Sunday, February 27, 2011

சரணாகதி



சின்னஞ் சிறிய சிறகொன்று…
தன்னந் தனியே…
காற்றின் கரத்தைப் பிடித்தபடி
நேற்றை முழுதாய் மறந்தபடி

செல்லும் திசையோ தெரியாது
போகும் வழியும் புரியாது
ஏறல் இறங்கல் அறியாது
இருந்தும் இயல்பாய் காற்றோடு
இணைந்தே நடக்குது மகிழ்வோடு

நானும் இன்னொரு பூஞ்சிறகு –

உன்றன் கரத்தைப் பிடித்தபடி
உன்றன் பெயரை ஜெபித்தபடி
உன்றன் அன்பில் திளைத்தபடி
நீயே எல்லாம், உணர்ந்தபடி...

--கவிநயா

Sunday, February 20, 2011

பேச்சில் என்ன இருக்கு?

நாம நினைக்கிறதையும் உணர்றதையும் சொல்றதுக்கு பேச்சு எவ்வளவு உதவியா இருக்கு! பேசறது எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம், எப்ப பேசணும், எப்படி பேசணும், எந்த அளவு பேசணும், அப்படிங்கிறதும். மௌனத்தில் கூட எத்தனையோ விஷயங்களை தெரியப்படுத்தலாம். 'சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை'. இல்லையா? :)

அது சரி..., நாமே எப்பவும் பேசிக்கிட்டே இருந்தா, மற்றவங்க பேசறதை எப்பதான் கேட்கிறது? ஒரு புத்தகத்தில் படிச்சேன், ‘மற்றவங்க பேசறதை கவனிக்கிறவங்களை விட, அவர் எப்ப முடிப்பார், நாம எப்ப பேசலாம், அப்படின்னு காத்துக்கிட்டிருக்கவங்கதான் அதிகம்’, அப்படின்னு! ரொம்ப உண்மைன்னு தோணுச்சு. நீங்களும் அடுத்த முறை ‘கவனிச்சுப்’ பாருங்க :)

நாம பேசறது மற்றவங்க மனம் புண்படாதவாறு இருக்கணும். சில பேர் சாதாரணமா இருக்கும்போது பார்த்து, இனிமையாதான் பேசுவாங்க, ஆனா கோபம்னு வந்துட்டா கண்ணு மண்ணு தெரியாம வார்த்தைகளை அள்ளி வீசிடுவாங்க. கேட்கிறவங்க என்னை மாதிரி ஆள்னா பரவாயில்லை, மறந்துடுவாங்க :) அப்படி இல்லைன்னா கஷ்டம்தான். அவங்களைப் பார்க்கிற போதெல்லாம் அந்த உறுத்தல் ரெண்டு பேருக்குமே இருக்கும்.

தீயினால் சுட்ட புண் உள்ளாறும்
ஆறாதே நாவினால் சுட்ட வடு


அப்படின்னு வள்ளுவர் சொன்னதை நாம எல்லோருமே அனுபவத்தில் உணர்ந்திருப்போம்.

சில பேருக்கு அறிவுரைகளை அள்ளி விடறதுன்னா ரொம்பப் பிடிக்கும். உண்மையாகவே நல்லது நினைச்சு சொல்றது ஒரு ரகம்; எனக்கு எவ்வளவு தெரியுது பாரு, அப்படின்னு காட்டிக்கிறதுக்காக சொல்றது இன்னொரு ரகம். எப்படின்னாலும், அறிவுரை மட்டும் கேட்கப்பட்டால் மட்டுமே சொல்லணுமாம். நான் சொல்லலை, ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் சொல்றார்.

ஒரு பிரச்சனையைச் சொல்லி, ‘இதுக்கு என்ன பண்றதுன்னு தெரியலை’ அப்படின்னு நம்மகிட்ட ஒருத்தர் வந்து சொன்னா, நமக்குத் தெரிஞ்சதை அவரிடம் பகிர்ந்துக்கலாம், தப்பில்லை. அப்படி இல்லாம, அவர் அந்த பிரச்சனையில் இருக்கார் என்பது தெரியும் என்பதற்காக, நாமளா அதில் மூக்கை நுழைச்சு, ‘இப்படிச் செய், அப்படிச் செய்’னு சொல்றது, அறிவுரையா இருக்காது; அதிகப்பிரசங்கித்தனமா ஆயிடும். அதனால, நாம நம்மளோட எல்லை தெரிஞ்சு, அதுக்குத் தகுந்தாப்போல நடந்துக்கணும்.

