Thursday, December 31, 2009

வாழ்க அனைவரும்! வாழ்க வளமுடன்!!



வானம் மகிழ்ந்து பொழியணும்
பூமி நிறைஞ்சு விளையணும்
விளைநிலங்கள் கட்டிடங்கள்
ஆகாமே இருக்கணும்!

கா டெல்லாம் செழிக்கணும்
நா டெல்லாம் கொழிக்கணும்
புவியெங்கும் இயற்கை வளம்
அழியாமே காக்கணும்!

நோய் நொடிகள் குறையணும்
ஆரோக்யம் நிறையணும்
அன்பு ஒன்றே இல்லந்தோறும்
பெருஞ் செல்வம் ஆகணும்!

கல்வி சிறந்து வளரணும்
தமிழும் கலையும் தழைக்கணும்
சத்தியமே நித்தியமா
என்றும் எங்கும் ஒளிரணும்!!


--கவிநயா

அனைவருக்கும் மனம் கனிந்த புது வருட நல்வாழ்த்துகள்!
வாழ்க! வளர்க!!

Saturday, December 26, 2009

என்னைத் தொட்ட பட்டாம்பூச்சி


பட்டாம் பூச்சி ஒன்று என்னை
தொட்டுப் பார்த்துச் சென்றது
விட்டம் பார்த்து நானிருந்தேன்
கிட்டே வந்து நின்றது

ஏனோ இந்தச் சோகம் என்று
என்னைக் கேள்வி கேட்டது
சோகம் விட்டுச் சிரித்துப் பாரேன்
என்றே கொஞ்சிச் சொன்னது

நாவால் கண்ணீர் தொட்டுப் பார்த்து
கொஞ்சம் உப்பு என்றது
கண்ணீர் இல்லா வாழ்வும் உண்டோ
சொல்லேன் என்று கேட்டது

கூட்டுப் புழுவாய்த் தான் இருந்த
துயரக் கதையைச் சொன்னது
அதையும் தாண்டிச் சிற கடிக்கும்
என்னைப் பாரேன் என்றது

பட்டாம் பூச்சி பேச்சைக் கேட்டு
பூவாய் மனசு விரிந்தது
ஏதோ ஒன்று புரிந்தது போல்
தானும் சிரித்துக் கொண்டது.


--கவிநயா

உரையாடல் கவிதைப் போட்டிக்கு

Wednesday, December 23, 2009

நம்பிக்கை




லவ் யூ ப்ரின்சஸ்”

அந்த பொம்மை, நாட்டியம் போல நடந்து வந்து, ரெண்டு கண்ணையும் மூடி மூடித் திறந்துகிட்டே சொல்லவும், மதுவின் முகத்தில் ஆயிரம் வாட் பல்பு போட்டது போல் பிரகாசம்! ரெண்டு கையையும் தட்டி கலகலன்னு சிரிக்கிறா, குழந்தை.

“அண்ணா! பாயு” மழலை மொழியில் சொல்லிக்கிட்டே ராஜாவோட சட்டையைப் பிடிச்சு இழுக்கறா, அவன்கிட்ட காட்டறதுக்கு.

அவன்தான் பாத்துக்கிட்டுதானே இருக்கான்! இது எப்படி சாத்தியம்னு அவனுக்கு ஒண்ணும் புரியல. இவனுக்கே தெரியாம அந்த பொம்மை இப்ப எப்பிடி இங்கே வந்தது? கிறிஸ்மஸ் மரத்துக்கு அடியில இருக்கிற அவனுடைய அன்பளிப்புகளை திறக்கணும்னு கூட தோணாம உட்கார்ந்திருக்கான்.

**

அமெரிக்காவுக்கு வந்ததுல இருந்து அவங்க மாதிரியே கிறிஸ்மஸ் மரம் வச்சு, லைட் போட்டு, அன்பளிப்புகள் பரிமாறிக்கிட்டு, இப்படி ஊரோடு ஒத்து வாழப் பழகிடுச்சு, ராஜாவோட குடும்பமும்.

மது, ராஜாவோட சித்தி பொண்ணு. அவ ஒண்ணரை வயசுக் குழந்தையா இருக்கும் போது, அவளை பாட்டி வீட்டுல விட்டுட்டு ஒரு விழாவுக்கு போன அவ அம்மாவும் அப்பாவும், பொட்டிலதான் திரும்பி வந்தாங்க. அப்ப ராஜாவுக்கு ஏழெட்டு வயசு இருக்கும். மதுவை சட்டப்படி தத்தெடுத்துக்கிட்டாங்க, ராஜாவோட அம்மாவும் அப்பாவும்.

மது மேல ராஜாவுக்கு அலாதி பிரியம். அவளை பூ மாதிரி பாத்துக்குவான். அவளும் அவனை அண்ணா, அண்ணான்னு சொல்லிக்கிட்டு பின்னாடியே சுத்துவா. இப்ப அவளுக்கு 4 வயசு ஆகப் போகுது. இன்னும் மழலை போகலை.

கிறிஸ்மஸ் வந்தாலே அவங்க வீட்டில கொண்டாட்டம் தான். மத்த புள்ளைங்க மாதிரியே கிறிஸ்மஸ் தாத்தாவுக்கு, அது வேணும், இது வேணும்னு ரெண்டு பேரும் பெரிய லிஸ்ட் அனுப்புவாங்க. “நீ நல்ல புள்ளையா இருந்தாதான் கிறிஸ்மஸ் தாத்தா நீ கேட்டதெல்லாம் தருவாரு”, அப்படின்னு சொல்லிச் சொல்லியே புள்ளைங்களை சொல்றது கேக்க வைப்பாங்க பெரியவங்க. புள்ளைங்களும் வருஷம் பூரா இருக்கறதை விட, கிறிஸ்மஸ் நெருங்க நெருங்க, ரொம்ப ஒழுங்கு மரியாதையா இருப்பாங்க!

