
(அறிவியல் புனை கதை)
"லலல்லல்லா, லலல்லல்லா", வீட்டுக்குள் நுழையும் போதே, சந்தோஷப் பாடல் உதடுகளில் விளையாட, கால்கள் அதற்கேற்ப ஜதி போடுகின்றன. செல்ல மகளின் துள்ளலைப் பார்த்து ரசித்தபடி அவளுடனே உள்ளே வருகிறார்கள், அவள் பெற்றோர், மதுமிதாவும், மதனும். "மிஸ் சென்னை" யாக அழகிப் போட்டியில் வாங்கிய கோப்பைக்கு மறுபடியும் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுக்கிறாள், இஷா. பெற்றோர் இருவர் கழுத்துக்களையும் கட்டிக் கொண்டு, முத்தமிட்டு, அவர்களுக்கும் தன் நன்றியைத் தெரிவிக்கிறாள்.
"அம்மா, அப்பா, நான் சீக்கிரம் கிளம்பி வர்றேன்; நீங்களும் ரெடியாகுங்க", உற்சாகமாகத் துள்ளிக் கொண்டு குளியலறையில் நுழைந்து கொள்கிறாள். அன்றைக்கு அவர்கள் மூவரும் சில குடும்ப நண்பர்களுடன் சேர்ந்து வெளியில் போய்க் கொண்டாடுவதாக ஏற்பாடு.
மதுவும், மதனும், அன்று முடிந்த அந்த அழகிப் போட்டியின் சிறப்பைப் பற்றிச் சிறிது நேரம் சிலாகித்துப் பேசி விட்டு, உடை மாற்றித் தயாராகவும், இஷா கீழே வரவும் சரியாக இருக்கிறது.
"அம்மா, எப்படி இருக்கு?" முன்னும் பின்னுமாகத் திரும்பி, விளம்பரப் பெண்ணைப் போல் நின்றும் நடந்தும் காட்டுகிறாள்.
"என் பெண்ணைப் போல் அழகு யாருக்காவது வருமா?" அப்போது அங்கு வந்த மதன், மகளைத் தோளோடு அணைத்து உச்சி முகர்கிறான்.
தன் பெண்ணைத் தூரத்திலேயே நின்று இன்னும் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள், மது. நல்ல ஆழச் சிவப்பில் சரிகை வேலை செய்யப்பட்ட ரெடிமேட் உடையும், அதற்கெற்றவாறு மற்ற அணிகலன்களும், சீராக வாரப்பட்ட நீண்ட கருங்கூந்தலுமாய், கண்ணைச் சுண்டியிழுக்கும் அழகுடன், அந்தப் பதினாறு வயதுக்கே உரிய உடல்வாகுமாய்... இப்படியாக நினைப்பு ஓடுகையில், நூல் பிடித்தாற்போல் இஷாவின் பிறப்பையும் பின்னால் திரும்பிப் பார்க்கிறது, மதுவின் மனசு.....
குழந்தையின் முகத்தைப் பார்த்ததும், மதுவின் முகம் சுளிக்கிறது, மிக இலேசாக. "அழகான குழந்தைகள் உத்தரவாதம்", என்ற வாசகம் விதவிதமான வடிவங்களில், அந்த மருத்துவமனை எங்கும் அறிவிப்பாய்த் தொங்கிக் கொண்டிருக்கிறது. அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர் ரமணி ராகவன், சற்றே திரும்பி அவள் கணவன் மதனின் முகத்தைக் கவனிக்கிறார். அவன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை; சற்று முன் மலர்ந்த முகம் அப்படியே இருக்கிறது. மதுவின் முக மாற்றத்தைக் கூட அவன் இன்னும் கவனிக்கவில்லை. ஆவலுடன் குழந்தையையே வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
நினைத்துப் பார்க்கையில் அவனுக்கு இன்னும் நம்பவே முடியவில்லை. இயற்கையாகக் கருத்தரித்துக் குழந்தை பெற்றுக் கொள்வது மிக மிக அரிதாகிவிட்ட இந்த இரண்டாயிரத்து இருநூறுகளில், இவர்கள் இருவருக்கும் அந்த அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது.
"குழந்தைக்கு ஐந்து வயதாகும்போது இப்படித்தான் இருப்பாள்... பத்து வயதில் இப்படி...", கணிப் பொறியைத் தட்டியபடி, ஒவ்வொரு வயதுத் தோற்றத்தையும், மதுவிற்கும், மதனுக்கும் காட்டுகிறார், ரமணி. மதுவின் முகச் சுளிப்பு இன்னும் மாறவில்லை.
