Sunday, February 26, 2012

கண்ணீரில் கரைந்திடுமோ கர்மவினை?

மாபெரும் ஆன்மீக எழுத்தாளரான திரு.ரா.கணபதி அவர்கள் சிவராத்திரி அன்று இறைவனடி சேர்ந்தது குறித்து கேள்விப்பட்டது முதல், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரைப் பற்றி ஏதாவது எழுத வேண்டுமென்று தோன்றிக் கொண்டே இருந்தது. அதுவும் திவாஜி அவர்கள் 'அண்ணா'வைப் பற்றி சொல்லுவதைப் படிக்கப் படிக்க, மனதின் நெகிழ்வும், கூடவே இந்த எண்ணத்தின் வலுவும் அதிகமாகியது. ஆனால் எழுத வேண்டும் என்ற என் ஆசைக்கும் அவசரத்துக்கும் தகுந்தாற்போல் இந்த வாரம் முழுக்க நேரம் இல்லை :( அவசரமாக எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையாவது எழுதவும் விருப்பமில்லை.

முன்பு ஒரு முறை, கிட்டத்தட்ட சரியாக ஒரு வருஷம் முன்பாக, திரு ரா.கணபதி அவர்களின் 'காற்றினிலே வரும் கீதம்' படித்த தாக்கத்தில், கண்ணன் பாட்டில் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதை இந்த சமயத்தில் இங்கு இடுவது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியதால்...

**

மீராபாயைப் பற்றி அதிகம் தெரியாது, இப்போதான் முதல் முறையா படிச்சேன்… ரா.கணபதி அவர்களின் "காற்றினிலே வரும் கீதத்" திலிருந்து ஒரு நிகழ்வையும், அதன் தாக்கத்தில் பிறந்த கவிதையையும் இங்கே பகிர்ந்துக்கறேன்...




எத்தனையோ துன்பங்களுக்கு பிறகு மீராவுடைய ஆசை நிறைவேறுகிறது. கார்மேகக் கண்ணனே அவளுக்கு கணவனாக வாய்த்து விட்டான். எப்பேர்ப்பட்ட பேறு அது. மணமான அன்று கண்ணன் தன்னைப் பிரியும் முன் அவனைப் பார்த்து மீரா கேட்கிறாளாம்:

“கண்ணா, நான் அனுபவிக்க வேண்டிய துன்பம் எல்லாம் தீர்ந்ததா? என் கர்ம வினை கழிந்ததா?” என்று.

அதற்கு பதிலாக தன் நிறத்தைத் தாங்கி அலையும் ஒரு மேகத்தைக் காட்டறான் கண்ணன்.

“மீரா, அதோ பார். அந்த கார்மேகத்தை.”

“அடேயப்பா… கண்ணா, இந்த மேகம்தான் எவ்வளவு பெரிசா, விரிஞ்சு பரந்து இருக்கு!”

“நீ தினமும் கண்ணுக்கு இட்டுக் கொள்ளும் அஞ்சனத்தின் அளவு என்ன, மீரா?”

“அதுவா? அது இந்த கார்மேகத்தில் அணுவளவு கூட இருக்காதே?”

“அந்த மை அளவுதான் உன் கர்ம வினை கழிந்திருக்கிறது, மீரா. இன்னும் கழிய வேண்டியது இந்த கார்மேகம் அளவு இருக்கு. உன் கர்ம வினை கழியக் கழிய, இந்த மேகம் அளவில் குறைஞ்சுக்கிட்டே வரும்”, அப்படின்னு சொல்றான் கண்ணன்.

அன்றிலிருந்து அந்த கார்மேகத்தை பார்ப்பதே மீராவுக்கு வேலையாயிருந்ததாம். ஏதாவது துயரம் ஏற்படும் போது, குடம் குடமா கண்ணீர் பெருக்கின பிறகு, மேகம் இப்போ நல்லா சின்னதாயிருக்குமேன்னு நினைச்சு அதைப் பார்ப்பாளாம். ஆனா அது கண்ணுக்கே தெரியாத அளவுதான் குறைஞ்சிருக்குமாம்…

போகப் போக துன்பம் அவளுக்கு பழகிடுது. எவ்வளவு துயரம் வந்தாலும் கலங்கறதில்லை. எப்படிப்பட்ட துன்பம் வந்தாலும் சந்தோஷப்படறா. ‘என் கர்ம வினையைக் கழிக்க என் கண்ணன் எனக்காக அனுப்பி வச்ச உதவி இது’ன்னு நினைச்சு பரவசப்படறளாம்…

கண்ணீர் பெருகப் பெருக, கார்மேகம் கரையத்தானே வேண்டும்?


கார்மேகம் கரைந்திடுமோ?
கர்மவினை கழிந்திடுமோ?
காலன்வரும் காலம்வரை
கண்ணீர்தான் சுகவரமோ?

பலப்பலவாம் பிறவிகளும்
பழவினையைக் கரைக்கவில்லை
நீளும்துன்ப மோஎன்னை
வேண்டாம்என்று வெறுக்கவில்லை

இப்பிறவியி லேனும்உன்னை
ஏற்றும்வரம் தந்துவிட்டாய்
தப்பாதுன் மலரடிகள்
மனதில்மணக்கச் செய்துவிட்டாய்!

--கவிநயா

சுப்பு தாத்தாவின் குரல் வண்ணத்தில்... நன்றி தாத்தா.

8 comments:

  1. என்றோ நீங்கள் எழுதி எப்படியோ நான் பாடிய இந்தப்பாடல்
    எங்கள் இருவரின் இன்றைய மன நிலைக்கு, அதுவும்
    இத்தருணம் இருக்கும் மன நிலைக்கு ஒத்ததாக அமைந்திருப்பதும்
    இறையின் குரலே.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  2. வாங்க சுப்பு தாத்தா. தருணங்கள் நல்லதாக அமைய அவன் அருளட்டும். அருமையாகப் பாடித் தந்தமைக்கு மீண்டும் நன்றிகள் பல.

    ReplyDelete
  3. நன்றி கீதாம்மா!

    ReplyDelete
  4. மிகவும் அருமை.

    ReplyDelete
  5. //Siva said...

    மிகவும் அருமை.//

    மிக்க நன்றி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)