மதுவுக்கும் சேர்த்து ராஜாவே லிஸ்ட் எழுதுவான். இந்த வருஷம்தான் அவனுக்கு கிறிஸ்மஸ் தாத்தாகிட்ட இருந்த நம்பிக்கை போயிருச்சு. கிறிஸ்மஸ் தாத்தாங்கிறதெல்லாம் சுத்த கட்டுக் கதை, அப்படின்னு தோண ஆரம்பிச்சிருக்கு. அம்மா அப்பாதான் நம்ம கேட்கிறதெல்லாம் நமக்கு தெரியாம வாங்கி வைக்கிறாங்கன்னு யோசனை வந்திருக்கு, அவனுக்கு. அதனால இந்த வருஷம் அவன் லிஸ்டே எழுத வேண்டாம்னு வச்சிட்டான். ஆனா மது ஏமாந்துரக் கூடாதுன்னு, அவளுக்காக மட்டும் எழுதினான்.

மது கேட்ட லிஸ்ட்ல, இந்த பேசற பொம்மைதான் முதல்ல. பிறகுதான் மத்ததெல்லாம்.

இந்த வருஷம் ராஜா, பெரிய பையனாயிட்டான். அப்பாவும் அம்மாவும் வாங்கிட்டு வர்ற அன்பளிப்பை எல்லாம் எங்கே ஒளிச்சு வைக்கிறாங்கன்னு கூட கண்டு பிடிச்சிட்டான்! ஆனா மதுவுடைய லிஸ்டை படிச்சாங்களா இல்லையான்னு மட்டும் அவனால கண்டு பிடிக்க முடியல.

ஏன்னா, மதுவுக்கு வாங்கிட்டு வந்த ப்ரசண்ட்லாம் இவனைத்தான் பாக் பண்ணி கிறிஸ்மஸ் மரத்துக்கிட்ட வைக்க சொன்னாங்க. அப்ப அதுல அந்த பொம்மை இருக்கல. மதுவோட ஏமாற்றத்தை நினைச்சு இவனுக்குத்தான் கவலையா இருந்துச்சு.

இப்ப பார்த்தா கிறிஸ்மஸ் அன்னிக்குக் காலைல இங்கே வந்து உட்கார்ந்திருக்கு அந்த பொம்மை!

**

எல்லா அன்பளிப்புகளையும் எல்லாரும் திறந்து பார்த்து முடிச்சாச்சு. அம்மா மதுவை குளிக்கிறதுக்காக கூட்டிக்கிட்டு போயிட்டாங்க.

“ராஜா, என்ன பலமான யோசனை?” அப்படின்னு கேக்குறாரு அப்பா.

“அப்பா… மதுவோட அந்த பொம்மை…”, அப்படின்னு இழுக்கறான்.

“மது குழந்தை. அவளோட நம்பிக்கையில் எந்த கேள்விக்குறியும் இல்லை. அதான் அவ கேட்டது கிடைச்சிருச்சு”

அப்பா சொன்ன பிறகும் ராஜாவுக்கு குழப்பம் தீர்ந்த பாடில்லை. கிறிஸ்மஸ் தாத்தா உண்மையா, கதையா? என்ன சொல்றார் இந்த அப்பா?

உங்க நம்பிக்கை எப்படி?

--கவிநயா

அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் திருநாள் நல்வாழ்த்துகள்!!


Sunday, December 20, 2009

அந்தக் கால கவுஜ

'85-ல் எழுதிய கவிதை ஒன்று... திகழுக்காக... :)





நிலவு

நிலவே நிலவே! கொஞ்சம் நில்!
நினைவில் சற்றே தேங்கிச் செல்.

அல்லிகள் மலரும் உன் அழகினைக் கண்டு;
உள்ளங்கள் மலரும் உன் உருவினைக் கண்டு.

பௌர்ணமி நிலவே, வேடிக்கை ஏன்?
வளர்ந்தும் தேய்ந்தும் வேதனை ஏன்?
இன்பமும் துன்பமும் இயற்கையின் நியதி.
இதனை உணர்த்தவோ இவ் விளையாட்டு?

நட்சத்திரங்களின் நலமார்ந்த அன்னையே!
எத்தனை அருமைக் குழந்தைகள் பெற்றாய்!
குடும்பக் காட்டுப்பாடு உனக்கு மட்டும் இல்லையா?

இருள் எனும் அரக்கனின் இனிய எதிரியே!
காதலர் அனைவரின் கௌரவ சாட்சியே!

முழுமதியே! வெண்ணிலவே!
கதிரவனின் காதலியே!

சற்றே நில்!

உன் அழகின் இரகசியம்
சொல்லிச் செல்!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/agrinberg/3347917839/sizes/m/

Saturday, December 12, 2009

இளமை விகடன் டிசம்பர் மின்னிதழில்...

பூங்குழலியும் வந்தியத் தேவனும் என்ன ஆனார்கள்?




இங்கே படிக்கலாம்; அல்லது இங்கே; அல்லது இங்கேயே! :)


து என்ன இடம்?

