Saturday, July 17, 2010

மறந்து(ம்) விடாத உறவுகள் - 3

(3)

முதல் பகுதி
இரண்டாம் பகுதி

ஆல்ஸைமர்ஸ். (தமிழில் அல்சிமர்).

டாக்டர் ஓரளவு கோடி காட்டுகையிலேயே நான் இந்த நோயைப் பற்றி முடிந்த போதெல்லாம் படிக்க ஆரம்பித்து விட்டேன். முதலிலேயே ஓரளவு அதைப் பற்றி அறிந்திருந்த போதிலும், மேலும் படிக்கப் படிக்க இது எவ்வளவு கொடுமையான நோய் இது என்று புரிய ஆரம்பித்தது.

"நான்" என்று எவற்றையெல்லாம் வைத்து நம்மை அடையாளப் படுத்திக் கொள்கிறோமோ அவற்றையெல்லாம் நம் கண் முன்னேயே சிறிது சிறிதாகக் கொள்ளையடித்து விடும் கள்வன்; நம் தனித்துவத்தை நலுங்காமல் பறித்துக் கொள்ளும் அரக்கன்; நம் நினைவுகளையும், குழந்தைகளையும், சொந்தங்களையும், நமக்கே இல்லாமல் செய்து விடும் கொடுங்கோலன்; என்பதெல்லாம் இந்த நோயைப் பற்றிப் படிக்கும் போது தெளிவாகியது.

இருந்தாலும் மனிதர்களுக்கே இயல்பான "நமக்கெல்லாம் அது வராது", என்ற முட்டாள்தனமான நம்பிக்கையும், நப்பாசையும் எனக்கும் இருந்தது, இன்று காலை வரையில். ஆசை நிராசையான பிறகு, "ஏன் எனக்குப் போய் வர வேண்டும்?" என்ற கேள்வியை விட என் மகளுக்கு நான் கொடுக்கப் போகும் துன்பங்களும், அவற்றைத் தடுக்க இயலாத என் கையாலாகாத நிலைமையையும் நினைத்துத்தான் மறுகுகிறது மனசு.

நிலைமை ரொம்ப மோசமாக ஆவதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகுமாம், டாக்டர் சொன்னார். இருந்தாலும் இப்போதே நான் மஞ்சுவிற்குக் கொடுக்கும் சிரமங்கள் அதிகமாகத் தோன்றுகிறது. உதவிக்கென்று வந்து விட்டு, பெரும் உபத்திரவமாக அல்லவா மாறிக் கொண்டிருக்கிறேன்?

சொல்வதையே திரும்பத் திரும்பச் சொல்வதும், அடிக்கடி பல பொருட்களையும் மறந்து வைத்து விடுவதும், பழக்கமான இடங்களிலேயே வழி தவறித் தொலைந்து போவதும்... மஞ்சுவும், மாப்பிள்ளையும் கண்ணைப் போலத்தான் பார்த்துக் கொள்வார்கள். அதற்காக அவர்களாலும் எவ்வளவு நாளைக்கு முடியும்? யோசிக்க யோசிக்கத் தலை சுற்றியது. பெரு மூச்சுடன் எழுந்து படுக்கச் சென்றேன்.

ஒரு வாரம் ஓடி விட்டது. அதற்குள் பல விஷயங்களையும் யோசித்து, சில முடிவுகளுக்கு வந்திருந்தேன்.

என் பெயரில் இருக்கும் வீட்டையும், மற்றவைகளையும் நினைவு இருக்கும் போதே மஞ்சு பெயருக்கு மாற்றி விடுவது. என்னுடைய மறதிக்கு மருந்தாக வழக்கமாகப் போகும் இடங்களுக்கும், அங்கிருந்து வீட்டிற்கும், வரும் வழிகளை எழுதி எப்போதும் என்னுடன் வைத்துக் கொள்வது. என் பெயரையும், அட்ரஸையும் எந்நேரமும் என்னுடன் வைத்துக் கொள்வது. முடிந்த வரை மஞ்சுவுக்கு சிரமம் கொடுக்காமல் இருப்பது. நிலைமை மோசமானால் சேர்த்து விட, இப்போதே ஒரு நர்ஸிங் ஹோம் பார்த்து வைப்பது.

