Saturday, December 12, 2009

இளமை விகடன் டிசம்பர் மின்னிதழில்...

பூங்குழலியும் வந்தியத் தேவனும் என்ன ஆனார்கள்?




இங்கே படிக்கலாம்; அல்லது இங்கே; அல்லது இங்கேயே! :)


து என்ன இடம்?

பழகிய இடம் போலத் தெரிகிறது; புது இடம் போலவும் இருக்கிறது…

பக்கத்தில் நீர் சலசலத்து ஓடும் ஓசை கேட்கிறது. ஆனால் கண்ணுக்கு ஒன்றும் புலப்படவில்லை. பகல் நேரத்திலும் இந்த இடம்தான் எத்தனை குளுமை!

வானளாவி உயர்ந்திருக்கும் மரங்களும், மரங்களில் பூத்துக் குலுங்கும் பூக்களும், அந்த அழகுக்குச் சளைக்காமல் கீழே பாய் விரித்திருக்கும் உதிர்ந்த இலைகளும், மலர்களும்… இத்தகைய இயற்கை அழகையெல்லாம் இந்த பூமியில் இனி காண முடியாது என்றல்லவா நினைத்தேன்! அதோ… தெரிகிறது ஆறு! ஆற்றில்தான் எவ்வளவு தண்ணீர்! சந்தோஷமாகச் சளசளக்கிறது, ரகசியங்கள் பேசிக் கொண்டு ஓயாமல் சிரித்துக் கொண்டிருக்கும் வாயாடிக் குறும்புக்காரப் பெண்களைப் போல!

அதோ கன்னிப் பெண்களின் அலறல் கேட்கிறது. கொஞ்சம் பக்கத்தில் போய் பார்க்கலாம்… அடேயப்பா! கண்ணைக் கூசச் செய்யும் அணிகலன்களுடன், கதிரவனையும் கூசச் செய்யும் அழகுடன் திகழ்பவள் யாராயிருக்கும்?

அவள் அருகில் இருப்பவள் சொல்வது காதில் விழுகிறது: “அக்கா, முதலைக்கு தண்ணீரில் இருக்கும் வரைதான் பலம். கரைக்கு வந்து விட்டால் ஒன்றுமில்லை. இந்தப் பெண்களைச் சற்று சும்மா இருக்கச் சொல்லுங்கள்!”

“வானதி! உனக்கு எப்படியடி இத்தனை தைரியம் வந்தது?!”

அதற்குள் எங்கிருந்தோ பறந்து வந்த வேல் ஒன்று அந்த முதலையின் மேல் வேகமாகத் தைத்தது.

அதற்கு மேல் நடந்ததைக் கவனிக்காமல் மூளை ‘விர்’ரென்று சுழன்றது. இவள் குந்தவைப் பிராட்டியல்லவா? அவள் அருகில் நிற்பவள்தான் வானதி! அருள்மொழிவர்மரை அடையப் போகின்ற அதிர்ஷ்டசாலி! இந்த ஆற்றின் பெயர் அரிசிலாறு அல்லவா?!

இதற்குள் ஒரு குதிரை அவசரமாக ஓடி மறையும் சப்தமும், குந்தவை தன் தோழிகளைக் கண்டிப்பதும் கேட்கிறது. குதிரையில் சென்றவன் வந்தியத் தேவனாகத்தான் இருக்க வேண்டும். அடடா, அவனை பார்க்க முடியாமல் போய் விட்டதே!

நான் அங்கே இருப்பதை யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. என்னையே நான் கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன்.

“ஆ!”. வலிக்கத்தான் செய்கிறது.

***

ந்தியத் தேவனைப் பார்ப்பதைக் காட்டிலும், பொன்னியின் செல்வனைப் பார்க்கத்தான் எனக்கு மிகவும் ஆசை! இந்தக் கதாசிரியர்கள்தான் எத்தனை கெட்டிக்காரர்கள்! தான் படைக்கின்ற கதாபாத்திரங்கள் யாவையும் தங்களுக்கு ஒரே மாதிரிதான் என்று கதை விடுவார்கள்! ஆனால் ஒரு பாத்திரத்தின் மீது மதிப்பும் அன்பும் கூடிக் கொண்டே போகிற மாதிரியும், இன்னொன்றின் மீது வெறுப்பும் கோபமும் கூடிக் கொண்டே போகிற மாதிரியும் படைப்பதில் வல்லவர்கள்!