பழகிய இடம் போலத் தெரிகிறது; புது இடம் போலவும் இருக்கிறது…

பக்கத்தில் நீர் சலசலத்து ஓடும் ஓசை கேட்கிறது. ஆனால் கண்ணுக்கு ஒன்றும் புலப்படவில்லை. பகல் நேரத்திலும் இந்த இடம்தான் எத்தனை குளுமை!

வானளாவி உயர்ந்திருக்கும் மரங்களும், மரங்களில் பூத்துக் குலுங்கும் பூக்களும், அந்த அழகுக்குச் சளைக்காமல் கீழே பாய் விரித்திருக்கும் உதிர்ந்த இலைகளும், மலர்களும்… இத்தகைய இயற்கை அழகையெல்லாம் இந்த பூமியில் இனி காண முடியாது என்றல்லவா நினைத்தேன்! அதோ… தெரிகிறது ஆறு! ஆற்றில்தான் எவ்வளவு தண்ணீர்! சந்தோஷமாகச் சளசளக்கிறது, ரகசியங்கள் பேசிக் கொண்டு ஓயாமல் சிரித்துக் கொண்டிருக்கும் வாயாடிக் குறும்புக்காரப் பெண்களைப் போல!

அதோ கன்னிப் பெண்களின் அலறல் கேட்கிறது. கொஞ்சம் பக்கத்தில் போய் பார்க்கலாம்… அடேயப்பா! கண்ணைக் கூசச் செய்யும் அணிகலன்களுடன், கதிரவனையும் கூசச் செய்யும் அழகுடன் திகழ்பவள் யாராயிருக்கும்?

அவள் அருகில் இருப்பவள் சொல்வது காதில் விழுகிறது: “அக்கா, முதலைக்கு தண்ணீரில் இருக்கும் வரைதான் பலம். கரைக்கு வந்து விட்டால் ஒன்றுமில்லை. இந்தப் பெண்களைச் சற்று சும்மா இருக்கச் சொல்லுங்கள்!”

“வானதி! உனக்கு எப்படியடி இத்தனை தைரியம் வந்தது?!”

அதற்குள் எங்கிருந்தோ பறந்து வந்த வேல் ஒன்று அந்த முதலையின் மேல் வேகமாகத் தைத்தது.

அதற்கு மேல் நடந்ததைக் கவனிக்காமல் மூளை ‘விர்’ரென்று சுழன்றது. இவள் குந்தவைப் பிராட்டியல்லவா? அவள் அருகில் நிற்பவள்தான் வானதி! அருள்மொழிவர்மரை அடையப் போகின்ற அதிர்ஷ்டசாலி! இந்த ஆற்றின் பெயர் அரிசிலாறு அல்லவா?!

இதற்குள் ஒரு குதிரை அவசரமாக ஓடி மறையும் சப்தமும், குந்தவை தன் தோழிகளைக் கண்டிப்பதும் கேட்கிறது. குதிரையில் சென்றவன் வந்தியத் தேவனாகத்தான் இருக்க வேண்டும். அடடா, அவனை பார்க்க முடியாமல் போய் விட்டதே!

நான் அங்கே இருப்பதை யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. என்னையே நான் கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன்.

“ஆ!”. வலிக்கத்தான் செய்கிறது.

***

ந்தியத் தேவனைப் பார்ப்பதைக் காட்டிலும், பொன்னியின் செல்வனைப் பார்க்கத்தான் எனக்கு மிகவும் ஆசை! இந்தக் கதாசிரியர்கள்தான் எத்தனை கெட்டிக்காரர்கள்! தான் படைக்கின்ற கதாபாத்திரங்கள் யாவையும் தங்களுக்கு ஒரே மாதிரிதான் என்று கதை விடுவார்கள்! ஆனால் ஒரு பாத்திரத்தின் மீது மதிப்பும் அன்பும் கூடிக் கொண்டே போகிற மாதிரியும், இன்னொன்றின் மீது வெறுப்பும் கோபமும் கூடிக் கொண்டே போகிற மாதிரியும் படைப்பதில் வல்லவர்கள்!

இந்த கல்கி கூட அப்படித்தான். முதல் பாகம் பூராவும் பொன்னியின் செல்வனைக் கண்ணிலேயே காட்டுவதில்லை. ஆனாலும் அவன் மீது அப்படியொரு பிரியத்தை ஏற்படுத்தி விடுகிறார். ஆதித்த கரிகாலனையும் சுந்தரச் சோழரையும் பற்றியும் கூட நன்றாகத் தான் சொல்கிறார். ஆனால் அவரே குந்தவை பற்றியும், பொன்னியின் செல்வன் பற்றியும் சொல்வதிலிருந்து மற்றவையெல்லாம் எத்தனை மாறுபடுகின்றன! இதிலிருந்தே தெரிகிறதல்லவா, அவர் பாரபட்சம் நிறைந்த பொல்லாதவர் என்று!

