கல்யாணம் சிறப்பாக முடிந்து விட்டது. “சாப்பாடு பிரமாதம்”, என்று சொல்லியபடி, ஒவ்வொருவராக விடை பெறவும் தொடங்கி விட்டார்கள். கொஞ்சம் ஓரமாக இடப்பட்டிருந்த நாற்காலிகளில் மாப்பிள்ளையும் மணப் பெண்ணும் அமர்ந்திருந்தார்கள். மாப்பிள்ளை சுந்தரின் நண்பர்களும், மணப் பெண் சோனுவின் தோழியரும் சேர்ந்து கொண்டு இருவரையும் கலகலப்பாய்க் கலாய்த்துக் கொண்டிருக்க, பெரியவர்கள் ஆங்காங்கே அமர்ந்து வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டு கதை அளந்து கொண்டிருக்க, குட்டிப் பிள்ளைகள் அங்குமிங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். மொத்தத்தில் அந்த இடமே கல்யாணக் களையுடன் களிப்பாய் இருந்தது.
“சுந்தரா, கண்ணால் ஒரு சேதி… சொல்லடா இந்நாள் நல்ல தேதி”, என்று சோனுவின் தோழி ஒருத்தி பாட, “why this கொல வெறி கொல வெறிடி?” என்று சுந்தரின் தோழன் எதிர்ப்பாட்டு பாட, ஒரே கலாட்டாதான்!
எப்போதும் கலகலப்பாகப் பேசித் தள்ளும் சோனு, இன்றைக்கு மிக அமைதியாக, கன்னங்கள் வெட்கத்தில் சிவக்க, இதழ்கள் புன்னகையில் பூரிக்க, ஓரக்கண்ணால் சுந்தரையும், ‘கொலை வெறிக்’ கண்ணால் மற்றவர்களையும் (‘எங்களைக் கொஞ்சம் தனியா விட்டால் என்னவாம்?’) பார்த்துக் கொண்டிருந்தாள்.
மகளின் சந்தோஷ முகத்தைப் பார்த்துப் பார்த்துப் பூரித்துக் கொண்டிருந்தார், தந்தை மகேஸ்வரன். இருக்காதா பின்னே? சின்ன வயதிலேயே அம்மாவை இழந்தவளை ஒற்றை ஆளாய், தாயும் ஆனவராய் இருந்து வளர்த்த தந்தை ஆயிற்றே!
“அது என்ன, தமிழ் பேரா வைக்காம, ‘சோனு’ன்னு வெச்சிருக்கீங்க?”, பெண் பார்க்க வந்த அன்றைக்கே கேட்டு விட்டான், சுந்தர்.
“ம்… அதுவா மாப்பிள்ளை? நாங்களும் என்னென்னவோ பேரெல்லாம் யோசிச்சுதான் வச்சிருந்தோம். ஆனா பொறந்தோன்னயே எம்பொண்ணு தங்கம் மாதிரி தகதகன்னு ஜொலிச்சா. ‘சோனு’ அப்படின்னா ‘தங்கம்’னு அர்த்தம்னு தெரியும். அதனால அப்பவே ‘சட்’டுன்னு முடிவு பண்ணி அந்தப் பேரை வெச்சோம்.”
“அப்ப மட்டுமா? இப்பக் கூடத்தான் தங்கம் மாதிரி ஜொலிக்கிறா”, சோனுவை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே சுந்தர் தனக்குத் தானே முணுமுணுத்தான்.
“என்ன சொன்னீங்க மாப்பிள்ளே?”, எனவும்,
“ஒண்ணுமில்ல மாமா. பொருத்தமாதான் இருக்குன்னு சொன்னேன்”, என்று இலேசான வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே சமாளித்தான்.
ஆயிற்று. பெண்ணை புகுந்த வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்து விட்டது. மாப்பிள்ளையும் பெண்ணும் காரில் ஏற வேண்டியதுதான் பாக்கி.
“மாப்பிள்ளை, இப்படிக் கொஞ்சம் வாங்க”, என்று அவனைத் தனியாக அழைத்தார்.
“சொல்லுங்க மாமா.”
“மாப்பிள்ளை, என் பொண்ணு அடிக்கடி பூஜை அறைக்கு போகாம பாத்துக்கறது உங்க கையிலதான் இருக்கு.”
“என்ன மாமா சொல்றீங்க?” சுந்தருக்கு ஒன்றுமே புரியவில்லை.
“அதொண்ணுமில்ல, மாப்பிள்ளை. அம்மா இல்லாம வளர்ந்த பொண்ணாச்சா? எல்லாம் என்கிட்ட பகிர்ந்துக்குவான்னாலும், என்கிட்டயும் சொல்ல முடியாத மனக் கஷ்டம் ஏற்பட்டா, பூஜை அறைதான் அவளுக்கு அடைக்கலம். விநாயகர்தான் அவளோட அத்யந்த நண்பர். அதனால, நீங்கதான் அவளைக் கண்கலங்காம பாத்துக்கணும்கிறதைத்தான் அப்படிச் சொன்னேன்”, சொல்லி முடிப்பதற்குள் மகேஸ்வரனுக்கு கண் கலங்கி விட்டது.
