மருந்தை தேனில் குழைச்சு சாப்பிடும் போது, கடைசியில் தேனின் தித்திப்பு மட்டுமே அடிநாக்கில் நிக்குமே, அது போலத்தான் வைத்தீஸ்வரன் கோவில் நடைப் பயணம்! நடந்து போய்ச் சேர்றதுக்குள்ள படற பாடு இருக்கே… அப்பப்பா! அப்படில்லாம் கஷ்டப்படும் போது, ‘போதும், போதும், இனிமே இப்படி நடக்க முடியாது, வேண்டிக்கக் கூடாது,’ அப்படின்னு தோணும்; ஆனா போய் சேர்ந்த பிறகு, அந்த சந்தோஷமும், நிறைவும் மட்டுமே மனசில் நிக்கும்; அந்த சமயத்தில் பார்த்தா, இன்னொரு முறையும் நடக்க மாட்டமான்னுதான் தோணும்!
கோவில்களுக்கு நடக்கறதில், கிரிவலம், திருப்பதி மலை ஏறுவது, இந்த மாதிரி சின்னச் சின்ன பயணங்கள் இருந்தாலும், முக்கியத்துவம் வாய்ந்த ரெண்டு பெரிய நடைப் பயணங்கள் இருக்கு. ஒண்ணு பழனி, இன்னொண்ணு வைத்தீஸ்வரன் கோவில்.
தைப்பூசத்துக்கு போய்ச் சேர்ற மாதிரி பழனிக்கு நடப்பாங்க. வெயில் குறைவான காலம்கிறதால பகல், இராத்திரி, இப்படி எந்த நேரம் வேணும்னாலும் நடப்பாங்களாம். ஆனா வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சித்திரை மாசம் முதல் வாரம்தான் நடக்கறது. சரியான வெயில் காலம். அதனால பகல்ல ஓய்வு, இராத்திரிதான் நடை. முன்னெல்லாம் வை.கோவிலுக்கு காவடி எடுக்க மாட்டாங்க. இந்த முறை போனப்ப, சில காவடிகளையும் பாத்தேன். சில பேர் வருஷா வருஷம் நடப்பாங்க. சிலர், ஏதாவது வேண்டுதல் இருந்தால் மட்டும்… நானும், தங்கையும், இரண்டாவது வகை.
அந்தக் காலத்தில், எங்க கிராம பக்கங்கள்ல இருந்து வை. கோவிலுக்கு மாட்டு வண்டி கட்டிக்கிட்டு போகிற வழக்கம் இருந்திருக்கு. அதே பழக்கம் இப்பவும் தொடருது. கிட்டத்தட்ட 50-லிருந்து 60 வரை இரட்டை மாட்டு வண்டிகள் ஊரிலிருந்து வரும். நடக்கறவங்க இந்த வண்டிகளில் சேர்ந்துக்கலாம். தங்கற ஊர்களில் வண்டி ஏற்பாடு செய்யறவங்களே நாம தங்கறதுக்கு இடம் ஏற்பாடு செய்யறதோட, சாப்பாட்டுக்கும் வழி செய்துடுவாங்க. அதுக்கு சில வண்டிகளில் பணம் கட்டணும். இன்னும் சிலர் பக்தர்களுக்கு செய்யற சேவையாகவே செய்யறாங்க. தெரிஞ்சவங்களை, உறவினர்களை சும்மாவே சேர்த்துக்கறதும் உண்டு. இப்படி, என் தங்கை, அவள் தோழி, நானு, 3 பேர் எங்க உறவினர் வண்டி ஒண்ணுல சேர்ந்துக்கிட்டோம்.