இந்த கல்கி கூட அப்படித்தான். முதல் பாகம் பூராவும் பொன்னியின் செல்வனைக் கண்ணிலேயே காட்டுவதில்லை. ஆனாலும் அவன் மீது அப்படியொரு பிரியத்தை ஏற்படுத்தி விடுகிறார். ஆதித்த கரிகாலனையும் சுந்தரச் சோழரையும் பற்றியும் கூட நன்றாகத் தான் சொல்கிறார். ஆனால் அவரே குந்தவை பற்றியும், பொன்னியின் செல்வன் பற்றியும் சொல்வதிலிருந்து மற்றவையெல்லாம் எத்தனை மாறுபடுகின்றன! இதிலிருந்தே தெரிகிறதல்லவா, அவர் பாரபட்சம் நிறைந்த பொல்லாதவர் என்று!

இதனால்தான் அந்தக் காலத்தில் கதை படித்தால் இந்தக் கதாநாயகனைப் போல நமக்குக் கணவன் அமைய மாட்டானா என்றும், அந்தக் கதாநாயகியைப் போல நமக்கு மனைவி அமைய மாட்டாளா என்றும், பலரும் கனவுகளை வளர்த்துக் கொண்டார்கள்! ஏன், கதாநாயகனும் கதாநாயகியும் அழகாகவும் அன்பாகவும் அறிவாளியாகவும் குணசாலியாகவும்தான் இருக்க வேண்டுமா என்ன? ஆனால் அதென்னமோ அப்படித்தான் படைத்தார்கள். ஒரு வேளை நிஜத்தில் காண முடியாததை கற்பனையிலாவது கண்டு களிக்கலாமென்ற எண்ணம் போலும்! இப்போது பரவாயில்லை, குற்றம் குறை உள்ளவரெல்லாம் கதையின் நாயகர்களாகவும், நாயகிகளாகவும், இருக்கிறார்கள்.

***

ஆகா…! குருட்டு யோசனையில் நேரம் போனதே தெரியவில்லை. வந்தியத்தேவன், பொன்னியின் செல்வனைப் பார்க்கத்தானே ஈழம் போகிறான்! அவனோடு சென்றால் இளவரசரைப் பார்த்து விடலாம். இந்த எண்ணம் ஏற்பட்டதும், மனோவேகத்தில் அவன் இருக்கும் இடத்துக்கு வந்து விட்டேன்!

அதோ பூங்குழலி!

குளித்துக் கொண்டிருக்கும் வந்தியத் தேவனின் உடைகளை எடுத்துக் கொண்டு ஓடுகிறாள். வந்தியத் தேவனும் அவளைப் பின் தொடர்ந்து ஓடுகிறான். நானும்…!

மரத்தின் மேலிருந்து கொண்டு வந்தியத் தேவனும் பூங்குழலியும் பேசுவதை சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்! பாவம் இந்த வந்தியத் தேவன்! இளைய பிராட்டி குந்தவையிடம் கூட அவ்வளவு சாமர்த்தியமாகப் பேசியவன், இந்தப் பூங்குழலியிடம் மாட்டிக் கொண்டு விழிப்பது கொஞ்சம் வேடிக்கையாகவும், பரிதாபமாகவும் இருக்கிறது!

இதோ கிளம்பி விட்டார்கள் இருவரும், ஈழத்திற்கு. பாடிக் கொண்டே படகு வலிக்கிறாள், பூங்குழலி.

“அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்?”

பூங்குழலியின் குரலிலும் குழல்தான் குழைகிறது. சோகமும்தான். பாவம் அவள், அவளுக்கு என்ன ஏக்கமோ? சேந்தன் அமுதனை நினைத்தால்தான் கொஞ்சம் கவலையாயிருக்கிறது.

“இதோ நாகத் தீவு வந்து விட்டது!” பூங்குழலியின் குரல்.

“எழுந்திரு!”

“இங்கே வாயேன்!”

என்ன இது, பூங்குழலியின் குரல் இப்போது கொஞ்சம் வேறு மாதிரி ஒலிக்கிறதே?

“ஏய்டி, எவ்வளவு நேரமாக் கூப்பிடறேன்! என்ன பண்ணிக்கிட்டிருக்கே!” இப்போது அதுவே என் தங்கையின் குரலாக ஆகி விட்டதோடு, இரண்டு வளைக்கரங்கள் என்னை உலுக்கவும் செய்கின்றன!

***

திருவிழாவில் தொலைந்த போன குழந்தை போல் சுற்றும் முற்றும் பார்த்து விழிக்கிறேன்!