பொதுவாகவே அநாவசியமான பேச்சுக்களை தவிர்க்கறது நல்லது. கவனிச்சுப் பார்த்தா தெரியும், மக்கள் சந்தோஷமா இருக்கும் போது அதிகம் பேசுவாங்க (எப்பவும் பேசறதை விட!). அப்படிப் பேசும் போது அந்த உற்சாகத்தில் வார்த்தைகளும் அதிகமாவே வந்து விழும், சில சமயம் அத்து மீறலோட, மற்றவங்க மனம் புண்படற அளவு கூட போயிடும். அதுக்கப்புறம் அதுக்காக வருத்தப்படணும். அதனால, எப்பவுமே நாம எங்கே இருக்கோம், என்ன செய்யறோம், என்ன பேசறோம், அப்படிங்கிறதுல விழிப்புணர்வோட இருப்பது நல்லது. அப்படி இருந்தா நம்மை நாமே, குறிப்பா நம்ம நாக்கை, கட்டுப்பாட்டில் வைப்பது சுலபம்.

இன்னொரு முக்கியமான, நம்ம நாக்குக்கு பிடிச்ச சுவையான விஷயம் ஒண்ணு இருக்கு! ஆனா அது சாப்பாடு இல்லை! :)

என்னன்னு இந்நேரம் ஊகிச்சிருப்பீங்க – அதுதான் வம்பு பேசறது, அல்லது பொறணி பேசறது :)

அதென்னமோ தெரியலை, மற்றவங்களைப் பற்றி பேசறதில், குறிப்பா குறை சொல்றதில், நமக்கு அப்படி ஒரு ஆர்வம்! பல சமயத்தில் இதைப் பற்றி யோசிப்பேன், ஏன் அப்படி செய்யறோம்னு. ஒரு வேளை நாம ரொம்ப ஒழுங்கு, மற்றவங்க அப்படி இல்லைன்னு நமக்கு நாமே நிரூபிக்க நினைக்கிறோமோ? அல்லது நம்ம குறைகள் தெரிஞ்சு, அவையே நிறைகளா இருக்கறவங்களைப் பார்த்து பொறாமையில் பேசறோமோ? அல்லது வாழ்க்கையில் நம்மை விட அவங்க நல்லா இருக்காங்களேன்னு வயிற்றெரிச்சலில் பேசறோமோ? அல்லது நெஜமாவே பொழுது போகாம, வேற விஷயம் கிடைக்காம, மற்றவங்களைப் பற்றி பேசறோமோ?

எதுவா இருந்தாலும் சரி, அது நம்மை எதிர்மறையான (negative) உணர்வுகளுக்கு இழுத்துக்கிட்டு போறதால, அது நல்லது இல்லைன்னு எல்லா பெரியவங்களும் ஆணித்தரமா சொல்றாங்க.

நாம ஒருத்தரால துன்பப்படும்போது அதைப் பற்றி யாரிடமாவது பகிர்ந்துகிட்டுதான் ஆகணும். அதுக்கு பேரு வம்பு இல்லை. அதையும் இதையும் போட்டுக் குழப்பிக்க வேணாம். ஆனா, நமக்கு சம்பந்தமில்லாதவங்களைப் பத்தி, அவங்களால நமக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத போது, அவங்க செயல்களை விமர்சனம் பண்றதுதான் தப்பு; அதுதான் வம்பு. அதனால முடிஞ்ச வரைக்கும் பிறரைப் பற்றி பேசாமல் இருப்போம், அல்லது பேசினாலும் குறை சொல்லாமலாவது இருப்போம். கஷ்டம்தான்னாலும், முயற்சியாவது செய்யலாமே.

சுவாமி சிவானந்தர் சொல்லுவார், எவ்வளவுக்கெவ்வளவு கொஞ்சமா பேசறமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது, அப்படின்னு. கொஞ்சமா பேசு, அதையும் இனிமையா பேசுன்னுவார்.

[Speak truth at all cost. Speak a little. Speak sweetly. Always utter encouraging words. Never condemn, criticize or discourage. Do not raise your voice and shout at little children or subordinates. - Swami Sivananda]

வள்ளுவப் பெருந்தகை சொன்னதை மறுபடியும் இங்கே ஒரு முறை நினைவு படுத்திக்கலாம் –

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று


சுருக்கமா சொன்னா, நல்லதே நினைக்கணும், நல்லதே பேசணும், நல்லதே செய்யணும்.