"டாக்டர், இந்தக் குழந்தையைப் பத்தி எனக்குன்னு சில ஆசைகள், கனவுகள் இருக்கு...", மெதுவாக ஆரம்பிக்கிறாள், மது.
கனவிலிருந்து விழித்தாற்போல், அவள் குரலைக் கேட்டதும், அவள் பக்கம் திரும்புகிறான், மதன்.
"சொல்லுங்க, மது", அவளை ஊக்குவிக்கிறார், ரமணி.
"என் குழந்தை பெண் குழந்தையாயிருப்பது பத்தி எனக்குக் கவலை இல்ல. ஆனால் எனக்கு என் பெண் உலக அழகியாய் வரணும்னு ஆசை. ஆனா அவளுக்குப் பாருங்க - (ஐந்து வயதுப் படத்தைச் சுட்டிக் காட்டுகிறாள்) - முடி ரொம்பச் சுருட்டையாக இருக்கு. கண்ணைப் பாருங்க, கொஞ்சம் மாறுகண் போல இருக்கு. அப்புறம், இதப் பாருங்க - (பதினாறு வயதுப் படத்தைச் சுட்டுகிறாள்) - இந்தப் படத்தில் ரொம்ப குண்டா இருக்கா", வேகமாக அடுத்தடுத்த வயதுப் படங்களைப் பார்வையிடுகிறாள். எல்லாவற்றிலும் கொஞ்சம் சதைப் பிடிப்பான உடல் வாகுடன், குண்டுக் கன்னங்களுடன் இருக்கிறாள், அந்தப் படத்திலிருப்பவள்.
மதன் அதிர்ச்சியுடன் தன் மனைவியைப் பார்க்கிறான். "மது, எது எப்படி இருந்தாலும், அவ நமக்குக் கிடைச்சிருக்கிற அதிர்ஷ்டம். அவளை அப்படியே ஏத்துக்கிறதுதான் நல்லது".
"மது, இப்போதெல்லாம் இயற்கையாய்க் கருத்தரிக்கிறது ரொம்பக் குறஞ்சிட்டுது... எல்லோருக்கும் ஏதாவது ஒரு பிரச்சினை. அதனால இப்பல்லாம் யாருமே காத்திருக்கிறதோ, முயற்சி செய்யறதோ கூட இல்ல. குழந்தை வேணும்னு தோணின உடனேயே இந்த மாதிரி ஒரு மருத்துவமனைக்கு வந்துடறாங்க. என்ன நிறத்துல கண்ணு வேணும், என்ன நிறத்துல முடி இருக்கணும், என்ன உயரம் இருக்கணும், இப்படி எல்லாத்தையும் யோசிச்சுத் தீர்மானம் பண்ணி எங்கள்ட்ட கொடுத்துர்றாங்க. நாங்களும் அதுக்குத் தகுந்த மாதிரி குழந்தையை உருவாக்கித் தர்றோம். அந்த அளவுக்கு இப்ப மருத்துவமும், விஞ்ஞானமும் வளர்ச்சி அடைஞ்சிருக்கு."
"ஆனா நீங்க அப்படி இல்ல. நீங்க இவ்வளவு நாள் காத்திருந்து இயற்கையா குழந்தை வேணும்னு முயற்சி செஞ்சீங்க. அதே போல இப்ப இயற்கையாக் கர்ப்பம் தரிச்சிருக்கீங்க. உங்க கர்ப்பத்தை ஸ்கான் பண்ணி, குழந்தையைப் பத்தின விவரமெல்லாம் இப்ப உங்களுக்குக் காண்பிச்சிட்டு இருக்கேன்"
ரமணி தொடர்ந்து பேசுகிறார்:
"அதோட இந்தப் படங்கள்லாம் உங்களுக்கு ஒரு ஐடியாவுக்காகத்தான். இதே போலத்தான் அப்படியே இருப்பானு சொல்ல முடியாது. என்ன இருந்தாலும் இதெல்லாம் கணிக்கிறது ஒரு இயந்திரம்தானே? உங்க பெண் அழகியா வரணும்னா, அவ பிறந்து வளர்ந்தப்புறம், அதற்காக செய்யக்கூடிய விஷயங்கள், முயற்சிகள், எவ்வளவோ இருக்கு"
"நீங்க நினக்கிற மாதிரி மாற்றங்கள் பண்ணலாம். ஆனால் அது இயற்கையா கரு உண்டானவங்களுக்குப் பண்றது கொஞ்சம் சிரமம். நீங்க மருத்துவமனையில ஒரு வாரமாவது தங்க வேண்டி இருக்கும்; செலவும் கொஞ்சம் அதிகமாகும்"
மது குறுக்கிடுகிறாள்: "நாங்களே அதெல்லாம் பத்திக் கவலப்படல; உங்களால முடியுமா, முடியாதான்னு மட்டும் சொல்லுங்க டாக்டர். இல்லன்னா நாங்க வேற மருத்துவமனைக்கு போறோம்"
"எங்களால கண்டிப்பா முடியும்மா. நீங்க வேண்ணா வீட்டுக்குப் போயிட்டு, உங்க கணவரோட நல்லா யோசனை பண்ணிட்டு, என்னக் கூப்பிடுங்க. அப்புறம் நம்ம மத்த ஏற்பாடுகளக் கவனிக்கலாம்", உரையாடல் முடிந்ததற்கு அடையாளாமாக எழுந்து நிற்கிறார், ரமணி.
