். குளிக்க விடுவாங்க. சாப்பாடும் போடுவாங்க. நாங்க போன முறை அங்கே வந்து சேரவே 9 மணி ஆயிடுச்சு. வெயிலில் மேலே நடக்க முடியாதுன்னு அங்கேயே தங்கிட்டோம். அப்பா கார் கொண்டு வந்தாதால, அவங்க வண்டிக்கு போய் துணிமணி எடுத்துட்டு வர சொன்னாங்க.

இந்த முறை மயில் பண்ணை வரும்போது மணி எட்டு இருக்கும்னு நினைக்கிறேன். சாப்பாட்டுக்கு மகா பெரீய்ய்ய்ய வரிசை. அதில் நின்னு சாப்பாடு வாங்கினா நேரம் வேற ஆயிடும். அதனால அசதி தீர பம்பு செட்டு தண்ணியிலாச்சும் ரெண்டு நிமிஷமாவது நின்னுட்டு போலாம்னு நினைச்சோம். மாற்றுத்துணியெல்லாம் இல்லை. சேலையோட அப்படியேதான் குளியல். நடக்கும்போது சீக்கிரம் காஞ்சுடும்னுதான்! அங்கேயும் கூட்டம். ரெண்டு நிமிஷத்துக்கு மேல நிக்க முடியாது. தோழி குளிக்கலைன்னுட்டா. தங்கையும் நானும்தான் (பம்பு செட்டு குளியல்) ருசி கண்ட பூனைகள்!

குளிச்சிட்டு இன்னும் எத்தனை கிலோமீட்டர் தங்கற ஊருக்கு (கோவிலூர்), அப்படின்னு விசாரிச்சப்பதான் இந்த ஊருதான் அந்த ஊருன்னாங்க! அதாவது நாங்க தங்கற இடம் பூண்டிக்கு முன்னாடியே. அதனால அந்த தூரத்தை சேர்த்து நாளைக்கு நடக்கணும்! நாங்க இன்னும் ரெண்டு மணி நேரமாச்சும் நடக்க வேண்டி இருக்கும்னு நினைச்சுக்கிட்டிருந்ததால, இது எங்களுக்கு இன்ப அதிர்ச்சியா இருந்த்து! அப்புறம் அந்த வீட்டை கண்டுபிடிச்சு போய் நடக்க இன்னும் முக்கால் மணி நேரம் ஆனது.

எங்க ஈரத்தைப் பார்த்துட்டு, ‘என்னம்மா குளிச்சிட்டு வந்தீங்களா’ன்னு கேட்டாங்க அண்ணன். ‘ஆமா அண்ணே, மயில் பண்ணைல இருந்து ரொம்ப தூரம் நடக்கணுமாக்கும்னு நினைச்சு குளிச்சோம்’னு சொன்னோம்.

(பயணம் தொடரும்)

அன்புடன்
கவிநயா

பி.கு.: என் தங்கைகிட்ட இன்னிக்கு பேசினப்ப, 'என்னடி இன்னும் பூண்டியே போய் சேரலையா? இந்த வேகத்தில் போனா எப்ப கோவிலுக்கு போய் சேர்றது?!' ன்னு கேட்டா :)

9 comments:

  1. //என் தங்கைகிட்ட இன்னிக்கு பேசினப்ப, 'என்னடி இன்னும் பூண்டியே போய் சேரலையா? இந்த வேகத்தில் போனா எப்ப கோவிலுக்கு போய் சேர்றது?!' ன்னு கேட்டா :)//

    வெரி குட் சிஸ்டர்:)

    உம்....காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடா! முருகா! காலங்கள் போகுதடா!

    ReplyDelete
  2. பம்பு செட்டு குளியல். அந்த அசதிக்கு ஆஹான்னு இருந்திருக்குமே:)! சரி இப்ப வந்திருக்கும் வீட்டில் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. திரும்ப கிளம்புகையில் கூப்பிடுங்க. வருகிறோம்:)!

    ReplyDelete
  3. \\பி.கு.: என் தங்கைகிட்ட இன்னிக்கு பேசினப்ப, 'என்னடி இன்னும் பூண்டியே போய் சேரலையா? இந்த வேகத்தில் போனா எப்ப கோவிலுக்கு போய் சேர்றது?!' ன்னு கேட்டா :)\\

    :))) சூப்பராக சொன்னாங்க சின்னக்கா !

    ReplyDelete
  4. கண்ணா, கோபி! உங்களுக்காக ஒண்ணு சொல்லவா. செவ்வாய்க்கிழமை கோவிலுக்கு போய் சேர்ந்தோம். சாமி கும்பிட்டு திரும்பி வந்தோம்! கதையும் முடிஞ்சது, கத்தரிக்காயும் காச்சுது :)

    ReplyDelete
  5. //அந்த அசதிக்கு ஆஹான்னு இருந்திருக்குமே:)//

    உண்மைதான் ராமலக்ஷ்மி :) மிக்க நன்றி.

    ReplyDelete
  6. //செவ்வாய்க்கிழமை கோவிலுக்கு போய் சேர்ந்தோம். சாமி கும்பிட்டு திரும்பி வந்தோம்! கதையும் முடிஞ்சது, கத்தரிக்காயும் காச்சுது :)//

    இதுல எங்கே என்னோட முத்துக் குமாரசாமி? அவனைப் பத்தி ஒன்னுமே சொல்லாம, கத்திரிக்கா எப்படிக் காய்க்கும்? காய்க்கலை! காய்க்கலை! காய்க்கலை!

    ReplyDelete
  7. அம்மா நலம்ன்னு படிச்சதுல மகிழ்ச்சி அக்கா.

    ReplyDelete
  8. //இதுல எங்கே என்னோட முத்துக் குமாரசாமி? அவனைப் பத்தி ஒன்னுமே சொல்லாம, கத்திரிக்கா எப்படிக் காய்க்கும்? காய்க்கலை! காய்க்கலை! காய்க்கலை!//

    :)))

    ReplyDelete
  9. //அம்மா நலம்ன்னு படிச்சதுல மகிழ்ச்சி அக்கா.//

    நன்றி குமரா :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)