Saturday, June 25, 2011

வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 6

முந்தைய பகுதிகள்:
முதல் பகுதி; இரண்டாம் பகுதி; மூன்றாம் பகுதி; நான்காம் பகுதி; ஐந்தாம் பகுதி

இந்த வீட்டில் 2 மாடி இருந்தது. சமையல் செய்ய வசதி இல்லாததால அதுக்கு ஒரு வீடு, நாங்கல்லாம் தங்க இந்த வீடு. அங்கேருந்து சமைச்சு இங்கே எடுத்துட்டு வந்தாங்க!

கீழேயே கொஞ்ச நேரம் படுத்திருந்துட்டு, பிறகு போய் குளிச்சோம். ரெண்டாவது மாடிக்கு ஏறி போய் குளிக்க வேண்டியிருந்தது. மறுபடி கீழே வந்து சாப்பிட்டுட்டு, முதல் மாடியில் இருக்கிற அறையில் படுத்துக்கிட்டோம். ஷண்முகத்தோட அவரோட நண்பர்கள் ரெண்டு பேர் வந்திருந்தாங்க. அதில் ஒரு பையன் பேர் சிதம்பரம்னு நினைக்கிறேன். அவருக்கு காலை மசாஜ் பண்ணத் தெரியுமாம். பழனிக்கு நடக்கிற போது வேற ஒருத்தர் பண்றதைப் பார்த்து கத்துக்கிட்டாராம்.

நாங்கல்லாம் ரொம்ப சிரமப்படறதைப் பார்த்து, ஷண்முகமும், சிதம்பரமும், ஷண்முகம் தங்கைக்கும், எங்களுக்கும், பாதத்தை நல்லா மசாஜ் பண்ணி விட்டாங்க. ரொம்ப நல்லா இருந்தது. அப்படியே தூங்கிட்டோம்.

அன்றைக்கு மதியம் தாமதமாத்தான் எழுந்து சாப்பிட்டோம். சாயந்திரம் அப்பாவும் அம்மாவும் வந்துட்டாங்க! சொல்ற பேச்சே கேட்கறதில்லை!

அந்த வீட்டுக்காரங்க எங்களை ரொம்ப நல்லா கவனிச்சுக்கிட்டாங்க. அந்த வீட்டில் ஒரு ஏ.சி. ரூம் இருந்தது. எங்களை அங்கே இருக்க சொன்னாங்க. அந்த வீட்டு அம்மா போளி நல்லா பண்ணுவாங்களாம். அவங்களே அத்தனை பேருக்கும் போளியும் மிக்சரும் செய்து குடுத்தாங்க. நல்லா சாப்பிட்டு மறுபடி கிளம்பிட்டோம். இன்றைக்கு மூவலூர் வரைக்கும் நடக்கணும். நடந்தாச்சுன்னா, அந்தப் பக்கம் 18 கி.மீ.தான். போய் சேர்ந்த மாதிரிதான்!

கையில் இருக்கிற பாட்டுப் புத்தகங்களை பார்த்து படிக்கிறதுன்னா வெளிச்சதோடதான் முடியும், அதனால கொஞ்ச நேரம் அந்த மாதிரி பாட்டுகள் பாடிக்கிட்டு போனோம். இன்றைக்குதான் கும்பகோணம், ஆடுதுறை, இந்த மாதிரி ஊரெல்லாம் தாண்டி போகணும். நேற்று மாதிரி இருக்காது, வழியெல்லாம் ஊரா வரும், நடமாட்டம் இருந்துக்கிட்டே இருக்கும்னு சொன்னாங்க.

கும்பகோணத்தில் அடுத்தடுத்து ரெண்டு இடங்களில் சாப்பாடு இருக்கும். முதல் இடத்தில் உட்கார வச்சு; அடுத்த இடத்தில் பார்சல் போட்டு தருவாங்க. எப்பவும் முதல் இடத்துக்கு போவோம், இந்த தரம் என்னவோ போகலை. நேரம் ஆயிடும், பார்சல் சாப்பாடு மட்டும் கையில வாங்கிக்குவோம்னு சொல்லிட்டு வந்துட்டோம். கும்பகோணத்தில் இதுக்கு போலிசெல்லாம் வச்சு வரிசையெல்லாம் ஒழுங்குபடுத்தி விட்டிருந்தாங்க.

ஆனா அம்மாவும் அப்பாவும் முதல் இடத்தில் போய் எங்களுக்காக காத்திருந்தாங்களாம். செந்தில் அங்கேருந்து கூப்பிட்டு கேட்டார், உங்க அம்மா அப்பா இங்கே இருக்காங்க, நீங்க வரலையான்னு…

பார்சல் சாப்பாட்டை வாங்கிட்டு இன்னும் கொஞ்ச நேரம் நடந்த பிறகு ஒரு பெட்ரோல் பங்கில் உட்கார்ந்து சாப்பிட்டோம்.