தோழிக்கு முதல் வருஷம். எங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சூண்டு அனுபவம் இருக்கு… வருஷா வருஷம் நடக்கறவங்க நெறய உதவிக் குறிப்புகள் தருவாங்க. காலைத் தேய்ச்சு நடக்கக் கூடாது, முழு பாதத்தையும் நல்லா ஊணி நடக்கணும், அதாவது கொப்பளம் வந்தாலும், வர்ற அறிகுறி இருந்தாலும், நல்லா ஊணிதான் நடக்கணும்; அதுக்காக நொண்டி நடக்க ஆரம்பிச்சா வேற பிரச்சனைகள் வரும்… நடக்க நடக்க இடுப்பில் வலி வர ஆரம்பிக்கும், அதை தவிர்க்க ஒரு துண்டை இடுப்பில் இறுகக் கட்டிக்கணும், சாணத்தை மிதிச்சாலும் காலைத் தேய்க்கக்கூடாது… தேய்ச்சா உடனே கொப்பளிக்கும், அதோட சாணம் நல்ல மருந்து… இப்படி நாங்க முதல் வருஷம் போன போதே நிறைய சொல்லி தந்தாங்க…
கோவிலுக்கு போறதால வெறும் காலோட தான் நடக்கணும். ஆனா இப்பல்லாம் நிறைய பேர் ஷூவும், செருப்பும் போட்டு நடக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஏன்னா ரோடு அவ்வளவு மோசம்! எனக்கும் காலில் சில பல பிரச்சனைகள் இருந்ததால, செருப்பு போட்டு நடக்கறதுன்னா நட, இல்லன்னா வேண்டாம், அப்படிங்கிற அளவு வீட்டில் கண்டிப்பு. நடை கான்சல் ஆயிடுமோங்கிற பயத்தில், நானும் சமர்த்தா ஒரு ஜோடி செருப்பு வாங்கி எடுத்துக்கிட்டேன்!
அப்புறம் முக்கியமா, ஆளுக்கொரு கம்பு. தங்கையும் நானும் முந்தைய வருஷங்கள்ல பயன்படுத்திய கம்பு பூஜை அறையிலேயே வச்சிருந்ததை எடுத்துக்கிட்டோம். தோழிக்கு புதுசா ஒண்ணு வாங்கியாச்சு.
கம்புக்கு ரெண்டு வேலை. இராத்திரியில் நடக்கறதால, நாம தட்டிக்கிட்டே நடக்கும் போது விஷ ஜந்துக்கள் ஏதாச்சும் வந்தாலும், ஓடிடும். நம்மால நடக்க முடியாம சோர்ந்து போகும் போது, கம்புதான் நமக்கு இன்னொரு கால், நம்மோட துணை. கம்புக்கு பூ சுத்தி, கும்பிட்டு, எடுத்துக்கிட்டு போவாங்க. இப்பல்லாம் வழியெல்லாம் லைட் போட்டுதான் இருக்காங்க. ஆனாலும் சுத்தமா விளக்கில்லாத இடங்களும் நிறைய்யவே இருக்கு…
சிலர் கிராமத்திலிருந்து சித்திரை முதல் புதனில் ஆரம்பிச்சு 6 நாள் நடந்து, அடுத்த செவ்வாய் வை.கோவில் போய் சேருவாங்க. நாங்க புதுக்கோட்டையில் முதல் வியாழன் (ரெண்டாவது நாள்) ஆரம்பிச்சு, 5 நாள் நடந்து அதே செவ்வாய் அன்னிக்கு கோவிலுக்கு போவோம்.
முந்தியெல்லாம் கூட்டம் குறைச்சலா இருக்கறப்ப, முதல்ல போறவங்கள்லாம் வைத்தீஸ்வரன் கோவில் எல்லையில், எல்லாரும் வந்து சேர்ற வரை காத்திருப்பாங்களாம்; எல்லாரும் வந்த பிறகுதான் ஒண்ணா உள்ளே போவாங்களாம்… இப்பல்லாம் அப்படி இல்லை. கிட்டத்தட்ட 50,000 பேர் நடக்கும் போது, எப்படி கணக்கு வச்சிக்கறது, யாருக்குன்னு காத்திருக்கறது?
புதுக்கோட்டையில் மச்சுவாடிங்கிற இடத்தில் விபூதி கொடுப்பாங்க. அதை வாங்கிக்கிட்டுதான் புறப்படணும். அந்த வியாழக்கிழமை சாயந்திரம் 5 மணி போல நாங்க தங்கி இருந்த வீட்டில் குளிச்சு, சாமி கும்பிட்டு புறப்பட்டோம். அங்கேருந்து மச்சுவாடிக்கு நடந்து வந்து, வரிசையில் நின்னு விபூதி வாங்கிக்கிட்டோம். நாங்க சேர்ந்துக்கிட்ட வண்டி எங்கே நிக்குதுன்னு கண்டு பிடிச்சு, அங்கே போனோம். அதுக்கே புதுக்கோட்டை எல்லையைத் தாண்டி வர வேண்டியதாயிடுச்சு! அவங்ககிட்ட ஹலோ சொல்லி, ஆளுக்கு ரெண்டு இட்லி சாப்பிட்டு, கம்பு எடுத்துக்கிட்டு கிளம்பியாச்சு!
