Monday, June 29, 2015

ஒற்றை வரி


அவர் பெருந்தனக்காரர். மன்னர் கூட மதித்து வணங்கக் கூடிய பேரறிவாளர், பண்பாளர். அவரை அந்த ஊரில் எவரும் பெயர் சொல்லிக் கூட அழைக்கத் துணிய மாட்டார்கள். அந்த அளவு மரியாதை.



குறையில்லாத மனிதரும் உண்டோ என்னும் கூற்றுக்கிணங்க, அவருக்கும் ஒரு குறை இருந்தது. பிள்ளையில்லாத குறைதான் அது.  திருவிடைமருதூர் இறைவனின் அருளால் அவருக்கு ஒரு ஆண் மகவு கிடைத்தது. அருமை பெருமையாக வளர்த்தார். வயது வந்ததும், தன்னைப் போலவே அவனுக்கும் செல்வம் சம்பாதிக்கக் கற்றுக் கொடுக்க எண்ணி, வணிகம் செய்யப் பொருள் கொடுத்து அனுப்பினார்.



ஆவலோடு காத்திருந்த தந்தையிடம் அவர் எதிர்பார்த்த வண்ணமே திரும்பி வந்தான், மகன். ஆனால் அவர் எதிர்பார்த்திருந்த செல்வம் வரவில்லை. சினந்தவரிடம், “இதோ உங்களுக்காகக் கொண்டு வந்தேன்”, என்று சொல்லி ஒரு சிறிய பேழையைத் தந்தான். 



அந்தப் பேழையில் காதற்ற ஒரு ஊசியும், ஒரு வாசகமும் மட்டும் இருந்தது. அது, “காதற்ற ஊசியும் வாராது காண், கடைவழிக்கே”, என்றது.



அந்த நிமிடம் அந்த ஒற்றை வரி அவரது ஆன்மீகக் கண்களைத் திறந்தது. அவர் வாழ்க்கையே தலைகீழாகத் திசை மாறியது.



அவர்தான் பட்டினத்தடிகள் என்று இந்நேரம் ஊகித்திருப்பீர்கள்.



பட்டினத்தடிகளைப் போல ஒற்றை வரியால் ஞான வழிக்குத் திரும்பிய பெரியோர்கள் இன்னும் இருக்கிறார்கள்… அவர்களைப் பற்றியும் பார்க்கலாம்…



வாழ்க்கையில் பலருக்கும் இப்படி ஒரு “defining moment” இருந்திருக்கும். சிலருக்கு சிறிது சிறிதாக மாற்றம் வரும். சிலருக்கு யாரோ சொன்ன ஏதோ சொல்லின் பாதிப்பால் புரட்டிப் போட்டாற்போல், பெரீய்ய மாற்றம் வந்திருக்கும். உங்களுக்கு?




எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!



அன்புடன்

கவிநயா


2 comments:

  1. பட்டினத்தாரைப் போல் ஞான வழிக்குத் திரும்பியவர்களை பார்க்கும் பைக்கும் ஆவலுடன்.

    ReplyDelete
  2. வருகைக்கு மிக்க நன்றி குமார்!

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)