நினைச்ச இடத்தில் உட்காருவோம், வீட்டு வேலை பார்க்கிறபோது செய்யற மாதிரி, சேலையைத் தூக்கி செருகிட்டுதான் நடக்கறது, இப்படில்லாம், ‘புற நாகரிக தோற்றங்களில்’ இந்த மாதிரி பயணங்களின் போது கவனமே இருக்கறதில்லை.

என் நாத்தனார் கேட்டா, பகல்ல இந்த இடத்தையெல்லாம் பார்த்தா, இங்கேயா உட்கார்ந்தோம்னு தோணுமில்ல அண்ணி?ன்னு. அது உண்மைதான். இந்த பயணம் முடிஞ்சு சென்னை போன அடுத்த நாளே சாயிபாபா கோவிலுக்கு போனோம். என் தங்கைக்காக ஒரு இடத்தில் நான் மட்டும் காத்திருக்க வேண்டி இருந்த்து. கால் அப்படிக் கெஞ்சுது. இன்னும் சரியா ஆகியிருக்கலை. 5 நிமிஷம் சேர்ந்தாப்ல நிக்க முடியாது. பக்கத்தில் ஒரு கடை பூட்டிதான் இருந்தது. நடக்கும் போதுன்னா, சட்டுன்னு அந்த மாதிரி கடை வாசலில் தயக்கமில்லாம உட்காருவோம். ஆனா அப்ப உட்கார என்னவோ போலிருந்தது!

இன்றைக்கு நடை ரொம்பவே சிரமமா இருந்தது. தோழிக்கும் ஷூ போடறது சரியா வரலை. என் செருப்பை நான் பயன்படுத்தாததால அதையும் கொஞ்ச தூரம் போட்டு நடந்து பார்த்தா. அதுவும் சரியா வரலை. கும்பகோணத்தில் நிறைய கடைகள் திறந்திருந்தது, நாங்க போன நேரத்தில். அங்கே என் தங்கை தோழிக்கு anklet braces வாங்கிட்டு வந்தா. இப்படி என்னென்னென்னவோ செய்துக்கிட்டு, நடந்தோம்.

இப்பல்லாம் அரை மணி நேரத்துக்கொரு முறை கால் உட்காரணும்னு சொல்லும். 1கி.மீ கூட வந்திருக்க மாட்டோம். லைட்டை பார்த்தா போச்சு, உடனே உட்காரணும்! விரிச்சு, காலை நீட்டி உட்கார்ந்து, ஒருத்தருக்கொருத்தர் ஐயோடெக்ஸ் தேச்சு விட்டு (நாங்க நடந்து முடிக்கறதுக்குள்ள ரெண்டு ஐயோடெக்ஸ் டப்பாவும், ஒரு மூவ் ட்யூபும் காலி!), தண்ணி குடிச்சு, பத்து நிமிஷத்தில் போலாம் நேரமாயிடும்னு கிளம்பிடுவோம். உட்கார்ந்துட்டு எழுந்து நடக்கும் போது கால் அப்படி வலிக்கும்! ஓரளவு சீரான வேகம் எடுக்கவே இன்னொரு கால்மணி நேரம் ஆயிடும். ஆனாலும் உட்காராம நடக்க முடியாது!

நிறைய பேர் நடுவில் ஒரு மணி நேரம், ரெண்டு மணி நேரமெல்லாம் எங்கேயாவது படுத்து தூங்கிருவாங்க. பிறகு எழுந்து விறுவிறுன்னு நடந்துருவாங்க. ஆனா நாங்க, தூங்கினா நாம அவ்வளவுதான்… அதனால முயல் ஆமை கதையில் வர ஆமை மாதிரி நாம நடந்துக்கிட்டே இருக்கணும், மத்தவங்க தூங்கினா தூங்கட்டும், அப்படின்னு சொல்லிச் சொல்லிக்கிட்டே நடந்தோம்!

திருவாலங்காடு அப்படிங்கிற இடத்தில் சுடச்சுட பொங்கல் குடுப்பாங்க. அங்கே போய் தொன்னையில பொங்கல் வாங்கிச் சாப்பிட்டு, பக்கத்தில் ஒரு கடையில உட்கார்ந்தோம், மழை வந்திடுச்சு. அங்கேதான் ஷண்முகமும் இருந்தார்; அவர் குழந்தையை தூங்கிட்டிருந்தது. பத்மநாபன், இன்னும் பலரும் அங்கே இருந்தாங்க. அது ஒரு இரும்புச் சாமான் கடை. ஒரே கடாமுடா சாமானா இருந்தது. இருக்கிற இத்தினியூண்டு இடத்தில் எல்லாரும் எப்படியோ உட்கார்ந்துக்கிட்டும் படுத்துக்கிட்டும் இருந்தோம். இதில் நிறைய பேர் தூங்க வேற தூங்கிட்டாங்க. அப்ப மணி மூணரை இருக்கும்.