இதனால்தான் அந்தக் காலத்தில் கதை படித்தால் இந்தக் கதாநாயகனைப் போல நமக்குக் கணவன் அமைய மாட்டானா என்றும், அந்தக் கதாநாயகியைப் போல நமக்கு மனைவி அமைய மாட்டாளா என்றும், பலரும் கனவுகளை வளர்த்துக் கொண்டார்கள்! ஏன், கதாநாயகனும் கதாநாயகியும் அழகாகவும் அன்பாகவும் அறிவாளியாகவும் குணசாலியாகவும்தான் இருக்க வேண்டுமா என்ன? ஆனால் அதென்னமோ அப்படித்தான் படைத்தார்கள். ஒரு வேளை நிஜத்தில் காண முடியாததை கற்பனையிலாவது கண்டு களிக்கலாமென்ற எண்ணம் போலும்! இப்போது பரவாயில்லை, குற்றம் குறை உள்ளவரெல்லாம் கதையின் நாயகர்களாகவும், நாயகிகளாகவும், இருக்கிறார்கள்.

***

ஆகா…! குருட்டு யோசனையில் நேரம் போனதே தெரியவில்லை. வந்தியத்தேவன், பொன்னியின் செல்வனைப் பார்க்கத்தானே ஈழம் போகிறான்! அவனோடு சென்றால் இளவரசரைப் பார்த்து விடலாம். இந்த எண்ணம் ஏற்பட்டதும், மனோவேகத்தில் அவன் இருக்கும் இடத்துக்கு வந்து விட்டேன்!

அதோ பூங்குழலி!

குளித்துக் கொண்டிருக்கும் வந்தியத் தேவனின் உடைகளை எடுத்துக் கொண்டு ஓடுகிறாள். வந்தியத் தேவனும் அவளைப் பின் தொடர்ந்து ஓடுகிறான். நானும்…!

மரத்தின் மேலிருந்து கொண்டு வந்தியத் தேவனும் பூங்குழலியும் பேசுவதை சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்! பாவம் இந்த வந்தியத் தேவன்! இளைய பிராட்டி குந்தவையிடம் கூட அவ்வளவு சாமர்த்தியமாகப் பேசியவன், இந்தப் பூங்குழலியிடம் மாட்டிக் கொண்டு விழிப்பது கொஞ்சம் வேடிக்கையாகவும், பரிதாபமாகவும் இருக்கிறது!

இதோ கிளம்பி விட்டார்கள் இருவரும், ஈழத்திற்கு. பாடிக் கொண்டே படகு வலிக்கிறாள், பூங்குழலி.

“அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்?”

பூங்குழலியின் குரலிலும் குழல்தான் குழைகிறது. சோகமும்தான். பாவம் அவள், அவளுக்கு என்ன ஏக்கமோ? சேந்தன் அமுதனை நினைத்தால்தான் கொஞ்சம் கவலையாயிருக்கிறது.

“இதோ நாகத் தீவு வந்து விட்டது!” பூங்குழலியின் குரல்.

“எழுந்திரு!”

“இங்கே வாயேன்!”

என்ன இது, பூங்குழலியின் குரல் இப்போது கொஞ்சம் வேறு மாதிரி ஒலிக்கிறதே?

“ஏய்டி, எவ்வளவு நேரமாக் கூப்பிடறேன்! என்ன பண்ணிக்கிட்டிருக்கே!” இப்போது அதுவே என் தங்கையின் குரலாக ஆகி விட்டதோடு, இரண்டு வளைக்கரங்கள் என்னை உலுக்கவும் செய்கின்றன!

***

திருவிழாவில் தொலைந்த போன குழந்தை போல் சுற்றும் முற்றும் பார்த்து விழிக்கிறேன்!

பூங்குழலியும் வந்தியத் தேவனும் என்ன ஆனார்கள்? நாகத் தீவு எங்கே போச்சு? அடடா, அரும்பாடு பட்டும் கடைசியில் பொன்னியின் செல்வனைப் பார்க்க முடியவில்லையே…

அடச் சே! இவள் ஏன் இந்த சமயம் பார்த்து என்னைக் கூப்பிட்டாள்? என் தங்கையின் மீது ஒரே கோபமாக வருகிறது! கூடவே ஒரு குழப்பமும்!

“இது கனவா, அல்லது நனவா?” என்னையே கேட்டுக் கொள்கிறேன்.

“ரெண்டும் இல்லைடி... கதை!”

மடியில் கிடக்கும் புத்தகம் என்னைப் பார்த்துக் கண் சிமிட்டுகிறது!



--கவிநயா

Sunday, December 6, 2009

நான் பேச நினைப்பதெல்லாம்...

நம்ப முடியவில்லை.

என்றைக்கும் இல்லாத அதிசயமாக இராத்திரி சாப்பாடு, வெற்றிலை மடிப்பெல்லாம் முடிந்த பிறகு, “என்னங்க, நான் இன்னிக்கு உங்க மடியில படுத்துக்கணும்”, என்றாள் மீனு என்கிற மீனலோசனி, அவளுக்கே உரித்தான மெல்லிய குரலில்.

“வாவா… படுத்துக்கயேன். இதெல்லாம் கேட்கணுமா என்ன?”, குறும்புச் சிரிப்புடன் அவள் படுப்பதற்கு வாகாக நகர்ந்து உட்கார்ந்து கொண்டார், சுந்தரம் என்கிற சோமசுந்தரம்.

பதிலுக்கு, சுருக்கம் நிறைந்திருந்தாலும், யாரையும் இன்னும் சற்றே நின்று திரும்பிப் பார்க்க வைக்கும் அழகிய அவள் முகம், வழக்கம் போல் வெட்கத்தில் சிவக்கவில்லை என்பதைக் கவனித்தார். “என்னம்மா ஆச்சு?”, கனிவுடன் புறப்பட்ட கேள்விக்கு,

“ஒண்ணுமில்லைங்க”, என்று இலேசாக புன்னகைத்தபடி, அவருடைய கையை எடுத்து கன்னத்தில் வைத்துக் கொண்டாள். அவள் விழிகளில் அவருக்கான அன்பு பொங்கித் ததும்பிக் கொண்டிருந்தது.