பூங்குழலியும் வந்தியத் தேவனும் என்ன ஆனார்கள்? நாகத் தீவு எங்கே போச்சு? அடடா, அரும்பாடு பட்டும் கடைசியில் பொன்னியின் செல்வனைப் பார்க்க முடியவில்லையே…

அடச் சே! இவள் ஏன் இந்த சமயம் பார்த்து என்னைக் கூப்பிட்டாள்? என் தங்கையின் மீது ஒரே கோபமாக வருகிறது! கூடவே ஒரு குழப்பமும்!

“இது கனவா, அல்லது நனவா?” என்னையே கேட்டுக் கொள்கிறேன்.

“ரெண்டும் இல்லைடி... கதை!”

மடியில் கிடக்கும் புத்தகம் என்னைப் பார்த்துக் கண் சிமிட்டுகிறது!



--கவிநயா

32 comments:

  1. வந்திய‌த்தேவன், பூங்குழலி, பொன்னியின் செல்வர், பழுவேட்டரையர்கள், சேந்தன் அமுதன், வானதி, நந்தினி எல்லோரும் உங்கள் கனவிலும் வருகின்றார்களா?

    எல்லாம் கல்கி செய்த மாயம். காலத்தால் அழியாத சரித்திரம் பொன்னியின் செல்வன்.

    ReplyDelete
  2. வாசிப்ப‌னுவ‌ம் உள்ள‌ எல்லாருக்கும் பிடித்த‌து பொன்னியின் செல்வ‌ன்.
    விக‌ட‌னில் வ‌ந்த‌த‌ற்கு வாழ்த்துக்க‌ள்

    ReplyDelete
  3. நான் கல்லூரிக்கு செல்லும் வரை பொன்னியின் செல்வனைப்பற்றி கேள்விதான் பட்டிருக்கிறேன். இரண்டாம் ஆண்டு படிக்கும்போது நூலகத்தில் கிடைத்த அடுத்தடுத்த பாகங்களை ஒரே வாரத்தில் படித்து முடித்தது சிலிர்ப்பான அனுபவம். வரிசையாக புத்தகம் கிடைத்தது அதிர்ஷ்டம்னுதாங்க சொல்லணும்.

    இந்த நாவலோட தொடர்ச்சி மாதிரி விக்ரமன் எழுதிய நந்திபுரத்து நாயகி (1000 பக்கங்களுக்கு மேல் ), வந்தியத்தேவன் வாள், சமீபத்தில் காவிரிமைந்தன் மூன்று பாகங்கள் எல்லாத்தையும் வாசித்து முடித்தாயிற்று.

    இதற்கெல்லாம் முக்கிய காரணம் கல்கி ஏற்படுத்திய தாக்கம்தாங்க.

    இளமை விகடன் மின்னிதழ்ல கதை வந்ததுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் கவிநயாக்கா!

    ReplyDelete
  5. //பூங்குழலியும் வந்தியத் தேவனும் என்ன ஆனார்கள்?//

    கவிநயாவின் கனவில் வந்து சிலகணநேரம் எங்களை கட்டிப் போட்டார்கள்:)!

    இளமை விகடனுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  6. எனக்கு வந்தியத் தேவனைத் தான் பிடிக்கும், என்னை மாதிரி அவசரக்குடுக்கையாவும், பிரச்னைகளில் அடுத்தடுத்து மாட்டிண்டு முழிக்கிறதாலுமா?? தெரியலை. நந்திபுரத்து நாயகியும், வந்தியத் தேவன் வாளும் அவ்வளவாய் மனதைக் கவரவில்லை. நல்லாத் தூங்கி இருக்கீங்க போல! தூக்கம் எங்கே? ஆப்பீச்சு??? அதான்! :D

    பொன்னியின் செல்வன் பத்தின பதிவுனதும் அவசரமா ஓடி வந்தேன். மூச்சு இரைக்குது, வரேன் அப்புறமா.

    ReplyDelete
  7. இது போன்ற கனவு நிஜத்திலும் வந்திருக்கிறதா கவிக்கா?...அருமையான நடை...வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  8. //அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்?”//

    கல்கி அவர்களின் இந்தக் கவிதை வரிகளை உங்கள் பதிவில் பார்த்து என் எண்ணமும் எங்கெங்கோ பறந்தது.

    வருடம் சரியாக நினைவில்லை. ஆனால் அந்த அற்புத குரல் மட்டும் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்து விட்டது.

