உணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...
Sunday, August 11, 2013
திருப்பாவை தந்த திருப்பாவை
கோபிகளுடன் கண்ணன் விளையாடிக் கொண்டிருக்கிறான். இந்தப் பக்கம் ஒருத்தியின் கண்களை ஒரு கையால் மூடிக் கொண்டே, அந்தப் பக்கம் இன்னொருத்தியின் பின்னலைப் பிடித்திழுக்கிறான். கூடவே ஒருத்தியின் காதுகளில் இரகசியம் வேறு பேசுகிறான்! பொல்லாத கண்ணன் என்பது சரியாகத்தான் இருக்கிறது!
இந்தக் கோபியர்களின் பாவனையில்தான் எத்தனை மகிழ்ச்சி! எத்தனை துள்ளல்! உலகமே இவர்கள் காலடியில் கிடப்பது போல் அப்படி ஒரு பெருமிதம், இவர்கள் முகத்தில்! பூமியில் கால் பாவாமல், எங்கோ ஆகாயத்தில், கவலைகளே அற்ற ஒரு உலகத்தில் இருப்பது போன்ற எண்ணம் போலும்! வீடு என்று ஒன்று இருப்பதும், அங்கு பெற்றோர் இவர்களுக்காகக் காத்திருப்பதும், இவர்கள் நினைவிலிருந்தே மறைந்து விட்டது! கண்ணன்… கண்ணன்… கண்ணன்…மட்டும்தான் அவர்களின் கண்களுக்குத் தெரிகிறான். எங்கெங்கும் அவனுடைய குறும்புப் பார்வையும் கனிந்த புன்னகையும் மட்டும்தான் தெரிகிறது. அப்படி இருக்க, அவர்களுக்கென்ன பகலும், இரவும், பசியும், தாகமுமா தெரியப் போகிறது!
அவன் மீது அவர்கள் கொண்டிருக்கும் பிரேமைக்கு அளவே இல்லை. கண்ணா, கண்ணா, என்று இவர்கள் அவனைத் தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டாடிக் கூத்தாடுவதும், இவனும் ஒற்றை ஆளாக இருந்து கொண்டு அத்தனை பெண்களையும் சமாளிப்பதும்! எப்படித்தான் இவனால் முடிகிறதோ! ‘கண்ணன் எனக்கு மட்டுமே சொந்தம்; என்னிடம்தான் அவன் அதிகப் பிரியம் வைத்திருக்கிறான்’, என்று ஒவ்வொருத்தியும் எண்ணும்படியல்லவா நடந்து கொள்கிறான்!
“கண்ணா! என்னைப் பாரேன்… என்னைப் பாராமல் ஏன் வேறெங்கோ பார்த்துக் கொண்டிருக்கிறாய்?”, ஒருத்தி அவன் முகவாயைப் பற்றித் தன் பக்கமாகத் திருப்புகிறாள்.
“உன்னைப் பார்க்கப் பயந்துதான் அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டிருந்தேன்”, என்கிறான் அந்தக் கள்வன்.
“என்னைப் பார்க்க பயமா?” செல்லக் கோபத்துடன் சிணுங்குகிறாள், அவள். “நான் என்ன அவ்வளவு பயங்கரமாகவா இருக்கிறேன்?”
“அடடா. உன்னைப் பார்த்துக் குருடன் கூட அப்படிச் சொல்ல மாட்டானே. அப்படியிருக்க நான் சொல்வேனா என்ன? உன் கரிய பெரிய விழிகளைப் பார்த்தால், என் வசமிழந்து நான் அவற்றில் தொலைந்து விடுவேனோ என்று அஞ்சித்தான் அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டிருந்தேன்”, என்றானே பார்க்க வேண்டும்! அவள் முகத்தில் பெருமை பிடிபடவில்லை!
“அப்படியானால்… நீ என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது?” என்று இன்னொருத்தி சிணுங்குகிறாள், இப்போது!
“உன் மீது வைத்த கண்களை எடுக்க முடியாமல்தானே திணறிக் கொண்டிருந்தேன்…”, என்கிறான் அந்த திருடன்!