ஊரில் என்னை ‘கவிநயா’வாக தெரிஞ்சவங்க பத்மநாபன், செந்தில், ஷண்முகம், இவங்கதான். அவங்க சில கவிதைகள் பற்றி பேசினாங்க. நேயர் விருப்பம் மாதிரி பத்மநாபனை சில பாடல்களை பாடச் சொல்லிக் கேட்டோம். இப்படியாக அந்த இடத்தில் கிட்டத்தட்ட 3 மணி நேரம் தங்கி இருந்தோம்! அப்படி ஒரு மழை! அங்கே என்னால தூங்க முடியலை.

ஒரு வழியா ஆறரைக்கு மழை இலேசா விடறாப்ல இருந்த்து. அவங்கவங்க செல் போனுக்கு மட்டும் ஒரு குட்டி ப்ளாஸ்டிக் கவர் அந்தக் கடையில் இருந்து வாங்கிக்கிட்டோம். மழைக்கு தலைக்கு மேல போட்டுக்க பெரிய பை மாதிரி தந்தாங்க. அதையும் வாங்கிக்கிட்டு கிளம்பிட்டோம்.

மழை வந்ததில் ரோடெல்லாம் தண்ணி தேங்கியிருந்தது. கல்லெல்லாம் வெளிய வந்து ரொம்ப நல்லா குத்த ஆரம்பிச்சிருச்சு. நடக்கவே முடியலை! அபிராமி அந்தாதிதான் எனக்கு துணை. 100 பாட்டை சொல்லி முடிக்க அரை மணி நேரம் ஆகும். ஒரு அரை மணி நேரம் கஷ்டப்பட்டு நடந்துரலாம், அந்தாதி ஒரு முறை சொல்லி முடிக்கிற வரைக்கும் நடக்கலாம், பிறகு உட்காரலாம், அப்படின்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு நடந்தேன். இப்படியே அன்றைக்கு எத்தனை முறை அந்தாதி சொன்னேனோ! அப்படியும் பல முறை அந்தாதி முடிக்கும் முன்னேயே உட்கார வேண்டி வந்தது.

ஆனா மழைனால உட்காரக் கூட சரியா இடம் கிடைக்கலை. நேரம் ஆக ஆக, சுத்தமா முடியலை. என் கம்போட முனையை என் தங்கை பிடிச்சுக்கிட்டா, நான் கண்ணை மூடிக்கிட்டு அந்தாதி சொல்லிக்கிட்டே நடந்தேன். அவளுக்குமே முடியலை, அடிப்பிரகாரம் மாதிரி அடி மேல் அடி வச்சு மெது…வா நடந்தோம். நல்ல வேளை, மழை வந்ததால வெயில் அவ்வளவா உறைக்கலை. இந்த இடங்கள்ல தோழி கொஞ்சம் வேகமாவே முன்னாடி போயிட்டா!

மூவலூர் வந்து சேர்ந்தப்ப மணி 11-க்கும் மேலே இருக்கும். கால் வலி உயிர் போயிடுச்சு. உடம்பில் தெம்பே இல்லை. பசி வேற, தாகம் வேற. தண்ணியெல்லாம் தீர்ந்து போயிடுச்சு. கண்ல பட்ட ஒரு குடிசை வீட்டுக்குள்ள போய் தண்ணி கேட்டோம். அந்த வீடு அவ்வளவு அழகா, சுத்தமா, குளுகுளுன்னு இருந்தது. நாங்க போனதும் எங்களை உட்காரச் சொல்லி உபசரிச்சாங்க. விசிறியை ஓட விட்டு, சொம்பு நிறைய சில்லுன்னு தண்ணி குடுத்தாங்க. தேவாமிர்தமா இருந்தது. அப்படியே படுத்து காலை நீட்டிரலாம் போல இருந்தது.

அங்கேருந்தே அண்ணனுக்கு போன் பண்ணி தங்கற வீட்டுக்கு வழி கேட்டுக்கிட்டோம். வீட்டுக்கு போய் சேரும்போது மணி பதினொன்றை இருக்கும். இது குட்டி வீடா இருந்தது. உள்ளே போய் காலை நீட்டி உட்கார்ந்தோன்ன கண்ல இருந்து கரகரன்னு தண்ணி வர ஆரம்பிச்சிருச்சு.

(பயணம் தொடரும்)

அன்புடன்
கவிநயா

4 comments:

 1. ம்...வந்துக்கிட்டே இருக்கோம் !

  ReplyDelete
 2. //ம்...வந்துக்கிட்டே இருக்கோம் !//

  நன்றி கோபி :)

  ReplyDelete
 3. எங்களுக்கே கால்வலிக்கிற மாதிரி இருக்கிறது:(! கண்ணை தொடச்சுக்கோங்க. கிளம்பும் போது கூப்பிடுங்க.

  ReplyDelete
 4. //எங்களுக்கே கால்வலிக்கிற மாதிரி இருக்கிறது:(! கண்ணை தொடச்சுக்கோங்க. கிளம்பும் போது கூப்பிடுங்க.//

  :))) நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)