அவள் நெற்றி முடியை கவனமாக ஒதுக்கி விட்டு, இலேசாக அங்கே அவர் இதழ் பதித்த போதுதான்… அவளுடைய இதழ்களில் வழிந்த புன்னகையும், கண்களில் வழிந்த அபரிமிதமான அன்பும், அப்படியே உறைந்து விட்டிருந்ததை உணர்ந்தார்.

சுவாசம் நின்றதே தெரியாமல் நின்று விட்டிருந்தது.

அவள் கைக்குள் சிறைப்பட்டிருந்த தன் கையை விடுவிக்கும் எண்ணம் கூட இல்லாமல், அதிர்ச்சியில் தானும் உறைந்து, அப்படியே உட்கார்ந்திருந்தார், சுந்தரம்.

“மீனு… மீனு… என்னைப் பாரம்மா”, கன்னத்தில் தட்டியும், அவளை உலுக்கியும் பார்த்தார், பயனில்லை என்று மனம் சொன்ன போதும்.

“ஏன், எப்படி, இதுவும் சாத்தியமா…”, மடியில் கிடக்கும் அவளை பார்த்துக் கொண்டே எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தாரோ அவருக்கே தெரியாது. உலகம் சட்டென்று இருண்டு விட்டால் இப்படித்தான் இருக்குமோ? கண்ணை கறுப்புத் துணியால் கட்டி, அடர்ந்த காட்டுக்குள் தனியே விட்டு விட்டால் இப்படித்தான் இருக்குமோ? நம்மைத் தவிர ஏனைய உலகனைத்தும் உறைந்து விட்டாலும் இப்படித்தான் இருக்கும் போலும்.

மீனு… மீனலோசனி… அவளுடைய அழகிய விழிகள் இன்னும் திறந்தேதான் இருந்தன, அவர் முகத்தைக் காதலுடன் பார்த்த வண்ணம். அவற்றை மூட அவருக்கு இன்னும் மனம் வரவில்லை. அவருடன் அவள் பகிர்ந்து கொண்ட வாழ்வின் மகிழ்வுக்குச் சான்றாக இறுதி நொடியிலும் அன்பு ததும்பும் அந்தக் கண்கள்…

**

இருவருக்கும் திருமணம் ஆன போது எல்லோரும் மறக்காமல் சொன்ன விஷயங்களில், “பாருங்களேன், பெயர் பொருத்தம் கூட எத்தனை கச்சிதமா அமைஞ்சிருக்குன்னு!”, என்பதும் ஒன்று. மீனுவின் அழகுக்கு ஏற்பத்தான் இருந்தார் சுந்தரமும். வாட்ட சாட்டமாக, அவளை விட சற்றே உயரமாக, கருகருவென்ற சுருட்டை முடியுடன். யார் கண்ணும் பட்டு விடக் கூடாதென்று மீனுவின் அம்மா வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இவர்களை ஒன்றாக உட்கார வைத்து திருஷ்டி சுற்றிப் போடுவார். முதலில் அவர்களுக்கு மட்டும். பிறகு அவர்கள் குழந்தைகளையும் சேர்த்து.

அன்னியோன்யத் தாம்பத்யத்திற்கு இவர்களைத் தான் ஊரே உதாரணமாகக் கொண்டது. சின்னச் சின்னப் பூசல்களும், பொருளாதார நெருக்கடிகளும், இவர்கள் அன்புக்கும், நெருக்கத்திற்கும் உரம்தான் இட்டன. ராம லட்சுமணர்கள் போன்ற இரு பிள்ளைகளையும் ஒண்டுக் குடித்தனத்தில் இருந்து கொண்டே சிரமப்பட்டு படிக்க வைத்தனர். அவர்களும் இப்போது நல்ல வேலையில், மனைவி, ஆளுக்கொரு பிள்ளை என்று நன்றாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள்தான் அப்பா அம்மாவிற்கு பார்த்து பார்த்து இந்த வீட்டைக் கட்டித் தந்தார்கள். இப்போது நினைத்துப் பார்க்கையில் வாழ்க்கை நிறைவாகத்தான் தெரிந்தது. பட்ட கஷ்டங்கள் எதுவும் நினைவுக்கு வரவில்லை.

ஒரு முறை அவர்கள் உறவினர் ஒருவரின் இறப்புக்குச் சென்றிருந்தார்கள். அந்த பெண்மணிக்கு இரண்டும் சின்னக் குழந்தைகள். தன் கணவர் எங்கே என்ன, சொத்து வைத்திருக்கிறாரா, கடன் வைத்திருக்கிறாரா, அவர் நடத்தி வந்த மருந்துக் கடையின் நிலைமை என்ன, இப்படி ஒன்றுமே தெரியவில்லை, அவர் மனைவிக்கு.

“பாவம், அவளை உள்ளங்கையில் வச்சுத் தாங்கினான். அவளுக்கு தொந்தரவு வேண்டாமுன்னு பண வெவகாரமெல்லாம் அவ காதுக்கு போகாம பாத்துகிட்டான். இப்படி அல்ப ஆயுசில போவம்னு தெரியுமா என்ன?”, என்று அங்கலாய்த்தாள், இறந்தவனின் அத்தைக்காரி ஒருத்தி.