    திருமதி. டி.கே.கலா அவர்களின் குரல். சென்னை வானொலியில் இந்தப் பாடலை ஒலிப்பரப்பிய ஒவ்வொரு தடவையும் வானொலிப் பெட்டிக்கு அருகே மெய்மறந்து உட்கார்ந்து விடுவேன். கலகி அவர்களின் இந்தக் கவிதையிலிருந்த சோக உணர்வை குழைத்துத் தருவதாக அவர் குரல் இருக்கும்.
    ம்.. 'நெஞ்சம் மறப்பதில்லை; நினைவுகள் அழிவதில்லை'

    “அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்?
    நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?
    காட்டினில் வாழ் பறவைகளும் கூடுகளைத் தேடினவே!
    வேட்டுவரும் வில்லியரும் வீடு நோக்கி ஏகுவரே

    “வானகமும் நானிலமும் மோனமதில் ஆழ்ந்திருக்க
    மான்விழியாள் பெண்ணொருத்தி மனத்தில் புயல் அடிப்பதுமேன்?
    வாரிதியும் அடங்கி நிற்கும் மாருதமும் தவழ்ந்து வரும்
    காரிகையாள் உளந்தனிலே காற்றுச் சுழன் றடிப்பதுமேன்?..

    ---நகைச்சுவை உணர்வுக்குப் பெயர் பெற்ற கல்கியால் எப்படி இவ்வளவு சோகமாக ஒரு கவிதை வடித்தெடுக்க முடிந்தது?..
    தெரியவில்லை.

    நினைவுகளையும் பொன்னியின் செல்வன் வரிகளையும் மடக்கி ஒன்றில் ஒன்று கலந்து ஓடவிட்டு புதுமாதிரியாக முயற்சி செய்திருப்பது அழகாக இருக்கிறது..

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள், கவிநயா!

    ReplyDelete
  9. //எல்லாம் கல்கி செய்த மாயம். காலத்தால் அழியாத சரித்திரம் பொன்னியின் செல்வன்.//

    சரியாகச் சொன்னீர்கள்! வந்தியத் தேவனே வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது :) முதல் வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  10. //வாசிப்ப‌னுவ‌ம் உள்ள‌ எல்லாருக்கும் பிடித்த‌து பொன்னியின் செல்வ‌ன்.//

    ஆமாம், சந்தேகமில்லாமல்!

    //விக‌ட‌னில் வ‌ந்த‌த‌ற்கு வாழ்த்துக்க‌ள்//

    வாழ்த்துக்கும் முதல் வருகைக்கும் மிக்க நன்றி கரிசல்காரன்.

    ReplyDelete
  11. //அடுத்தடுத்த பாகங்களை ஒரே வாரத்தில் படித்து முடித்தது சிலிர்ப்பான அனுபவம்.//

    ஆமாங்க, நான் வெகு நாட்களுக்கு பிறகு திரும்பவும் படிச்சேன்; ஆனாலும் கீழே வைக்க முடியலை!

    //இதற்கெல்லாம் முக்கிய காரணம் கல்கி ஏற்படுத்திய தாக்கம்தாங்க.//

    சரிதான்; இந்த கதையின் நடையில் கூட கல்கியின் பாதிப்பு இருக்கும் :) படிச்ச உடன் எழுதியது.

    //இந்த நாவலோட தொடர்ச்சி மாதிரி விக்ரமன் எழுதிய நந்திபுரத்து நாயகி (1000 பக்கங்களுக்கு மேல் ), வந்தியத்தேவன் வாள், சமீபத்தில் காவிரிமைந்தன் மூன்று பாகங்கள் எல்லாத்தையும் வாசித்து முடித்தாயிற்று//

    அடேயப்பா. நல்ல வேகம்தான் :)

    //இளமை விகடன் மின்னிதழ்ல கதை வந்ததுக்கு வாழ்த்துக்கள்.//

    முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சரண்.

    ReplyDelete
  12. //வாழ்த்துக்கள் கவிநயாக்கா!//

    மிக்க நன்றி ஜீவா! ரொம்ப நாளுக்கு பிறகு உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியும்! :) குட்டி பாப்பா நலம்தானே?

    ReplyDelete
  13. //கவிநயாவின் கனவில் வந்து சிலகணநேரம் எங்களை கட்டிப் போட்டார்கள்:)!/

    ரொம்ப சந்தோஷம் ராமலக்ஷ்மி :)

    நான் "கனவா, நனவா?"ன்னுதான் தலைப்பு வச்சிருந்தேன். விகடன்ல மாத்தியிருக்காங்க :)

    //இளமை விகடனுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!!//

    நல்லா சொன்னீங்க போங்க! மிக்க நன்றி.