இப்படியான சில முடிவுகளுக்கு வந்த பின் சற்றே அமைதியானாற் போல் இருந்தது மனசு.

அன்று சனிக்கிழமை. வழக்கம் போலக் குளித்து, பூஜை முடித்து, சமையலறையில் நுழைந்தேன். "பாட்டி, எனக்கு இன்னிக்குக் கேசரி பண்ணித் தர்றியா?" அம்முக்குட்டி வந்து என் கால்களைக் கட்டிக் கொண்டாள்.

சனி, ஞாயிறில் அவள் கேட்பதைச் செய்து கொடுப்பது என் வழக்கம். "கேசரிதானே, செஞ்சு தரேண்டா கண்ணா", குனிந்து அவளை அணைத்து முத்தமிட்டேன்.

வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் என் பின்னாலேயே சுற்றிக் கொண்டு, சளசளவென்று ஏதாவது கேட்டுக் கொண்டும், பேசிக் கொண்டும் இருப்பாள், அம்முக் குட்டி. இதையெல்லாம் அனுபவிக்க இன்னும் எவ்வளவு நாளைக்கு எனக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோ?

சே, இந்தக் கண்ணீர் வேறு நேரம் காலம் தெரியாமல் வந்து விடுகிறது. ரவையையும், சீனியையும் வெளியே எடுத்த வண்ணம், கண்ணீரை உள்ளிழுக்க முயன்றேன்.

"பாட்டீ, ஏன் அழற?" இந்தக் குட்டியிடமிருந்து தப்பவே முடியாது; கண்ணீருக்கிடையே பெருமிதப் புன்னகை விரிந்தது, இப்போது.

"இங்க வா, சொல்றேன்" அவளை அழைத்து என் மடியில் அமர்த்திக் கொண்டேன்.

"அம்மு, அன்னிக்கு ஒரு நாள், நாம ஒரு நர்ஸிங் ஹோம் போனோமே, ஞாபகம் இருக்கா?"

"ஓ. இருக்கே. நீ கூட உன் •ப்ரெண்ட ரொம்ப நாள் கழிச்சு பார்த்தேன்னியே?"

அந்த நர்ஸிங் ஹோமுக்குப் போனது மறக்க முடியாத நிகழ்ச்சியாகி விட்டது (இப்போதைக்கு).

அங்கு எதிர்பாரா விதமாக என்னுடன் வேலை செய்த ஒரு தோழியைப் பல வருடங்களுக்குப் பிறகு பார்த்தேன். எதிர்பார்த்தபடி, அவளுக்கு என்னைத் தெரியவில்லை. அவளுக்கு ஆல்ஸைமர்ஸ் முற்றிய நிலையில் இருந்தது.

ஏழைக் குடும்பத்தில் மூத்தவளாகப் பிறந்து, தம்பி, தங்கைகளுக்காகத் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்நாளைக் கழித்து விட்டிருந்தாள். இந்த வியாதி இருப்பது தெரிந்த பிறகு, தனியாக வாழ முடியாத நிலை வரும் முன்னர் அவளே அந்த நர்ஸிங் ஹோமில் சேர்ந்து கொண்டு விட்டிருக்கிறாள். அவளைப் பார்ப்பதற்கு யாருமே வருவதில்லை என்று அவளுடைய நர்ஸ் சொல்லிக் கொண்டிருந்தாள்.

வந்தால் மட்டும் அவளுக்குத் தெரியவா போகிறது என்று ஒரு கணம் தோன்றியது. ஆனால் யாராவது வந்தால்தானே அவளை நன்கு பார்த்துக் கொள்கிறார்களா, வசதிகள் நன்றாக இருக்கிறதா என்பதெல்லாம் கவனிக்க முடியும்?அவள் நிலைமையை நினைத்து ரொம்ப வருத்தமாக இருந்தது. நாமாவது நினைவு இருக்கும் வரை அவளைப் போய்ப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன்.

