முன்னொரு காலத்தில், long
long ago… so long ago… நானும் ஒரு குட்டிப் பிள்ளையா இருந்தேன். (அட, நெசம்ம்ம்மாத்தாங்க!).
அப்ப, வருஷா வருஷம் பிறந்த நாள், பிறந்த நாள்னு ஒண்ணு வரும். பிறந்த நாள்னா கண்டிப்பா
புத்தாடை இருக்கும். காலையில் எழுந்து தலைக்குக் குளிச்சு, புதுசு போட்டுக்கிட்டு சாமி
கும்பிடுவோம். பிறகு ஒரு தட்டுல நெறய்ய்ய சாக்லேட் எடுத்துக்கிட்டு பக்கத்து வீடு,
அதுக்கும் பக்கத்து வீடு, எதிர் வீடு, அதுக்கும் எதிர் வீடு, இப்படி வீடு வீடா போயி,
“எனக்கு பிறந்த நாள். மிட்டாய் எடுத்துக்கோங்க” ன்னு சொல்லுவோம். (அப்பல்லாம் மிட்டாய்னாலும்,
சாக்லேட்னாலும், எல்லாம் ஒண்ணுதான். இப்பல்லாம் சாக்லேட்னா வேற, மிட்டாய்(candy) ன்னா
வேறயாம்!) பெரியவங்களா இருந்தா காலில் விழுந்து கும்பிட்டு ஆசீர்வாதம் வாங்குவோம்.
“புது ட்ரஸ்ஸா? அழகா இருக்கே!”ன்னு சொல்வாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கும்! கூடவே, “நல்லாப்
படிச்சு முதல் ராங்க் வரணும்”, அப்படின்னுதான் முக்கால்வாசி பேர் ஆசீர்வாதம் பண்ணுவாங்க!
சில சமயம் சாக்லேட்டுக்கு பதில்
அம்மாவே ஏதாவது இனிப்பு செய்து தருவாங்க. அதைக் கொண்டு போய் எல்லாருக்கும் கொடுப்போம்.
பிறகு கோவிலுக்குப் போவோம். அப்புறம் அம்மா நமக்குப் பிடிச்சதாப் பார்த்து சாப்பிட
செய்து கொடுப்பாங்க. ஏதாவது குட்டியா தப்பு செய்தாக் கூட யாரும் திட்ட மாட்டாங்க. அப்படியே
திட்டினாலும், அம்மா, “பிறந்த நாளும் அதுவுமா புள்ளைய ஒண்ணும் சொல்லாதீங்க”, அப்படின்னு
தடையுத்தரவு போட்டுருவாங்க! நம்மையும் எதுக்கும் வருத்தப்படவோ, கோபப்படவோ விட மாட்டாங்க.
“இன்றைக்கு உனக்கு பிறந்த நாள். சந்தோஷமா இருக்கணும்”, அப்படின்னு நினைவு படுத்துவாங்க.
ஆக மொத்தம், அன்றைக்கு பூரா நமக்கு ஸ்பெஷல் கவனிப்பு கிடைக்கும்.
பிறந்தா நாள்னாலே தரையில் கால்
பாவாத பெருமையா இருக்கும். ஒண்ணுமே பண்ணாமயே, ஆனா என்னவோ பெரீசா சாதிச்சிட்ட மாதிரி
ஒரு ச்செல்ல கர்வம்! ஹ்ம்… பிறந்து, வந்து, வளர்ந்து, இந்த உலகத்தில் ஒவ்வொரு வருஷமும்
வாழறதே, survive பண்ணறதே, சாதனைதான்னு இப்பதானே புரியுது!
அதுக்கப்புறம் பிறந்த நாள் கொண்டாட்டம்
எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சி, ‘0’ வாயிருச்சு. யாராவது ஒரு சிலர் நினைவு வச்சுக்கிட்டு
வாழ்த்து சொன்னாலே பெரிய விஷயம், பெரிய சந்தோஷம் என்கிற அளவு! இப்பல்லாம் பிறந்த நாள்,
அப்படின்னு சொல்லிக்கிறதும் இல்ல. யாராச்சும் மறந்து போயிட்டாங்கன்னா, ‘நீங்க என்னை
வாழ்த்தவே இல்லையே’ன்னு கோவிச்சுக்கிறதும் இல்லை! (எவ்ளோ சமர்த்தாயிட்டேன் பாருங்க!)
