Monday, July 20, 2015

ஒற்றை வரி - 4



ஆத்மாராமுக்கு மனைவி தேவி மமதாவின் மீது கொள்ளை ஆசை. அவரை விட்டு ஒரு நாள் கூட பிரிந்திருக்கச் சம்மதித்ததில்லை. அதனாலேயே திருமணமான பின் பல வருடங்களுக்கு அவர் மனைவி தன் தாய் வீட்டிற்குக் கூடப் போகவில்லை.

ஒரு சமயம் ஆத்மாராம் ஏதோ வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்த போது தேவி மமதாவின் அன்னை உடல் நலம் குன்றியிருப்பதாகச் செய்தி வந்தது. அதன் காரணமாக அவர் பிறந்த வீட்டுக்குச் செல்ல நேரிட்டது. வெளியூர் சென்று மனைவியைக் காணும் ஆவலுடன் திரும்பி வந்த ஆத்மாராம், மனைவியைக் காணாமல் திகைத்தார்; பிறகு நடந்ததை அறிந்து கொண்டார். மனைவி இல்லாமல் அவரால் இருக்க முடியவில்லை. உடனடியாக அவளைப் பார்த்தே ஆக வேண்டும் என்று விரும்பினார்.

அந்தச் சமயத்தில் இடியும் மின்னலுமாகப் பெருத்த மழை பெய்து கொண்டிருந்தது. அவர் மாமனார் வீட்டிற்குப் போக, பல மைல்கள் கடந்து, பிறகு ஆற்றையும் கடந்து செல்ல வேண்டும். நீண்ட தூரம் நடந்து வந்து விட்டார். ஆனால் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. எந்தப் படகுக் காரனும் அவரைக் கூட்டிச் செல்ல மறுத்து விட்டான். அப்பேர்ப்பட்ட நிலையிலும் மனைவியைக் காணும் ஆசையை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏதோ ஒரு கட்டையைப் பிடித்துக் கொண்டு எப்படியெப்படியோ சிரமப்பட்டு, அந்த வெள்ளத்தைக் கடந்து வந்து விட்டார். அந்த வீட்டின் மாடியிலிருந்து கயிறு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. மனைவியை உடனடியாய் அவள் அறைக்குச் சென்று பார்த்து விடும் ஆசையில், அந்தக் கயிறைப் பிடித்துக் கொண்டு ஏறி விட்டார்.

எதிர்பாராமல் வந்து நின்ற கணவரைக் கண்டதும் அவர் மனைவி மிகுந்த வியப்படைந்தாள். இப்படிப்பட்ட மழையிலும் வெள்ளத்திலும் அவரால் எப்படி வர முடிந்தது என்று அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதுவும் மாடியிலிருந்த தன் அறைக்கு எப்படி வந்தார்? “உன்னைக் காண வேண்டும் என்ற ஆவலினால் பல இடர்களையும் எப்படியோ கடந்து வந்து விட்டேன். மாடியிலிருந்து ஒரு கயிறு தொங்கிக் கொண்டிருந்தது. அதைப் பிடித்துத்தான் வந்தேன்”, என்று விளக்கினார் ஆத்மாராம்.

ஆனால் அப்படி எதுவும் கயிறு இல்லையே என்று சந்தேகித்த மனைவி, அங்கே சென்று பார்த்த போது,  நீளமான கொடிய விஷமுள்ள நாகம் அங்கே இருந்தது! அதைக் கூடக் காண இயலாத அளவு அவர் கண்களையும் அறிவையும் ஆசை மறைத்திருந்தது.

விவேகியான மமதா இவற்றையெல்லாம் கண்டு வேதனை அடைந்தாள்.  “விரைவில் மூப்படைந்து அழியப் போகும் இந்த உடலின் மீது கண்மூடித்தனமாக இத்தனை ஆசை வைப்பதைக் காட்டிலும், இந்த விருப்பத்தையும், சிரத்தையையும் இறைவன் மீது செலுத்தினால் இந்தப் பிறவிக் கடலினின்றும் விடுதலை கிட்டும்!”, என்றாள்.

அன்று மனைவி சொன்ன அந்த வார்த்தைகள்தான் ஆத்மாராமின் உலக வாழ்வை ஆன்மீக வாழ்வாக மாற்றியது. ஸ்ரீராமன் மீது அபரிமிதமான பக்தி கொண்டு பின்னாளில் துளசி ராமாயணத்தை அருளிய ஸ்ரீதுளசிதாசர்தான் அவர்.

ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்.

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

அன்புடன்
கவிநயா

படத்துக்கு நன்றி: கூகுளார்

பி.கு. இதைப் போல 'ஒற்றை வரி'யில் வாழ்வே மாறிய மகான்கள் இன்னும் நிறைய இருக்ககூடும். எனக்குத் தெரிந்தவர்களைப் பற்றி மட்டும் இங்கே எழுதினேன். எத்தனையெத்தனை மகான்களோ அவர்கள் அனைவரின் திருவடிகளிலும் பணிந்து வணங்குகிறேன்.


4 comments:

  1. அற்புதமான கதை
    சொல்லிச் சென்ற விதம் அதைவிட அருமை
    எழுத்தின் வடிவம் கொஞ்சம் பெரிதாக இருந்தால்
    படிக்க இன்னும் வசதியாய் இருக்குமென நினைக்கிறேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரமணி.
      எழுத்து அளவு குறித்து சே.குமாரும் சொல்லியிருந்தார். ஆனால் எனக்கு எங்கே எப்படிச் சரி செய்வதென்று தெரியவில்லை. எப்போதும் இடுகிற மாதிரிதான் பதிவிடுகிறேன், என் கணினியில் பார்க்கும் போது சரியாக இருப்பது போல்தான் தெரிகிறது... வேறு எப்படிச் செய்யலாம் என்று பார்க்கிறேன்... நன்றி.

      Delete
  2. நல்ல பகிர்வு... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி குமார்.

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)