    ReplyDelete
  14. //எனக்கு வந்தியத் தேவனைத் தான் பிடிக்கும், என்னை மாதிரி அவசரக்குடுக்கையாவும், பிரச்னைகளில் அடுத்தடுத்து மாட்டிண்டு முழிக்கிறதாலுமா?? தெரியலை.//

    அம்மா, என்னை மாதிரி இல்லாததாலதான் எனக்கு அருள்மொழிவர்மரைப் பிடிக்கும் :)

    //நல்லாத் தூங்கி இருக்கீங்க போல! தூக்கம் எங்கே? ஆப்பீச்சு??? அதான்! :D//

    சர்தான்! ஆப்பீச்ல தூங்கினா நாற்காலியோட சேர்த்து தூக்கி வெளிய வச்சிருவாங்க! இது வீட்டில் வந்த பகல் கனவுதான் :)

    //பொன்னியின் செல்வன் பத்தின பதிவுனதும் அவசரமா ஓடி வந்தேன். மூச்சு இரைக்குது, வரேன் அப்புறமா.//

    மெதுவா, ஆனா கண்டிப்பா வாங்க!

    எனக்காக இல்லாட்டாலும் பொ.செ.க்காக வந்ததுக்கு நன்றி கீதாம்மா :P

    ReplyDelete
  15. //இது போன்ற கனவு நிஜத்திலும் வந்திருக்கிறதா கவிக்கா?...அருமையான நடை...வாழ்த்துக்கள் :)//

    எனக்கு கனவே அவ்வளவா வராது; வர்றதும் உருப்படியா வராது :) கதையை ரசிச்சதுக்கு மிக்க நன்றி மௌலி!

    ReplyDelete
  16. //திருமதி. டி.கே.கலா அவர்களின் குரல். சென்னை வானொலியில் இந்தப் பாடலை ஒலிப்பரப்பிய ஒவ்வொரு தடவையும் வானொலிப் பெட்டிக்கு அருகே மெய்மறந்து உட்கார்ந்து விடுவேன்.//

    அப்படியா. நான் இந்த பாடலின் ஒலிவடிவைக் கேட்டதே இல்லை ஜீவி ஐயா. இப்ப கேட்கணும்னா கிடைக்குமா?

    பாடல் வரிகளை அப்படியே எடுத்து எழுதியிருப்பதிலிருந்தே உங்கள் லயிப்பு புரிகிறது.

    //---நகைச்சுவை உணர்வுக்குப் பெயர் பெற்ற கல்கியால் எப்படி இவ்வளவு சோகமாக ஒரு கவிதை வடித்தெடுக்க முடிந்தது?..
    தெரியவில்லை.//

    உண்மைதான் ஐயா. சோகமாக மட்டும் இல்லை, வெகு அழகாகவும். வார்த்தைகள் எல்லாம் கச்சிதமாக வந்து அமர்ந்திருக்கின்றன.

    //நினைவுகளையும் பொன்னியின் செல்வன் வரிகளையும் மடக்கி ஒன்றில் ஒன்று கலந்து ஓடவிட்டு//

    வழக்கம் போல, உங்கள் பாணியில் நீங்கள் சொன்ன விதத்தை ரசித்தேன் :)

    //மனம் நிறைந்த வாழ்த்துக்கள், கவிநயா!//

    உங்கள் ஆசிகளால் என் மனமும் நிறைந்து விட்டது. மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  17. பொன்னியின் செல்வ‌ன்.
    விக‌ட‌னில் வ‌ந்த‌த‌ற்கு வாழ்த்துக்க‌ள்

    ReplyDelete
  18. இளமை விக‌ட‌னில் வ‌ந்த‌த‌ற்கு வாழ்த்துக்க‌ள் கவி....


    //ரெண்டும் இல்லைடி... கதை!

    மடியில் கிடக்கும் புத்தகம் என்னைப் பார்த்துக் கண் சிமிட்டுகிறது!//


    செம சூப்பர் பா....

    ReplyDelete
  19. அன்பு கவிநயா மனம் நிறைந்த வாழ்த்துகள்.
    மாறாத சோகம் இந்தப் பாடல். இது ஒலிக்காத கன்னிப் பருவ நாட்களும் இருக்க முடியுமா. கல்கி அவர்களின் நகைச்சுவைக்கு மேலே அவரது கதாநாயகிகள் பௌம்பாட்டை அவர் வர்ணிக்கும் விதம்தான் மிகவும் அருமையாக இருக்கும். ஒரே ஒரு சிவகாமி என்னை நிறைய நாள் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறாள்.
    மாமல்லரின் அறிவு தீட்சண்யமும் சிவகாமியின் அன்பின் கூர்மையும் மிகப் பொறுமையாகச் செதுக்கிக் காண்பிப்பார்.

