Sunday, August 18, 2013

உனக்காகத்தான் காத்திருந்தேன்!

எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்க வேண்டும்?

இந்தக் கேள்வி எழாத மனிதர்கள் அபூர்வமாகத்தான் இருப்பார்கள். இன்பமோ, துன்பமோ, அவரவர் பாடு அவரவருக்கு. ‘தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்’, என்று ஒரு பழமொழி கூட இருக்கிறது. தானே அனுபவித்தாலொழிய, தாளாத துன்பத்தின் நடுவில் இருக்கும் போது அதனுடைய வலி பிறருக்குப் புரிவதோ, புரிய வைப்பதோ கிட்டத்தட்ட அசாத்தியமானது. அது போல, அதை விட்டுத் தப்பி ஓடுவதும் முடியாத காரியம். அனுபவித்தாலொழிய, தீராது. ‘எனக்கு மட்டும் ஏன் அடுத்தடுத்து இத்தனை துன்பம் வருகிறது?’ என்று புலம்ப மட்டுமே முடியும்.

திரு. சுகிசிவம் அவர்கள் இதைப் பற்றிப் பேசும்போது ஒன்று சொன்னார், “என்னென்ன அனுபவிக்கிறாயோ, அனைத்துக்கும் காரணம் நீயேதான். உன்னுடன் ஒருவர் கோபம் கொண்டால், அந்தத் தொடர் சங்கிலியை நீயேதான் எப்போதோ தொடங்கி  வைத்தாய் என்று பொருள். அதை உணர்ந்து, பழியை இறைவன் மீதோ அல்லது பிறர் மீதோ போடாமல், நீயேதான் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும்” என்றார்; கீழே உள்ள  கதையையும் சொன்னார்:

ஒரு முறை புத்தரை ஒருவன் கன்னா பின்னாவென்று திட்டினானாம். புத்தரும் பதில் பேசாமல் அமைதியாக அத்தனையும் கேட்டுக் கொண்டிருந்தாராம். திட்டி முடித்த பின், “இவ்வளவு திட்டினேனே, ஏதாவது பதிலுக்குச் சொல்ல வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவே இல்லையா?” என்று கேட்டானாம்.

அதற்குப் பதிலாக புத்தர், “உனக்காகத் தானப்பா இத்தனை நாள் காத்துக் கொண்டிருந்தேன்”, என்றாராம்!

அந்த மனிதன் ஆச்சரியமாக, “என்ன சொல்லுகிறீர்கள்?” என்றதற்கு, “எப்போதோ ஒரு முறை உனக்கு என்னவோ செய்திருக்கிறேன். அந்தக் கோபம் உன் மனதில் இருந்திருக்கிறது. நீ அதை என் மேல் காண்பித்துச் சரி செய்யவில்லையென்றால், நான் அதற்காக இன்னும் எத்தனை காலம்   காத்திருக்க வேண்டியிருக்குமோ? இப்போது அந்தக் கணக்கு தீர்ந்து விட்டதே!” என்றாராம்.

எத்தனை அருமையான attitude பாருங்கள். பிறரின் கோபத்தையும் வருத்தத்தையும் சகித்துக் கொள்ள, அதே சமயம் நம் மன அமைதியையும் பாதுகாத்துக் கொள்ள, ஒரு அழகான வழி இது.

ஆன்மீகத்தில், இறைவனிடத்தில், பூரண நம்பிக்கை வைத்திருப்பவர்களின் நம்பிக்கை, நமது இன்ப துன்பம் அனைத்திற்கும் காரணம் நமது வினைப்பயனே, என்பது. அதே கருத்தைத்தான் சுகிசிவம் அவர்கள் கொஞ்சம் வேறு மாதிரி, சற்றுக் கடுமையாகச் சொல்கிறார்.

துன்பம் வருகையில், அமைதியையும் ஆறுதலையும் எப்படியெப்படியோ எங்கெங்கோ தேடி அலைகிறது, மனசு. “கழிய வேண்டிய எத்தனையோ கடன்களில் இன்னும் ஒன்று கழிந்து விட்டது”, என்று நினைத்துப் பாருங்கள்;  தானாக ஆறுதல் கிடைக்கும்.