எல்லோரும் நல்லா இருக்கணும்!

அன்புடன்
கவிநயா

பி.கு. : நானு உங்களுக்கு அறிவுரை சொல்றேன்னு நினைச்சீங்களா? ஹி...ஹி... இல்லைங்க, எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்… :)

இதையும் படிங்க: மூன்று வாசல்கள்

Sunday, February 13, 2011

நீயும் நானும்



காலைச் சுற்றிச் சுற்றிவரும்

நாய்க் குட்டியைப் போல

என்மனதைச் சுற்றிச் சுற்றி வரும்

உன்னுடைய நினைவுகள்…








மலரைப் பார்த்தால்

அதன் நிறம் தெரியும் – என்

மனதைப் பார்த்தால்

அதில் நீ தெரிவாய்!









ஒளியாய் என்றன் கண்ணுக்குள்...

வளியாய் என்றன் மூச்சுக்குள்...

பொருளாய் என்றன் கவிதைக்குள்...

உயிராய் என்றன் உடலுக்குள்...

.

.

நீ!







அனைவருக்கும் இனிய அன்பர் தின வாழ்த்துகள்!


அல்லிப்பூ படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/fwp/444262241. மற்ற படமெல்லாம் கூகுளார் தந்தார்.

Sunday, February 6, 2011

சின்னஞ் சிறிய ரோஜாப்பூ!



சின்னஞ் சிறிய ரோஜாப்பூ
சிரிக்கும் அழகில் மத்தாப்பூ
கன்னங் குழியும் சின்னப்பூ
கட்டித் தருவேன் முத்தப்பூ!

கண்கள் கருக மணிபோலே;
மூக்கோ சின்னச் சிமிழ்போலே;
கன்ன மிரண்டும் பூப்போலே;
வாய்நீர் வழியும் தேன்போலே!

மொட்டுக் கைகள் தொட்டு விட்டால்
உள்ளம் தன்னால் மலர்ந்திடுமே;
பட்டுப் பிஞ்சுக் கால் உதைத்தால்
பரவசம் மிகவும் ஆகிடுமே!

குட்டிப் பாப்பா சிரிப்பினிலே
உலகம் எல்லாம் ஒளிபெறுமே!
குழந்தை உள்ளம் கொண்டவர்க்கு
அகிலம் எல்லாம் அன்புருவே!

--கவிநயா

சுப்பு தாத்தா "நீல வண்ணக் கண்ணா வாடா" மெட்டில் பாடித் தந்திருக்கிறார். கேட்டு மகிழுங்கள். மிக்க நன்றி தாத்தா!

Sunday, January 30, 2011

தன்னோடு தான் மட்டும்...


நீலவானம் நீளமாக
விரிந்தேதான் கிடந்தாலும்
நட்சத்திரக் கூட்டங்கள்
நவநவமாய் ஒளிர்ந்தாலும்
வானுலாவும் நில வென்னவோ
தன்னோடு தான் மட்டும்...

கருங்கடலோ பெருங்கடலாய்
பரந்தேதான் கிடந்தாலும்
கரையதுவும் கடலுக்கு
மிகஅருகில் இருந்தாலும்
கடல்பொங்கும் அலை யெல்லாம்
தன்னோடு தான் மட்டும்...

உறவெல்லாம் விதவிதமாய்
உலகெங்கும் இருந்தாலும்
கடமைகள் பலப்பலவாய்
காத்தேதான் கிடந்தாலும்
தனிமையிலே மனம் மட்டும்
தன்னோடு தான் மட்டும்...

--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/slurve/457958786/

Sunday, January 23, 2011

மறக்கத் தெரியுமா?

“நினைக்கத் தெரிந்த மனமே, உனக்கு மறக்கத் தெரியாதா”

கண்ணதாசனின் வரிகளின் அழகுக்கும் பொருளுக்கும் கேட்கணுமா? ஒவ்வொரு சராசரி மனிதனின் உணர்வுகளையும் உள்ளத்தின் போராட்டங்களையும் பாடலில் வைத்ததால்தானோ என்னவோ அவருடைய பாடல் வரிகள் அப்படியே மனசுக்குள் சப்பணம் போட்டு அமர்ந்து விடுகின்றன.