வீட்டில் போய் யோசனை செய்ததில் மதுவின் பிடிவாதம்தான் வெல்கிறது. இப்படி சுலபமாக ஒரு வழி இருக்கும் போது, அவள் அதை மிஸ் பண்ண விரும்பவில்லை. கரு மதுவின் விருப்பம் போல் மாற்றி அமைக்கப்படுகிறது.....
"அம்மா, அம்மா", மதுவின் அருகில வந்து அவள் தோள்பட்டையைப் பிடித்து உலுக்குகிறாள், இஷா. மது வேகமாக இந்த உலகுக்குத் திரும்புகிறாள். "என்னம்மா, நீ ஒண்ணுமே சொல்லலயே?" செல்லமாகச் சிணுங்கும் மகளின் கன்னங்களை வழித்துத் திருஷ்டி கழித்தபடி, கணவன் பக்கம் திரும்புகிறாள். "மதன், நான் அன்னைக்கு கருவை மாத்தி அமைக்கச் சொன்னப்ப என் முடிவைத் தப்புன்னு சொன்னீங்களே? இப்ப பாருங்க, இஷாவை. எவ்வளவு அழகா, எவ்வளவு சந்தோஷமா இருக்கா?" பெருமிதத்துடன் கேட்கிறாள்.
மதன் அதிர்ந்து போய் அவளைப் பார்க்கிறான். இதைப் பற்றி அவர்கள் இஷாவிடம் இது வரை பேசியதில்லை. வேகமாக "சொல்ல வேண்டாம்" என்பதாக மதுவிற்குக் கண் ஜாடை காட்ட முயற்சிக்கிறான். ஆனால், தனக்கு இருந்த உற்சாகத்தில், மது அவனைக் கவனிக்கவில்லை.
"என்னம்மா சொல்றீங்க? நான் உங்களுக்கு இயற்கையாப் பொறந்தவ தானே?" புரியாமல் கேட்கும் இஷாவிற்கு, விளக்கமாக தான் கர்ப்பம் தரித்தபின் நடந்தவைகளை எடுத்துரைக்கிறாள்.
சொல்லச் சொல்ல இஷாவின் முகம் எதனால் வாடிக் கொண்டே போகிறது என்று அவளுக்குப் புரியவில்லை.
"ஏம்மா, அப்ப நான் நானாகப் பிறந்திருந்தா என்ன வெறுத்திருப்பீங்களா? நான் இப்ப அழகா உங்களுக்குப் பிடிச்ச மாதிரி இருக்கிறதுனாலதான் என் மேல் பாசம் வச்சிருக்கீங்களா?" வருத்தமும் கோபமும் கலந்த குரலில் கேட்டு விட்டு வேகமாகத் தன் அறைக்குச் சென்று கதவை அறைந்து தாளிட்டுக் கொள்கிறாள். கோபத்தில் தன் அலங்காரங்களைக் கன்னா பின்னாவென்று கலைத்து வீசி எறிகிறாள். அழகுக் கிரீடமும், கோப்பையும் மூலைக்கு ஒன்றாகப் பறக்கின்றன. கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை ஒரு முறை முழுமையாகப் பார்க்கிறாள்.
வேறு யாரையோ புதிதாகப் பார்ப்பது போல் இருக்கிறது, அவளுக்கு.
--கவிநயா
இந்தக் கதை "திசைகளில்" வெளியானது.
படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/wallyg/562980590