யாராவது சொல்ற வரை எனக்கே மறந்து போன பிறந்த நாட்களும் உண்டு.
இந்த வருஷம் என்னமோ என் பிறந்த
நாளை (போன வாரம்) நானே ரொம்பத்தான் கொண்டாடினேன். அதாவது காலைலயே கோவிலுக்குப் போனேன்.
(அதுவே பெரிய்ய கொண்டாட்டம்தான்!) ஆனா அர்ச்சகர் ரொம்ப பிசியா இருந்தார், அதனால தீபமோ,
தீர்த்தமோ ஒண்ணும் கிடைக்கல. சின்னூண்டு ஏமாற்றம்தான். அம்மாகிட்ட போய் ஒரு டீல், ‘உன்னைத்
தேடி வந்தேன், ஒண்ணுமே குடுக்கலையே நீ எனக்கு? உனக்கு என் மேல அன்பிருந்தா அதை எப்படியாச்சும்
எனக்குக் காட்டு’ அப்படின்னு.
என் பெற்றோர், தங்கைகள், தோழிகள்,
எல்லோருமே தொலை பேசி வாழ்த்தினாங்க. யாருமே மறக்கலை, இந்த முறை! சாயந்திரம் நடன வகுப்பு
இருந்தது. 7, 8 வயசு பிள்ளைங்களோடது. எதற்கோ பேச்சு வந்த போது, ஒரு குட்டிப் பொண்ணு,
“என் அம்மாவுக்கு ஆகஸ்ட் 15 பிறந்த நாள்”, அப்படின்னு சொன்னா. உடனே நானும் யோசிக்காம
சின்னப் பிள்ளை மாதிரி, “அப்படியா. எனக்குக் கூட இன்னிக்குதான் பிறந்த நாளாக்கும்”னு
சொன்னேன்! அப்புறம் கொஞ்ச நேரம் அவங்கவங்க பிறந்த நாள் எப்பன்னு பேசிட்டு, வகுப்பில்
ஆழ்ந்துட்டோம்.
வகுப்பு முடிஞ்ச பிறகு எல்லோருடைய
வீட்டுப் பாட புத்தகத்தையும் பார்த்தேன். அதில் இரண்டு பிள்ளைங்க, அவங்க புத்தகத்தில்
“Happy Birthday!”ன்னு, எழுதி வெச்சிருந்தாங்க! நான் மற்றவங்க புத்தகத்தைப் பார்க்கும்
போது இவங்க எழுதி இருக்காங்க! சந்தோஷமா இருந்தது. நான் நன்றி சொன்ன போது, “முதல்லேயே
தெரிஞ்சிருந்தா உங்களுக்காக நாங்க ஏதாவது செய்திருப்போம்”, அப்படின்னு சொன்னா, ஒரு
பெரிய மனுஷி!
எல்லாம் பார்த்து முடிச்ச பிறகு,
பிள்ளைங்க திடீர்னு ஒருத்தரை ஒருத்தர் பார்த்து, ஏதோ கண் ஜாடை காட்டிக்கிட்டாங்க. ஒரு
பொண்ணு, “1…2…3…!” அப்படின்னு சொன்னா. உடனே எல்லோரும் சேர்ந்து “Happy Birthday to
you” அப்படின்னு பிறந்த நாள் வாழ்த்துப் பாடலைப் பாட ஆரம்பிச்சிட்டாங்க! “Happy
Birthday to you... chaa..chaa..chaa…” அப்படின்னு நடுவில் வாயாலேயே music effect வேற!
அப்பாடி! அந்த நிமிஷத்தில் ஏற்பட்ட
எதிர்பாராத சந்தோஷத்தையும் நெகிழ்வையும், அனுபவிச்ச அன்பையும் வார்த்தைகளால் சொல்வது
கஷ்டம். யாரும் சொல்லிக் கொடுக்காம, தானா மனசில் தோணி, அன்பை இந்த மாதிரி வெளிப்படுத்திய
அந்தக் குட்டீஸையும், அந்த நாளையும் மறக்க முடியாது.
இப்பேற்பட்ட அழகான தருணத்தில்
மறக்காம என் மனசுக்குள் வந்து சிரிச்சது யார்னு நினைக்கிறீங்க? நான் டீல் போட்டேனே,
சாக்ஷாத் அவளேதான்!
எல்லோரும் நல்லாருக்கணும்!
அன்புடன்
கவிநயா