அதிலிருந்து சுந்தரத்துக்கு ஒரு உறுதி. மீனுவிற்கு தெரியாமல் எதுவுமே செய்வதில்லை அவர். அவளை கலந்து பேசித்தான் ஒவ்வொரு சேமிப்பும், செலவும், எதுவுமே நடக்கும். தான் திடீரென்று போய் விட்டால் அந்தப் பெண்மணியைப் போல மீனு கஷ்டப் படக் கூடாது. அதை அவரால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

அதே போலத்தான், “குளிச்சுத் துவட்டிக்க துண்டு வேணும்னா கூட பொண்டாட்டிதான் எடுத்துத் தர வேண்டியிருந்தது. இப்ப அவ பொசுக்குன்னு போயிட்டா. இவருக்கு இனிமே கஷ்டம்தான் பாவம்”, என்பது போன்ற உரையாடலையும் கேட்டிருக்கிறார். இதெல்லாம் பேச்சுக்கு மட்டும்தான் அழகாக இருக்கும் என்பதை உணர்ந்திருந்தார். அதனாலேயே தன் வேலைகளை அவர் தானேதான் செய்து கொள்வார்.

சனி ஞாயிறு வந்தாலே அவர்கள் வீட்டில் கொண்டாட்டம்தான். ஞாயிறு அன்றைக்கு மீனுவிற்கு கட்டாய ஓய்வு! அப்பாவும் பிள்ளைகளும்தான் அடுக்களை ஆட்சி அன்று! அன்று பூராவும் அவளை விரலைக் கூட அசைக்க விடாமல் மகாராணியைப் போல அப்படி கவனிப்பார்கள்!

மீனுவும் சொக்கத் தங்கம். பொறுமையின் சிகரம். அது வேண்டும் இது வேண்டும் என்று மற்ற பெண்கள் மாதிரி எந்த ஆசையும் கிடையாது அவளுக்கு. சில சமயம் இவள் வாயைத் திறந்து ஏதாவது கேட்க மாட்டாளா என்று கூட இருக்கும் சுந்தரத்திற்கு! அன்பு மீறி என்றைக்காவது, “மீனு, உனக்கு ஏதாச்சும் செய்யணும் போல இருக்கு. என்ன வேணும் சொல்லேன்”, என்று சுந்தரம் கேட்டு விட்டால்,

“எனக்கென்னங்க பெரிசா ஆசை இருக்கு? சாகும் போது உங்க மடில படுத்து சாகணும். என்னோட ஒரே ஆசை அதுதான்”, என்பாள்.

“என்னம்மா. எப்பக் கேட்டாலும் இதையே சொல்றே? உனக்கு முன்னாடி நான் போய்ச் சேரப் போறேன் பாரு. எனக்குத்தான் கொலஸ்ட்ரால், சர்க்கரை, இரத்த அழுத்தம், அப்படி இப்படின்னு எமனுக்குப் பிடிச்ச எல்லாம் இருக்கு”, என்று அவர் சொல்லி முடிக்கும் முன், மென்மையாக ஆனால் உறுதியாக அவர் வாயை மூடுவாள். கண்கள் கலங்கி விடும்.

இப்போது இதெல்லாம் நினைவுக்கு வர, அவர் கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்து அவள் முகத்தை நனைத்தது.

“உன்னுடைய ஒரே ஒரு ஆசையும் நிறைவேறி விட்டதடி. அந்த இறைவனுக்கு நன்றி”, என்று சொல்லி, அவள் விழிகளில் மென்மையாக முத்தமிட்டார்.

“மீனு… ரொம்ப அசதியா இருக்கம்மா. ஒரு அரை மணி நேரம் படுத்திருந்திட்டு, பிறகு பிள்ளைகளைக் கூப்பிடறேன்”, என்ற வண்ணம் அவளை பூப்போல எடுத்து தலையணையில் படுக்க வைத்தார். அவள் கைகளை இறுகப் பிடித்தபடி பக்கத்தில் வழக்கம்போல் படுத்துக் கண்களை மூடிக் கொண்டார்.

நாளை? என்ற நினைப்பே அதற்கு மேல் ஓடவில்லை.

**
மறு நாள் காலை வேலைக்கு வந்த கற்பகம், அழைப்பு மணியை அழுத்தி அழுத்திப் பார்த்து விட்டு, இப்போது கதவுகளை பலமாகத் தட்ட ஆரம்பித்திருக்கிறாள்.


--கவிநயா

பி.கு. : இந்தக் கதை இளமை விகடனிலும்...

Wednesday, December 2, 2009

நினைவின் விளிம்பில் உலவும் நேரம் - 3

நேற்றைய பதிவின் தொடர்ச்சி...


சில காலத்திற்குப் பிறகு பல காரணங்களால் குழுமத்திற்கு தொடர்ந்து போக முடியலை. அப்படியே படிப்படியா குறைஞ்சிடுச்சு. சில மாதங்கள் எங்கேயுமே எழுதலை.

ஆன்மீகத்திலும், அதன் காரணமா பக்தி இலக்கியத்திலும் எனக்கு ஈடுபாடு
வ(ள)ர ஆரம்பிச்ச நேரமும் அதுதான். குமரனோட ‘அபிராமி அந்தாதி’ வலைப்பூதான் அப்பல்லாம் அடிக்கடி படிப்பேன். கண்ணனோட (கேயாரெஸ்) ‘பிள்ளைதமிழை’யும் விரும்பிப் படிச்சேன். அப்படித்தான் வலைப்பூக்களின் அறிமுகம் தொடங்கியது.