"ஆமா. ரொம்ப நாளக்கி முன்னாடி, அந்தப் பாட்டி எனக்கு ரொம்ப ஃப்ரெண்டா இருந்தாங்க. ஆனா அவங்களுக்கு உடம்பு சரியில்லாம போனதுக்கப்புறம் எல்லாரையும் மறந்துட்டாங்க. என்னையும் அவங்களுக்கு ஞாபகமே இல்ல. அதே மாதிரிதான் எனக்கும் ஆகப் போகுதுன்னு டாக்டர் சொன்னாருல்லையா? அதனால இன்னும் கொஞ்ச நாளக்கப்புறம் உன்னயும், அம்மாவையும் கூட எனக்கு மறந்து போயிடுண்டா, கண்ணா", சொல்லும் போதே குரல் கம்மியது, எனக்கு.

என்னுடைய நிலைமை பற்றி அவளுக்குத் தேவையான அளவு சொல்லி இருக்கிறாள், மஞ்சு.

"பாட்டீ, உனக்கு என்னை மறந்து போனா என்ன, எனக்கு உன்னை ஞாபகம் இருக்குமே?"

பளிச்சென்று கேட்ட அம்முக்குட்டியை அப்படியே அணைத்து உச்சி முகர்ந்தேன்.

நான் மறந்தாலும், என்னை மறந்து விடாத உறவுகளைத் தந்த வரை, இறைவனுக்கு நான் நன்றிதான் சொல்ல வேண்டும் என்பதை ஒரு நொடியில் உணர்த்தி விட்டாள் அல்லவா என் அம்முக்குட்டி?


(நிறைவு பெற்றது)

-- கவிநயா

9 comments:

  1. நல்லாயிருக்கு அக்கா...கடைசி பத்தி மட்டும் இன்னும் கொஞ்சம் வேற மாதிரி பண்ணியிருக்கலாமுன்னு தோணுது எனக்கு ;)

    ReplyDelete
  2. இந்த கதை படித்து முடித்ததும் இந்தி படம் BLACK ஞாபகம் வருது. அந்த படம் பார்த்திருக்கீங்களா? ;)

    ReplyDelete
  3. அங்கு வராத இடுகைகளும் இங்கு வரும் என்று தெரியாது போயிடுச்சு...ஆனால், ஒரே மூச்சில் கதையை முழுவதும் படிச்சுட்டேன்...அருமையாக குழந்தையில் சொல்லுடன் முடித்திருப்பது நன்று.

    ReplyDelete
  4. அப்படியா... கிட்டத்தட்ட 5 வருஷத்துக்கு முந்தி எழுதிய கதை, கோபி. இப்ப எழுதி இருந்தா கொஞ்சம் வேற மாதிரி எழுதி இருப்பேன்னு நினைக்கிறேன் :) வருகைக்கு நன்றி கோபி.

    நீங்க சொன்ன படம் நான் பார்க்கைலையே...

    ReplyDelete
  5. அடேடே, வாங்க மௌலி. எதிர்பாராம வந்து சந்தோஷ அதிர்ச்சி குடுத்திருக்கீங்க :) வருகைக்கும் ரசனைக்கும் நன்றிப்பா.

    ReplyDelete
  6. /"பாட்டீ, உனக்கு என்னை மறந்து போனா என்ன, எனக்கு உன்னை ஞாபகம் இருக்குமே?"

    பளிச்சென்று கேட்ட அம்முக்குட்டியை அப்படியே அணைத்து உச்சி முகர்ந்தேன்.

    நான் மறந்தாலும், என்னை மறந்து விடாத உறவுகளைத் தந்த வரை, இறைவனுக்கு நான் நன்றிதான் சொல்ல வேண்டும் என்பதை ஒரு நொடியில் உணர்த்தி விட்டாள் அல்லவா என் அம்முக்குட்டி? /

    அருமை

    ReplyDelete
  7. //அருமை//

    ரசனைக்கு மிக நன்றி திகழ்.

    ReplyDelete
  8. //அருமை!//

    எதிர்பாராத உங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் நன்றி திவாஜி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)