இன்பம், துன்பம், இரண்டும் இல்லாத மனித வாழ்க்கையே இருக்க முடியாது. ஆனா என்ன, சில பேருக்கு துன்பத்தோட dosage கொஞ்சம் அதிகமாகவே இருக்கும், சிலருக்கு கொஞ்சம் குறைவா இருக்கும், அவ்வளவுதான். ஆனாலும் வலி, வலிதானே.

ஒரு முறை மருத்துவமனைக்கு தாங்க முடியாத வலியோட போனேன். நேரா நிக்கக்கூட முடியாத அளவு வலி. அப்போ, “உங்க வலியை எப்படி rate பண்ணுவீங்க, 1-ல் இருந்து 10-க்குள்ள?” அப்படின்னு கேட்டாங்க. (மனுஷனோட நிலைமை தெரியாம நடத்தப்படற மருத்துவமனை formalities பற்றி எழுதப் புகுந்தா அதுவே ஒரு பதிவாயிடும்!) . பல்லக் கடிச்சுக்கிட்டு “10” அப்படின்னு சொன்னேன்!

இந்த மாதிரியான வலி தாங்கற சக்தி மனுஷனுக்கு மனுஷன் வேறுபடும். எனக்கு 10-ஆ இருக்கிறது இன்னொருத்தருக்கு 5-ஆ இருக்கலாம், வேற ஒருத்தருக்கு 7-ஆ இருக்கலாம்; எனக்கு 5-ஆக இருப்பது, இன்னொருத்தருக்கு 7-ஆகவும், வேற ஒருத்தருக்கு 10-ஆகவும் இருக்கலாம்…

அதே போலத்தான் துன்பங்களைத் தாங்கற சக்தியும் மனுஷனுக்கு மனுஷன் வித்தியாசப்படும்.

அலுவலகத்தில் சுறுசுறுப்பா வேகமா அதே சமயம் நல்லபடியா வேலைகளை முடிக்கிறவங்களுக்குத்தான் மேல மேல வேலை தந்துகிட்டே இருப்பாங்க. அதே போல துன்பப்படறவங்களுக்குத்தான் மேல மேல துன்பம் வருதோன்னு தோணும். ஏன்னா “அவள்தான் அதைத் தாங்கிக்கிட்டாளே… இதையும் தாங்கறளான்னு பார்க்கலாம்”, அப்படின்னே எல்லாம் நடக்கற மாதிரி இருக்கும்!

எப்படிப்பட்ட துன்பமா இருந்தா என்ன, 5-ஆ இருந்தாலும், 10-ஆ இருந்தாலும், துன்பம் துன்பம்தானே. அதைப் போய் யாருக்காச்சும் பிடிக்குமா? அதை மறக்கணும்னுதானே எல்லாரும் விரும்புவாங்க? (அப்பாடி! ஒரு வழியா தலைப்புக்கு வந்துட்டா, அப்படின்னு நீங்க முணுமுணுக்கிறது கேட்குது :)

மனித வாழ்க்கைக்கு மறதி அவசியம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்காதுன்னு நினைக்கிறேன்.

ஆனா கஷ்டங்களை யாராலயும் சுலபமா மறக்க முடியறதில்லை. அப்படி மறக்கறதுக்கு என்ன செய்யணும்?

சில சமயம் ஒரு விஷயத்தை மறக்கணும்னு ரொம்ப பிரயத்தனப்பட்டோம்னா, அந்த விஷயம்தான் ரொம்ப நல்லா நினைவில் இருக்கும்! ஒரு விஷயத்தை சுலபமா மறக்கணும்னா அதை ‘உதாசீனப்’படுத்தணும், அதாவது ignore பண்ணனும் – அப்படின்னு திவாஜி ஒரு முறை சொன்னார்.

அது சரி.. ஆனா அப்படின்னா என்ன? எப்படி அதைச் செய்யறது?

ஆங்கிலத்தில் சில பிரயோகங்கள் அழகா இருக்கும். அதில் ஒண்ணுதான் “entertaining a thought” அப்படிங்கிறது. அதாவது ஒரு பொருளையோ ஒரு விஷயத்தையோ பற்றி நினைக்கும் போது, அதுக்கு கை, கால், கண்ணு, மூக்கு, வாய், எல்லாம் வச்சு இன்னும் பெரிசாக்கி பாக்கறது.

