ஏரார்ந்த கண்ணி - 1
மார்கழித் திங்கள்...
ஆண்டாள், அவள் ஆண்டவனை.
நம்மையும் இன்னும் ஆண்டு கொண்டிருக்கிறாள்
அப்பாவை, தம் திருப்பாவை மூலம்.
மார்கழி பிறந்தாலே மனசுக்குள்
ஒரு உற்சாகம் வந்து விடுகிறது. ஆண்டாளுடன் கண்ணனும், மாணிக்க வாசகருடன் நமசிவாயமும்
வந்து விடுகிறார்கள். மாதம் முழுவதும் அவர்களுடன் கொஞ்சம் கூடுதல் நெருக்கம் இருப்பது
போலத் தோன்றும்.
நவராத்திரி சமயத்திலும் அப்படித்தான். இந்த மாதிரியான
பண்டிகைக் காலங்கள் முடியும் போது ஒரே ஏக்கமாக இருக்கும். ஏனென்றால் அந்த விசேஷ நாட்கள்
முடிந்ததும், பழைய வேண்டாத எண்ணங்களும், பழக்கங்களும், காத்திருந்தாற் போல வந்து ஒட்டிக்
கொண்டு விடும்.
அதே உணர்வுதான் வைத்தீஸ்வரன்
கோவிலுக்கு நடக்கும் போதும்… என்னதான் அழுது அழுது சிரமப்பட்டு நடந்தாலும், அந்த அழுகையும்
அவளிடமேதான் என்பதாலோ என்னவோ, நடந்து முடியும் போது எதையோ இழந்தாற் போல இருக்கும்.
ஏதோ சொல்ல வந்து விட்டு ஏதேதோ
சொல்லிக் கொண்டிருக்கிறேன். மார்கழி மாதமும் அதுவுமாக, திருப்பாவையில் (முடிந்தால்
திருவெம்பாவையிலும்) பிடித்த சில வரிகளை எடுத்துக் கொண்டு உங்களுடன் சேர்ந்து அனுபவிக்கலாமா
என்று தோன்றியது… “கூடியிருந்து குளிர்வதுதானே” திருப்பாவையின் சிறப்பு?
முதல் பாடலில் எனக்குப் பிடித்த
வரிகள்:
“ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்”
“கார்மேனிச் செங்கண் கதிர்மதியம்
போல் முகத்தான்”
“ஏரார்ந்த கண்ணி” என்பதற்கு,
அழகான கண்களை உடைய யசோதை என்பதாகப் பொருள் சொல்வார்கள். அழகான கண்கள் மட்டுமல்ல, பொருத்தமான கண்களும் கூட.
எதற்குப் பொருத்தமான கண்கள்? ஓங்கி உலகளந்த உத்தமன் குழந்தையாக அவளிடம் வந்த போது,
அவனைப் பாராட்டிச் சீராட்டிப் பார்த்துக் கொள்வதற்கு அவள் கண்கள்தான் தகுதியுடையவையாக,
பொருத்தமானவையாக இருந்தன.
யசோதைக்கு எப்படி அப்படிப்பட்ட
அழகான கண்கள் அமைந்தனவாம்? குட்டிக் கிருஷ்ணன் பிறந்தது முதல், அவன் அழகையும், அவன்
குறும்புகளையும், அவன் லீலைகளையும், பார்த்துப் பார்த்துக், கண்களை விரித்து விரித்து
வியப்பாளாம். பெருமைப்படுவாளாம். சந்தோஷப்படுவாளாம். அதனால்தான் அவள் கண்கள் அவ்வளவு
அழகான கண்களாக இருந்தனவாம்.
இப்படியும் ஓரிடத்தில் வாசித்தேன். எனக்குமே இந்த விளக்கம்
பிடித்திருந்தது… யசோதை கண்ணனின் குறும்புகளையும், லீலைகளையும் விழி விரித்து வியப்பதான கவிதைகளை இனி அவ்வப்போது பார்க்கலாம்…
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
திருச்சிற்றம்பலம்.
அன்புடன்
கவிநயா
படத்துக்கு நன்றி: கூகுளார்.