    நீங்களும் கனவு கண்டு என்னையும் இழுத்துவிட்டீர்கள்.

    ReplyDelete
  20. //பொன்னியின் செல்வ‌ன்.
    விக‌ட‌னில் வ‌ந்த‌த‌ற்கு வாழ்த்துக்க‌ள்//

    முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் நிகே!

    ReplyDelete
  21. //இளமை விக‌ட‌னில் வ‌ந்த‌த‌ற்கு வாழ்த்துக்க‌ள் கவி....//

    //செம சூப்பர் பா....//

    மிக்க நன்றி ஸ்வர்ணரேக்கா! :)

    ReplyDelete
  22. //மாமல்லரின் அறிவு தீட்சண்யமும் சிவகாமியின் அன்பின் கூர்மையும் மிகப் பொறுமையாகச் செதுக்கிக் காண்பிப்பார்.//

    உண்மைதான் வல்லிம்மா. சிவகாமியின் சபதமும் படிச்சு நாளாயிடுச்சு. மறுபடி படிக்கணும்!

    //நீங்களும் கனவு கண்டு என்னையும் இழுத்துவிட்டீர்கள்.//

    என் கனவுக்குள் நீங்களும் வந்ததற்கு மிக்க நன்றி அம்மா :)

    ReplyDelete
  23. //அப்படியா. நான் இந்த பாடலின் ஒலிவடிவைக் கேட்டதே இல்லை... இப்ப கேட்கணும்னா கிடைக்குமா?//

    'பொதிகை'யிலும் ஒருகாலத்தில் ஒளிப்பரப்பியதாக நினைவுண்டு; இதைப் படிப்பவர் யாராவது வழிகாட்டினால் தான் உண்டு.

    ReplyDelete
  24. //இதைப் படிப்பவர் யாராவது வழிகாட்டினால் தான் உண்டு.//

    காத்திருப்போம் :)

    மீள் வருகைக்கு நன்றி ஜீவி ஐயா.

    ReplyDelete
  25. //Good.. Congratz for YouthV :-)//

    முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி, உழவன்!

    அங்கேயே உங்க படைப்பையும் பார்த்தேன்; உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகளும் :)

    ReplyDelete
  26. அவ்வ்வ்வ்...நான் பின்னூட்டம் போட்டேன்னு நினைச்சுட்டு இருக்கேன்...வந்துச்சா!??

    அக்கா அருமையான கதை..வாழ்த்துக்கள் ;))

    ReplyDelete
  27. //நான் பின்னூட்டம் போட்டேன்னு நினைச்சுட்டு இருக்கேன்...வந்துச்சா!??//

    இப்பதான் வருது தம்பீ!

    //அக்கா அருமையான கதை..வாழ்த்துக்கள் ;))//

    மிக்க நன்றி கோபி :)

    ReplyDelete
  28. பொன்னியின் செல்வன் படித்த நாட்கள் நினைவிற்கு வருகிறது. நினைவூட்டியதற்கு நன்றி.

    ஹேமலதா

    ReplyDelete
  29. வாங்க ஹேமலதா. நன்றி :)

    ReplyDelete
  30. Congrats !! :)
    Kalki is my all time favourite author. I have never read another book like Ponniyin Selvan. It has suspense, humour, romance, logic, philosophy and spirituality too. Here and there Kalki would have sprinkled words of wisdom through pasurams & padhigams. Gem of a book !!!
    விகடனில் தங்கள் எழுத்து வராதா என்று பல பேர் கனவு கண்டு கொண்டு இருக்கும் வேளையில் உங்கள் கனவு விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள். :)

    ReplyDelete
  31. பொன்னியின் செல்வன் பற்றிய உங்க கருத்தோடு வார்த்தைக்கு வார்த்தை ஒத்துப் போறேன், ராதா :) அதுதான் என்னுடைய all time favourite book :) even among Kalki's.

    //விகடனில் தங்கள் எழுத்து வராதா என்று பல பேர் கனவு கண்டு கொண்டு இருக்கும் வேளையில் உங்கள் கனவு விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள். :)//

    சொல்லாடலை ரசித்தேன் :) வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)