நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலைதான்
அருணகிரிநாதரையும் தந்தது.
பிறந்தவுடனே தந்தையை இழந்தார்.
ஐந்து வயதிலேயே தாயையும் இழந்தார். அவருடைய அன்புச் சகோதரியே அவரை அருமையாக வளர்த்தார்.
அவர் கேட்டதையெல்லாம் இல்லையென்னாமல் கொடுத்தார். வேண்டாத பழக்கங்கள் அனைத்திற்கும்
அருணகிரி அடிமையானார்.
திருமணம் செய்வித்தால் அவர் திருந்துவார்
என்றெண்ணி அவருக்குத் திருமணமும் முடித்து வைத்தார், தமக்கை. அப்போதும் குடும்பத்தைப்
புறக்கணித்து, கணிகையர் இல்லமே கதியென்றிருந்தார். அதற்கான பொருட்செலவிற்கெல்லாம் தமக்கையிடமே
வருவார். உழைத்து ஈட்டிய பொருளனைத்தையும் தம்பியின் சுகங்களுக்கே தாரை வார்த்தார்,
அந்தத் தமக்கை. நாள் செல்லச் செல்ல குடும்பத்திலிருந்த நகைகளையும், மற்ற பொருட்களையுமே
விற்றுத் தீர்க்க வேண்டி வந்தது. குடும்பத்தினர் அவரை வெறுத்து ஒதுக்கி விட்டனர். அப்படியும்
அருணகிரி திருந்தினாரில்லை.
வேண்டாத பழக்கங்கள் அனைத்தும்,
நாளடைவில் வேண்டாத வியாதிகளையும் கொண்டு வந்து சேர்த்தன. உடல் சோர்ந்தாலும் ஆசை என்னவோ
விட்ட பாடில்லை. தமக்கையைப் பொருளுக்காகத் தொந்தரவு செய்வதும் நிற்கவில்லை. ஆனால் முன்பு
பொருளுக்காக வந்த பெண்களும் இவருடைய நோயைக் கண்டு அச்சமுற்று அவரை ஒதுக்கித் தள்ளினர்.
அப்படியும் திருந்தினாரில்லை, அருணகிரி.
தம்பியின் மீது அளவற்ற பாசம்
வைத்திருந்த தமக்கையால் அவரது வேதனையைக் காணச் சகிக்கவில்லை. எந்தச் சகோதரியும் மனதாலும்
நினைக்கத் துணியாத சொற்கள் தாள முடியாத வருத்தம் தந்த கோபத்துடன் அவரது திருவாயிலிருந்து
வெளிப்பட்டன: “பெண்ணின் உடல்தான் உன்னை மகிழச் செய்யும் என்றால், இதோ நானும் பெண்தான்”,
என்றார்.
கனவிலும் நினைக்கக் கூடாத அந்தக்
கொடூரமான வார்த்தைகள் அருணகிரியின் நெஞ்சத்தைக் குத்திக் கிழித்தன. தாம் எத்தகையதொரு
கீழான நிலைக்குச் சென்று விட்டோம் என்பதை அப்போதுதான் முதன்முறையாக உணர்ந்தார். வேதனையால்
துடிதுடித்தார். தன்னைத் தானே வெறுத்தார். உயிர் துறப்பதே தனக்குச் சரியான தண்டனை என்று
நினைத்தவர், நேராகத் திருவண்ணாமலை கோயிலுக்குச் சென்றார். கோபுரத்தின் உச்சியினின்றும்
குதித்தார்.
என்னே கந்தனின் கருணை! வேலை ஏந்திய
வேலன், அருணகிரியையும் ஏந்தினான். அவர் இன்னுயிரைக் காத்தான்; அவர் நாவில் செந்தமிழைச்
சேர்த்தான்; தேனாறாய்த் திருப்புகழைப் பாயச் செய்தான்.
ஓம் சரவணபவாய நம:
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!
அன்புடன்
கவிநயா
அருணகிரி நாதரைப் பற்றி அறிந்திருந்தாலும் தங்கள் எழுத்தில் அருமை...
ReplyDeleteஎழுத்தை இன்னும் கொஞ்சம் பெரிதாக்கலாமே... சாய்வாய் இருப்பதாலும் படிப்பவர்களுக்கு சிரமம் ஏற்படும் என்பது என் எண்ணம்...
மிக்க நன்றி குமார்.
Deleteஅத்துடன், எழுத்து பற்றி எடுத்துச் சொன்னமைக்கு நன்றி. என் கணினியில் எனக்கு சரியாகத் தெரிவதால் இதுவரை உணரவில்லை. சாய்வாய் இருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறீர்கள். ஏன் அப்படித் தெரிகிறது என்றும் தெரியவில்லை. நான் Italic பயன்படுத்துவதில்லை. ஆனால்,எதற்கும் நீங்கள் சொன்னதை கவனத்தில் கொள்கிறேன், மிக்க நன்றி.
வணக்கம்
ReplyDeleteசிறப்பான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன்.
Delete