உதாரணத்துக்கு வெளிநாட்டு டூர் ஒண்ணு போகணும்னு உங்களுக்கு ரொம்ப நாளா ஆசைன்னு வச்சுக்குவோம். அதுக்கான திட்டம் எதுவும் போடலை, எப்ப போறீங்க, யாரோட போறீங்க, எவ்வளவு செலவாகும், எத்தனை நாள் விடுப்பு எடுக்கணும், ஒண்ணுமே தெரியாது. ஆனா அதைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் கற்பனை மட்டும் விரிஞ்சுக்கிட்டே போகும். அங்க போகும்போது போடறதுக்கு எந்த மாதிரி உடைகள் வாங்கலாம், என்னென்ன இடங்களை பார்க்கலாம், அங்க போய் என்னென்ன பொருள் வாங்கலாம், இங்க உள்ளவங்களுக்கெல்லாம் பரிசுப் பொருள் என்ன வாங்கலாம், இப்படில்லாம்… இதைத்தான் அந்தக் காலத்துல நாங்க “ட்ரீம் அடிக்கிறது” அப்படின்னு சொல்லுவோம் :)

இதுவே ஒரு துயரம் தரும் நிகழ்ச்சி, நீங்க மறக்கணும்னு நினைக்கிற நிகழ்ச்சி, ஒண்ணு மனசில் வந்தது அப்படின்னு வைங்க… அப்ப என்ன ஆகும்? அதைப் பற்றி மனசில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ஒரு flashback ஓடும்… பிறகு அந்த சமயத்தில் நீங்க அனுபவிச்ச உணர்வுகளெல்லாம், வலிகளெல்லாம், மறுபடியும் ஏற்படும். அதை நினைக்க நினைக்க அந்த துன்பத்துக்கு காரணமானவர் மேல பழைய ஆத்திரம் மறுபடியும் வரலாம். உடனே அவரை இப்படித் திட்டணும், அப்படிக் கேள்வி கேட்கணும், இப்படி சண்டை போடணும்னு தோணலாம். அல்லது வருத்தம் மட்டுமே மேலோங்கி, அந்த வருத்தம், உங்களை எழுந்து எதுவுமே செய்ய விடாத மன அழுத்தத்தில் (depression) ஆழ்த்திடலாம்…

இது எதனால ஏற்பட்டது? அந்த துயர நிகழ்ச்சி மனதில் வந்ததுமே, அதை நீங்க ignore பண்ணாம entertain பண்ணியதால் ஏற்பட்டது!

அப்படின்னா அதை ignore பண்றதுக்கு என்ன செய்யணும்?

அந்த மாதிரி நினைவு மனசில் வரும்போது, அதைக் ‘கண்டுக்கக்’ கூடாது. “உன்னை யார் இப்போ இங்கே கூப்பிட்டா?” அப்படின்னு சொல்லி அதைத் தள்ளிடணும். குழந்தைங்க எதுக்காவது காரணமில்லாம அடம் பிடிச்சு அழும்போது, நாம கண்டுக்காம விட்டுட்டோம்னா, கொஞ்ச நேரத்தில் தானா நிறுத்திடுவாங்க. அதே போலத்தான் நம்ம மனசும். அடம் பிடிக்கிற குழந்தை!

அடம் பிடிக்கிற மனசை உதாசீனப்படுத்திட்டு, மத்த விஷயங்களில் அல்லது வேலைகளில் கவனத்தைச் செலுத்தணும். தோட்டத்துக்கு போய் தண்ணீர் ஊற்றலாம். பாதி படிச்சுட்டு வச்சிருக்கிற புத்தகத்தை எடுத்து படிக்கலாம். நண்பரை தொலைபேசியில் கூப்பிட்டு பேசலாம். ஷாப்பிங் போகலாம். சாக்லேட் சாப்பிடலாம் :) எதுவுமே இல்லையா, உங்களுக்குப் பிடிச்சதா, சந்தோஷம் தரக் கூடிய நினைவுகளை வலிய நினைச்சுப் பார்க்கலாம். அதைப் பற்றி ட்ரீம் அடிக்கலாம்! அதை விட்டுட்டு, துன்ப நினைவு பற்றியே விவரமாக நீங்களே ஞாபகப்படுத்திக்கிட்டு, அதைச் சுற்றியே எண்ணங்களை அமைச்சுக்கறதால, பிறகு நீங்களே அந்த பழைய உணர்வுச் சூழலிலேயே வசமா சிக்கிடறீங்க. ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும்… ஆனா முயற்சி திருவினையாக்கும்!