‘அன்புடனி’ல் மதச் சார்பான விஷயங்கள் எழுதக்கூடாது என்பது கொள்கை. அதில் தவறொன்றுமில்லை. நூற்றுக்கணக்கான பேர் இருக்கும் இடத்தில் அதனால் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம் என்பதால் அப்படி வச்சிருந்தாங்க.

எனக்கு இதுவும் எழுதணும், அதுவும் எழுதணும், எல்லாம் எழுதணும்னு இருந்தது :) கருத்து பரிமாறல்களும் சாத்தியமாகணும். ஏற்கனவே, எழுதுவதையெல்லாம் ஒரே இடத்தில் போட்டு வைக்கணும்கிற எண்ணம் வேறு இருந்தது.

ஒரு இணைய தளம் கூட ஆரம்பிச்சுட்டு, நேரமின்மை காரணமா அதைத் தொடர்ந்து பராமரிக்க முடியாம விட்டுட்டேன். வலைப்பூ பற்றி தெரிஞ்சதும், அட, இது நம்மைப் போல சோம்பேறி + அறிவிலிக்கு சுலபமா இருக்கேன்னு தோணிச்சு :)

முதல்ல எங்க ஊர் தமிழ்ச்சங்க வலைப்பூவில் தான் அவ்வப்போது எழுதிக்கிட்டிருந்தேன். என்ன இருந்தாலும் சொந்த வீடுன்னா கொஞ்சம் சௌகர்யம்தானேன்னு நினைச்சு ஆரம்பிச்சதுதான் இந்தப் பூ! என்னுடைய “என்று வருவான்?” என்கிற கவிதையில் இருந்தே வலைப் பூவிற்கு பெயரும் சூட்டினேன்.

அப்புறமா, 'அம்மன் பாட்டு', மற்றும் 'கண்ணன் பாட்டு' பூக்களின் குழுவில் குமரனும் கண்ணனும் அன்போடு என்னை சேர்த்துகிட்டாங்க. கண்ணன் பாட்டில் அவ்வப்போதும், அம்மன் பாட்டில் தொடர்ந்தும் எழுதிக்கிட்டிருக்கேன்.

கிட்டத்தட்ட 20 வருஷங்களுக்கு முன்னாடி எழுதிய என் கவிதை ஒன்றை இங்கே படிக்கலாம் :)

கவிதை, வாழ்க்கையின் பல கடினமான தருணங்களைக் கடக்க எனக்கு ரொம்ப உதவியிருக்கு. இப்பவும் அப்படித்தான். அதோட, உங்களோட சகிப்புத் தன்மையால, இப்ப உரைநடை எழுதவும் பழகிக்கிட்டிருக்கேன்!

என்னோடு இதுவரை வந்தவங்களுக்கும், வருகிறவர்களுக்கும், வரப்போகிறவர்களுக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக என்னை எழுத வைக்கின்ற, உங்களை வாசிக்க வைக்கின்ற, எல்லாம் வல்ல அந்த இறைவனுக்கும், என்னுடைய மனப்பூர்வமான நன்றிகள்.

எழுத்துக்கலையும் நடனக்கலை மாதிரிதான். பார்க்கிறாப்ல இருக்கோ இல்லையோ (!), நடனம் ஆடுவதே ஆடுபவருக்கு தனி ஆனந்தம் தரும். நடனம் ஆடுவதற்காவது வயசும் தோற்றமும் கொஞ்சம் வேணும். (நிறையவே வேணும்னு யாரோ சொல்றது காதில் விழுது! :)

ஆனால் எழுத்துக்கு இதெல்லாம் அவசியமில்லை! எழுதுவதே நிறைவைத் தரும் விஷயம். அதை பகிர்ந்துக்க சிலரும் சேர்ந்துட்டா கேட்கவே வேண்டாம்! அதனால உங்களுக்கெல்லாம் மீண்டும் நன்றி!

அனைவருக்கும் நன்றி சொல்ல வாய்ப்பு ஏற்படுத்தித் தந்த அன்பு கோபிக்கு சிறப்பு நன்றிகள்.

வலையுலகில் என் பூவும் மலர்ந்த கதை இதுதான். பாவம், நீங்கல்லாம் என்கிட்ட மாட்டிக்கிட்ட கதையும் இதுவேதான்!

நிஜம்ம்மாவே ரொம்ம்ம்ப பொறுமையா படிச்ச அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

அப்பாடி! கதையும் முடிஞ்சது; கத்தரிக்காயும் காய்ச்சது! நினைச்சதை விட ரொம்பவே நீண்டுடுச்சு, மன்னிச்சுக்கோங்க. இத்தனைக்கும் உங்க மேல இரக்கப்பட்டு நிறைய்ய்ய்யவே கட் பண்ணிட்டேனாக்கும்!

உங்க எல்லாருடைய வலைப்பூ வந்த அனுபவமும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கதால தொடர் பதிவுக்கு யாரையும் குறிப்பிட்டு கூப்பிடல. இந்த பதிவை வாசிச்சவங்க எல்லாம் இதனையே அன்பான அழைப்பா எடுத்துக்கிட்டு, உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்களேன்!



அன்புடன்
கவிநயா

Tuesday, December 1, 2009

நினைவின் விளிம்பில் உலவும் நேரம் - 2

(போன வாரத் தொடர்ச்சி...)