கம்பு மட்டுமில்லாம, ஆளுக்கொரு தோள் பை வச்சிருந்தோம். அதில் தண்ணி, கொஞ்சம் குளுகோஸ் மாதிரியான சமாசாரங்கள், உட்கார்ற விரிப்பு, கை விளக்கு, தொலைபேசி, முதல் உதவி சாமான்கள், முக்கியமா ஐயோடெக்ஸ், மூவ், இது ரெண்டும்!
புதுக்கோட்டையில் கிளம்பினதிலிருந்து வழியெல்லாம் பிஸ்கெட், பூ, பழம், மிட்டாய், மஞ்சள் குங்குமம், இப்படி வரிசையா யாராச்சும் குடுத்துக்கிட்டே இருந்தாங்க. நல்ல வேளையா ஒருத்தங்க ஒரு பை கூட கொடுத்தாங்க! அதுக்குள்ள எல்லாம் போட்டாச்சு. ஆனா சொமைதான் இப்ப ரெண்டு ஆயிடுச்சு!
ஒரு வழியா எல்லா கசமுசாவும் முடிஞ்சு, அமைதியாயிடுச்சு. ஊரைத் தாண்டியாச்சு. இப்ப நாங்க 3 பேரு மட்டும்தான். இருட்டிடுச்சு.
“விநாயகர் அகவல் சொல்லலாமா” அப்படின்னு “சீதக்களப” ஆரம்பிச்சு சொல்லிக்கிட்டே நடந்தோம்…
(பயணம் தொடரும்)
பி.கு.: முடிஞ்ச வரை சீக்கிரமே கோவில்ல கொண்டு போய் சேர்த்திடறேன்… :)
அன்புடன்
கவிநயா
கூடவே வருகிறோம். நடங்க:)!
ReplyDeleteபெற்ற உதவிப் குறிப்புகளும் அனுபவப் பகிர்வும் மற்றவருக்கும் பயனாகும்.
மெதுவாவே நடந்து போகலாம்!
ReplyDeleteகூடவே வரோம் ;)))
ReplyDeleteகூடவே வருவதற்கு நன்றி, ராமலக்ஷ்மி, திவாஜி, மற்றும் கோபி :)
ReplyDeleteஎங்களையும் கூட கூட்டிப் போறதுக்கு நன்றி அக்கா. நீங்க இன்னொரு தடவை மானசீகமா போகலாம் இந்தத் தொடர் எழுதும் போது. :-)
ReplyDelete//எங்களையும் கூட கூட்டிப் போறதுக்கு நன்றி அக்கா. நீங்க இன்னொரு தடவை மானசீகமா போகலாம் இந்தத் தொடர் எழுதும் போது. :-)//
ReplyDeleteஉண்மைதான் :) நன்றி குமரா.
//“சீதக்களப” ஆரம்பிச்சு//
ReplyDeleteஉடனே "பாத" யாத்திரையில் "பாத"ச் சிலம்பு பல இசை பாடி இருக்குமே! :)
உம்..வேகமா நடங்க-க்கா! எனக்கு என் ஆளு முத்துக்குமாரசாமியை சீக்கிரம் பாக்கணும்! :)
//உம்..வேகமா நடங்க-க்கா! எனக்கு என் ஆளு முத்துக்குமாரசாமியை சீக்கிரம் பாக்கணும்! :)//
ReplyDeleteநல்லாருக்கே! ஆனா மொத நாளு கொஞ்சம் வேகம்தான்; போகப் போகக் குறை..........ஞ்சுக்கிட்டே..... வரும்! :) முத்துக்குமரன் எங்கேயும் போயிட மாட்டான். சமர்த்தா காத்திருப்பான் :)
வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 1"கூடவே வருகிறோம்.
ReplyDelete//வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 1"கூடவே வருகிறோம்.//
ReplyDeleteகூடவே வருவதற்கு மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி!