Tuesday, June 21, 2011

வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 5

முந்தைய பகுதிகள்:
முதல் பகுதி; இரண்டாம் பகுதி; மூன்றாம் பகுதி; நான்காம் பகுதி.

போனவுடனே கையோட குளிச்சிட்டே சாப்பிட்டுடலாம்னு, காபி குடிச்சிட்டு குளிச்சிட்டு வந்தோம். அங்கேயும் பக்கத்திலேயே பம்பு செட்டு இருந்தது. ரொம்ப நல்லாருக்கு, போய் குளிச்சிட்டு வாங்கன்னு எல்லாரும் சொன்னாங்க. ஆனா எங்களுக்கு தெம்பில்லை. அது ரொம்ப உயரமா வேற இருக்குமாம், ஏறுறதும், இறங்கறதும் கஷ்டம்னாங்க. அதனால வீட்லயே குளிச்சிட்டோம். நாங்கதான் கடைசியா வந்தோம்னு நினைக்கிறேன்.

அதுவும் நல்ல பெரிய வீடா இருந்தது. சாப்பிட்டு போய் படுத்தாச்சு, வழக்கம் போல. அப்பப்ப கரண்ட் வேற போயிடும். ஆனா நமக்கு இருக்கிற அசதில அதெல்லாம் ஒண்ணுமே தெரியாது.

வழக்கம் போல ரெண்டு மணிக்கு மதியச் சாப்பாடு, ஒரு நாலரைக்கெல்லாம் மறுபடி கிளம்பிட்டோம். இன்னிக்கு திருவலஞ்சுழி (சுவாமி மலை) வரைக்கும் நடக்கணும். நேற்றை விட குறைச்சு தூரம்தான் இன்னிக்கு. இன்றைக்கு நானும் பாதத்தில் கொப்புளம் வர மாதிரி இருந்த இடங்களில் ப்ளாத்ரி போட்டுக்கிட்டேன். ஏற்கனவே வந்த கொப்புளம் இடது கால் பெரு விரலுக்கும் அடுத்த விரலுக்கும் நடுவில் பெரிசா முழிச்சிக்கிட்டு நின்னது.

கிளம்பும்போதே சண்முகம் குழுவோட கிளம்பினோம். அவங்க குழந்தையை அவரும் அவர் நண்பர்களும் மாத்தி மாத்தி தூக்கிட்டு வந்தாங்க. அவரோட மனைவி, குழந்தைக்கு வேண்டிய பொருள்களோட காரில் கூடவே வந்துக்கிட்டிருந்தாங்க. அவரோட தங்கை நடந்து வந்தாங்க.

பாபநாசம் ரோடு பூரா ஒரு 20 கி.மீட்டருக்கு சுத்தமா விளக்கே இருக்காது. தனியா நடக்காதீங்க, யாரோடயாவது சேர்ந்து போயிடுங்கன்னு சொல்வாங்க. மற்ற இடங்களைப் போல நம்ம நினைக்கிறப்பல்லாம் உட்கார முடியாது. நடந்துக்கிட்டே இருக்கணும். அதுதான் ரொம்ப சிரமமா இருக்கும்.

இந்த இருட்டான பகுதியில் ஷண்முகம், பத்மநாபன் பாட்டு குழுவினரோட போயிட்டோம். தோழியாலதான் வேகமா நடக்க முடியலை. பல்லைக் கடிச்சுக்கிட்டு வா, இந்த இருட்டில் மட்டும் இவங்க கூடவே சேர்ந்து போயிடுவோம், பிறகு பின் தங்கிட்டா பரவாயில்லைன்னு சொல்லிச் சொல்லி அவளை இழுத்துக்கிட்டு போயிட்டோம். நடக்க முடியலைன்னா சில சமயம் நம்ம கம்போட ஒரு முனையை ஒருத்தர் பிடிச்சுக்குவாங்க, இன்னொரு முனையை நாம பிடிச்சுக்கிட்டோம்னா, கிட்டத்தட்ட இழுத்துக்கிட்டே போயிடுவாங்க. அந்த மாதிரி கொஞ்ச தூரம் அவளைக் கூட்டிப் போனோம்.

விளக்கு வெளிச்சம் வர்றதுக்கு முன்னாடியே கொஞ்சம் பின் தங்க ஆரம்பிச்சிட்டோம்னு நினைக்கிறேன்… பாபநாசம் தாண்டின பிறகா முன்னாடியான்னு நினைவில்லை, மட்டனேந்தல்னு ஒரு இடத்தில் ஒரு மில் இருக்கு. அதை யாத்திரீகர்களுக்கு திறந்து விட்டிருப்பாங்க. அங்கே சாப்பாடு மட்டுமில்லாம, காலுக்கு மசாஜ் செய்து விடுவாங்க. புதுக்கோட்டையிலிருந்து ஒரு பாங்கில் வேலை பார்க்கிறவங்க இங்க வந்து இந்த மாதிரி இலவச சேவை செய்யறாங்க. போன தரம் நாங்களும் செய்துக்கிட்டோம். செய்யும்போது சுகமா இருக்கும், ஆனா உடனே எழுந்து நடக்கறதால இன்னும் கஷ்டமா இருக்கும். அதனால இந்த முறை செய்துக்கலை. ஏற்கனவே கூட்டமா இருந்தாலும், ஒரு மாதிரி இடம் கண்டு பிடிச்சு, ஒரு ஹால் மாதிரி இருந்த இடத்தில் போய் படுத்துட்டோம்.

கிளம்பலாம்னு நினைக்கிறப்ப நல்ல மழை வந்துடுச்சு. அதனால கூடுதலா அரை மணிநேரம் ஓய்வு. ராத்திரி 12 மணி இருக்கும். எல்லாரும் தூங்கிட்டிருந்தாங்க. அந்த வீட்டுக்காரம்மா, நாங்க கிளம்பறதைப் பார்த்து, டீ தரவாம்மான்னு கேட்டு, சுடச்சுட டீ குடுத்தாங்க. அதை குடிச்சிட்டு தெம்பா கிளம்பும்போது, மழை இன்னும் முழுசா விடாம தூறிக்கிட்டிருந்தது. மணி பன்னிரெண்டரை. பரவாயில்லைன்னு நடக்க ஆரம்பிச்சிட்டோம்.

அந்த நேரம் ரோடுல ஈ காக்கா இல்லை! நாங்க மூணு பேரு மட்டும்தான்! சில தெருநாய்கள் சில சமயம் எங்க பின்னாடியே வரும். ஒரே நிசப்தமா இருந்த்து. ஒரு இடத்தில் நடக்கும்போது மல்லிக்கைப் பூ வாசம் வர மாதிரி இருந்த்து. இயல்பாதான் சொன்னேன், ‘மல்லிகைப் பூ வாசம் அடிக்கிற மாதிரி இருக்கில்ல?’ன்னு. உடனே என் தங்கைக்கு பயம் வந்துருச்சு போல, ‘ஹரஹர… சிவசிவ’ சொல்ல ஆரம்பிச்சிட்டா! போன முறையும் இதே ரோடுல நானும் என் தங்கையும் தனியாதான் நடந்தோம். (அப்ப கொலுசு சத்தம் கேட்ட்து :). நான் சொன்னேன், எப்பவுமே தையல்நாயகிதாண்டி நமக்கு துணைக்கு வரா, அப்படின்னு!

பாபநாசம் வந்தப்ப காலை அஞ்சு ஆயிருச்சுன்னு நினைக்கிறேன். அதுக்கப்புறம் திருவலஞ்சுழி வந்தப்ப ஏழு இருக்கும். நாங்க தங்கறதுக்கு திருவலஞ்சுழியும் தாண்டி தாராசுரம்கிற ஊருக்கு போகணுமாம்.

ஒரு வீட்டில் எங்க வண்டியை கட்டி போட்டிருந்தாங்க. (ஒவ்வொரு வண்டிக்கும் நம்பர் குடுத்திருப்பாங்க, ஒரு விலாசமும் இருக்கும்). அதைப் பார்த்து அடையாளம் கண்டுக்கிட்டு, வீடு வந்திருச்சுன்னு சந்தோஷமா உள்ள போனோம். அங்க அண்ணன் இருந்தாங்க. அவங்க, ‘இந்த வீடு இல்லம்மா. இங்க குளிக்க வசதி இல்லாத்தால உங்களுக்கு வேற வீடு பிடிச்சிருக்கோம். இங்க சமையல் மட்டும்தான். நீங்க அந்த வீட்டுக்கு போகணும், இன்னும் அரை மணி நேரம் நடந்தா வந்துரும்னாங்க!

இதுக்குள்ள ரொம்பவே அசந்து போயிட்டோம். இன்னும் நடக்கணும்னு அவங்க சொன்னதும் எனக்கு அழுகையே வந்துருச்சு. என் முகம் போற போக்கை பார்த்தும் போயிரலாம்மா, கிட்டத்துலதான், அப்படின்னாங்க. அங்கேயே ஒரு காபி குடிச்சிட்டு, மறுபடியும் நடக்கறோம், நடக்கறோம், தாராசுரம் வரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு! எட்டரை மணி போல வந்து சேர்ந்தோம்.

(பயணம் தொடரும்)

அன்புடன்
கவிநயா

பி.கு.: அடுத்த வாரக் கடைசியில் மறுபடியும் விடுமுறைல போகப் போறேன்னு இப்பதான் திடீர்னு realize பண்ணினேன்! அதனால அதுக்குள்ள பயணத்தை முடிக்கிறதுக்கான முயற்சியில் இறங்கியிருக்கேன். அது மட்டுமில்லாம, முடிக்காம போனா கோபியும் கண்ணனும் ஆட்டோ அனுப்பிருவாங்களோன்னு பயம்! ஆனா நீங்க அவசரமா படிக்கணும்னு அவசியம் இல்லை :) நிதானமாவே படிங்க!

10 comments:

 1. ஆகா...பயணம் வேகம் கூடுது போல ;)
  சூப்பரு ;)

  வழி எங்கும் டீ, சாப்பாடு, கூடவே காலுக்கு மசாஜ் இப்படி வரும் பக்தர்களுக்கு எப்படி எல்லாம் உதவி செய்றாங்க. அனைவருக்கும் நன்றி ;)

  \\அதனால அதுக்குள்ள பயணத்தை முடிக்கிறதுக்கான முயற்சியில் இறங்கியிருக்கேன்.\\

  எப்படியோ கம்பை பிடிச்சுக்கிட்டு இழுத்துக்கிட்டு போற மாதிரி உங்களை இழுத்துக்கிட்டு வந்தாச்சி ;)

  \\அது மட்டுமில்லாம, முடிக்காம போனா கோபியும் கண்ணனும் ஆட்டோ அனுப்பிருவாங்களோன்னு பயம்! \\

  இங்கயிருந்து என்னால முடியாது ஆனா தல அனுப்பிடுவாரு ;))

  ReplyDelete
 2. //எப்படியோ கம்பை பிடிச்சுக்கிட்டு இழுத்துக்கிட்டு போற மாதிரி உங்களை இழுத்துக்கிட்டு வந்தாச்சி ;)//

  :)))

  ReplyDelete
 3. //:)//

  இந்தப் புன்னகை என்ன விலை? :)

  ReplyDelete
 4. என் முருகன் சொன்ன விலை:)

  ReplyDelete
 5. http://blogintamil.blogspot.com/2011/06/2_24.html///


  தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். பார்த்து கருத்துரை தெரிவிக்கவும். நன்றி..

  ReplyDelete
 6. //என் முருகன் சொன்ன விலை:)//

  எல்லாமே அவன் சொல்ற விலைதான் :)

  ReplyDelete
 7. //தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். பார்த்து கருத்துரை தெரிவிக்கவும். நன்றி..//

  பார்த்தேன் இராஜராஜேஸ்வரி. அன்புக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 8. கம்பைப் பிடித்து நடந்த தோழி பாவம்.

  மல்லிகை மணமென தங்கையை மிரள வைத்து கூடவே சொன்ன சமாதானம்:)!

  எல்லோருக்கும் இறையருள் நிச்சயம்.

  ReplyDelete
 9. வாங்க ராமலக்ஷ்மி :)

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)