இது மட்டுமா? கோபியர்கள் யமுனையில் நீராடப் போகையில் கண்ணனும் பின்னாலேயே போகிறான்… அவர்கள் ஆடைகளை மெதுவாக எடுத்து ஒளித்து வைத்து விடுகிறான்! அவனுடைய புல்லாங்குழல் இசையில் மயங்கி அனைவரும் இன்புற்று கிறங்கிக் கிடக்கும் போது, கோபிகளின் பின்னல்களை ஒன்றோடொன்றாக முடிந்து வைத்து விடுகிறான்! புத்தம் புது ஆடைகளை அவர்கள் உடுத்தி வந்தால், அவற்றில் மண்ணை வாரி இறைக்கிறான்!
வீடுகளில் சிரமப்பட்டு எடுத்து வைத்த வெண்ணை எல்லாவற்றையும், கூட்டாளிகளோடு களவாடித் தின்று விடுகிறான்! வெண்ணை, தயிர், மோர், என்று இதெல்லாம் உண்டது போறாதென்று, மண்ணை வேறு உண்டு வைக்கிறான்!
ஆனால், அவன் என்ன செய்தாலும், அவனை யாராலும் கோபித்துக் கொள்ளவே முடியவில்லை! மேலும் மேலும் அன்பைத்தான் பொழிகிறார்கள். மாயக் கண்ணன் என்பது சரியாகத்தானே இருக்கிறது!
ஆயர்பாடியினரின், கோபியரின், அன்பையும், பக்தியையும், பிரேமையையும், பார்த்துக் கொண்டே இருந்த பிராட்டிக்கு ஒரு ஆசை வந்து விட்டது! தானும் கண்ணன் மேல் உருகி உருகி பிரேமை கொள்ள வேண்டும், அன்பு செய்ய வேண்டும், பக்தி செய்ய வேண்டும், காதலிக்க வேண்டும், என்று!
அதோ… விஷ்ணுவை மட்டுமே தன் சித்தத்தில் நிறுத்திய விஷ்ணு சித்தர், தன் நந்தவனத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். களை எடுத்து, வாடிய இலைகளையும், உதிர்ந்து விட்ட பூக்களையும் அப்புறப்படுத்துகிறார். மலர்ச் செடிகளுக்கெல்லாம் நீர் பாய்ச்சுகிறார்…. துளசி, எம்பெருமானுக்கு மிகவும் உகப்பானது. அதைப் பார்க்கும் போதே அவருக்கு அவன் நினைவு வந்து விடும், உருகி விடுவார்…அந்தத் துளசிச் செடியின் அருகில்… அது என்ன?
வித விதமான வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் அந்தப் பூந்தோட்டத்தில், சற்றே பெரியதொரு தாமரை மலர் போல, தன்னுடைய சின்னக் கைகளையும், தண்டைக் கால்களையும், உதைத்துக் கொண்டு, பொக்கை வாயைத் திறந்து’களுக்’கென்று சிரிக்கிறது, பேரழகான ஒரு பெண் குழந்தை!
திருவாடிப் பூரத்து நாயகி, ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே, சரணம்!
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!
அன்புடன்,
கவிநயா
திருவாடிப்பூரத்தன்று வல்லமையில் வெளியான சிறப்புப் பதிவு.
படத்திற்கு நன்றி: http://omsakthionline.com/?aanmigam=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8&publish=3079
Subscribe to:
Post Comments (Atom)
ஆடிப்பூரம் ஆண்டாள் பற்றிய சிறப்பு பகிர்வு நன்று.....
ReplyDeleteவல்லமையில் வெளியானதற்கு பாராட்டுகள்.
நன்றி வெங்கட்!
Delete//வித விதமான வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் அந்தப் பூந்தோட்டத்தில், சற்றே பெரியதொரு தாமரை மலர் போல, தன்னுடைய சின்னக் கைகளையும், தண்டைக் கால்களையும், உதைத்துக் கொண்டு, பொக்கை வாயைத் திறந்து’களுக்’கென்று சிரிக்கிறது, பேரழகான ஒரு பெண் குழந்தை!
ReplyDeleteதிருவாடிப் பூரத்து நாயகி, ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே, சரணம்!//
அழகான வர்ணனைகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
மிக்க நன்றி ஐயா!
Deleteஅழகான வர்ணனைகள் நிறைந்த கட்டுரை...
ReplyDeleteவல்லமையில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி சே.குமார்!
Delete