“அடடா… என்ன மாமா நீங்க? சோனுவை நான் பூ மாதிரி பாத்துக்குவேன். சாமி கும்பிடறதுக்கு தவிர அவ வேற எதுக்கும் பூஜை அறைக்குப் போகாம நான் பாத்துக்கறேன். சரிதானே? நீங்க கண் கலங்காதீங்க… இங்கே பூஜை அறை வேற இல்லை”, என்று சிரித்துக் கொண்டே சொல்லவும், மகேஸ்வரன் முகத்தில் சந்தோஷப் புன்னகை பெரிதாய் விரிந்தது.
--கவிநயா
எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு எளிமையாக
ReplyDeleteஅருமையாகச் சொல்லிப் போகிறீர்கள்
மனம் கவர்ந்த அருமையான பதிவு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
நல்ல கதை கவிநயா:)! சோனு பிள்ளையாரை நலம் விசாரிக்க மட்டும் பூஜை அறைக்கு செல்லட்டும்.
ReplyDeleteகல்யாண கலாட்டா துள்ளல்:)!
ஹிந்தியிலே ஸோனா என்றால் தங்கம். காஞ்சன் என்றாலும் தங்கம்.
ReplyDeleteஸோனா என்றால் தூங்குவதும் ஆகும்.
ஸோனா என்ற பெயர் எனக்குத் தெரிந்த பல நண்பர்களின் பெண்கள் இருக்கிறார்கள்.
ஸோனா ஸோனு ஆகிவிட்டது போல !!
அது சரி !! அந்த ஸோனு யாரு ?
நீங்களோ ? !!!
மீனாட்சி பாட்டி.
நல்ல கதை ;-)
ReplyDelete//மனம் கவர்ந்த அருமையான பதிவு//
ReplyDeleteமிக்க நன்றி ரமணி.
//சோனு பிள்ளையாரை நலம் விசாரிக்க மட்டும் பூஜை அறைக்கு செல்லட்டும்.//
ReplyDeleteநல்லாச் சொன்னீங்க :)
//கல்யாண கலாட்டா துள்ளல்:)!//
நன்றி ராமலக்ஷ்மி :)
//ஸோனா ஸோனு ஆகிவிட்டது போல !!//
ReplyDeleteமீனா மீனு ஆவது போல சோனா, சோனு ஆகிட்டா. சரிதானே பாட்டீ? :)
//அது சரி !! அந்த ஸோனு யாரு ?
நீங்களோ ? !!!//
கதையில் வர ஸோனுவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை பாட்டி. அவள் என் கற்பனையில் பிறந்தவள் என்பதைத் தவிர :) (வர வர சிறுகதைக்குக் கூட டிஸ்கி போடணும் போலருக்கே! :)
//நல்ல கதை ;-)//
ReplyDeleteநன்றி கோபி :)
வாவ்... கியூட் ஸ்டோரி... சூப்பர்...:)
ReplyDeleteகுட்டிக் கதை. அழகான கதை. நல்ல கருத்து. :)
ReplyDeleteதெய்வம் தொழாள்னு வள்ளுவப் பெருமாள் சொன்னது இதுதானோ!
//வாவ்... கியூட் ஸ்டோரி... சூப்பர்...:)//
ReplyDeleteசூப்பர் கதைகளா எழுதித் தள்ற நீங்களே சொல்லும் போது சந்தோஷமாதான் இருக்கு :) நன்றி அ.தங்கமணி.
//குட்டிக் கதை. அழகான கதை. நல்ல கருத்து. :)
ReplyDeleteதெய்வம் தொழாள்னு வள்ளுவப் பெருமாள் சொன்னது இதுதானோ!//
நன்றி ஜிரா. உங்களை இந்தப் பக்கம் பார்ப்பதில் மகிழ்ச்சி :)
ஏதோ திருப்பம் வரப்போகிறது என்று எதிர்பார்த்தோம்........ அத்ற்குள் கதை முடிந்து விட்டது.....
ReplyDelete//ஏதோ திருப்பம் வரப்போகிறது என்று எதிர்பார்த்தோம்........ அத்ற்குள் கதை முடிந்து விட்டது.....//
ReplyDeleteவாங்க சோமு. கொண்டை ஊசி வளைவுகளாவே எப்பவும் பார்க்கறதால உங்க கண்ணுக்கு இலேசான திருப்பம்லாம் தெரியாது போல :) வாசிச்சதுக்கு நன்றி, எழுத்தாளரே.
அருமையான உணர்வுகளை இதமாச் சொல்லிப்போகுது கதை. சாமியைக் கும்பிட மட்டும் பூஜை அறைக்கு சோனு போகட்டும்.
ReplyDeleteரசித்தமைக்கு மிகவும் நன்றி அமைதிச்சாரல் :)
ReplyDelete