கண்ணீரில் கரைந்திடுமோ கர்ம வினை?”  ஆம், கரைந்து விடும் என்று நம்புவதே நமக்கு நல்லது.

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

அன்புடன்
கவிநயா

15 comments:

  1. உணர வேண்டிய கருத்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க தனபாலன். கொஞ்ச நாளாச்சு உங்களைப் பார்த்து.. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் :)

      Delete
  2. நல்ல பகிர்வு கவிநயா. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராமலக்ஷ்மி! :)

      Delete
  3. எந்த நிலையையும் நமக்கு சாதகமாக
    நேர் எண்ணங்களுடன் அணுகவேண்டும்
    என்று உரைக்கும் அருமையான பகிர்வு சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, திரு.மகேந்திரன்! :)

      Delete
  4. கவிநயாவின் நயத்தகு பதிவுகளுக்கு இட வேண்டிய பின்னூட்டங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. அதில் இப்பொழுது ஒன்று குறைந்தது. (ஒன்று குறைந்தால் ஒன்று கூடும் என்று இன்னொரு கணக்கு வேறே தனியா இருக்கு!) :))

    ReplyDelete
    Replies
    1. :) ஆஹா, ரொம்ப சந்தோஷம் ஜீவி ஐயா! :) உங்கள் வருகையும் பின்னூட்டங்களும் மிகுந்த எதிர்பார்ப்பைத் தருபவை. அன்பிற்கு மிகவும் நன்றி.

      Delete
  5. அருமையான கட்டுரை. நம் முன் வினை தீய செயல்களால் தான் இப்போது துக்கத்தை அனுபவிக்கிறோம் என்றே வைத்துக்கொள்வோம். எல்லாமே இறைவன் செயல் என்றும் கூறுகிறோம். அப்போது முதலில் அந்த தீய செயல்களை இறைவன் ஏன் செய்ய வைத்தான்? அது செய்ததனால் தானே இப்போது இப்படி அனுபவிக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கேள்வி பல எண்ணங்களைக் கிளறி விட்டது. பதிய வந்தால், மிக நீண்டு விட்டது. அதனால் அதனை இடுகையாகவே இடலாமென்று இருக்கிறேன். அவசியம் வந்து வாசியுங்கள் :)

      முதல் வருகைக்கு மிகவும் நன்றி, Expatguru.

      Delete
    2. பதிவி(லி)ட்டு விட்டேன். நேரம் கிடைக்கும் போது வாசித்துப் பாருங்கள்... :)

      Delete
  6. "துன்பம் வருகையில், அமைதியையும் ஆறுதலையும் எப்படியெப்படியோ எங்கெங்கோ தேடி அலைகிறது, மனசு. “கழிய வேண்டிய எத்தனையோ கடன்களில் இன்னும் ஒன்று கழிந்து விட்டது”, என்று நினைத்துப் பாருங்கள்"

    இடுக்கண் வருங்கால் நகுக என வள்ளுவன் உரைத்த மொழி நினைவுக்கு வருகிறது.

    நன்றி தங்கள் பதிவிற்கும் பகிர்விற்கும். :)



    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சுந்தர். வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  7. மிக அருமையான பகிர்வு. நான் கலந்து கொள்ளும் ஒரு வகுப்பில் அடிக்கடி கேட்கும் கருத்து இது..

    'தயவு செய்து மறந்து போயும் யாருடனும் மனதோடு பகை வளர்க்காதீர்கள். உங்கள் ஆன்மாவின் அந்த ஜென்மாந்திர வாசனை படிந்து போகும். அடுத்த ஜென்மத்திலும் அது தொடர்ந்து, மேலும் மேலும் கர்ம வினைக் கட்டுக்களுக்கு வழி வகுக்கும். மிகத் தீவிரமாக ஒருவரைப் பகைத்தால், அவர்களே, நம் நெருங்கிய உறவினராக, மறு பிறவியில் அமைவார்கள்...'

    அதனால் எல்லோரும் நல்லவரே!!!..

    நல்லதொரு பகிர்விற்கு மிக்க நன்றி..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பார்வதி. பின்னூட்டத்தில் எப்போதுமே பொருத்தமான செய்தி ஒன்றைப் பகிர்ந்து கொள்வது உங்கள் சிறப்பு :) வருகைக்கும் பகிர்வுக்கும் மிகவும் நன்றி!

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)