‘அன்புடனி’ல் எழுதிய நாட்கள் இனிமையானவை. அங்கே நிஜமாவே எல்லாரும் அன்பா இருந்தாங்க!

கவிதையை இட்டதும் உடனுக்குடன் கிடைச்ச கருத்துப் பரிமாறல்கள் திருப்தியைத் தந்தது. நல்ல நண்பர்கள் கிடைச்சாங்க. அன்புடன் புகாரி, சேதுக்கரசி, தி.சுந்தர், கவிஞர் ரமணன், ஆனந்த், காந்தி, வாணி, திரு.ஜெயபாரதன், திரு. சக்தி சக்திதாசன், சுரேஷ் பாபு, என்.சுரேஷ், ப்ரியன், முஜிப், ரிஷான், பூங்குழலி, இப்படி நிறைய பேர். சிலருடைய பெயர்கள் விட்டுப் போயிருக்க வாய்ப்பிருக்கு, அவங்க என்னை மன்னிக்கணும். இவங்கல்லாம் என் கவிதைகளை தொடர்ந்து படிச்சவங்க, இவங்க எழுத்துகளையும் இன்னும் பலரின் எழுத்துகளையும் நானும் விரும்பி படிச்சேன்.

தி.சுந்தரின் இழைகளைப் படிச்சா வாய் விட்டு சிரிக்காம இருக்க முடியாது! அப்படி ஒரு இயல்பான நகைச்சுவை, அவர் எழுத்தில். கவிதைகளும் அற்புதமா எழுதுவார். அவருடைய சிந்தனைகளே வித்தியாசமா இருக்கும். இவர் அறியாத விஷயமே இல்லை.

கவிஞர் ரமணன் அண்ணா போல கவிதைகள் எழுத முடியாது! தங்கு தடையில்லாம அவருக்கு வார்த்தைகள் வந்து விழும் விதத்தைப் பார்த்தால் பிரமிப்பா இருக்கும்.

திரு. ஜெயபாரதன் பல மொழி பெயர்ப்புக் கவிதைகளை எழுதியிருக்கார். அவர் ஒரு விஞ்ஞானியும் என்பதால் விஞ்ஞான புத்தகங்கள், கட்டுரைகள் எழுதியிருக்கார். இவர் எனக்கு ‘எமிலி டிக்கின்ஸன்’ என்று பெயர் சூட்டியிருந்தார்!

திரு. சக்தி சக்திதாசன் இயல்பான எளிமையான கவிதைகள் சரளமா எழுதுவார். நல்ல பண்பாளர். தவறாமல் அனைவரையும் ஊக்குவிப்பதில் மிக்க அன்பானவர்.

சுரேஷ் பாபு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு தெரியாத விஷயமே இல்லை என்கிற அளவிற்கு கணினியிலிருந்து அரசியல் வரை எல்லாவற்றையும் ஆழ்ந்த விஷய ஞானத்துடன் அலசுவார்.

அன்புடன் புகாரி அநாயாசமா கவிதைகள் எழுதுவார். புத்தகங்கள் வெளியிட்டிருக்கார். காதல் கவிதை ஸ்பெஷலிஸ்ட்! முதல் யூனி தமிழ் குழுமமான அன்புடனை ஆரம்பித்த பெருமை இவருக்கே உரியது!

சேதுக்கரசி எத்தனை இழை இருந்தாலும் அத்தனையும் தவறாமல் படிச்சு விவரமா பின்னூட்ட வேற செய்வாங்க! அத்தி பூத்தாப்ல கவிதை எழுதினாலும், எழுதறப்ப அசத்திருவாங்க.

ரிஷு என்கிற ரிஷானைப் பத்தி உங்களுக்கெல்லாம் நல்லாவே தெரியும்.

இப்படி ஒவ்வொருத்தரையும் பற்றி சொல்லிக்கிட்டே போகலாம், ஆனா நீங்களும் எழுந்து போயிருவீங்க! அதனால இப்போதைக்கு நிறுத்திக்கிறேன் :)

அன்புடனில் இருந்த அந்த சில வருஷங்களில்தான் நான் அதிக பட்ச கவிதைகள் எழுதியிருக்கேன்னு நினைக்கிறேன்.

சுவாரஸ்யமான பல இழைகள், கருத்தாடல்கள், கவியரங்கங்கள், ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள், கவிதை, கதைப் போட்டிகள், இப்படி பலப்பல நிகழ்ச்சிகள் நடந்தன, அன்புடனில்.

கவிதைப் போட்டிகளில் கலந்துகிட்டு பரிசு ஒண்ணும் வாங்கல. (இங்க குலோப்ஜாமூன் கதை மாதிரி இல்லப்பா! எக்கச்சக்க பேர், அதுவும் பெரீய்ய்ய கவிஞர்கள் கலந்துகிட்டாங்க!). எப்பவும் எங்கேயும் பரிசு வாங்கும் ஷைலஜாக்கா இங்கேயும் பரிசு வாங்கினது நினைவிருக்கு! ஒரு (வீடியோ)படக் கவிதைக்கு, நயாகரா அருவி பற்றியது, ஆறுதல் பரிசு வாங்கினேன். அது கொஞ்சமே கொஞ்சம் ஆறுதலா இருந்தது!

இன்னும் கொஞ்சூண்டு (காட் ப்ராமிஸ்!) இருக்கு; நாளைக்கு முடிச்சிடறேன்...

அன்புடன்
கவிநயா