இந்த மாதிரி, வேண்டாத நினைவுகள் வரும்போது ஒவ்வொரு முறையும் அதை conscious-ஆ உதாசீனப் படுத்தப் படுத்த, நாளடைவில் அவை தானா மறந்துடும். அப்படியே கொஞ்சம் நினைவிருந்தாலும், அதனுடைய தாக்கம் ரொம்பக் குறைச்சலாவேதான் இருக்கும்.

ஆக, நினைக்கத் தெரிந்த மனசுக்கு மறக்கவும் தெரியும். நாமதான் அதுக்கு சொல்லிக் குடுக்கறதில்லை!

எல்லோரும் நல்லா இருக்கணும்!

அன்புடன்
கவிநயா

Friday, January 14, 2011

பொங்குக சர்க்கரைப் பொங்கல்! தங்குக தித்திக்கும் இன்பம்!!

அனைவருக்கும் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்!!



சூரியனுக்கு...


ஆண்டாண்டு காலமாய் அகிலமெலாம் ஆள்பவனே!
நீண்டிருக்கும் ஒளிக்கரத்தால் நீள்நிலத்தை அணைப்பவனே!

தூண்டா மணிவிளக்காய் வானத்தில் ஒளிர்பவனே!

வேண்டாத உயிர்களுக்கும் வேண்டுவன தருபவனே!


உன்னன்பால் உலகெல்லாம் பயிர்காத்து வளர்க்கின்றாய்!

அதனாலே உலகத்தார் உயிர்காத்துப் பிழைக்கின்றார்!

சளைக்காமல் கிழக்கினிலே தினமும்நீ உதிக்கின்றாய்!

நாளை உண்டென்ற நம்பிக்கை அளிக்கின்றாய்!


அன்னையவள் கண்ணொளியாய் திகழ்கின்ற கதிரவனே!

இருளகற்றி ஒளியூட்டிப் பரிகின்ற பகலவனே!

புத்தரிசிப் பொங்கலிட்டு படைக்கின்றோம் உனக்காக!

பத்திரமாய்ப் பூவுலகைக் காத்திடுவாய் எமக்காக!!



**


உழவருக்கு...


ஆடிதேடி விதைவிதைத்து
அக்கறையாய் பார்த்துக்கொண்டு

ஓடிஓடி ஓய்வில்லாமல் உழைத்திடுவான் – உழவன்

கோடிக்கோடி மக்களுக்கு உணவிடுவான்


வானம்பார்த்த பூமியோடு

தானும்பார்த்து வாழ்ந்திடுவான்

நேரங்காலம் பார்க்காமல்

நித்தம்வேலை செய்திடுவான்


இயற்கைகொஞ்சம் ஒத்துழைத்தால்

இன்பம்மிகக் கொண்டிடுவான்

நிலமகளை குலமகளாய்

நெஞ்சில்வைத்துப் போற்றிடுவான்


உணவிட்டுக் காக்கின்ற
உழவருக்கு நன்றிசொல்வோம்
நெய்மணக்கும் பொங்கலிட்டு

நேசமுடன் நன்றிசொல்வோம்!



**


மாடுகளுக்கு...


மாடுபடும் பாட்டிலொரு பொருளிருக்கு
மாடுபோல ஒழைச்சிருந்தா பலனிருக்கு

பாலுமுதல் தோலுவரை அதுகொடுக்கும்

பொறுமையிலே பூமியப்போல் அதுஇருக்கும்!


ஏரிழுக்கும், பாரமெல்லாம் அதுசொமக்கும்
ஏறெடுத்தும் பார்க்காம அதுநடக்கும்

அடிமேல அடியடிச்சா மனம்பதைக்கும்

ஆதரவா இருந்தாக்க மனங்களிக்கும்!


வாழ்வெல்லாம் மனுசனுக்கே அதுஒழைக்கும் - அத
வாஞ்சையோட பாத்துகிட்டா வாழ்வினிக்கும்!

மாட்டுக்கொரு பொங்கமட்டும் போதாதுங்க

அன்னாடம் அன்புசெஞ்சு வாழ்வோமுங்க!



**


--கவிநயா

சுப்பு தாத்தாவும் மீனாட்சி பாட்டியும் அனுபவித்து பாடியிருப்பதையும் கேட்டு மகிழுங்கள்! தாத்தா, பாட்டிக்கு மனமார்ந்த நன்றிகள்!